துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

21.மாட்சிப் படலம்

  வாழ்த்து
ஆடுகிற பாதம் அன்பரது சென்னி
சூடுகிற பாதம் தூயமலர் நெஞ்சம்
நாடுகிற பாதம் நான்வணங்கும் பாதம்
பாடுமெனை ஆளும் பரமசிவ பாதம்

             மேலோர்
செற்றவர்க் கருள்பு ரிந்து
   சினந்தவர்க் கன்பு காட்டிக்
குற்றமும் மறந்து நட்டுக்
   குறைகளைப் பொறுத்துப் புல்லி
அற்றவர்க் குதவி நல்கி
   அலந்தவர்க் கினிய கூறிக்
கற்றவா றொழுகி வாய்மை
   காப்பவ ரன்றோ மேலோர்

படிக்காத மேதையென மக்கள் சூடும்
   பட்டத்தைப் பணிவோடு தாங்கிக் கொள்வார்
பிடிக்காத பெருமைக்குப் போடும் பட்டம்
   பெரியோர்கள் தந்தாலும் ஏற்க மாட்டார்
குடிக்காத மதுவாகப் போதை யூட்டும்
   குவலயத்துப் புகழுக்கு மயங்க மாட்டார்
முடிக்காத கருமத்தில் கண்ணை வைத்து
   முடிக்கின்ற திறமுடைய காம ராஜர்
தாட்டாழும் தடக்கைகள் சரிந்த தொந்தி
   தக்கிளிநூற் கதர்வேட்டி நீண்ட சட்டை
பாட்டாளி மேல்துண்டு படர்ந்த நெற்றி
   பரிவூறும் பெருங்கண்கள் கருத்த மேனி
கூட்டத்தில் நடந்தாலும் உயரத் தாலே
   கூடியுள்ள மக்களெல்லாம் பார்க்கத் தக்க
சூட்டாத முடிதுறந்த சென்னி காந்தி
   தூயவழி நடக்கின்ற பாதம் பெற்றார்

காவியுடை கட்டித்தான் துறவ றத்தைக்
   கடைப்பிஇக்க வேண்டுமெனக் கருதா வண்ணம்
மேவுகத ராடையிலே விலகிச் செல்ல
   விளங்கிவரப் பெண்ணாசைஇ விலகிச் செல்ல
தாவுபொரு ளாசையுளந் தள்ளி யோட
   தற்பெருமை நெருந்காத சான்றோ ராகி
ஆவிபிறர் நலங்காக்கத் தொண்டு செய்ய
   அர்ப்பணித்தார் வாழ்நாளில் காம ராஜர்

பாடுபடும் பாட்டாளி பசித்த ஏழை
   பங்காளர் தொழிலாளிக் கருமைத் தோழர்
நாடுபுகழ் பெருந்தலைவர் நலிந்த மக்கள்
   நலங்காக்கும் ஒருதொண்டர் சொந்த பந்தம்
வீடுசுகம் விரும்பாத தியாகச் செம்மல்
   வீண்காலம் போக்காத கர்ம வீரர்
ஏடுகளைப் புரட்டுவதால் வாங்கும் பட்டம்
   ஏதுமிலாப் படிக்காத மேதை வாழ்வில்

உண்ணுதல் நோக்க மில்லை
   உறங்குதல் அதிக மில்லை
எண்ணுதல் தனக்கென் றில்லை
   ஏழையை மறந்த தில்லை
பண்ணுதல் கொஞ்ச மில்லை
   பகர்வதில் வஞ்ச மில்லை
ஒண்ணுதல் உறவு மில்லை
   ஒழுக்கத்தில் குறிவே யில்லை

தன்னைத்தான் உயர்வா யெண்ணித்
   தருக்குற்று நடந்த தில்லை
முன்னைத்தன் நிலையில் மாறி
   முரண்பட்டுச் சென்ற தில்லை
பொன்னொத்த தொண்டர் கூட்டம்
   புரைபடச் செய்த தில்லை
துன்னித்தன் அருகில் உள்ளோர்
   துதிபாட மகிழ்ந்த தில்லை

மனையடி வாங்க வில்லை
   வளமனை கட்ட வில்லை
தினைபொருஞ் செல்வ மெங்குஞ்
   சேமித்து வக்க வில்லை
புனைந்தன பட்டு மில்லை
   பொன்மணி ஏது மில்லை
முனைந்தது தனக்கென் றில்லை
   முனிவனும் நிகரே யில்லை

அசைகின்ற சொத்து மில்லை
   அசையாத சொத்து மில்லை
நசைகொண்டு சொந்த பந்த
   நலத்திற்கு முனைந்த தில்லை
பசைகண்டு வந்த வர்க்குப்
   பதவியுந் தந்த தில்லை
வசைகொண்டு வாழ்ந்த தில்லை
   மரியாதைக் கெல்லை யில்லை

