16..உழைப்புப் படலம்
நிலமும் நீரும் நீதந்தாய்
நெருப்புங் காற்றும் நீதந்தாய்
அலகில் கருணை வான்தந்தாய்
அனைத்துந் தந்தாய் பெருமானே
இலகுங் கதிராய் இருக்கின்றாய்
எல்லாம் நீயே புரக்கின்றாய்
உலகம் போற்றும் இறைவாநான்
உந்தாள் அடைதற் கருளாயோ
வணக்கம்
ஊனென்னும் உயிரென்றும்
உறவென்றும் பொருளென்றும்
தாளன்றுங் கருதாது
தனக்கென்று வாழாது
மேனின்று பிறர்க்கென்று
வீகின்ற வளரவாழ்ந்தோர்
வானென்றும் புகழ்பாடி
மதித்தென்றும் வணங்குதுமே
என்ன பெற்றார்
உற்றவர் துன்பந் தீர்க்க
உழைப்பதில் இன்பங் கொள்வான்
சுற்றமும் உறவுக் காக்கச்
சுமைகளைத் தாங்கிக் கொள்வான்
மற்றவர் நலமே நாடும்
வாழ்க்கையே வாழ்வான் தன்னைப்
பெற்றவர் பிள்ளை பெற்றார்
மற்றவர் என்ன பெற்றார்?
தலைவனும் வரவு மில்லாத்
தவிக்கின்ற குடும்ப மானால்
கலைபயில் பருவப் பிள்ளை
கடமையத் தோளில் தாங்கி
அலைகடல் தோணி போல
அலைவதே வாழ்க்கை யாகி
வலைபடும் மீன்போல் மீளா
வறுமை யுத்தவிக்க நேரும்
வறுமைத் துன்பம்
கற்றதை மறக்க வைக்கும்
கல்வியை முடித்து வைக்கும்
சுற்றிய சுற்ற மெல்லாம்
தூரத்தில் விலக வைக்கும்
வற்றிய குளத்து மீன்போல்
மனந்துடி துடிக்க வைக்கும்
தோற்றிய வறுமைத் துன்பம்
சொல்லவும் அரிய தம்மா
எதிரியிற் கொடியது
உளந்தடு மாற வைக்கும்
உடல்வளங் குன்ற வைக்கும்
களவுபொய் கூட வைக்கும்
கடவிளை மறக்க வைக்கும்
அளவிலா ஆசை வைக்கும்
அற்பரை மதிக்க வைக்கும்
இளமையில் வறுமை வந்தால்
எதிரியிற் கொடிய தம்மா
வேண்டும் வேண்டும்
வறுமைக்கு மருந்தொன்று வேண்டு மென்றால்
வற்றாத பேருழைப்பு வேண்டும் வேண்டும்
சிறுமைக்குத் தடைவேலி போடுஞ் செல்வம்
சேர்க்கின்ற பேருழைப்பு வேண்டும் வேண்டும்
மறுமைக்கு வழிகூட்டுந் தானஞ் செய்ய
வளஞ்சேர்க்கும் பேருழைப்பு வேண்டும் வேண்டும்
வெறும்பொழுது போக்காமல் மிகமுன் னேற
வெற்றிபெறப் பேருழைப்பு வேண்டும் வேண்டும்
ஓடி ஓடி உழைக்கிறவன்
உறவு செழிக்க உழைக்கிறவன்
நாடி நாடி உழைக்கிறவன்
நாடு செழிக்க உழைக்கிறவன்
கூடிப் பலரோ டுழைக்கிறவன்
கொடுத்துப் புகழைப் பெறுகிறவன்
வாடித் தவியா வளமான
வருங் காலத்தைப் படைக்கின்றான்
முன்னவர் செல்வந் தின்று
மூலையில் தூங்கிச் சாவார்
பின்னவர் வாழ்வு பற்ரிப்
பேசவுந் தகுதி யற்றார்
என்னவர் பிறந்த தாலே
இப்புவி பெற்ற தென்று
பின்னவர் பேசு மாறு
பிழைபட வாழ லாமோ
பிழைக்க வேண்டும் தனது சொந்தப்
பெருமு யற்சி உழைப்பினால்
திளைக்க வேண்டும் திறமை காட்டும்
செயலில் ஆர்வம் பெருகியே
