துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

18..எழுச்சிப் படலம்

குருவாகி வருவாய் போற்றி
   குழந்தையாய் வருவாய் போற்றி
மருவருந் துறவு ளார்தம்
   வடிவிலும் வருவாய் போற்றி
அருவமாய் உள்ளாய் போற்ரி
   அனைத்துரு வானாய் போற்றி
கருவுளே வைப்பாய் போற்ரி
   கடக்கவுஞ் செய்வாய் போற்றி

முன்ன ரெத்தனை மன்ன ரிந்நிலம்
   முத்த மிழ்தேர் புலவரின்
சொன்ன லத்தினால் துன்ன ரும்படை
   சூழ நின்ற துணிவினால்
கன்ன லொத்தநம் அன்னை செந்தமிழ்
   காத வித்த புலத்திலோர்
அன்னி யக்கொடி யாட லாவகை
   ஆண்டு ளார்நாம் அறிவே

அந்நி லத்திலே ஆண்ட மண்ணிலே
   ஆங்கி லேயர் பெருகினார்
இந்நி லத்திலே வந்து தங்கிய
   ஈன ரீன மதியினால்
செந்ந லத்தவர் மின்ன ரேகவத்
   தீய கூட்டம் செழித்ததே
இந்நி லத்தில்W இன்று தித்ததே
   ஈடி லாத எழுச்சியே

ஏந்து கொள்கையர் இரங்கு நெஞ்சினர்
   இன்ன லுக்கொரு இன்னல் தந்தவர்
மீந்து வெள்ளையர் செய்த தொல்லையை
   வென்று வென்றவர் வெல்க நின்றவர்
சாந்து ணைப்பெரும் ராம நாமமே
   சார்ந்து வாழ்ந்தவர் தன்ன லம்மிலா
காந்தி யென்றொரு சாந்த மூர்த்திநம்
   கண்கள் இன்புறக் கண்ட தெய்வமால்

இடும்பையுள் தவிக்கும் நாட்டை
   விடுவிக்க எண்ணங் கொண்டால்
குடும்பத்தை மறக்க வேண்டும்
   கொள்கையில் பிடிப்பு வேண்டும்

சுடும்பசி பொறுக்க வேண்டும்
   சுகங்களைத் துறக்க வேண்டும்
கடுஞ்சிறை புகநேர்ந் தாலும்
   களங்காத உள்ளம் வேண்டும்

சுடர்விடும் விடுத லைப்பெண்
   சுகம்பெற வேண்டு மென்றால்
உடல்பொருள் ஆவி யென்னும்
   உரிமையுள் தியாகம் வேண்டும்
இடர்வரும் என்ற போதும்
   இன்பமாய் ஏற்க வேண்டும்
வடமலை அடரு மேனும்
   மருள்வதை விலக்க வேண்டும்

உண்மையே பேச வேண்டும்
   உயர்வான கொள்கை வேண்டும்
திண்மைசால் ஊக்கம் வேண்டும்
  தெய்வத்தை நம்ப வேண்டும்
அண்மையில் சுடவந் தாலும்
  அஞ்சாத துணிவு வேண்டும்
எண்ணிய எய்த வேண்டும்
  இவைகடைப் பிடிக்க வேண்டும்

கொடிகண்டு காக்கிச் சட்டைக்
   கூட்டத்தார் ஓடி வந்து
தடிகொண்டு தாக்கி னாலும்
   தளர்வுறா உறுதி வேண்டும்
அடிபட்டுங் குத்துப் பட்டும்
   அகிம்சையே காக்க வேண்டும்
மடிகின்ற போதும் வந்தே
   மாதரம் முழங்க வேண்டும்

இவைரயலாம் முடிய மென்றால்
   என்னொடு வருக வென்றார்
எவையெலாம் நமக்குச் சொந்தம்
   என்றுநாம் நினைக்கின் றோமோ
அவையெலாம் அடையு மாறு
   விடுதலை அடையச் செய்த
நவையிலா அண்ணல் காந்தி
   நடந்தனர் காம ராஜர்

உந்து மாசைகள் உள்ள மீர்த்தலால் உத்தமர்
இந்தி யார்க்கெலாம் இன்னல் நீக்கிய அண்ணலின்
முந்து வீரராய் முனைந்தெ ழுந்தனர் முற்றிலும்
செந்த மிழ்நிலம் செய்த புண்ணிய மல்லவோ
இசைப்பாடல் (தானன தானன்ன தானனா ) தனம்
             தான தனத்தன்ன தானனா
பாரத நாடெங்கள் நடடா – கொடும்
   பாவி இதைவிட்டு ஓடடா – பாரத
வீரமும் காதலும் விஞ்சவும் – பகை
   வேற்றர சின்படை அஞ்சவும்
மாரத மன்னவர் ஆனவர் – சொந்த
   மாநிலங் காப்பதில் வல்லவர் – பாரத