நாடகம் நடிக்க வந்தோர்
   நாட்டியம் ஆட வந்தோர்
மாடமா ளிகைகள் கட்டி
   வாழ்கிற சென்னை யின்கண்
நாடர சாள வந்தும்
   நற்புகழ் வாய்ந்தி ருந்தும்
வாடகை வீட்டி லேயே
   வாழ்ந்தவர் காம ராஜர்

விதவித மான பண்டம்
   விரும்பிய வண்ண முண்ண
இதமுற உணவ கங்கள்
   எத்தனை சென்னை யின்கண்
சதமென வந்து தாய்போல்
   சமைத்துடன் தப்க்கிப் பேணி
உதவிய வைர வன்கை
   உணவையே உண்டா ரன்றோ

எல்லார்க்கும் கல்வி வேண்டும்
   எல்லார்க்கும் வேலை வேண்டும்
எல்லார்க்கும் உணவு வேண்டும்
   எல்லார்க்கும் உடைகள் வேண்டும்
எல்லார்க்கும் இல்லம் வேண்டும்
   எல்லார்க்கும் ஏற்றம் வேண்டும்
எல்லார்க்கும் இவைகள் சேர
   எந்நாளும் உழைக்க வேண்டும்
 
கல்லாமை அகல வேண்டும்
   கணிதமதி போதா தென்று
சொல்லாமை வேண்டும் யாரும்
   சோம்பாமை வேண்டும் நாட்டில்
இல்லாமை நீங்க வேண்டும்
   இயலாமை சொல்லி யேங்கி
நில்லாமை வேண்டு மென்ற
   நிலைபெறப் பாடு பட்டார்

வெற்றிமேல் வெற்றி கண்ட
   வீரனுந் தோற்ப துண்டு
சற்றுமே எதிபா ராத
   சங்கடம் வருவ துண்டு
சுற்றமே பகையாய் மாறித்
   தொல்லைகள் தருவ துண்டு
மற்றிவை காம ராஜர்
   வாழ்விலும் நிகழ்ந்த்ச் தம்மா

நேற்று நண்பகல் உண்டதை
   இன்று நினைக்கிற காலமோ
காற்றுப் போகிற போக்கிலே
   காலை வாரிவிட் டோடுவார்
ஆற்று நீரெனும் ஆசையால்
   அருந்த முந்துவார் கொஞ்சமோ
தோற்ற தில்லைநீர் தோற்றதும்
   துயர முற்றதும் தேசமே

கையை வைத்திரு கண்ணை மூடலாம்
   கைசி றந்ததோ கண்ணினும்
பொய்யை வைத்தொரு மெய்ம றைக்கலோம்
   பொய்சி றந்ததோ மெய்யினும்
பைய மேகமும் பருதி மூடலாம்
   படர்வ தாலதை விஞ்சுமோ
ஐய தோல்விநீ அடைய வைப்பினும்
   ஆரு னக்கிணை யாகினார்?

சுதந்திரம் பெற்ற நாட்டில்
   தோன்றிய கட்சி நூறு
பதவியும் புகழும் நாடி
   பாதையை மாற்றுங் கட்சி
கதம்பமாய் ஆகும் கூகை
   காக்கையின் அணியில் சேரும்
மதம்வளர் சாதி செல்வ
   மமதையில் வாகை சூடும்

மக்க ளாட்சி தேவை தேவை
   வாக்களிக்கும் உரிமையில்
தக்க மாற்றம் வேண்டும் வேண்டும்
   தகுதி காணும் பக்குவம்
மிக்கி ருக்கக் கல்வி தேவை
   வேடும் வயதின் அதிகமும்
சொக்க வைக்கும் செலவி லாத
   தூய வழியும் வேண்டுமே

சட்ட மாற்றம் வேண்டும் வேண்டும்
   தகுதி யான உறுப்பினர்
மட்டு மிங்கு போட்டி யிட்டு
   வாகை சூடும் வகையிலே
ஒட்டி யுள்ள கட்சி யாலே
   உயர உயரப் பறக்கிற
கட்ட விழ்ந்த கூட்ட மிங்கு
   கலையி ழந்து போகவே

பாரதத்தின் விடுதலைக்குப் பாடு பட்ட
   பண்பட்ட பெருங்கட்சி இரண்டு பட்டுத்
தேரற்ற உற்சவமா மூர்த்தி போல
   செல்வாக்குப் பெயரேறிக் கொண்ட தொன்று
வேரற்ற காலத்தும் விழுதா யூன்றி
   விண்படரும் ஆலமரம் தாங்கு வோரில்
நேரற்றா பெருந்தலைவர் காம ராஜர்
   நெஞ்சமர்ந்த பழங்கட்சி யான தொன்று

