துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

20.ஆட்சிப் படலம்

வாழ்த்து

தேவார மூவர் திருநாம மகிமை
   செவியேற வைத்த தெளிவும்
நாவர ஓதும் திருவாச கத்தை
   நனிநம்பி யுற்ற நசையும்
மூவாத தமிழில் திருமூலர் சொல்லும்
   மொழிதேர்ந்து கொண்ட முடிவும்
ஓவாத பக்தி ஒளிகூட்ட வுய்ந்தேன்
   உளமேவி யாள்க சிவமே
         நாடுசெழிக்கும்
காடு செழிக்கும் மழைவரவால்
   கழனி செழிக்கும் நீர்வரவால்
வீருசெழிக்கும் பொருள்வரவால்
   வேந்து செழிக்கும் நெறிமுறையால்
ஏடு செழிக்கும் மொழியுறவால்
   இரவு செழிக்கும் ஒளியுறவால்
நாடு செழிக்கும் நல்லவரால்
   நன்மை செழிக்கும் மதியாலே

மன்ன ராட்சி போன திங்கு
   மக்க ளாட்சி மலர்ந்தது
தென்ன கத்தில் வலிய கட்சி
   தேர்தல் வெற்றி பெற்றது
முன்ன ரிங்கு முதல்வ ராகி
   முறைபு ரிந்த சிற்சிலர்
பின்ன ரிங்கு நாடு பெற்ற
   பெருமை சற்று பேசுவோம்

இங்கிலாந்து மன்னரேவ
   இங்கிருந்த ஆளுநர்
தங்களாட்சி மாநிலத்தில்
   சட்டமன்றங் கூட்டினார்
பங்குபற்றி வென்றுகட்சி
   பதவியுற்ற நாளிலும்
சங்கமித்த காமராஜர்
   சட்டமன்ற மேகினார்

விடுதலைக்கு முன்னரிங்கு
   வெற்றிபெற்ற வீரரின்
கெடுதலற்ற ஆட்சிநன்மை
   கிளந்துநாடு மகிழுமே
கடுகடுத்த குற்றமற்ற
   காமராஜர் வளமெனும்
கொடுமுடிக்குத் தமிழகத்தைக்
   கொண்டுபோக முந்தினார்

விட்டோடுங் குலக்கல் விக்கு
   விடைதந்து முதல்வ ராகிக்
கட்டாயக் கல்வி நல்கும்
   கடமையில் கண்ணாய் நின்றார்
கிட்டாத பொருள்கள் கிட்ட
   கிராமத்து மக்கள் போற்ற
இட்டெங்கும் ரேசன் மூலம்
   எல்லாரும் மகிழ வைத்தார்

வயிற்றுக்குச் சோறிட்டு ஞான மூட்டி
   வடலூரில் அருளாளர் வழிவ குத்தார்
பயிற்றித்தின் பசிபோக்க மதிய நேரம்
   பள்ளியிலே சிறுவர்க்களுக் குணவு  நல்கும்
வியப்புற்றுக் கொண்டாடும் திட்டந் தீட்டி
   விருப்புற்று நிறைவேற்றி வெற்றி கண்டார்
மயக்கற்ற மதியாளர் மதித்துப் போற்றும்
   மாண்புற்ற பெருந்தலைவர் காம ராஜர்

ஈன்றெடுத்த தாயாரின் ஆசை கண்டும்
   இளம்வயதில் பள்ளியிலே தொடர்ந்து கற்றுத்
தாந்துய்க்க இயலாத கல்விச் செல்வம்
    தமிழ்நாட்டுச் சிறுவரெலாம் துய்க்கு மாறு
வான்முட்டும் புகழ்நல்கும் கல்விக் கூடம்
    மனங்குளிர நாடெல்லாம் தொடங்கி வைத்தார்
தேசொட்டும் மழலைமொழிச் சிறுவ ரெல்லாம்
    தெய்வமெனக் கொண்டாடும் காம ராஜர்

