11.நன்னாற்பது
வாழ்த்து
திருவாய் உருவாய்த் தெளிவார் தருவாய்
வருவாய் அருள்வாய் வளமே தருவாய்
அருவாய் இருப்பாய் அனைத்தும் அறிவாய்
ஒருவாய் மருவாய் உளம்.
வணக்கம்
பெற்று வளர்த்த பெருந்தெய்வத் தாள்போற்றி
கொற்றமுடை எந்தை குளிரடிக – ளிற்போற்றி
கற்பித்த என்றன் கணக்காயர் தாள்போற்றி
நற்பத்து நான்குரைப்பேன் நான்
நூல்
1.
குலமொன்று நீதியன்று கும்பிட்டு வாழ
நலமருள் தெய்வமொன்று நந்தா – துலகத்தில்
நாட்டுவ தொன்றுபுகழ் நன்னூல் மதம்பலவும்
ஊட்டுவ தொன்றுண்மை யன்பு
2.
செல்வமே கல்விசேர்க்கும் கல்வியே செல்வமாக்கும்
செல்வமே செல்லையோட்டும் கல்வியே – அல்லையோட்டும்
செல்வமோ ஓடிப்போகும் கல்வியோ கூடிநிற்கும்
செல்வத்தால் நல்லறத்தைச் சேர்
3.
கல்லாது வாழும்நாள் கற்றறிருந்தும் கற்றபடி
நில்லார் நெடுங்கல்வி நின்றுபய – னில்லாச்சொல்
வல்லாங்கு கற்றும் வகுத்துரைக்க வல்லாதான்
வெல்லாதான் கற்றதெல்லாம் வீண்
4.
வெல்வது வேண்டுமொன்றேல் வெம்புலம் வெல்லவேண்டும்
கொல்வது வேண்டுமொன்றேல் கோபத்தைக் கொல்லவேண்டும்
கொல்லாமை வேண்டுமொன்றேல் நன்றிகொல் லாமைவேண்டும்
இல்லாமை ஒன்றேல் இகல்
5.
பேராசை இல்லான் பிணியாஞ் சினமில்லான்
தீராத காமம் செருக்கில்லான் – ஓரா
மொழியில்லான் மூத்தோ ரிகழாதான் மூவாப்
பழியில்லான் பார்புகழ் வான்
6.
கொள்ளான் கொடுத்துண்பான் கோடான் குணங்கெட்டே
எள்ளான் எளியாரை ஏதமுற – உள்ளாதான்
சொல்லான் புறமொன்றுஞ் சோம்பல் தனைக்கொள்ளான்
நல்லான் அவன்நட்பை நாடு
7.
இல்லாத் திறமுளதாய் எத்தி மதிப்படைவார்
நில்லாப் பொருள்நத்தி நேரழிவார் – சொல்லாத
சொல்லித் துணையிழப்பார் சொன்னபடி செய்கல்லார்
எல்லாரும் எள்ளிப் படும்.
8.
கள்ளுங் கவறும் கணிகை உறவுமிவை
கொள்ளுங் குணங்கெட்டார் கூட்டுறவைத் – தள்ளுங்கள்
உள்ளத்தாற் பொய்யா ஒழுக்கத்தார் கூட்டுறவைக்
கொள்ளுங்கள் நன்றாங் குடி
9.
மதியாதார் வாசல் மறந்தேயும் சென்று
மிதியாதார் மிக்கிருந்துந் தம்மை – மதியாதார்
மானம்போய் வாழாதார் மாற்றாருந் தூற்றாதார்
வானந்தாய் வைகும் புகழ்
10.
