துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

14.வடிவேலன் மணிமாலை

வடிவேலன் மணிமாலை
       
                                                                                                                                                                                                                           
1. குழந்தை வடிவே குருபரனே
     குமரா கந்தா வடிவேலா
பழனி மலைக்குத் தலைவாவா
     பரங்கிரி வாசா வாவாவா
பழமுதிர் சோலை மலையோனே
     பாசம் மிகுந்தே அழைக்கின்றேன்
அழகிய பாதம் நோகாமல்
     அருகே வாவா முத்தந்தா

2.
வாவா முருகா வடிவேலா
     வள்ளி மணாளா வாவாவா
தாவா இன்பந் தரவாவா
     தணிகை மலைவாழ் மணியேவா
காவாய் இடும்பா கடம்பாவா
     கயிலை மலையோன் புதல்வாவா
தேவா னைச்சேர் செல்வாவா
     திருமால் மருகா முத்தந்தா

3.
வானும் மண்ணும் வியந்தேத்த
     மயில்மீ தேறி வலம்வந்தாய்
நானும் வருவேன் கூட்டிச்செல்
     ஞாலம் முழுதும் காணச்செய்
தேனும் தினையின் செம்மாவும்
     தின்னக் கலந்து நான்தருவேன்
ஊனும் உயிரும் உள்ளவரை
     உன்னை மறவேன் வாவாவா

4.
குருவா யானாய் தந்தைக்கு
     குழந்தை யானாய் எங்கட்கு
மருவார் மரமா யானாலும்
     மலையா னாலும் உன்வேலால்
வெருவும் படியே பிளந்தாய்நீ
     வென்றே பகையை முடித்தாய்நீ
திருவார் அழகா சுவாமிமலைத்
      தெய்வச் சிலையே வாவாவா

5.
உருவில் சிறுவன் உன்முன்னே
     உலகம் பொம்மை விளையாடு
தருவேன் முத்தம் வாவாவா
     தாய்போல் தழுவி முத்தந்தா
திருவே ரகத்தில் ஒருமுத்தம்
     திருச்செந் தூரில் ஒருமுத்தம்
வருவேன் தருவாய் வாயார
     வாங்கிக் கொள்நீ மனமார

6.
பிள்ளை வடிவாய் இருக்கின்றாய்                                   
     பெருகும் மக்கள் உன்மக்கள்
கள்ளச் சிரிப்புச் சிரிக்கின்றாய்
     கருணை மழையைப் பொழிகின்றாய்
அள்ள அள்ளக் குறையாத
     அன்பைக் கொட்டிக் கொடுக்கின்றாய்
கொள்ளை கொண்டாய் என்னுள்ளம்
     கொடுஎன் றதைநான் கேளேன்வா

7.
கண்ணே மணியே கற்கண்டே
     கரும்பே தேனே வாவாவா
தண்ணார் இனிமை தருகின்ற
     தமிழே அமுதே வாவாவா
விண்ணோர்க் கருளும் பெருமானே
     வெற்றிச் சேவற் கொடிவீரா
பண்ணார் இசையின் பயனேவா
     பவளத் திருவாய் முத்தந்தா

8.
சரவண பவனே வாவாவா
    சண்முக நாதா வாவாவா
சுரரதி பதியின் மருகாவா
    சுப்ர மண்யா வாவாவா
அரகர முருகா வாவாவா
    அறுமுக நாதா வாவாவா
வரவர மகிழ்வேன் வாவாவா
    வந்தொரு முத்தந் தாதாதா

9.
பன்னிரு கையில் ஒருகையென்
     பாவந் துடைக்கக் கூடாதா
என்னிரு கையால் உன்கால்கள்
     இருகப் பற்றக் கூடாதா
முன்னிரு வினையின் மீதத்தை
     முருகா நீக்கு வாவாவா
இன்னொரு முறைநான் பிறவாமல்
     இறைவா என்னைக் காவாவா