பள்ளியில் படிக்கத் தக்க
   பருவத்தில் படிக்க வைக்க
உள்ளியும் முடியா தேழை
   உருகுதல் கண்டும் நாடு
வெள்குறச் சிறுவர் வேலை
   செய்திட விடுதல் கண்டும்
எள்ளறு திட்டந் தீட்டி
   இலவசக் கல்வி தந்தார்

சீருடை தரச்செய் வித்தார்
   சிலேடுபுத் தகம்பொ ருள்கள்
ஊருடை யவரை நாடி
   உதவிட வழிவ குத்தார்
பேருடை மேலை நாடு
   பெய்தபல் பொருள்கள் கொண்டு
பாலரு கதிச யிக்கப்
   பகலுண வளிக்க வைத்தார்

மருத்துவ மனைகள் கட்டி
   வசதிகள் பெருகச் செய்து
மருத்துவர் செவிலி மார்கள்
   மக்களின் நோய்கள் தீரப்
பொருத்தமாம் பணிகள் செய்ய
   புறநகர் கிராம மக்கள்
நிருத்தரும் தாய்சேய் மாரும்
   நிதஞ்சுகங் காண வைத்தார்

முதியவர் கல்வி கற்க
   முனைப்பொடு திட்டந் தந்தார்
பதிகளில் மின்வி ளக்குப்
   பலமடங் குயர வைத்தார்
நிதிவளர் சுங்கம் மக்கள்
   நிலையறிந் துயர வைத்தார்
கொதிகலன் தருமின் சக்தி
   கூடுத லாகு வித்தார்

வேளாண்மை செழிக்கச் செய்தார்
   விளைநிலம் பெருகச் செய்தார்
தாளாண்மை நுட்பங் காட்டும்
   தறிநெச வுயரச் செய்தார்
கேளாகித் தொழிலா ளர்க்குக்
   கிழமைகள் கிடைக்கச் செய்தார்
மீளாத வறுமை நீக்கும்
   வேலைவாய்ப் புயரச் செய்தார்

மலைவளங் காத்து நாட்டில்
   மரவளம் பெருகித் தண்ணீர்
நிலைகுளம் ஆழ மாக்கி
   நிலவளங் காத்து வீணே
அலைகடல் போகும் நீரை
   அங்கங்கே வயலில் பாய்ச்சி
விலைமிக ஏறா வண்ணம்
   விளைபொருள் பெருக்கு வித்தார்

சாலைகள் சிற்றூர் பேரூர்
   சந்திக்க அமைத்துத் தந்தார்
ஆலைகள் பெருகச் செய்து
   அருந்தொழில் வளரச் செய்தார்
வேலையை நிறுத்தா வண்ணம்
   விரும்பிய கிடைக்கச் செய்தார்
பாலையும் நல்கிக் காக்கும்
   பசுவையும் பெருகச் செய்தார்

எங்கெங்கும் ஏழை மக்கள்
   இந்திய நாட்டில் பார்த்தால்
அங்கங்கு சிலரே செல்வ
   ஆதிக்கம் புரிக றார்கள்
இங்கிந்த நிலையை மாற்ற
   இளைஞரே புறப்ப டுங்கள்
கங்கணங் கட்டி ஏழ்மை
   கருவற உழைப்போ மென்றார்

பிற்பட்டுத் தாழ்த்தப் பட்டு
    பிறவியால் அவதிப் பட்டோர்
முற்பட்டுப் பொருளா தார
    முன்னேற்றம் பெற்றால் மூளை
அற்பத்தை நீக்குங் கல்வி
    அறிவுற்றால் தாழ்வு சொல்வார்
பற்பட்டுத் தவியா ரென்று
    பரிவுடன் செயல்பு ரிந்தார்

ஓடுநதி பலவற்றுள் அணைகள் கட்டி
   உற்பத்தி பெருகிவர வழிகள் செய்து
நாடுவளம் பெருகிவரத் திட்டந் தீட்டி
   நல்லபல தொழிற்சாலை பெருகச் செய்து
காடுவளம் அழியாது காத்து நல்ல
   கனிவளமும் தொழில்வளமும் பெருக வைத்து
வீடுவளம் பெருகிவர வேலை தந்து
   மேன்மேலும் நாடுயரப் பாடு பட்டார்