நிதிபோய் நிலைமைபோம் நெஞ்சுரம்போய் ஆளுங்
கதிபோம் கருணைபோய் ஈகை – மதிபோகும்
தானம்போய்த் தாங்குபுகழ் போகும் தகைசான்ற
மானம்போய் மற்றெவையும் போம்
11
நல்லவரே சொல்லுவரோ நட்டவரே தாங்குவரோ
வல்லவரே வெல்லுவரோ வன்கணரே – கொல்லுவரோ 
இல்லவரே ஏற்பவரோ ஏழையரே ஈகலரோ
அல்லவர்க்கும் ஆகும் அவை
12
பணிவில்லாப் பெண்டாட்டி பற்றில்லா வேலை
துணிவில்லாக் கூட்டாளி சோம்பல் – தணிவில்லாத்
தூக்கத் தொடுமறதி துன்பந் தருநோய்கள்
ஆக்கத் தடுத்திருக்கும் ஆறு
13
பொல்லாத பிள்ளை பொறுப்பில்லாக் கூட்டாளி
கல்லாத நண்பன் கருத்தறிந்து நில்லாத
ஏவும் பணியாளன் ஏலா வழித்துணைவன்
மேவுதலின் மேவாமை மேல்
14
அன்பறிவு ஊக்கம் அருள்வாய்மை கண்ணோட்டம்
தன்மானஞ் சால்பு தகைநட்பு – நன்னோக்கம்
தாளாண் பொறையடக்கம் தன்னுறுதி நல்லொழுக்கம்
மாளாமற் காக்கவரும் மாண்பு
15
பாம்பு கடித்துவிட்ட பல்நஞ்சு தீருமின்றேல்
தீம்புந் தலையடு தீர்ந்துவிடும் – வீம்புடைய
தீம்புசெயு மாந்தர் தீண்டிவிட்ட சொல்நஞ்சோ
போம்போந் தலைமுறையும் போம்
16
முட்டாள் உறவால் முடிவில்லாத் துன்புறுவர்
ஒட்டார் தொடர்பால் ஒருதலையாக் கெட்டழிவார்
நட்டார் துறவால் நனிதுன்பம் துன்பமிகும்
கெட்டாரை விட்டொழியாக் கால்
17
வளத்தக்க வாழ்க்கை வறுமையுட் செம்மை
உளத்தக்க போக்கொருமை ஓம்பிக் – கொளத்தக்க
கற்பொழுக்கம் மானம் கடமை தவறாமை
பொற்பொழுக்கம் நற்கிழத்தி பூண்
18
உற்றாரை சுற்றத்தை ஊரோடு விட்டுவந்து
கொற்றவனாய் ஏற்றுக் குடிவிளங்க – நிற்பவளை
பாடாய்ப் படுத்துகிற பாவிக்குப் பாதாளம்
வீடாய்ப் புகுத்தும் விதி
19
கடன்பட்டார் வாழ்க்கையேதம் காவாநா ஏதம்
உடன்படார் சேர்க்கையேதம் உள்ளத் – திடம்படார்
கீழ்வாழ்தல் ஏதம் கிளைகெட வாழ்தலேதம்
தாழ்வாக்கும் ஏதமிவை தாம்
20
காலை இருந்தோர் கதிரோனை முந்திவிட்டார்
மாலை இருந்தார் மதியோனை – மாலை
மணக்கோலங் கொண்டார் மறுநாழி யந்தோ
பிணக்கோலம் யார்க்குநிலை பேறு
21
கூன்குருடு மூங்கை கொடுநோய்ப் பிணியாளர்
தான்முடவர் கைமுடவர் காப்பில்லார் – போன்றவர்கள்
தான்பட்டு வாழும் தன்மையிலார் யாவர்க்கும்
வான்பொருளை வாரி வழங்கு
22
பொல்லாமை நாணவேண்டும் பொய்யாமை பேணவேண்டும்
நில்லாமை காணவேண்டும் நீங்கவேண்டும் – இல்லாமை
கொல்லாமை பூணவேண்டும் கோடாமை மாணவேண்டும்
கல்லாமை நீங்கவேண்டும் கல்
23
பெற்றவர் பீடுதோன்றும் பிள்ளையைப் பெற்றவர்க்குக்
கற்றவர் பீடுதோன்றும் காமுற்றுக் – கற்றவர்க்கு
விட்டவர் பீடுதோன்றும் வேண்டுவ விட்டவர்க்கு
நட்டவர் பீடறிவார் நட்டு
24
வறியார்க்கு நற்றுணையாய் வாழ்தல் வலிமை
குறியார்க்கு நற்றுணையாய்க் கூடல் – சிறியார்க்கு
முந்திப் பணிதல் முடியார் பிழைபொறுத்தல்
வந்திக்கத் தக்க வனப்பு
25
தவறிழைக்கப் பட்டார்தாம் தண்டிக்கா விட்டால்
தவறிழைத்தார் தப்பினாரென் றில்லை – தவறாதே
எங்கிருந்தோ யாராலோ என்றைக்கோ வந்துறுத்தும்
அங்கதனைத் தப்பல் அரிது
26
கையூட்டு வாங்குங் கடைப்பட்டார் கற்றறிருந்தும்
பொய்யூட்டு மெய்சுமக்கும் புன்மனத்தார் – மையூட்டும்
வஞ்சத் தரகர் வளர்கந்து வட்டியினார்
அஞ்சிப் பதைத்தழிவார் அஞ்சு.
