துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

13.தத்துவ மணிமாலை

              

வாவிகள் பெருகினால்
   வயல்வ ளம்பெறும்
பாவிகள் பெருகினால்
   பார்ந லங்கெடும்
ஆவிகள் நலம்பெற
   அருளுங் கூத்தசைச்
சாவிலும் நலம்பெறச்
   சார்ந்து வாழ்மினே

அப்பி லேஉரு
   வாகி யப்பிலே
உப்பு மாயினும்
   உண்டு கைப்பதை
ஒப்ப துன்னுயிர்
   உடல்வி திக்கடல்
தப்ப நீதுதி
   சங்கர் பாதமே

முன்புநீ அதுவெனும்
   மொழிபு கானமயால்
ஒன்பது தந்திரம்
   ஓதி யென்செய
நன்பசு நான்சிவ
   மென்ன நாடமெய்த்
தொன்பதம் எய்திலேன்
   தொலைந்த திம்மையே
தாயாகி மகளாகித்
   தார மாகி
மாயாவை உடனேவும்
   சக்தி வைக
நீயாகி ஐவரென
   நிகழ்த்துங் கூத்தச்
சேயாகித் திருவருளால்
   தெரிந்தேன் தேவே

ஆறாறு தத்துவமும்
   அண்ணல் திருவருளால்
நீறாகும் நம்புங்கள்
   நிமலன் அடிபணிந்தால்
நூறாகும் மும்மலமும்
   நோயும் புறம்போகும்
வேறாக எண்ணாதீர்
   விஷ்ணும் சிவந்தானே

குதித்தெழும் அலையுடல்
   கோடி யுற்றுயிர்
விதிப்படி வருவதும்
   மீண்டு போவதும்
துதிக்கிற சூரியன்
   தொன்று தொட்டிவன்
உதிப்பதும் மறைவதும்
   ஒக்கும் ஒக்குமே

கொண்ட மெய்ஞ்நலம்
   குதூக லித்தொரு
நண்டு நத்தைமுன்
   நடன மாடுமே
கண்டு மண்டுகம்
   கைகள் தட்டுமே
உண்டு போங்கரா
   வருவ தோருமோ

நாய்களும் நரிகளும்
   நாட்டி லுள்ளன
வாய்சொலும் படியிலை
   வஞ்சங் காமநோய்
மாய்வதும் பிறப்பதும்
   மறந்து போயின
ஆய்வருஞ் சிவநெறி
   அவைகள் தேருமோ

மானும் மலரும் மயிலுங் குயிலும்
                  வான்மதியும்
பேனும் ஈரும் நாணப் பெரிதாய்
                  உவமித்தே
நானும் பாடி நாடித் திரியேன்
                  உவமேயம்
ஊனும் உயிரும் உணர்வுங் சிவமாய்
                  உய்வேன்
அடிமுதல் முடிவரை அழகியின் அங்கம்
                        வருணித்தே
குடிபுகும் அணிநலம் கொஞ்சிடுங் கவிதை
                       பலபாடி
மடிகிற வரையிலும் மாயையி லூனும்
                       வழிகாட்டேன்
முடிகிற வரையிலும் சிவநெறி மொழியத்
                       தவறேனே

வேத ஆகம விதிகுரு வழியே
                 பயிலாதேன்
ஓத வல்லதோ ஓமெனும் பிரணவ
                 ஒலிமேன்மை
நாதன் நாமமே நமசி வாயவே
                 அதுவென்னும்
போத மெய்தவே புகலு மந்திரம்
                 புகழ்வேனே

எட்டு மிரண்டும்
    எட்டு மகாரம் மந்திரமாய்
ஒட்டு முணர்ந்தே
    ஓதுக காதிற் கொலியாமல்
கட்டுக ளற்றுக்
    கயிலை மலைக்கோன் கருணையினால்
கிட்டுவ துண்மை
    நற்கதி என்பேன் கேளீரோ

உடலி ருப்பதும் உணர்வி ருப்பதும்
                    உயிராலே
உடலை விட்டுணர் வுள்ள நுண்ணுடல்
                    உயிரோடே
கடரும் மோட்சமும் நரக துன்பமும்
                   கதியாலே
அடரும் மறுபிறப் படையும் உயிரென
                   அறைவாரே

இட்ட முட்டையில் இருந்த குஞ்சையே
                      இரைதந்து
பெட்டை காப்பதும் பெரிய கோழியாய்
                      அதுவந்து
முட்டை வைப்பதும் முதலும் ஈறுமா
                      முன்முன்னே
விட்ட தெத்தனை விடுவ தெத்தனை
                      மெய்மெய்யோ

நரியின் புதரில் நண்டு புகுந்தா
                  நலங்காணும்
எரியுங் கொள்ளி அரிவால் வைத்தா
                  இடர்தீரும்
விரியன் குழியில் ஈசல் விழுந்தா
                  மெய்காக்கும்
விரீயும் ஆசை மனதில் மிகுந்தா
                  மிடிதீரும்

அரிவாள் பொருளில் ஆழப் பதிதல்
                  அன்பாலா
பரிவா மகுடி பாம்பிற் கூதல்?
                படுதோல்விச்
சரிவா மழைநீர் சரியா துலகந்
                தரியாதே
எரியுஞ் சினமா சினத்தைப் போக்கும்
               இயலாதே

சாரி எறுபாய்ச் சர்க்கரை தேடும்
               ஒருகூட்டம்
ஊரித் திரியும் புழுவாய் உறிஞ்சும்
               ஒருகூட்டம்
நேரில் மினுக்கும் நெருப்பாய் எரிக்கும்
               ஒருகூட்டம்
பாரில் வாழும் பாவனை எத்தனை
               பகவானே

பொய்யும் திருட்டும்
     பொங்கிப் பெருகுங் கலிகாலம்
கையுங் காலும்
     கஞ்சிக் கலையும் கலிகாலம்
வையுங் காலும்
     கஞ்சிக் கலையும் கலிகாலம்
வையும் வாழ்த்தும்
     வயிற்றை நிறப்புங் கலிகாலம்
செய்யும் ஊழித்
     திருவிளையாடல் எப்போதோ?
 

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>