12.சஞ்சை வருக்கக் கோவை
காப்பு
முக்கண் முதல்வன் முதல்வன் பார்வை
புக்கென் சொல்லைப் பொலிவிக் கும்மே
அன்பும் அறிவும் வளர்த்துக் கொள்
ஆசை அதிகம் வளர்க்காதே
இன்சொல் பேசப் பழகிக்கொள்
ஈட்டி நாவால் எய்யாதே
உடலைப் பேணிக் காத்துக்கொள்
ஊர்தி ஓட்டின் கவனம் வை
எளிமை வேண்டும் சுயவாழ்வில்
ஏமாற்றாதே பொதுவாழ்வில்
ஐயந் தெளியக் கற்றுக்கொள்
ஒளியும் இருளுந் தொடருமடா
ஓங்கும் புகழும் குறையுமடா
ஒளவை தமிழை மறவாதே
அனைத்தும் கற்றோர் இல்லையடா
கல்விச் செல்வம் உயர்செல்வம்
காதால் கேட்டும் கற்றுக்கொள்
கிழமை மாறும் வரும்போகும்
கீழும் ஒருநாள் மேலாகும்
குறைகள் சொல்லித் திரியாதே
கூட்டிக் குறைத்துப் புகழாதே
கெட்ட குணத்தைப் பழகாதே
கேடு யார்க்கும் செய்யாதே
கையில் கறையே கூடாது
கொள்கை தவறக் கூடாது
கோழைத் தனமும் கூடாது
கெளவைக் கிடமே கூடாது
கடமை தவறக் கூடாது
சங்கத் தமிழைப் படித்துப்பார்
சான்றோர் வாழ்வை நினைத்துப்பார்
சிறுமை சேர்க்கும் செயல்வேண்டாம்
சீற்றம் உனக்கே தீமை தரும்
சுற்றங் காக்கத் தவறாதே
சூதில் நாட்டங் கொள்ளாதே
செய்யுந் தொழில் சிந்தைவை
சேரும் நட்பைத் தேர்ந்தே சேர்
சைவ உணவில் நாட்டம் வை
சொல்லும் சொல்லில் தவறாதே
சோர்வை உறவாய்க் கொள்ளாதே
செளமியன் போல்நீ வெல்வாயே
சந்ததி போற்ற வாழ்வாயே
தஞ்சம் புகுவாரைத் தாங்கிக்கொள்
தாழ்வு மனப்பான்மை தள்ளிவிடு
தினமும் உடற்பயிற்சி செய்யத் தவறாதே
தீமைக்குத் தீமை தீர்வாக மாட்டாது
துன்பம் மிகும்போதும் சோர்ந்து தளராதே
தூங்கிச் சுகங்கண்டால் தோல்விக்கு ஆளாவாய்
தெய்வத்தை நம்பிச் செயலாற்று வெற்றிதரும்
தேவைக்கு மேலே சேர்த்துவைக்க எண்ணாதே
தையல் சுகம் நாடித் தடம்புரண்டு செல்லாதே
தொண்டின் பெருமை சொல்லற் கரிதாகும்
தோல்வியைக் கண்டு துவண்டுமனஞ் சோராதே
தெளவைக்கு வீட்டின் தாழ்திறந்து வைக்காதே
தன்னைத் திருமகளே சார்ந்திருக்கப் பாடுபடு
நன்றி மறக்காத நல்லவனாய் என்றுமிரு
நாளை தொடங்குவதாய் நாளைக் கடத்தாதே
நிழல்கூட ஒளிதரலால் நீபடைக்க முடியாது
நீயும் நிழல்போல நிலையில்லை என்றுணர்வாய்
நுண்ணறிவுக் கெட்டாத நுட்பம் பலவுண்டு
நூலறிவு துணைசெய்யும் நோக்கம் அதில்வைப்பாய்
நெம்புகோல் தள்ளுவதை நீதள்ள முடியாது
நேற்றை மறுபடியும் நீயடைய முடியாது
நையத் துவைத்தாலும் நம்மானம் துணிகாக்கும்
நொடிக்கத் தனிவிரலின் நுனிமட்டும் போதாது
நோயில்லை யேனும் நொந்தமனங் கொல்லும்
நெளவிபோல் யார்க்குமொரு நாளும் மருளாதே
நம்பிக்கை போல நல்ல துணை வேறில்லை
பரிவுள்ள நெஞ்சந்தான் பயனுள்ள நெஞ்சம்
பாசத்தை ஏணிப் படியாக்கித் தள்ளாதே
பிஞ்சைப் பறித்தால் பெரியமரம் ஒன்றில்லை
பீடையுள் பீடை பிறர் உழைப்பில் தின்னுபவன்
புற்றுக்குள் ஈசலும் பொல்லாத பாம்புமுண்டு
பெருமையே பேசி பிறர்வெறுப்பைத் தேடாதே
பேசுகிற ஊமை பிறர்வெறுப்பைத் தேடாதே.