10.
பேர்த்தொரு பிறவி கொடுத்தாலும்                                     
     பெருமான் உன்னைத் தினம்பாடும்
ஆர்த்தெழு பக்தி கொண்டாடும்
     அருந்தமிழ் மகனாய்ப் பிறப்பிப்பாய்
கார்த்திகை மைந்தா கதிர்வேலா
     கணபதி தம்பீ வாவாவா
சீர்த்திரு வடியென் தலைசூடித்
     திருவருள் புரிவா செவ்வேளே

11.
எழும்போது நினையாமல் எழுந்த தில்லை
     இனிதேனும் நினையாமல்உண்ட தில்லை
தொழும்போதும் நினைவிட்டுத் தொழுத தில்லை
     தொழிலேதும் நினையாமல் தொடங்கவில்லை
விழும்போது படுக்கையிலே சாயும் போது
     வேறென்ன செயும்போது மறந்தே னப்பா
அழும்போது மட்டுமுனை நினைக்கின் றேனா
     ஆண்டவனே முருகாநீ வருவா யப்பா

12.
சடையப்பா மகனப்பா சாமி யப்பா
     தங்கப்பா வேலப்பா சாற்று மாறு
படையப்பா கந்தப்பா பழனி யப்பா
     பாதமலர் சூடப்பா எனது பாவம்
உடையப்பா குமரப்பா உள்ளங் கொஞ்சம்
     உருகப்பா முருகப்பா உனக்கு முண்டோ
தடையப்பா அழகப்பா தஞ்ச மப்பா
     தயைகூர்ந்து மயிலேறிப் பறந்து வாப்பா

13.
வருவாயென் றெப்போதும் நினைப்ப தெல்லாம்                                   
     வருவாய்க்கா வேல்முருகா பழனியப்பா
ஒருவாய்க்குச் சோற்றுக்கா உன்னைக் கேட்பேன்
     உலகத்து வாய்க்கெல்லாம் அருள்வாய் ஆனால்
இருவாய்க்குன் அறுவாய்கள் ஏங்கும் போது
     என்வாயை நீநினைக்க நேர மேது
கருவாய்க்குள் மீண்டும்நான் நுழையாவண்ணம்
     காமுருகா வாமுருகா கந்தா வேலா

14.
அருணகிரி நாதர்தமிழ் அமுதம் வள்ளி                                   
     அளித்ததினை மாவாகச் சுவைக்கும் ஐயா
குருபரற்குத் தமிழ்தந்த குமரா என்றன்
     குறைநேர்ந்தால் உனதுதமிழ் குறைந்தாபோகும்
தருமிக்குத் தந்தகவி குற்றம் என்றுன்
     தந்தையுடன் வாதிட்ட நக்கீ ரற்கும்
பெருங்கருணை புரிந்தாயே தமிழுக் காக
     பெருமானே எனக்கருளிற் பிழையுண் டாமோ

15.
எனக்கென்றும் நிலையான புகழும் வேண்டேன்
     எல்லாரும் மதிக்கின்ற நிலையும் வேண்டேன்
தனக்கென்று செல்வங்கள் தரவும் வேண்டேன்
     தரணியிலே சுகபோக வாழ்வும் வேண்டேன்
உனகென்று நீதந்த தெல்லாம் விட்டேன்
     உன்சரணம் ஏற்றுக்கொள் என்றுவேண்டி
மனக்கவலை இல்லாத வரந்தா என்பேன்
     வடிவேலா அதுநல்க வரமாட் டாயா

16.
பொன்னுக்கும் பொருளுக்கும் போகத் திற்கும்
     பொழுதெல்லாம் போக்கிடவா மனித வாழ்க்கை
என்னுக்குள் இருந்தென்னைத் தின்னு மிந்த
     இருங்கவலைப் பெருங்கடலை அறிகி லாயோ
மின்னுக்குள் ஒளிபோல விளங்கும் வேலா
     மெய்யடியார் துயர்போக்கும் வெற்றி வேலா
பன்னுக்குள் அடங்காத பரங்குன் றோனே
     பாவியெனைக் கரையேற்றப் பரிவி லாயோ

