துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

11.பத்ர காளியம்மன் பதிகம்

     

               காப்பு  
நாடுநகர் தோன்றாமுன் நற்றமிழர் காடுகிழாள்
கூடுபுகழ் மோடிதினம் கொண்டாடும் செல்விநடம்
ஆடுசிவன் நாயகிநம் ஆறுமுகன் தாயெனநல்
ஏடுபுகழ் முதல்தேவி இணையடிகள் போற்றுதுமே

                  சரணந் தாயே
மன்னிய தமிழ்வி ளங்கும்
   மதுரையை ஆண்ட வேந்தன்
உன்னையே தொழுது மக்கள்
   உய்யுமா றமைத்த கோவில்
அன்னையே! பத்ர காளி
   அம்மனே! மேலக் கோட்டை
மன்னிய தெய்வ மே!உன்
   மலரடி சரணந் தாயே!

             வானாட்சி பெறினும் வேண்டேன்
மீனாட்சி மனம கிழ்ந்து
   வீரமா காளி யோடு
தானாட்சி புரியும் நாட்டில்
   தங்குமூர் மேலக் கோட்டை
தேனாட்சி இவர்க ளாட்சி
   திளைப்பதை விட்டுச் சென்று
வானாட்சி பெறினும் வேண்டேன்
   வைகுவேன் சரண்பு குந்தே.

            அபயம் நல்கு
அடைக்கலம் அருளி என்னை
   ஆள்வதுன் கடமை யம்மா
படைக்கரம் கொண்ட காளீ
   பக்தனுக் கபயம் நல்கிக்
கொடைக்கரம் நீட்டு தாயே
   கும்பிட வந்த என்னைக்
கடைக்கணால் மேலக் கோட்டைக்
   காளிநீ கொஞ்சம் பாரே.

            பாவத்தை அழி
ஆட்டு விக்கிற சிவனையும்
   ஆட்டு வித்துடன் ஆடும்நீ
கூட்டு விக்கிற அருளினால்
   கோடி தீவினை ஓடுமே
காட்டு வல்லரி வாகனக்
   காளி வாஎனைக் காக்கவா
வீட்டு தீவினைப் பாவமே
   மேலக் கோட்டையின் தேவியே.

            மகிடாசுர வதம்
உம்பரும் நடுங்க வைக்கும்
   உருவொளித் துள்ளங் காய்ந்து
கொம்புள அசுரன் கேள்வன்
   கோலமுற் றடர்தல் சீறி
வம்பனை வீழ்த்தி வஞ்சன்
   மார்பிலே மிதித்து நின்றாய்
இம்பரும் மகிழ அம்பாத்
   துறையுறை எங்கள் தேவீ.

           வெஞ்சினக் கோலம்
சூல மேந்திய கையுடும்
   சோரி யாறுபாய் காலொடும்
கோலம் வெஞ்சினக் குருதிவாய்
   கொலைவெ றித்தனம் கொண்டதாய்
ஆல முண்டவன் தேவிநீ
   அரக்க ரஞ்சவே சிரித்தவள்
மேலக் கோட்டையில் சாந்தமே
   மேவி ஆள்கிறாய் அருமையே.

           எட்டுத் திசைகளையும் காப்பவள்
துட்ட சக்திகள் துடியினால்
   தொடைந டுங்கிஓ டோடவே
நட்ட நடுநிசை வேளையில்
   நங்கை நீவலம் வருகிறாய்
அட்ட திக்கையும் காக்கிறாய்
   அன்னை துர்க்கையாய் ஆள்கிறாய்
இட்ட கோவிலம் யாத்துறை
   எங்கள் அன்னைமா காளியே

          தொழுதவர் துயர் நீக்குவாள்
தோள்தலை தொடக்கி டந்து
    தொழுதடி பணிந்தால் துன்பம்
நீல்வதை நீக்கிக் காப்பாள்
    நெடும்பகை வெல்லச் செய்வாள்
மாள்வது பிறப்ப தெல்லாம்
    மறையநம் மேலக் கோட்டை
ஆள்பவள் காளி தேவி
    அருளுவாள் தொழுமின் வந்தே

         செல்வமும் நலமும் சேர்ப்பாள்
நினைத்ததை நடத்தி வைப்பாள்
    நினைத்ததை நடத்தி வைப்பாள்
வினைத்துயர் நோய்க ளெல்லாம்
    விலகவெ அருளிக் காப்பாள்
சினைத்தெழு கிளைகள் காப்பாள்
    செல்வமும் நலமும் சேர்ப்பாள்
முனைச்சமீன் மேலக் கோட்டை
    முதல்விதாள் தொழுமின் வந்தே

         பிறவாத பெருநிலை அளிப்பாள்
ஒருமனங் கொண்டு நம்பி
   உள்ளன்றித் தொழுது வந்தால்
இருவினை மும்ம லத்தால்
   எழுபிறப் பின்ப துன்பம்
பெருவுயிர் விலகச் செய்வாள்
   பீடுறு வீடு சேர்ப்பாள்
திருமிகு மேலக் கோட்டைத்
   தேவிதாள் தொழுமின் வந்தே
         அருஞ்சொற்பொருள்
காடு கிழாள் – காளி
மோடி – காளி
வல்லரி – வலிமை மிகுந்த சிங்கம்
வீட்டு – அழி, நீக்கு
உம்பர் – தேவர்
அடர்தல் – போரிட நெருங்குதல்
இம்பர் – இவ்வுலகத்தவர்
சோரி – இரத்தம்
இட்ட கோவில் – விரும்பும் கோவில்
 

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>