17.வளர்ச்சிப் படலம்
வாழ்த்து
உண்ணுவ தெல்லாம் உன்னால்
உறுவன எல்லாம் உன்னால்
எண்ணுவ தெல்லாம் உன்னால்
இயங்குவ தெல்லாம் உன்னால்
பண்ணுவ தெல்லாம் உன்னால்
பழவினை தீர்வு துன்னால்
கண்ணுதல் அண்ண லேநற்
கதியெனக் கருள்வ தெந்நாள்?
பள்ளியிலே படித்துயரும் பருவந் தன்னில்
பாழ்செய்யும் வறுமையினால் கடையில் சேர்ந்து
துள்ளிவிளை யாடுகிற இள்மை யின்கண்
சுமைதூக்கி வாழ்ந்தாலும் தூர தேச
வெள்ளையரின் ஆதிக்க வெறியால் வாடி
மெலிவுற்ற தாய்நாட்டு மக்கள் மீள
எள்ளளவு பணியேனும் செய்ய எண்ணும்
எண்ணந்தான் எந்நாளும் வளர்ந்த தம்மா
பகல்நேரங் கருப்பட்டிக் கடையில் வேலை
பாய்விரித்துப் படுப்பாரா இரவு நேரம்
இகல்வெல்லும் காங்கிரசுக் கூட்டங் கூட்ட
எண்ணற்ற சுவரொட்டி ஒட்டச் செல்வார்
தகவுள்ள நடமாட்டச் சந்திப் பெல்லாம்
தவறாது பெருந்தட்டி கட்டி வைப்பார்
முகப்புவரை வரவேற்பிற் கான வேலை
முழுப்பந்தல் வேலையெனப் பலவுஞ் செய்வார்
தலைசிறந்த பேச்சாளர் பேச்சைக் கேட்பார்
தண்ணீருங் கேட்பதுவுந் தந்து நிற்பார்
இலையிடுவார் சோறிடுவார் உண்ட பின்னர்
எடுத்தொதுக்கி உறங்குதற்கு வசதி செய்வார்
மலைபோல தலைவர்களை மதித்துப் போற்றி
மனதுக்குள் இடம்பிடிப்பார் மலைத்துச் சோர்ந்து
குலையாத நெஞ்சுறுதி கொள்கைப் பற்று
கொண்டிருப்பார் தொண்டுசெயும் குறிப்பில் மிக்கார்
“ஒன்றுபட் டாலுண்டு வாழ்வு” – முன்னர்
ஒற்றுமை கெட்டதால் வந்ததித் தாழ்வு
இன்றும் அதன்பயன் துன்பம் – இதை
எண்ணி எழுதம்பி இஙோடி வாவா
ஒன்று…
மன்னவர் பற்பலர் வாழ்ந்தார் – வந்த
வஞ்சகர் சூழ்ச்சியில் சிற்சிலர் வீழ்ந்தார்
போதைப் பொருளுக்குக் கொஞ்சம் – அற்பப்
போகப் பொருளுக்குப் போயினர் கொஞ்சம்
இப்படிப் பற்பலர் வீழ்ந்தார் – பின்னர்
எண்ணி வருந்தினர் ஐயய்யோ பாவம்
போனது போகட்டும் தம்பி – வந்த
பொல்லாங்கு தீர எழுந்தோடி வாவா
ஒன்று
மன்ன ரடைந்தது கொஞ்சம் – நாட்டு
மக்க ளடைந்ததோ மாபெருந் துன்பம்
என்னமும் அத்துயர் வேண்டாம் – எழு
இப்போதே ஓடோடி நீயிங்கு வாவா
ஒன்று
கூட்டத் துடன்வந்து கூடு – ஒரு
கோடி நலமுண்டு நீயிதை நாடு
நாட்டு நலம்நாடு வாவா – இந்த
நாடுதான் நாவாழும் அன்னையின் வீடு
ஒன்று…
வெள்ளை நிறத்தவர் ஆட்சி – இங்கு
வேண்டாம் இனிமேலும் வேரறு வாவா
நூக்கும் மேற்பட்ட ஆண்டு – நாடு
நொந்தது போதாதோ நோய்தீர்க்க வாவா
ஒன்றுபட்டா…
பாட்டிசைக்கும் திசைநாடி உள்ளம் ஓடும்
பாடிவருங் கூட்டத்தக் கண்கள் தேடும்
ஆட்டிவிடும் பம்பரம்போல் கடையில் ஆடும்
அவருள்ளம் விடுதலையை நாடிச் செல்லும்
பாட்டிமனம் நோகுமென பலநாள் நொந்தார்
பதைபதைக்கும் உள்ளத்தை அடக்கி வைத்தார்
ஏட்டினையும் பள்ளியையுந் துறந்து வந்தேன்
இன்றோடு கடைவேலை துறந்தேன் என்றார்
வீட்டினையும் நாட்டினையும் எண்ணி எண்ணி
விடைகாண மூளைக்கு வேலை தந்தார்
கூட்டினையும் பறவையையும் கூர்ந்து பார்த்தார்
குறிக்கோளின் வழிசெல்லத் துணிவு கொண்டார்