ஆசிரியர் ஓய்வுற்றால் ஐயோ பாவம்
   அவர்நிலையைக் கண்டிரங்கிக் காம ராஜர்
வாசிக்கப் பழக்கியவர் குடும்பம் வாழ்த்த
   மகிழ்ந்தோய்வு ஊதியத்தை வழங்கிக் காத்தார்
மாசில்லாக் குடிநீரை மக்கள் கொள்ள
   வழிந்தோடும் நீர்தேக்கி அணைகள் கட்டி
நேசிக்கும் நீர்மையுள காம ராஜர்
    நெடுங்காலத் துயர்நீக்கிக் குடிநீர் தந்தார்

மூன்றுமுறை முதலமைச்ச ராய மர்ந்து
   மூன்றாறு வருடங்கள் ஆட்சி செய்தும்
தான்பிறந்து வாழ்ந்திருந்த சொந்த வீட்டைச்
   சற்றேனும் புதுப்பித்துக் கொள்ள வில்லை
மேன்மட்டக் குடிமக்கள் பயன்ப டுத்தும்
   வேறெந்த வசதிகளும் பயன்ப டுத்தும்
ஏன்சற்றும் உணராமல் சுயந லத்தில்
   எத்தனையோ பேரிங்கு அலைகள்

தான்பிறந்த தாய்நாட்டின் தேவைக் காக
   தயங்காது போரிட்டு கிளர்ச்சி செய்து
நான்குமுறை சிறைப்பட்டுக் கொடுமைப் பட்டு
   நான்கைந்து வருடங்கள் கழித்த தோன்றல்
ஈன்றெடுத்த தாயாரின் தேவை கேட்டும்
   என்வசதிக் கிதுமுடியா தென்றா ரிங்கே
நான்பெரியன் என்றுசுகம் நாடுவார்க்கேன்
   நாணமிலை இ·தறிந்தும் வெட்கக் கேடே

தாய்முகத்தப் பார்த்துவர நேர மில்லை
   தாய்நாட்டிற் குழைப்பதில் மூழ்கி விட்டார்
போய்வருவோர் தம்மிடத்துத் தாயா ருக்குப்
   பொறுப்போடு பணந்தந்து காத்து வந்தார்
வாய்விட்டுச் சற்றதிகந் தாயார் கேட்டார்
   வரவுக்குள் சற்றதிகந் தாயார் கேட்டார்
சேய்நாட்டு முதலமைச்சர் என்றா லுந்தாய்
   சிவகாமி செல்வத்தில் புரள வில்லை

சட்டமன்ற உறுப்பினராய்க் காம ராஜர்
  தமிழ்நாட்டில் அமர்ந்ததற்குப் பெருமை சேர்த்தார்
இட்டமுடன் பாராளு மன்றம் நாடி
  எதிர்பார்க்க வென்றதற்கும் ஏறந் தந்தார்
கிட்டுபுகழ் விருதுநகர் தட்டிக் கொள்ள
  கிடைக்கின்ற பொதுத்தேர்தல் வாய்ப்பில் எல்லாம்
அட்டியின்றி அவர்நிறுத்தும் நகர்மன் றுக்கும்
  அவர்தலைவர் ஆகுவிக்கும் பெருமை கொள்ளும்

பகைவென்ற காங்கிரசுத் தலைவ ராகிப்
   பாரதத்தை வழிநடத்து பெருமை பெற்றார்
தகையாளர் நேருமறை வுற்ற பின்னர்
   லால்பகதூர் சாஸ்திரியை இந்தி யாவின்
வகையான பிரதமராய் வயங்க வைத்தார்
   மனம்வைத்தால் தானந்தப் பதவி யேற்கத்
தொகையாகப் பலமிருந்தும் இந்திரா காந்தி
   தொடர்தந்தப் பதவியிலே அமர வைத்தார்