சாரதி அண்ணலை உற்றவர் – நல்ல
   சாத்திரம் பற்பல கற்றவர்
ஓரணி யாயிங்கு கூடினோம் – உன்னை
   ஓட்டி விரட்டுதல் நாடினோம் – பாரத
மற்றவர் பாரதம் ஆள்வதோ – கொடும்
   வஞ்சனை செய்திங்கு வாழ்வதோ
நற்றிரம் பெற்றநம் வீரரால் – பகை
   நாடுவிட் டோடுதல் திண்ணமே – பாரத
பெற்றநம் அன்னையின் கைகளில் – ஒரு
   பீடை விலங்கினி வைகுமோ
இற்றறும் இன்னமும் துஞ்சிடோம் – அடே
   இப்பொழு துன்படைக் கஞ்சிடோம்
                          – பாரத
வந்தே மாதரம் என்ற வாய்மொழி
நந்தே யத்தவர் நல்ல மந்திரம்
சந்தே கம்மிலை வெற்றி தந்திடும்
இந்தா நம்கொடி ஏந்தி வாயெழு
குத்தி வீழ்த்தினும் கொடியை நீவிடேல்
நத்தி நம்மவர் நாடுங் காந்தியின்
தத்து வங்கெடேல் சால நம்படை
நித்த மோங்குதல் நீபு ரிந்தெழு
பாடு பட்டுநீ படைத்த உன்பொருள்
நாடு விட்டுநா டேக நம்மவர்
வாடு கின்றனர் வஞ்ச வெள்ளையர்
ஓடு மாறுளம் உறுதி கொண்டெழு
நீளு முட்பகை நிலைகெ டுத்ததால்
ஆளு கின்றவர் அடிமை யாகினோம்
மீளு நாள்மிகு தொலைவி லில்லையுன்
தோளு யர்த்திவா தோசு நம்பகை
கழுது பற்றிய கழுதை போதினம்
பழுது செய்கிற பாவி கால்களைத்
தொழுது வாழ்கிற துயரம் விட்டுவா
உழுது வாழ்நில உரிமை மீட்டவா

கொழுகொ ழுத்தொரு கூட்ட முண்டதால்
பழுத டைந்தப ராரை யாயினும்
விழுது தாங்கினால் வீழு மோமரம்
அழுத லுத்தநம் அன்னை மீட்டவா
வழுவ ழுத்தகை வருடி வாழ்வதோ
மழும ழுத்ததோ மான நற்குணம்
மொழுமொ ழுத்தெழும் மூரிநம்படை
விழுவி ழுக்கவைத் தடையும் வெற்றியே

அஞ்சி வாழ்கிற அடிமை யாகிநீ
கெஞ்சி வாழ்கிற கேவ லம்விடு
துஞ்ச நேரினும் துயர மில்லைவா
பஞ்சு வெள்ளையர் பகைய ழிக்கலாம்

மஞ்சு கொஞ்சநன் மழைசு ரத்தலால்
கஞ்சி யாவன கழனி நல்கநீ
அஞ்சி மற்றவர்க் கடிமை செய்வதேன்
வஞ்ச கப்பகை மடிய வெல்லவா

ஆமை வேகமும் அதிக மென்னநீ
ஊமை வாழ்வுகந் தூர்ந்து செல்வதோ
தீமை செய்பவர் தேச மாள்வதோ
வாம னன்என வளர்ந்து மேலெழு

என்று வேணவா எழமு ழங்கினார்
    எதிரி யஞ்சநம் காம ராஜரே
குன்று நூறுநூ றொன்று கூடியே
    கொடிபி டித்தொரு வழிந டந்தவோ
என்று மாநகர் எண்ண வேகினார்
    இணையி லாதநற் றொண்டர் முன்னரே
மன்று கூட்டியும் வலிமை காட்டியும்
    வளருங் காங்கிரஸ் மகிழ்ந்து வாழ்த்தவே

இரவுபகல் பாராது கட்சி வேலை
    எப்போதும் செய்ததிலே ஈடு பட்டார்
பரவுகுணம் மிகவளர்ந்து பலரும் போற்ற
   படிப்படியாய் மிகவுயர்ந்தார் காம ராஜர்
கரவுடைய சிலர்மட்டும் கண்டு தங்கள்
   காழ்ப்புணர்ச்சி பெருகிவரக் கசந்து பார்த்தார்
வரவெண்ணி அவர்தாயார் வழியை நோக்கி
   மகன்நினைவில் காத்திருந்தார் பலநாள் உண்மை

தான்பிறந்து வாழ்ந்திருந்த வீட்டை நத்திச்
   சரியாக வரநேரம் வாய்க்க வில்லை
வான்பெற்ற சூரியனின் வரவு நோக்கி
   மையிருட்டில் வாடுதல்போல் தாயார் வாட
ஏன்வந்து பார்க்கவில்லை என்றெண் ணாதீர்
   இந்தியத்தாய் இங்குவர விட்டால் தானே
தேன்கூடக் கூட்டுக்குள் இருந்தால் ஈக்கே
   தேசமெலாம் நலந்துய்க்க முடியா தன்றோ
வீழ்ச்சியுற்ற தமிழர்புகழ் எழுச்சி கொள்ள
   விண்ணிலொரு மதியாகத் தேன்றி வந்தார்
தாழ்ச்சியுற்ற மனவுறுதி பெற்று நின்றால்
   கட்டாயம் உயர்வதற்கோர் எடுத்துக் காட்டு
சூழ்ச்சிகளை சூழ்ச்சிகளால் வென்று யர்ந்த
   சூதுமதி யில்லாத காம ராஜர்
     சந்திர உதய வருணனை

மனிதன் என்னிடம் வரநி னைக்கிறான்
   வந்து வான்புகுந் தளந்து பார்க்கின்றான்
வனிதை நன்முக உவமை வைத்தவன்
   வாரும் நீரகத் தடக்கி வைக்கிறான்
புனிதை வானுதல் போன்ற தென்றவன்
   பூமி வந்தெனை மறைத்த லோர்கிறான்
இனியும் மனிதனால் என்ன நேருமோ
   என்று சந்திரன் எழுந்து பார்க்கிறான்

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>