நாட்டிற்கு நான்தேவை என்றால் வெற்று
நடுவீட்டில் கிடந்துழல மாட்டேன் என்றார்
கோட்டைக்குப் போகவினை கூட்டு விக்கும்
குறிப்பறியார் எப்படியோ முடிவெ டுத்தார்
சூரிய உதய வருணனை
உலக நாடுகள் ஒன்றை யன்றெதிர்த்
தலகி லாதநுண் ணணுவின் ஆற்றலால்
நிலம ழிப்பதிங் கில்லை யின்றென
உலவ வந்தனன் உதய சூரியன்
வந்தவர் ஆளும் நாளில்
மக்களின் தேவை யெல்லாம்
நந்தமர் முறையே சொல்லி
நயந்தவை பெறுவ தற்கு
விந்தையோர் ஆங்கி லேயர்
மிகமுயன் றமைத்துக் காத்துத்
தந்ததே காங்ரஸ் என்னும்
தரணியே போற்றுங் கட்சி
கட்சியின் தேவை கண்டு
கடமையில் ஆர்வங் கொண்டு
மெச்சுநற் பணிகள் செய்ய
விரும்பிய தொண்டர் கூட்டம்
உச்சிசால் காஸ்மீர் தோன்றி
ஒளிதிகழ் குமரி மட்டும்
நச்சியே பெருகக் கட்சி
நாடொறும் வளர்ந்த தம்மா
விலகியிந் நாட்டை விட்டு
வெள்ளையர் செல்லப் பேசும்
புலமையும் அஞ்சா நெஞ்சும்
பொருந்திய திறமை மிக்க
திலகருங் கோக லேயும்
செம்மையாய்க் கட்டிக் காத்து
நலம்பெற வளர்த்த காங்ரஸ்
நாடெல்லாம் வளர்ந்த தம்மா
மோகமாய்ச் சட்டங் கற்று
முனைந்தொரு வழக்கிற் காக
ஏகிய நாட்டி லுள்ள
இந்தியர்க் காக நொந்து
வேகமாய்த் தொண்டு செய்யும்
வேளையில் தேவை சொல்லிக்
கோகலே அழைத்த தாலே
குறிப்பறிந் துணர்ந்து கொண்டு
பக்தியில் ராம நாமம்
பயில்கிற நெஞ்சும் நாவும்
சத்திய நெறியுந் துன்பந்
தாக்குநற் பொறையுங் கொண்டு
நத்திநல் லகிம்சை பேணி
நாடெலாம் அறப்போர் மூழ
வித்திய அண்ணல் காந்தி
மீண்டுநம் நாடு வந்தார்
தென்றல் வர்ணனை
பொதிகையில் எழுந்து மெல்ல
போவிலை செடித வழ்ந்து
குதிபயில் அருவி யாடிக்
குளிர்மருந் தளவ ளாவி
முதிர்கனி தேனில் தோய்ந்து
மோகன ராக மேவுஞ்
சுதிதருஞ் சுவைபோல் தென்றல்
சுகந்தர வந்த தம்மா
வசந்த கால வருணனை
கண்குளிர மனக்குளிர கானமயில்
ஆடுகிற காலம்
விண்ணமுதந் தரவிரும்பி மேகமிருள்
சூழவருங் காலம்
எண்ணமிக ஒன்றுமிளங் காதலர்கள்
எதிர்பார்க்குங் காலம்
மண்குளிர மரங்குளிர வருங்காலம்
வசந்தமெனுங் காலம்
உண்டு வளர்தல் அரிவதில்லை
உடுத்து மகிழ்தல் பெரிதில்லை
தொண்டு வளர வளர்வதுதான்
சுகமும் புகழும் தொடர்விக்கும்
அண்டி வளரும் நிலைபாவம்
அணைத்து வளர்க்கும் நிலையோகம்
துண்டுபடுத்த முயலாமல்
தொடர்பு வளர்த்தல் சுகமன்றோ
தன்வீடு தன்பெண்டு பிள்ளைக் காக
தன்னலத்தில் வாழ்கின்ற எண்ணம் விட்டுத்
தன்னூரும் தன்னாடும் உலகம் யாவும்
முன்னேறத் தான்வாழ முயல வேண்டும்
பெற்றவர்க்குத் துணையாக வாழும் வாழ்வு
பெருமைமிகு வாழ்வாகும் பிறந்த நாட்டில்
மற்றவர்க்குத் துணையாகி வாழும் வாழ்வு
மாண்புடைய வாழ்வாகும் மனித நேயம்
உற்றவர்க்குத் துணையாகி வாழும் வாழ்வு
உலகத்துப் பெருவாழ்வு ஜீவ நேயம்
கற்றவர்க்குத் துணையாகி வாழும் வாழ்வு
கடவுளருள் கூட்டுகிற கருணை வாழ்வு
இங்ஙனம் பலபல நினைவுகள்
எழுந்தெழுந் தவர்மனம் உந்தின
அங்ஙனம் எழுந்தவை தம்முளே
அவசியம் இந்திய விடுதலை