17.
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதிற் போல
     ஒருசிறிய இன்பத்தில் நூறு துன்பம்
நின்றெய்தி இல்வாழ்வில் நெருங்கச் சோர்ந்தேன்
     நீயென்னை நினையாது கவலை யின்றிக்
குன்றெய்தி விளையாடித் திரிகின் றாயே
     குறைதீர்க்க வாராயோ குறத்தி கேள்வா
நன்றெய்தி இப்பிறவி நான்க டக்க
     நயனத்தை என்பக்கம் நகர்த்திப் பாரே

18.
வாழையடி வாழையென வைக்குமுக மொன்றே                    
    வாழுமுயி ரத்தனையும் காக்குமுக மொன்றே
ஏழைமனம் வேண்டுவதை ஈயுமுக மொன்றே
    எங்குமுள யாவிலுமி ருக்குமுக மொன்றே
பீழையுடல் நோயகலப் பேர்க்குமுக மொன்றே
    பேரழகில் யாவரையும் ஈர்க்குமுக மொன்றே
பேழைவயிற் றோனிளவ லானபெரு மாளே
    பீடுதிகழ் ஆறுமுகம் காணவருள் பேறே

19.
ஒன்றாகி உலகத்தைக் காக்கின்றவன்
    உமைமைந்தன் இருபெண்ணை மேய்க்கின்றவன்                           
மன்றாடி மூன்றாங்கண் வந்தானவன்
    மறைநான்கும் உடையானைச் சிறைவைத்தவன்
வென்றாளும் ஐங்கரனுக் கிளையானவன்
    வினைதீர்க்க ஆறுமுகம் கொண்டானவன்
பொன்றாத ஏழிசையின் பொருளானவன்
    புகழெட்டுத் திசைபாடும் மயில்வாகனன்

   
         சந்தப் பா

20.
சீவிமு டித்தும் சிந்தைம யங்கச்
     சேலை யுடுத்தும் வலைவீசீச்                                              
சேரிய டுக்கும் காளையர் செல்வம்
     தேடியெ டுக்கும் நினைவாலே
காவிம லர்க்கண் கூவிய ழைக்கக்
     கட்டிய ணைக்க மலர்மேனி
காசுப றிக்கும் ஆசைம றைக்கக்
     கன்னலெ னும்பொய் மொழிபேசி
மேவிந டித்தும் வேட்கைத ணித்தும்
     வேட்டைமு டிக்கும் விலைமாதர்
   மேனிகெ டுக்க நோய்க ளடுக்க
     மேன்மைகெ டுக்கத் தரியாது
பாவிலி னிக்கும் பண்களி லுன்னைப்
      பாடிய அருண கிரியாரின்
   பாவம ழித்துப் பாதம ளித்தாய்
      பார்புகழ் கந்தப் பெருமாளே

21.
காசுக்கு விற்றும் காட்டிக் கொடுத்தும்
      கைவிட்டுப் போகாப் பொருள்மாதர்
    கைபட்டுக் காசைக் கைவிட்டு நோயிற்
      கதிகெட்டு நிற்கும் நிலைநாணி
மாசுக்கு நொந்து வாழப்ப யந்து
      வழிபட்ட கோவில் தனிலேறி
    மண்பாய்ந்து மாள மனமுற்று வீழ
      வந்துற்ற முனியாய்த் தடுத்தேந்தித்
தேசுற்ற காட்சி மயிலேறிக் காட்டித்
      திருவக்க மாலை தனையீந்து
    சீரார்ந்த வேலால் செந்நாவி லாறு
      திருமந்ர எழுத்தைத் திகழ்வித்துப்
பேசுற்ற புகழைப் பிழையின்றிப் பாடும்
      பெருஞானம் தந்து பிணிநீக்கிப்
    பிரியாம லருண கிரிநாதர் வாழும்
      பெருவாழ்வு தந்த பெருமாளே