பையப் புகைந்தாலும் பகையணைக்கத் தவறாதே
பொய்யரை நம்பாதே புறங்கூறல் கேளாதே
போதைதெளியாத புல்லருடன் செல்லாதே.
பெளவம் பெரிதேனும் படுத்துறங்க முடியாது
பண்பு கருதியுனைப் பார்புகழ வேண்டுமடா
மண்ணை நம்பிதான் மனிதன் மனிதனை நம்பி மண்ணில்லை
மாரிவளங் குறைந்தால் மண்ணின் நலங் குறையும்
மின்னி இடியிடிக்கும் மேகந்தான் பொழிகிறது.
மின்வேகம் நீருக்குள் மேட்டிலது என்செய்யும் ?
முட்டைக்குக் கோழி முட்டையிட்டு நன்றிசெயும்
மூளைபோல் வேலை முடியும் வரைசெய்நீ
மெத்தப் படித்தாலும் வேண்டும் அடக்கமடா
மேதைக்கும் பேதை விளக்கந்தர நேரும்
மையநிலை கோடாத மனவலிமை வேண்டும்
மொத்த முதல்மதிப்பைச் சில்லரை பெறுவதில்லை
மோர் பாலாக முடியாது முதுமையும் அப்படித்தான்
மெளலியோ ஒன்றேதான் மன்னர்தலை எத்தனையோ
வட்டி அதிகரித்தால் வாட்டி வதைசெய்யும்
வாய்ச்சொல் மதிப்புயர்ந்தால் மந்திரமாய் விளங்கும்
விட்டுக் கொடுக்க விரும்புவதால் துயர்குறையும்
வீட்டுக்குத் தலைவனாகு நாட்டுக்குத் தொண்டனாகு
வெட்கந்தருஞ் செயலை மிகவெறுத்துத் தள்ளிவிடு
வேளை வரும்போது விரைந்து செயல்முடிநீ
வையத்தை நோக்க மனிதாநீ புற்றீசல்
வெளவும் பருந்தைப்போல் வயிற்றுக் கலையாதே
யவனரைப் போல நயந்து பொருளீட்டு
யானையும் அன்பால் பூனைபோல் அடங்கும்.
யுகம்முடிய வாழ்ந்தாலும் அகம்படிய வாழாதே.
யூகிக்க வல்லார்க்கும் யோகத் துணைவேண்டும்
யோசித்து வினையாற்றின் நோக்கம் நிறைவேறும்
யெளவனத்தால் மதியாதே நற்பண்பை நாடிமதி
ஞானத்தின் முன்னேற்றம் ஞாலத்தின் முன்னேற்றம்
ஞிமிறு பறந்தாலும் நீலவான் போகாது
ஞெமன்கோல் போல நிறைவை நாடு
ஞேயம் மிகுந்தாலும் நெறிவிலகிப் போகாதே
ஞொள்கும்நாள் சிலவேறும் நோகும்நாள் பலவாகும்
நுகரம் கொடுப்பதற்கும் கருணைமிக வேண்டும்
நூற்றுப்பதினொரு வரிகள்
ஒன்றும் ஒன்றும் இரண்டாகும்
உந்தாய் தந்த மறவாதே
மூன்றும் நான்கும் தொடர்ந்துவரும்
முப்பால் நாலடி கற்பாயே
ஐந்தும் ஆறும் அடுத்துவரும்
அன்பும் அறிவும் வளர்ப்பாயே
ஏழும் எட்டும் வரும்பின்னே
இன்பம் துன்பம் வரும்போகும்
ஒன்பதும் ஒன்றும் பத்தாகும்
உண்மை பேசல் உயர்வாகும்.