துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

19.புரட்சிப் படலம்

  வாழ்த்து

பெண்ணுரு வான தெய்வம்
    பிறதெய்வம் எல்லாம் நீயே
விண்ணொளி நீயே போற்றி
    விதையுயிர் நீயே போற்றி
எண்ணுதற் கரியாய் போற்றி
    என்னுளத் துறைவாய் போற்றி
கண்ணுதல் உடையாய் போற்றி
    கடவுளே போற்றி போற்றி

அலைமோது கடல்மீது அணியாக வந்து
மலைமீது புனலுண்ட மகிழ்வோடு சூழ்ந்து
மலைவூட்டும் இடிமின்னல் வலிகாட்டி யெங்கும்
விலையற்ற மழையீந்து விளைவிக்கும் மேகம்
வளம டுத்தொரு மனைய மைத்ததில் வைகுவான்
குளம டுத்தொரு வளையெ டுத்துறும் நண்டென
உளம டுத்தெழும் உணர்வு பொங்கிய தாகையால்
களம டுத்துயர் கடமை யாற்றுதல் கருதினார்

நாடுந மக்கென நாடிஎ ழுந்திரு நற்றோழா
தேடுசு தந்திரம் சீக்கிரம் வந்துறும் திண்ணங்காண்
நாடுக டந்துவந் தாளுநர் போகிற நாள்மட்டும்
பாடுப டத்துணி பங்குபெ றப்பயில் வாவாவா
கட்டிய பெண்துகில் விட்டுவ ராதுபின் காடேகும்
கெட்டியி லாமன மட்டிம டப்ப்பயல் கிடக்கட்டும்
ஒட்டியு லர்ந்துடல் வற்றிய ஏழையை உன்னிப்பார்
கிட்டிய வாய்ப்பினை விட்டுவி டாதெழு கிளர்ந்தேவா

பல்மு ளைத்தெழும் பால கன்னிலம் பயிலலாம்
சொல்ம லைத்தயர் முதுமை தோன்றினும் துஞ்சலாம்
மல்பு ரிந்துயர் வாலி பத்தினர் மனையிலே
அல்லி லோயினும் அவனி மேலுற லாகுமோ
கூடு கட்டிவாழ் குருவி போலவே மனிதனும்
வீடு கட்டிவாழ் வெய்தி னாலது போதுமோ
பாடு பட்டுறும் பலன்பி றர்க்குமாம் பக்குவம்
நாடு வானெனில் நாடு நானிலம் வாழுமே
சொந்த பந்தமும் சோறும் போதுமென் றெண்ணுவார்
இந்த மண்ணிலே இருந்து மில்லையி· துண்மையே
அந்தம் வந்துறூம் அதற்கு முன்னரே இவ்வுடல்
தந்த தாய்நிலம் தாங்க முந்துதல் தக்கதே

கொழுகொ ழுத்தவர் குண்டு வெல்லுமோ
பழுது செய்வதைப் பார்த்தி ருப்பதோ
எழுக இங்கெழும் புரட்சி முன்னது
புழுதி மாருதம் பொருத லொக்குமோ
ஒன்று பட்டுவா உறுதி கொண்டுவோ
மன்று கூட்டுவோம் வலிமை காட்டுவோம்
என்று மாபெரும் எழுச்சி யூட்டினார்
குன்று போலவர் நின்று பேசினார்

வளமேவிய திருநாடிதில் வலைவீசிய கொடியீர்
உளமேவிய பொருளாசையில் உயராசனம் கவர்ந்தீர்
களமேவிய எமைநீரிவண் கடிதோச்சினும் மருளோம்
குளமேவிய சிறுநாரையின் குழுவேயெழு போபோ
அடடாபடு கொடுமாவிடம் கொடடாகொடு அஞ்சோம்
சுடடாசுடு சுட்டாலுடல் பட்டோடுதல் ஒட்டோம்
கொடடாகொடு கொம்பேறிய குரங்கேகொடு நாட்டை
எடடாகடல் இடைதாவிய குரங்கேஎடு ஓட்டம்