27
கந்துக் கடன்பட்டார் கைக்கா சிருந்துண்பார்
சிந்தித்துச் செய்யார் சினஞ்சேர்ந்தார் – முந்தி
மனம்போன போக்கில் மதிபோனார் என்றும்
இனம்நோவ விட்டழிவார் ஈங்கு
28
பொடியும் புகையிலையும் பொல்லாப் புகைப்பும்
கடிமின் கடிந்துடலைக் காமின் – நெடிதுய்மின்
கற்றறிந்தும் நில்லாது காலமெல்லாம் கொண்டொழுகின்
உற்றபொருள் யாக்கைகளுக் கூறு
29
பழகிப் பகைமுடிக்கும் பாசாங்கு நட்பு
குழவிக் குடிகெடுக்கும் கொள்கை – அழகாமோ
மூடி மறைத்தாலும் முன்வினைக்குப் பின்வினையாய்த்
தேடி அழவருமத் தீங்கு
30
உழைக்காத சோம்பேறி உண்ணுவதே குற்றம்
தழைக்காத மற்றவரைத் தாங்கல் – பிழைகுற்றம்
பெற்று விடல்குற்றம் பின்பற்றல் நட்டிருத்தல்
உற்றுறைதல் குற்றமென ஓது
31
வல்லார் பகையுறுதல் வாய்காவார் நட்புறுதல்
நல்லார் தொடர்பறுதல் நன்குணர்ந்து – சொல்லார்
துணையுறுதல் எண்ணித் துணியார் செயலுறுதல்
அணைவுறுதல் ஆறாகும் ஐந்து
32
புண்படப் பேசாமை பொல்லாச் சினங்கொண்டு
கண்படச் சொன்னாலும் காலமெல்லாம் – எண்ணியதை
அன்படச் சொல்லி அடராமை உன்மதிப்பு
முன்படச் செய்யும் முதல்
33
எண்ணித் துயர்செய்வார் ஏற்றம் அதிற்காண்பார்
பெண்ணைப் பழித்திருப்பார் பெற்றவரை – வண்ணமுறப் 
பேணாதார் தற்பெருமை பேசிக் களித்திருப்பார்
நாணாதார் நாணத்தக் கார்
34
மூங்கைக்குப் பிள்ளை மொழிவல்லான் மூவாத
ஓங்குபுகழ் கொண்டாற்கோ ஊரறியான் – ஈங்குண்டு
யாரும் மரபுநிலை பார்த்து மதியாதீர்
தேரும் அவரவர்சீர் தேர்ந்து
35
உழைப்பான் உழைப்புறிஞ்சும் ஒட்டுண்ணி முன்னோர்
தழைப்பான் இழைத்தபொருள் தங்கிப் – பிழைத்துண்ணி
தானங் கரந்துண்ணி தஞ்சங் கெடுத்துண்ணி
ஈன மெனத்தெரிதல் என்று
36
ஒன்றேனும் நன்னூலை ஓதுகநீ ஓதியதில்
ஒன்றேனும் பின்பற்றி உய்ந்திருநீ – ஒன்றேனும்
நன்றாய செய்திருநீ நாட்டிற்கு நாளெல்லாம்
குன்றாத நல்லபுகழ் கூடு
37
ஒன்றுதான் கற்பதென்றால் உன்மொழிக் கல்விகல்நீ
ஒன்றுதான் செய்வதென்றால் உன்னாட்டுக் கென்றுசெய்நீ
ஒன்றுதான் கொள்கையென்றால் ஒன்றுல கென்றுகொள்நீ
என்றும் உனைமறவார் இங்கு
38
ஓடி விளையாடு ஒவ்வொருநாள் மாலையிலும்
கூடி விளையாடு கோடிநலம் – தேடிவரும்
பாடி மகிழ்ந்திரு பாடம் படித்துயர்நீ
நாடி வருஞ்சிறப்பு நம்பு
39
நீதிநூல் நூறு நெடுங்காலம் கற்றாலும்
பாதியதில் பின்பற்றும் பக்குவமோ – ஆதிமுதல்
இல்லையெனப் பொய்திருட்டு எல்லாம் சிரித்தாலும்
நல்லதெனச் சொல்லிவைத்தேன் நான்
40
உண்ணுவதும் தூங்குவதும் ஒருநாளும் தப்பாதே
எண்ணுவதும் நீதிகளை ஏடறியப் – பண்ணுவதும்
கண்ணேபோல் காப்பதுடன் காலமெலாம் கற்பதுதான்
மண்ணுலகைக் காக்கும் மருந்து