துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

19.வெற்றிப் படலம்

வாழ்த்து

தாயாகி உலகத்தைத் தாங்குகிறாய் நீயே
   தந்தையுமாய் வாழுமுயிர் தரிப்பாயும் நீயே
சேயாகி இன்பங்கள் சேர்ப்பாயும் நீயே
   தேவைக்கு நட்புர்வில் திகழ்வாயும் நீயே
நோயாகி வந்தவினை நோய்தீர்ப்பாய் நீயே
   நோலாகி அறிவின்பம் நுகர்விப்பாய் நீயே
வாயார வாழ்த்துகிறேன் வாழ்விப்பாய் நீயே
   மாதங்கம் வைத்தவனே மனத்துறைவாய் நீயே

             சூரிய உதய வருணனை

வீரர் சிந்திய குருதி மேவிய
ஈர மண்ணிடை இரவி செந்நிறஞ்
சார வெள்ளையர் தஞ்சி நம்பட
பார தத்தவர் பரவ வந்தனன்

ஒன்று பட்டு நின்று சொந்த
   உரிமை கேட்டு முரசறை
தொன்று தொட்டு நாமி ருக்கும்
   சொந்த நாடு சொந்தமாய்
இன்று மட்டும் ஆங்கி லேயர்
   இங்கு தங்கி யாள்கிறார்
வென்று கொட்டு முரசு கொட்டு
   வெற்றி வெற்றி வெற்றியே

             இசைப் பாடல்

கொக்கு பறக்குது பாரடா – அதன்
    கொட்ட மடங்குது கூறடா
திக்குத் தெரியாமல் தேடுதோ – வீரர்
    சேனைகண் டேயது ஓடுதோ

கக்கும் அதுதின்ற மீனெலாம் – அந்தக்
    காலம் வருமதைக் காணலாம்
தக்கத் திமிதிமி போடடா – தனந்
    தான தனந்தனம் பாடடா-ஏய்
                   கொக்கு பறக்குது
மேற்குத் திசைகண்டு ஓடினால் – பாவம்
    விட்டுவிடு அதுபோகட்டும்
தோற்கும் நிலையிலும் துள்ளினால் – வெறும்
    சுள்ளிமுள் ளேபோதும் தள்ளடா
நோற்குந் தவமுனி நோக்கினால் – அது
    நொந்துசெத் தேவிழும் சத்தியம்
வேற்படை விற்படை வேண்டுமோ – சும்மா
    வெல்லவல் லோமிதைச் சொல்லடா
                   கொக்குப்

துப்பாக்கி மூக்குள்ள கொக்கது-சூடும்
    தோட்டாக்கள் தீர்ந்தது ஓடுதோ
உப்பாக்கிச் சொல்லுஞ்சொல் குத்துதோ-அது
    ஓட்டம் பிடிக்குது பாரடா
நப்பாசை தீராத கொக்கது-சொந்த
    நாட்டுக்குப் போம்படி நேர்ந்ததோ
தப்பாது நாம்சொல்லும் மந்திரம்-அது
    தானே எழுந்தோடப் பண்ணுதோ
                   கொக்குப்

இணையற்ற தலைவருக்குத் தொண்ட ராகி
    எண்ணற்ற தொண்டருல்க்குத் தலைவ ராகி
துணையற்ற ஏழைக்குத் துணைவ ராகி
    சோர்வற்ற தொழிலாளர் தோழ ராகி
அணையற்ற வெள்ளம்போல் ஓடு முள்ளம்
    அடக்குவதில் தனக்குநிகர் தானே யாகி
பிணையற்ற இந்தியத்தாய் முகத்தைக் காண
    பேரார்வங் கொண்டுழைத்தார் காம ராஜர்

மாய்ந்தாலும் வரம்பின்றி அடிபட் டாலும்
    வன்சிறையில் மென்மேலும் அடைபட் டாலும்
தேய்கின்ற திருநாட்டை மீட்ப தற்குத்
    திரண்டெழுந்த காங்கிரசுத் தியாக வீரர்
வாய்சொல்லும் மந்திரமோ வந்தே மாத்ரம்
    மனஜ்சுமந்த ஒருகொள்கை சுதந்தி ரந்தான்
காய்கின்ற வெள்ளையர்கள் கலங்கு மாறு
    களம்புகுவார் முன்புகுவார் காம ராஜர்