வீடுகெட்டு நாடுகெட்டு வீழவிட்டு நோகிறோம்
பாடுபட்டுப் பாடுபட்டுப் பாதிமேனி தேகிறோம்
நாடுவிட்டு நாடுதேடி ஓடுவிக்க நாடினோம்
கேடுகெட்டு வாழவிட்டுக் கிளம்பியோடு வெள்ளையா
எட்டுத்திசை பட்டுக்கொடி கட்டத்தடை யட்டோம்
கெட்டுக்குடி குட்டிச்சுவ ரொட்டக்கதி கெட்டோம்
குட்டுப்பட மட்டுமினிக் கட்டுப்பட மாட்டோம்
தட்டுத்தடை விட்டுத்திலை கட்டக்கொடி என்றார்

கூட்டங் கூட்டியுங் கொள்கை பேசியும்
ஆட்டு மந்தைகள் ஆர்ப்ப ரிப்பதோ
ஓட்ட டித்துதைத் துள்ள டைத்துடல்
வாட்ட டக்கென வந்த தாணையே

கத்தி யின்றி ரத்த மின்றி
  யுத்த மென்ற துணையே
குத்த வந்த எதிரி மீது
  குத்த வில்லை யாருமே
சத்தி யத்தில் நின்ற காந்தி
  தத்து வத்தில் நின்றநம்
சுத்த வீரர் செத்து வீழ்ந்த
  சோகஞ் சொல்ல வொல்லுமோ

கூடரிய பெருங்கூட்டம் குலைநடுங்கி வீழ
ஓடயர் டயரிங்கு உயிருண்ட கொடுமை
நாடதிர வைத்தது நாணிநில மாது
வாடரிய முகம்வாடி மனங்குமுறி யழுதாள்

      சூரியன் மறைவு வருணனை
கன்று காளையூன் மென்று தின்றவர்
கொன்ற மக்களின் குவியல் சூரியன்
அன்று கண்டொளி அருகி மங்கியே
துன்று பேரலை வேலை தோய்ந்தனன்

அறநெ றிப்படி போர்ந டத்தினும்
  அந்நி யக்கடும் வெள்ளை யர்க்கது
மறநெ றிக்கெரு வைத்த தொத்த்தது
  வன்மு றைச்செயற் கட்ட விழ்த்தனர்
நறந றத்தபல் லிதழ்க டித்திரு
  நயன வெஞ்சினப் பொரிப றக்கவே
புறமு றச்செயப் படைக்க லத்தினால்
  புண்ப டப்படக் குத்தி யெத்தினார்

சுட்டு வீழ்த்தினர் குத்தி வீழ்த்தினர்
  சோரி யாறெழ வெள்ளையர்
பட்டு வீழ்ந்தனர் மட்டி லாதவர்
  பார தத்தவர் போரிலே
அட்ட திக்கிலும் அவல மொட்டவே
  அன்னை நாட்டினர் மாண்டனர்
ஒட்டி வாணிபஞ் செய்ய வந்தவர்
  உயிர்கு டிதுயிர் வாழ்ந்தனர்

கையி ழந்தனர் காலி ழந்தனர்
  கண்ணி ழந்தனர் பற்பலர்
மெய்க ரிந்திட உயிர்பி ரிந்திட
   வெந்து மாண்டனர் சிற்சிலர்
பொய்க லாதவர் அறநெ றிப்படி
   போர்பு ரிந்தவர் அண்ணலார்
செய்த வப்பயன் அகிம்சை யாகிய
   தெய்வ மாபலம் விஞ்சினார்

தோளு மற்றனர் தொடையு மற்றனர்
   தொல்லை யுற்றனர் பற்பலர்
தாளு மற்றனர் தசையு மற்றனர்
   தஞ்ச மென்றெவர் கெஞ்சினார்
நீளு மித்துயர் முடிவ தென்றென
   நெஞ்ச முற்றிலர் கொஞ்சமும்
மூளு வெஞ்சினம் யாரு முற்றிலர்
   முன்னை நாளினும் முந்தினார்

அடிபட்டும் மிதிபட்டும் உதைபட்டும் அழுதார்
கொடிமட்டும் தரையட்டும் படிமட்டும் குனியார்
ஒடியட்டும் இருகாலும் உருளட்டும் தலைகள்
கொடிமட்டும் விடுபட்டுக் குறைபட்டு மடியோம்

ஒருகோடி இருகோடி உயிர்கூட இழப்போம்
தெருவோடு திரண்டோட வடிகின்ற குருதி
பொருளாக மதியாத புரட்சிக்கு முடிவு
வருங்காலம் தருமென்று மகிழ்வோடு மொழிந்தார்

