துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

12.சிவ மணிமாலை

              

                காப்பு

சிந்தை நிறைந்திருக்கும்
    சிவனுக்கு மைத்துனனே
தந்தை யவன்மகற்குத்
    தாயான மோகினியே
விந்தைக் கருவிருதாய்
    வித்தகனே! நாமகளின்
கந்த மலரெனநூல்
    காத்தருள வேண்டுதுமே

              விண்ணப்பம்
கூட்டமிலா வேளையிலுன் கோவில்புக ஆசை
     கொஞ்சுதமிழ் பாடியருள் கெஞ்சியழ ஆசை
ஆட்டமெலாம் ஆடியபொன் அடிதழுவ ஆசை
     அயர்வகல நெஞ்சுக்குள் அமர்விக்க ஆசை
தேட்டமிலா மந்தமதி தெளிவடைய ஆசை
     சிறுபொழுதும் மறவாத சிந்தைபெற ஆசை
நாட்டமிலா துறுபயனில் நானகல ஆசை
     நடராஜா இவையெனக்கு நல்கியரு ளாயோ

           மணி 1
தொழுதிலேன் எனினும்
     துணைபெற வேண்டி
அழுதிலேன் எனினும்
     ஆயிரம் பிறவிப்
பழுதுளேன் எனினும்
    பரமனே எனையும்
முழுவதுங் கவர்ந்து  
    முறைபடுத் தினனே

             மணி 2
தந்தை சிவநெறியார் தாயுங் சிவநெறியார்
முந்தை மரபிருந்தும் மூடன் சிறிதயர்ந்தேன்
வந்தென் வழிதிறந்தாய் வளர்சைவம் கற்றுயர்ந்தேன்
சிந்தை நிறைந்திருக்கும் சிவமே பராபரமே

             மணி 3
எத்தனையோ பெயராலே
    எவரெங்கே தொழுதாலும்
அத்தனையும் தானாகி
    அருள்செய்யும் பரம்பொருளே
சித்தத்தின் உள்ளிருக்கும்
    சிவலிங்கப் பெருமானே
எத்தாலும் இனிமறவேன்
    எனைமறவா தருள்வாயே

             மணி 4
மொழித்திறன் மிக்கவர்
    முரண்படு கொள்கையர்
வழிக்கெனை ஈர்த்தனர்
    வாழ்நாள் போக்கினன்
விழித்திரை கெட்டபின்
    வேண்டுகின் றேஉனை
இழித்தொதுக் காதருள்
    இறைவனே சிவசிவா

             மணி 5
முந்தைய வல்வினை மூடனை நெடுநாள்
வந்துனை வணங்கவும் வழியடைத் ததுவோ
சுந்தரர் போலுனைத் தொழுதிலேன் எனினும்
எந்தையென் விழித்த்ரை இடர்களைந் தருளே
             மணி 6
குறுநாச் சுவைகுறைத்தும்
     கொள்ளும்ஊண் மிகக்குறைத்தும்
சிறுநீ ரகம்பழுது
     செங்குருதி பாயிதயம்
உறுநோய் வசமுளதென்
     ஊனக்கண் ணும்பழுது
வெறுநாள் கழிக்கின்றேன்
     விதியோ பராபரமே

            மணி 7
வெள்ளருக்கும் விளங்குசடை
     விடையூர்திப் பெருமாளே
கள்ளிருக்கும் மலருமையாள்
     காதலனே கண்ணுதலாய்
உள்ளுறுப்புச் செயல்பாட்டின்
     ஊறுகளைந் தருளாயோ
வள்ளல்நீ மனம்வைத்தால்
     மடம்மருவி வைகாதோ
 
            மணி 8
எனைப்படைத்த உனைமறந்த
    எத்தனையோ பிறவிகளின்
வினைபயனும் விதிப்பயனும்
    விளையாடி உடல்நலிந்தேன்
நினைத்தழுது தொழுகின்றேன்
    நெஞ்சுருகி வேண்டுகிறேன்
சினைத்தெழுநோய் நீக்கியருள்
    தில்லைப்பொன் னம்பலமே

           மணி 9
நழுவிமனம் பிறழாமல்
    நாள்தோறும் நினைந்துருகித்
தொழுவதுநான் சிவனைத்தான்
   சொந்தமவன் தந்ததுதான்
எழுவதன் அருளாலே
   இருப்பதவன் தயவாலே
அழுதவன் செவிகேட்கும்
   அடும்நோயும் களைவானே

           மணி 10
முந்தை வினையோட்டி
   மூளும் வினைதடுத்துத்
தந்தம் பிணிநீக்கிச்
   சாரும் துயர்போக்கி
அந்தம் பிறப்பாக்கி
   அருள்வான் சிவனென்று
சிந்தை மகிழ்விக்கும்
   தேவாரம் பொய்யாமோ?