எங்ஙன மாயினும் எய்துவோம்
என்றுளம் நாடிய தாகையால்
சங்கம மாகினார் கட்சியில்
சரித்திர மாகினார் உண்மையே
மீசை முளைக்கச் சிலவருடம்
மீத மிருக்கும் பெண்மீது
ஆசை முளைத்துக் கிறுக்கேறி
அலையும் இளைஞர் பலருண்டு
தேச நலத்தில் தன்னெஞ்சம்
சென்று திளைக்கச் சிறிதேனும்
நேசம் வைத்துப் பெண்பக்கம்
நினைவு பதிக்கப் பயின்றிலரால்
உற்றர் உறவுக் காரரெலாம்
உரிமை முறையில் பெண்கொடுக்கச்
சுற்றிச் சுற்றி வந்தார்கள்
சொந்தம் பேசி நின்றார்கள்
பெற்ற தாயும் மகன்பெற்ற
பேரப் பிள்ளை தனைக்கொஞ்ச
உற்ற ஆசை மிகமீற
ஒல்லும் வகையால் எடுத்துரைத்தார்
அன்னை பன்னாள் மென்மேலும்
அதையே சொல்லத் தரியாது
முன்னை மரபு செழித்துயர
முறையாய் வதுவை செய்யென்றே
என்னை மிகவுந் தொந்தரவு
இனியும் செய்தால் நம்மில்லம்
தன்னை மிதியேன் இதுவுறுதி
தாயே என்றார் தகவுள்ளார்
குன்றே யனைய மனங்குன்றாக்
குமரன் சொல்லத் துணுக்குற்றே
என்றோ ஒருநாள் வருகிறவன்
இனிமேல் வாரா திருப்பானேல்
நன்றே முகத்தைப் பார்ப்பதற்கும்
நமக்கே முடியா தாகிவிடும்
என்றே தாயார் கருதியதால்
எதுவும் உரையா தமைவுற்றார்
பெண்டாட்டி கட்டிக் கொண்டால்
பிள்ளைகள் தொடரு வார்கள்
கொண்டாட்டம் சிலநாள் பின்னே
குடும்பமே கதியென் றாகித்
திண்டாட்டப் பட்டு மாய்வோர்
தேசத்தில் கோடி கோடி
நண்டாட்டம் வாழும் வாழ்வில்
நாட்டுக்கு லாப மென்ன?
பற்றுள்ள அன்னை தந்தை
பாசத்தை இழக்கப் பண்ணி
மற்றுள்ள அண்ணன் தம்பி
வன்பகை யாக்கி வாழ்வில்
எற்றுள்ளும் அமைதி காணா
இடருற வந்து சேரும்
தொற்றுநோய் மனைவி யானால்
சுகமெங்கே இல்ல றத்தில்
நடமாடும் தெய்வங்கள் மக்க ளென்று
நம்முன்னோர் நன்கறிந்து சொல்லிச் சென்றார்
மடமையிலும் அடிமையிலும் மண்ணின் மைந்தர்
மாள்கின்றார் தாழ்கின்றார் அவருக் காக
திடமாகப் பாடுபட்டுச் சுதந்தி ரத்தை
தேடுவதே செயற்கரிய செய்கை யென்று
கடமையிலே கண்ணாக ஈடு பட்டார்
காமனுக்கு நாமத்தைச் சாத்தி விட்டார்
அரசியல்நற் குருவாக சத்ய மூர்த்தி
அரவணைத்து முன்னேற்றம் அடையச் செய்தார்
பரவுகுணப் பெருமான்நம் காந்தி யண்ணல்
பக்கத்தில் வைத்திவரைப் பற்றிச் சொல்லித்
தரமுயர வழிவகுத்தார் அவர்கள் முன்னே
தடம்புரளா ந்றிபற்றித் தக்க காலம்
வரவரத்தன் பேருழைப்பால் வளர்ந்து வந்தார்
வளநாடு தனைக்காக்க வளருந் தொண்டர்
செக்கிழுத்த சிதம்பரனார் நிலைக்கு நொந்தார்
சிவாவுற்ற தொழுநோய்க்குக் கவலை யுற்றார்
தக்கசில சலுகைபெறச் சிறையின் கண்ணே
சதீந்தாஸ் உயிர்விட்ட சரிதை கேட்டார்
வக்கரித்த போலீசார் லாலா லஜபதியை
பார்பிலடித் துயிர்கொண்ட வதைக்கு நொந்தார்
மக்களது நலம்நாடி உயிரை விட்ட
மாவீரர் தியாகத்தை மனத்தில் வைத்தார்
கட்சியை உடலாய்க் காத்துக்
கடமையை உளமாய்ப் போற்றி
நச்சிய கொள்கை தன்னை
நல்லுயி ராகப் பேணித்
துச்சமாய்ப் பதவி யெள்ளிச்
சொந்தமாய்த் தொண்டர் சூழ
நச்சென உடைமை நத்தா
நன்னெறி வகுத்துக் கொண்டார்