உழைக்க வேண்டும் உழைக்க வேண்டும்
உயர்வு காண விரும்பியே
தழைக்க வேண்டும் நமது நாடு
தரணி போற்றும் வகையிலே
நீரில் வாழும் உயிரினமும்
நிலத்தில் வாழும் உயிரினமும்
பாரின் நாற்கால் விலங்கினமும்
பறக்கும் வன்மை உடையனவும்
தேரில் நாளும் வயிற்றுக்கே
தேடித் திரியும் பிறவியின
ஓரில் மனிதன் ஒருவன்தான்
உழைக்கும் வகையில் மேம்பட்டான்
உன்னை உயர்த்தப் பாடுபடு
ஊரை உயர்த்தப் பாடுபடு
தன்னை மறந்தே தொண்டுபுரி
தரணி நினைக்குந் தொண்டுபுரி
அன்னை நாட்டிற் குன்னைத்தா
அகிலங் காக்க முன்னேவா
தென்னை போலப் பயன்பட்டால்
தேசம் உன்னை மறவாதே
இப்படி பலபல எண்ணினார்
எளிமையில் வாழ்வதும் எண்ணினார்
எப்படி எப்படி உழைப்பினால்
இன்முகங் காட்டுவார் கடையினர்
அப்படி யப்படி உழைத்தனர்
அதன்வரு வாயிலே பிழைத்தனர்
முப்படி வயதிலும் முந்திய
மூளையின் ஆற்றலில் வல்லவர்
தன்சிறு வயதிலும் கடையிலே
தான்படுந் துயரெதும் நினைத்திலர்
அன்பொடும் வரிகிற போகிற
அத்தனை பேர்களும் மகிழ்வுற
முன்படு வினையெலாம் செய்தவர்
முழுமனங் கவர்ந்தனர் மறுமுறை
இன்புற அவர்வர ஏதுவாய்
இருக்கிற கடைவளம் பெருக்கினார்
எடுப்பதும் நிறுப்பதும் மடிப்பதும்
எடுபிடி வேலைகள் செய்வதும்
கொடுப்பதும் கொண்டுபோய் வைப்பதும்
கொணர்ந்தவை நிறுப்பதும் வைப்பதும்
கடுப்பினில் செய்கிற சிறுவர்கள்
கடைதொறும் கடைதொறும் பற்பலர்
இடுப்பிலும் முதுகிலும் தலையிலும்
எத்தனை சுமைதினம் சுமக்கிறார்
துடிபுடன் செயல்படும் சிறுவர்கள்
சுமக்கிற சுமைவலி பொற்ப்பதும்
குடிப்பதும் உண்பதும் வாங்கவும்
குவளையும் தூக்கையும் கொண்டுபோய்
அடிக்கிற வெயில்சுட அலைவதும்
அறுதினம் அவர்படும் பாடுகள்
அடிக்கிற கடைமுத லாளிகள்
அளப்பது சிற்சில காசுகள்
சோம்பல் சிறிதுங் கொள்ளாமல்
தொந்திக் காரர் பணம்பெருக
ஆம்பல் வேலை செய்தாலும்
அடியும் உடையுந் தான்மிச்சம்
தேம்பல் கூடப் பெருங்குற்றம்
சிலரே அவருள் தினக்கூலி
நோம்பில் துணியுங் கஞ்சியுமே
நோவார் பலரின் சம்பளமே
தோலை உரிப்பேன் என்றுதினம்
சொல்லித் திட்டக் கேட்டாலும்
வேலை தந்த கடைக்காரர்
விரும்பும் வகையில் நடந்தவரின்
காலை அமுக்கி இதஞ்செய்தும்
கடையில் இரவு பகலாக
மேலை வருந்திப் பாடுபடல்
வேலை கற்றுக் கொள்ளத்தான்
இனமெண்ணிக் குணமெண்ணிப் பிறந்துவந்து
இடமெண்ணிச் சிலர்வேலை தருவதுண்டு
மனமெண்ணிப் பொறுப்பான வேலை தந்து
மகிழ்வோடு நடத்துகிற சிலரு முண்டு
தனம்புரளும் இடங்கூடத் தகுதி நோக்கித்
தருகின்ற சிலருண்டு தரத்தைக் காத்து