           மணி 11
வைத்தீஸ்ஸ் வரனென்னல்
   வாய்மொழியோ மருந்திலையோ
கைத்ததுவோ கசந்ததுவோ
   கலிகால வைத்தியமோ
மைத்தடங்கண் உமையாளின்
   மணவாளா அருளாளா
எய்தவுடல் நலமாக்க
   ஏந்தயக்கம் பெருமானே

          மணி 12
சாவதற்குப் பயமில்லை
   சங்கரனே உன்னருளால்
போவதற்கு நாள்வருங்கால்
   போய்வருவேன் உன்னிடமே
ஆவதற்கும் அழிவதற்கும்
   ஆண்டவனே நீபொறுப்பு
காவலும்நீ எனைநம்பும்
   கதியாருன் அடைக்கலமே

          மணி 13
எண்ணாத நாளினிமேல்
   இருக்காது சத்தியமாய்
மண்ணோடு மண்ணாக
   வழியனுப்பும் உடல்சுமந்து
பண்ணாத பாவமெலாம்
   பண்ணிய்தை மன்னிப்பாய்
அண்ணா மலையானே
   அடிசேர அருள்வாயே

           மணி 14
மீனாட்சி கரம்பிடிக்க
   விரும்பியே மதுரைவந்து
வானாட்சி இங்கிருந்தே
   வழங்குமெய்ச் சொக்கநாதா
ஊனாட்சி கடந்துவந்துன்
   ஒளியாட்சிக் குள்ளிருக்கும்
தேனாட்சி எனக்குவேண்டும்
   தித்திக்க அருள்வாயோ

            மணி 15
பல்லிலே கரும்பு மெல்லப்
   பயப்படும் வீர னைப்போய்க்
கல்லிலே நாரு ரிக்கக்
   கடியென விடுவ தைப்போல்
சொல்லிலே இனிக்கும் வாழ்க்கைத்
   தோணியில் ஏற்றிவிட்டாய்
புல்லிய எனது நான்நோய்
   போக்கிநீ அருள்வதென்றோ

           மணி 16
நமசிவாய மந்திரத்தை
   நாள்தோறும் ஓதுகிறேன்
எமதூதர் வரும்போதும்
   என்னாவில் அதுவொலிக்க
உமதருளை வேண்டுகிறேன்
   ஊழ்வினையால் மறுபிறவி
எமக்கிருந்தால் வரம்தருக
   எழுத்தைந்தும் நினைவதற்கே

             மணி 17
பெருமைமிகும் அடியார்போல்
   பெரும்பக்தி செய்யவில்லை
ஒருநிலையில் நம்பிக்கை
   உள்ளவனாய் ஆகவில்லை
திருவருளால் நலப்பெறவே
   சிறுமதியேன் விழைகின்றேன்
குருவருளே வாய்க்காத
   குருடனுக்கும் அருள்வாயோ

             மணி 18
பாசமெதும் நீங்கவில்லை
   பசுபதியின் பக்கமில்லை
ஆசகன்ற வழிபாடும்
   அனுமதினமும் செய்வதில்லை
ஈசனது படையலாக்கி
   எடுத்துண்ணும் வழக்கமில்லை
நேசமிகும் மனமுமில்லை
   நீயெனக்கும் அருள்வாயோ

              மணி 19
குவியாத கைகொடுத்தாய்
   கூத்தாஎன் இளமையிலே
புவிமீதுன் புகழ்பேசும்
   பொழுதெனக்குத் தரவில்லை
செவிடாக நானிருந்தேன்
   திருப்புகழே கேளாமல்
கவிபாடி முதுமையிலே
   காதலிக்கச் செய்தாயே

             மணி 20
சிவநெறி யோகமார்க்கம்
   சிறிதுமே கற்றதில்லை
தவமுறை பயின்றதில்லை
   தனியருந் தியானமில்லை
பவவினை தீர்க்குமுந்தன்
   பாதமும் பற்றவில்லை
சவமுற வந்தமெய்யால்
   சங்கடந்தா னுற்றேனே

             மணி 21
ஊரெங்கும் நடந்துவந்தே
   உனதருங் கோவிலெய்தி
ஓரெட்டு மலருமிட்டே
   உருகிநான் பணிந்துபாடும்
சீரெட்டும் படிசெயாநீ
   திருவடி நினைவுமட்டும்
வேரிட்டுப் படரவிட்டாய்
   விடையூர்ந்து வீடுவாவே

            மணி 22
மீனாட்சி கரம்பிடிக்க
   விரும்பியே மதுரைவந்து
வானாட்சி இங்கிருந்தே
   வழங்குமெய்ச் சொக்கநாதா
ஊனாட்சி கடந்துவந்துன்
   ஒளியாட்சிக் குள்ளிருக்கும்
தேனாட்சி எனக்குவேண்டும்
   தித்திக்க அருளுவாயோ

               மணி 23
பூமன்னும் காலமெல்லாம்
   புகழ்மன்னத் தஞ்சையின்கண்
மாமன்னன் ராஜராஜன்
   மனம்போலப் பெரியகோவில்
நீமன்னும் படியமைத்தான்
   நிதமுன்னை வணங்கிநின்று
நாமன்னும் தமிழினிக்க
   நான்பாட விழைகிறேனே

                  மணி 24
உன்மத்தம் மலர்கூட
   உனதகலம் முத்தமிடும்
பன்மத்தம் பிடுத்தலைந்த
   பாவிகளும் உனைத்தொழுது
கன்மத்தம் வினைதீர்ந்த
   கதைகேட்டுக் கடைவிரிக்கும்
ஜென்மத்தம் மணிமாலை
   திருவடியை அடையாவோ

                  மணி 25
அற்புதங்கள் பலபுரிந்த
   அடியாரின் வரிசையிலே
நிற்கிறதும் நடக்கிறதும்
   நீயருளும் வரையெளிதோ
சொற்றமிழால் மணிமாலை
   தொடுத்தணிய வேண்டுகிறேன்
புற்றரவும் அரணிந்தவனே
   புனைந்தருள மாட்டாயோ

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>