கண்ட தொண்டரோ கலங்கி நாரிலர்
   கரும மேயவர் கண்க ளானதால்
கொண்ட கொள்கையின் குறியி லேகினார்
   குவல யப்புது அறநெ றிப்படை
அண்டர் கண்களுக் கதிச யப்படை
   அந்த கர்க்கொரு விந்தை யப்படை
மண்டு காதலின் அகிம்சை மன்னிய
   மாபெ ரும்படை போர்தொ டர்ந்தே

கொடிபி டித்தவர் தலைமை யேற்றவர்
   கூட்டங் கூட்டினோர் கொள்கை பேசினோர்
தடிய டிக்குள தகுதி பெற்றதால்
  தாய்து யர்ப்பட தார மேங்கிட
குடியின் மற்றவர் குமுறி நொந்திட
  கொடிய வெள்ளையத் தலைவ னேவலால்
வெடிப டத்தொடை ஒடிப டத்துயர்
   மிகுப டப்பலர் விண்ப டர்ந்தனர்

பெண்டு பிள்ளை சொந்தவீடு
   பேணல் விட்டு வந்தவன்
குண்டு பட்டுக் கொடிபி டித்துக்
   குருதி சோர வீழ்கிறான்
தொண்டு செய்ய வந்த வீரன்
   துண்டு பட்டு வீழ்வதோ
கொண்டு வந்த பொருளை விற்கும்
   கூட்ட மிங் வாழ்வதோ
என்று நொந்து காம ராஜர்
   இன்னும் வேக மெய்தினார்
மன்று கூட்டிக் கந்த நத்தை
   வன்மை யாயு ணர்த்தினார்
தொன்று தொட்டு வந்த வீரம்
   சோர வில்லை நிச்சயம்
வென்று நாடு நன்மை யெய்தும்
   விரைவி லென்று தேறினார்

ஒன்றல்ல இரண்டல்ல போராட் டங்கள்
   ஓராண்டில் ஈராண்டில் முடிய வில்லை
வென்றிங்கு சுதந்திரத்தை பெறுவ தற்கு
   வெவ்வேறு பல்லாண்டு மேற்கொண் டார்கள்
இன்றிங்கு யாரவற்றை எண்ணு கின்றார்
   இருந்தாலும் சிலசொல்வேன் எண்ணிக் கொள்வீர்
மன்றாடிக் கேட்கின்றேன் மனத்தில் வைப்பீர்
   மாவீரர் செயலாற்றல் மறக்க வேண்டாம்

அன்னி யத்துணி வெறுத்தொ திக்கினர்
   ஆங்கி லக்கலைப் பட்டம் போக்கினர்
துன்னு சட்டமா றுத்தெ திர்த்தனர்
   தொல்லை கள்ளெனத் துப்ப வேண்டினர்
புன்சு கந்தரும் பதவி விட்டனர்
   போற்றி வாழ்வதைத் தூற்றி நீக்கினர்
மன்சு தேசிகம் வளர வைத்தனர்
   மக்கள் மத்தியில் மாணொஉ வைகவே

இங்கிலாந் துருவாக்கும் மதிப்பு மிக்க
   எடைகுறைந்த பொருளேற்றுங் கப்ப லின்கண்
அங்கிருந்து கனமேற்ற அள்ளிக் கொட்டி
   அனுப்புகிற உப்பெல்லாம் விற்க எண்ணி
இங்குள்ள கடற்கரையில் உப்பெ டுக்க
   எதிராக வரிவிதித்த ஆட்சி யாளர்
தங்கொடுமை எதிர்த்தேகித் தண்டி யின்கண்
   தரங்கந்தோய் உப்பெடுத்தார் காந்தித் தாத்தா

மன்னுதிரு மறைக்காட்டில் உப்பெ டுக்க
   வழக்கறிஞர் ராஜாஜி தலைமை யேற்றார்
ஒன்னாரின் செயலாற்றல் ஒடுங்க வைக்க
   ஒத்துழையாப் போராட்டம் நடத்தி னார்கள்
இன்னபல போராட்டம் நடத்தி மக்கள்
   எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் கால மெல்லாம்
தன்னலமே கருதாத காம ராஜர்
   தயங்காது போராடிச் சிறைப்பட் டாரே

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>