22.
சங்கத் தவரிடை யங்கத் தினனுயர்
      தங்கத் தமிழ்வளர் தகையோனே
    தந்தப் பிறையவன் துங்கக் கரிமுகன்
      தொந்திக் கணபதி இளையோனே
கங்கைக் கொருசடை மங்கைக் கரையுடல்
      கன்றித் தருசிவன் கதிரோனே
    கன்னிக் குறமகள் வள்ளிக் குருகிய
      காதற் கதைவரு தலைவோனே
அங்கைக் கனிசுட ஒளவைக் கொருமுறை
      அன்புக் கனிமழை பொழிந்தோனே
    அள்ளிக் கொளவுடல் ஒன்றித் திருவருள்
      அன்னைக் கருளிய வடிவோனே
தங்கத் திரையலை பொங்கத் துயில்கிற
      தண்பாற் கடலவன் மருகோனே
    சந்தக் கவிவல அருணைப் புலவரின்
      சத்தித் திருப்புகழ் அணிவோனே

23
மலைமீது வந்து சிறுதொட்டில் கட்டி
      மகவாசை சொல்லி அழுவாரும்
    வளர்கின்ற மக்கள் பலர்கொண்டு கடனில்
      மனம்வெந்து வேண்டி அழுவாரும்
விலைமீறு கல்வி மிகவுற்ற போதும்
      வினைநாடி யுள்ளம் அழுவாரும்
    மிகுநோயுள் நொந்து மெலிவுற்று வாடி
      விடுவிக்க வேண்டி அழுவாரும்
வலைபோலும் பொத்தல் மனைகூட இன்றி
      வழிமீது தங்கி அழுவாரும்
    வலுவற்ற கந்தல் உடைசுற்றி நாணி
      வறுமைக்குள் ஏங்கி அழுவாரும்
இலைபோடும் தொட்டிற் கலைமோதி யென்றும்
      இரந்துண்டு பசியால் அழுவாரும்
    இடர்நீங்கி வாழ அருள்வேண்டி யழுதேன்
       எனையாளும் கந்தப் பெருமாளே

24
                இசைப் பாடல்

பன்னிரு தோள்களைப் பாடுவோம் – கந்தன்
     பாதக் கமலத்தை நாடுவோம் – நம்
பாவக் கறைகளைப் போக்குவோம் – வரும்
     பகைமாறவும் பிணிதீரவும்
     பசியாறவும் துயர்தீரவும்
வேலினை நாமெண்ணி வேண்டுவோம் – வெற்றி
வேலனைக் கும்பிட்டு வாழுவோம் -      பன்னிரு

  அருண கிரிக்கருள் தந்தவன் – சாமி
  அப்பனுக்கும் பாடம் சொன்னவன் – இளம்
  ஆண்டியாய்ப் பழனியில் நின்றவன் – தினம்
        அவனேகதி எனநீயிரு
        மனமேயினி அவன்போலொரு
தெய்வத்தை நீயெங்கு தேடுவாய் – தேடித்
திரிந்தாலும் யாருன்னை நாடுவார் -     பன்னிரு

   சேவற்கொடி கொண்ட வேந்தனை – வள்ளி                         
   தெய்வானை மணங்கொண்ட காந்தனை – நறும்
   தேன்குடம் பணிகின்ற மார்பனை
         தினமேதொழு இனிமேலொரு
         கணமாவது நினைவாயிறு
   தீராத வினையெல்லாந் தீருமே – வந்து
   சேராத செல்வங்கள் சேருமே -     பன்னிரு

சூரனைப் போரினில் வென்றவன் – நல்ல
தோற்றத்தில் மாரனை வென்றவன் – பக்தர்
துயர்தீர்க்கும் முகமாறு கொண்டவன் – மிகு
    சுடர்வேலொடு விரைவாயரு
    மயில்மீதினில் வருவானவன்
தோள்கள் துணைசெய்யும் பாடுவோம் – திருத்
தொண்டு சிறந்தோங்க வாழுவோம் -   பன்னிரு

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>