ஒருகட்சி இருகட்சி யான தம்மா
   ஒவ்வொன்றும் வெற்றிபெறத் துடித்த தம்மா
பருவத்தில் நட்டபயிர் தழைத்த தம்மா
   பாட்டாளி நெஞ்சிலது பாய்ந்த தம்மா
உருகத்தான் உள்ளத்தில் வளர்ந்த சோகம்
   உயிருக்குப் பகையாக முடிந்த தம்மா
நிருமித்த சுதந்திரநற் ஜோதிக் குள்ளே
   நிமலரும் போயளிந்து கொண்டா ரம்மா

மயிலினம் அகவ வில்லை
   மாங்குயில் கூவ வில்லை
உயிரினம் ஒடுங்கி யேங்க
   உலகெலாம் இரங்கி யேங்க
வெயிலெரி கதிரோன் மேகம்
   விலகியும் சுடுதல் மாற
கயிலையில் வரவு கூர
   காமராஜ் சென்றா ரம்மா

தாயகம் நொந்தது சாற்றவோ
   தமிழகம் நொந்தது சாற்றவோ
நாயகன் துஞ்சிய நாளிலே
   நானிலம் நொந்தது சாற்றவோ
வாயகம் நொந்ததைக் காட்டவே
   மாநில முற்றிலும் அழுததே
தூயவன் பிரிவிலே பாரதம்
   துன்ப மடைந்தது கொஞ்சமோ

அளக்கரிய புகழ்நிற்கும் அகிலத்தை அழவிட்டு
விளக்கணைக்கச் சொல்லியந்த விளக்கணைந்து போனதம்மா
குளக்கண்ணிர் கொட்டினுமென் கொண்டுவந்து தருவானோ
இளக்கமனம் இல்லாத எமன்கொடிய பாவியம்மா

தனிவாழ்விற் போற்றத் தகுங்காம ராஜர் தமிழ்நாட்டை
இனிதாள வந்ததும் எளிமைக்குள் வாழ்ந்தார் இவர்போல
மனிதாபி மானம் மனமாரக் கொண்டு பொதுவாழ்வில்
இனியாரும் இங்கே இருப்பாரோ சொல்லல் எளிதாமோ

அறவாழ்வுக் கொருதுணைவி அணுகா மைந்தர்
   அகத்திணையைப் புறத்திணையின் பகையா யெண்ணிப்
புறவாழ்வு பொதுவாழ்வு புகுந்த மேலோர்
    புறங்கூறும் புன்மொழியும் பொய்க்க வாழ்ந்தோர்
பிறநாட்டு வங்கியிலே கணக்குண் டென்ற
    பிதற்றுதலைப் பொய்யாக்கிப் பெருமை பெற்றோர்
இறவாத புகழுடைய காம ராஜர்
    இறந்ததற்குப் பின்னாலும் வாழ்கின் றாரே

பாடுபடுந் தொழிலாளி திறமை யோங்கப்
   பல்வேறு தொழில்நுட்பப் பள்ளி தோன்ற
நாடுயரக் கல்ல்ற்ரிக் கல்வி யோங்க
   நலங்காக்கும் மருத்துவர்கள் பொறியா ளர்கள்
வீடுதொறும் உருவாக வழிவ குத்த
   விந்தைமிகு செயல்வீரர் காம ராஜர்
நீடுபுகழ் என்னாளும் நிலைக்க வேண்டும்
   நெறிபோற்றித் தமிழ்நாடு தழைக்க வேண்டும்

பெயர்வைத்துச் சிலைவைத்துப் பெருமை சேர்க்கப்
   பேசுவது போதாது முடிந்த மட்டும்
துயரற்றுச் சமுதாயம் உயர்வ தற்குத்
   தொண்டுசெயப் பாடுபடத் துணிய வேண்டும்
சுயநலத்துக் குறிக்கோளைத் தூரத் தள்ளி
   தூயமனங் கொண்டவரை நினைவில் வைத்து
பயன்மிக்க செயலாற்றப் பழகிக் கொண்டால்
   படிக்காத மேதைவழி படர்த லாமே
        மங்கள வாழ்த்து

வாழிய செந்தமிழ் வாழிய காவியம்
ஊழியுங் கடந்திவர் உயர்புகழ் வாழிய
வாழிய சுதந்திரம் வாழிய பாரதம்
வாழிய பிறர்க்கென வாழுநன் மரபே

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>