ஏரவாடாசிறைக்குள்ளே பொழுதை யெல்லாம்
    இயன்றவரை கல்விக்குச் செலவு செய்தார்
கரவறியாக் காந்திவழி வாழ்ந்த தொண்டர்
    கருத்துக்குள் இளம்பருவக் காட்சி தோன்ற
வரவிருக்கும் காலத்தில் சிறுவ ரெல்லாம்
    மகிழ்வுடனே பள்ளியிலே படிப்பதற்குத்
தரவல்ல எல்லாமும் தருவ தற்குச்
    சபதமொழி உள்ளத்தில் தாங்கி னாரோ

சிறைச்சாலை என்னசெய்யும் கல்வி கற்கச்
    சிறுவயதில் தவறியதை ஈடு செய்யும்
மறைச்சாலை எனநினைக்கும் மேலோர் தங்கள்
    மனக்கருத்தை நூலாக எழுதச் செய்யும்
இறைச்சாலை தவச்சாலை தியானச் சோலை
    என்றெல்லாம் பயன்படுத்த இடங்கொ டுக்கும்
அறைச்சாலைக் குள்ளோய்வு தந்து மீண்டும்
    அறப்போரில் ஈடுபடத் தெம்பு கூட்டும்

கொம்புமுளைத் தாளுகிற கூட்ட மஞ்ச
    கூட்டத்தைக் கூட்டியதில் முடிவெ டுத்துத்
தெம்பாக வெள்ளையனே வெளியே றென்னும்
    தீர்மானம் நிறைவேற்றித் தந்த போது
பம்பாயி லிருந்ததனை எடுத்துக் கொண்டு
    பலகாதம் ரயிலேறிப் பயணஞ் செய்தார்
வம்பாளர் போலீசார் மடக்கா வண்ணம்
    வடிவத்தில் மாற்றத்தைச் செய்து கொண்டே

கொண்டுவந்த தீர்மானம் குமரி தொட்டு
    குளிரிமய மலைவரையும் கூட்டங் கூட்டி
விண்டுரைக்கும் பேரொளிபோய் விண்ணை முட்ட
    வெறிபிடித்த போலீசார் வெகுண்டு வந்து
கண்டகண்ட இடங்களிலே கைது செய்தார்
    காமராஜ் மட்டுமதில் விதிவி லக்கோ
வண்டமிழ்நா டுய்விக்க வந்த தோன்றல்
    மற்றிதுபோல் எத்தனையோ வகுத்துச் செய்தார்

கொடிகட்டிப் புகழ்பறக்கும் குடும்ப நேரு
அடிபட்டுச் சிறைபட்டார் அகிம்சை பேணி
முடியட்டும் இவ்வாட்சி என்று மோதித்
துடிகொட்டிச் சிறைப்பட்டார் தொண்ட ரிங்கே

உண்ணாத நோன்பிருந்துங் கொள்கை வெல்ல
கண்காணப் பாடுபடும் அண்ணல் காந்தி
புண்னாக்கும் சிறைப்பட்டார் என்று பொங்கி
பெண்ணாகப் பிறந்தவரும் சிறைசென் றாரே

பொன்னாட்டு மன்னர்களைப் போரில் வென்ற
    புல்லர்களைப் போரிட்டே வெல்வே னென்ற
மன்னுபுகழ் வீரசுபாஸ் சந்ர போசின்
    மனங்கவர்ந்த மாவீரர் தியாக சீலர்
தென்பாண்டி தந்தமுத்து ராம லிங்கத்
    தேவரிங்கு சிறைப்பட்டார் இவர்க ளைப்போல்
நன்னாடு மீட்பதற்குச் சிறையில் நொந்த
    நல்லவர்கள் ஏராளம் அறியும் நாடே

எத்தனை எத்தனை தண்டனை
    எத்தனை எத்தனை முறைகளில்
அத்தனை யுமெதிர் கொண்டனர்
    ஆயிர மாயிரந் தொண்டரே
எத்தனை எத்தனை சிறையறை
    எங்கெலாம்ஙுள்ளன அங்கெலாம்
அத்தனை யும்நிறை வுற்றன
    ஆளுநர் கையற வுற்றனர்

மூண்டெழுந்த இரண்டாவ துலகப் போரில்
    முழுவெற்றி பெறவிழைந்த ஆங்கி லேயர்
ஆண்டுவரும் நம்நாட்டுப் படையின் வீரர்
    அதிலீடு பட்டாக வேண்டு மென்றார்
ஈண்டிருக்கும் காங்கிரசுத் தலைவர் கூடி
    எதிர்த்ததனால் ஆளுபவர் இறங்கி வந்து
வேண்டுகிற சுதந்திரத்தைத் தருவோம் பின்னர்
    வெற்றிபெற உதவுங்கள் என்று வேண்ட