நனவெல்லாம் செயல்மீதே நாட விட்ட
நல்லவர்க்கு நல்லவையே நடப்ப துண்டு
எத்தனை எத்தனை சிறுவர்வந்
தெவரெவர் கடையிலோ இருக்கின்றார்
கொத்தடி மைத்தொழில் புரிகிறார்
குறைகளை எண்ணியா குமைகிறார்
நித்தமும் காசென நினைக்கிறார்
நினைத்ததைச் செய்ததில் திளைக்கிறார்
வித்தையில் லாதவர் ஆதலால்
மேம்படு வாற்சிலர் மட்டுமே
குடும்பத்தை இடும்பைக்குள் குடிகாரன் தள்ள
கெடுங்காலம் கொடும்விதியால் கிடுக்கியெனக் கொள்ள
படுங்காலம் உறவெல்ல்ம் பகையாக்கி எள்ள
கடும்பசியால் புகுந்துள்ள கடைச்சிறுவர் பலரால்
ஒருபிள்ளை இருபிள்ளை பிறந்தாலே காக்கப்
பொருளில்லான் புரியாமல் பொலபொலெனப் பெற்று
வருவாய்க்கும் வயிற்றுக்கும் வழிதேடி வந்து
திருவாளர் சேர்ப்பித்த செல்வங்கள் பலரால்
படிக்கின்ற படிபாலே பலருக்கு வேலை
பிடிக்கின்ற படியில்லை பிறகென்ன கல்வி
பொடிப்பையன் கடைவைக்கப் புரிந்தாலே போதும்
குடிக்கென்று புகுவித்த குறும்பிள்ளை பலரால்
கிடைக்கிற சிறுதொகை குடிக்கிற
கீழ்நிலை ஏவலர் பலருள்
புடைக்கிற தவிடுள குருணையைப்
பொங்கிட வாங்கிடும் சிலருளர்
இடைப்பட அவிச்சுவை நாவினர்
எஞ்சிய பொருள்மனை தருபவர்
கடைப்பட வாழ்கிற வாழ்க்கையர்
கவலையை நினைப்பதுங் கவலையே
செய்கின்ற செயல்சுத்தம் சிறுவர்க்கும் வேண்டும்
கைசுத்தம் வாய்சுத்தம் கட்டாயம் வேண்டும்
பொய்யென்று சொன்னாலும் பொல்லாங்கு நேரும்
மெய்யுள்ள வரைசெஞ்சில் மிகுதூய்மை வேண்டும்
கைவிட்டுக் கைமாற்றும் காசெல்லாம் சூது
ஐவர்க்கும் நளனுக்கும் அவமானம் அதனால்
வைபட்டும் இழிவுற்றும் வளங்கெட்டும் திரியச்
செய்கின்ற அதுசின்னஞ் சிறுவர்க்கும் தீது
மன்னர்க்கும் மண்ணாசை மன்னாமை வேண்டும்
பொன்னாசை பெண்ணுக்கும் புகுதாமை வேண்டும்
இன்னல்கள் தருகின்ற இளமாத ராசை
துன்னாமை எந்நாளும் தொழிலோங்க வேண்டும்
கையுங் காலும் சமமில்லை
கண்ணும் மூக்குஞ் சமமில்லை
செய்யுந் தொழிலும் வெவ்வேறு
சிறிதும் பெரிதும் அதிலேது
உய்யும் மனிதன் உடலங்கம்
ஒவ்வொன் றாலும் பயனுண்டு
வையந் தன்னில் நீஎதையும்
மதியா திருக்கப் பயிலாதே
விற்கவும் வாங்கவும் உதவியாய்
வேலைகள் செய்கிற சிறுவர்கள்
பற்பலர் தங்குறை சொல்லுவார்
பார்க்கிற இடங்களில் காமராஜ்
கற்பதும் நிற்பதும் இப்படிக்
காதினிக் கும்படி சொல்லுவார்
சொற்படி நிற்பவர் சிந்தையில்
தோன்றிய நல்லவை தோன்றவே
கடைநேரம் கடைவேலை கடைக்காரர் சொல்லும்
இடைவேலை எதுவேனும் இனையாமல் செய்வார்
மடைமாறிப் புகுமட்டும் மனங்கோண வில்லை
விடைகூறிப் பொருளாசை விடுங்காம ராஜர்