பத்தம்சத் திடத்த வகுத்துத் தந்தார்
   பல்லாண்டு காங்கிரசைக் காத்து நின்றார்
மெத்தத்தன் வரவெண்ணி விரும்பு கின்ற
   வெளிநாடு பலசென்று திரும்பி வந்தார்
முத்தொத்த வெண்ணிறத்துக் கதரின் ஆடை
   மொழிகாட்டி மனங்காட்டி முறுவ லிக்க
எத்திக்குச் சென்றாலும் உடுத்துச் சென்றார்
   இறுதிவரை வேறுடைக்குச் செல்லா ஏந்தல்

தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலைவ ராகி
   தக்கசெயல் புரிந்தனை உயர வைத்தார்
துமியளவு சிறுகுறையுந் தோன்றா வண்ணம்
   தொண்டர்களை வழிநடத்திப் பெருமை சேர்த்தார்
தமியரிவர் செயல்நாடி இந்தியாவே
   தலைவரெனக் கட்சிக்குத் தேர்ந்த தம்மா
அமிழ்தமெனப் பதவிக்கு அலையா வீரர்
   அடக்கமுடன் அதையேற்றுப் பணிபு ரிந்தார்

அன்னை நாடு காக்கும் நல்ல
   அரிய வாய்ப்பு நேரினும்
என்ன லுற்ற எவருங் காண
   எளிமை பேணிப் பழகினார்
சொன்ன சொன்ன குறைக ளாய்ந்து
   சோர்வி லாமு யற்சியால்
பன்ன எண்ண மகிழ நல்ல
   பணிக ளென்று மாற்றினார்

தாய்மொழி தளர நேர்தல்
   தடுப்பதில் கவனம் வைப்பார்
ஆய்மொழி ஆகட் டுந்தான்
   ஆவன மட்டுஞ் செய்வார்
வாய்மொழி பார்க்க லாந்தான்
   மனமதை அலசிப் பார்க்கும்
சேய்மொழி போல யாரும்
   தெரிகிற நடையில் சொல்வார்

சொன்னின்று சுருங்கச் சொல்லி
   தூக்கமுங் கடிந்தெந் நாளும்
முன்னின்று தேர்தல் வெற்றி
   முறையறிந் ததைமு டிப்பார்
என்னின்று செய்வ தென்றே
   எண்ணிய செயல்மு டிப்பார்
பின்னின்று சிக்கல் தீர்த்தே
   பேரர சாள வைப்பார்

முதலமைச்சர் பதவியிலே தமிழ்நாட் டின்கண்
   முனைபோடு பணியாற்றி வருங்கா லத்தில்
பதவியிலே இருக்கின்ற முதிய வர்கள்
   பணியாற்ற இளைஞர்க்கு வாய்ப்பு நல்கி
இதமாக விலகுவது நல்ல தென்ற
   எதிர்பார்ப்பை விளக்கியதன் எடுத்துக் காட்டாய்
சதமிந்த நாற்காலி யல்ல வென்று
   சட்டென்று விலகியவர் காம ராஜர்

சிலசொல்லிப் பலசெய்யும் செவ்வி பெற்றார்
   திருநாட்டுக் பொதுவாழ்வைத் தழுவி நின்றார்
உலகத்துப் பொதுப்போக்கில் மனைவி மக்கள்
   உள்ளவனோ சிறுகுடும்பி தனித்து வாழ்ந்தும்
குலமுயரப் பெயர்சொல்லக் கோடி மக்கள்
   கொடுத்துவைத்த பெருங்குடும்பி காம ராஜர்

பசியும் பிணியும் பகையும் ஓட்டிப்
   பரிவும் அன்பின் படர்வுங் கூட்டி
வசியும் மனையும் வளமுங் காத்து
   மடியும் மடமும் கடனும் மாய்த்து
நசிவும் மெலிவும் நலிவும் நீக்கி
   நலமும் மகிழ்வும் நனியுண் டாக்கி
ஒசிவும் தளர்வும் உளங்கொ ளாமல்
   உழைத்து நாட்டை உயர வைப்போம்

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>