ஈண்டிதுவுந் தக்கதென ஏற்றுக் கொண்டார்
    இடமறிந்து செயலாற்றுந் தலைவ ரெல்லாம்
 வேண்டியபோர் வெற்றியினால் ஆங்கி லேயர்
    மெல்லமெல்ல விடுதலைக்கு வித்த்ட் டார்கள்
ஆண்டிருக்க முடியாத அவலம் விஞ்ச
    அடுத்தடுத்துப் பலவகையில் ஆய்ந்து பார்த்துக்
கூண்டோடு புறப்பட்டார் இங்கி லாந்து
    கொடுத்தாரே சுதந்திரத்தை மெளண்ட் பேட்டன்

தொல்லை யிங்கு தொடரவே
    துண்டு போட்டு நாட்டினை
அல்லி லின்ப சுதந்திரம்
    அடையு மாறு தந்தனர்
கல்லில் நாரு ரிக்கிற
    கதையை உண்மை யாக்கினோம்
பல்லில் மேரு மலையையே
    பற்றி எற்றல் ஒக்கவே

நமது நாட்டுக் கொடியை நேரு
    நாடு போற்ற ஏற்றினார்
தமது வேலை முடிந்த தென்று
    தாத்தா காந்தி யேகினார்
எமனை ஏவி உயிர்குடிக்க
    இந்து முஸ்லீம் தூண்டவே
அமைதி காக்க வேண்டு மென்று
    அனைவ ருக்கும் கூறினார்

திக்குத்திசை எட்டும்முகில் ஒட்டுங்கொடி நட்டார்
தக்கத்திமி ஒட்டப்புவி தட்டக்குதி யிட்டார்
அக்குங்கனி புக்குஞ்சுவை அற்றுத்தொட வொட்டார்
கக்கும்வெடி உட்கப்புயல் தொக்குப்புக விட்டார்

ஓடி யாடினர் உறவு நட்பெலாம்
நாடி நல்கினர் நல்லி னிப்புகள்
கூடி யுண்டுளம் குதூக லித்தனர்
கோடி கட்டியே கும்மி கொட்டினர்

         இசைப்பாடல் (செந்தமிழ் நாடெனும்)
கொட்டுங்கடி கும்மிகொட்டுங்கடி – வளை
   கொஞ்சிக் குலுங்குங்கை கொட்டுங்கடி
ஆடுங்கடி கும்மி ஆடுங்கடி-பாடல்
   பாடுங்கடி வட்டம் போடுங்கடி-கொட்டு…
நல்லிசை மெல்லிசை பாடுங்கடி-இந்த
   நாடு நமக்கினி ஆடுங்கடி
மெல்லிடை முன்குனிந் தாடுங்கடி-உங்கள்
   மேனி நளினங்கள் காட்டுங்கடி-கொட்டுங்…

கோலநெ டுங்கொடி ஆடுவது-கண்டு
    கோதையரேபுகழ் பாடுங்கடி
சீலமி குந்தவர் தந்தகொடி-இந்தத்
    தேசஞ்செ ழிக்கவே வந்தகொடி
                        -கொட்டுங்கடி
பச்சைநி றம்முதல் மூன்றுநிறம்-அதில்
    பட்டொளி வீசுதல் பாருங்கடி-ஒரு
சக்கரம் மத்தியில் தோண்றுதடி-இது
    தந்தையர் முந்தையர் தந்ததடி
                        -கொட்டுங்கடி

நாடு விடுதலை பெற்றதடி-இந்த
    நாட்டுக்கொடி உயிரொத்ததடி
தேடிக் கொடுத்தவர் வாழிய வாழிய
    செந்தமிழ் பாரதம் வாழியவே
                       -கொட்டுங்கடி

வெற்றிவெற்றி வெற்றியென்று பாடுவோம்
    வீரதீர மேன்மை வென்ற தாடுவோம்
பற்றிநின்ற நோய்களற்ற தாடுவோம்
    பாடுபட்ட நமரை வாழ்த்திப் பாடுவோம்
கொற்றமுற்ற குடிகளன்று கூடுவோம்
    கோக்கள் நாங்க ளென்றுபாடி யாடுவோம்
மற்ற நாடு வாழ்த்த வாழ்ந்து வாழ்த்துவோம்
    மாறுபட்ட பிறரை வென்று வீழ்த்துவோம்

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>