15.தோற்றப் படலம்
வாழ்த்து
இனிதான திருப்பாவை எமக்கீந்த பெருநாச்சியார்
கனிவோடு தினஞ்சூடிக் கடிமாலை தரச்சூடினாய்
நனிநாடி யகஞ்சூடி நான்பாடுங் கவிமாலை
முனியாதுன் னகஞ்சூடி முகம்நோக்கி யருள்கொண்டலே
சூரிய உதய வருணனை
பெருவான வெளியெங்கும் பிறையோடு மீன்கள்
ஒருகோடி ஒளிகுன்றி உருவங்கள் மங்க
இருளோட ஒளிவீச எழிலார்ந்த கதிரோன்
கருநீல வயிரத்தண் கடல்மீது வந்தான்
வைகை வருணனை
மலைமு கட்டிலே மழைதொ டுத்தால் வடிகிற
விலைம திப்பிலா வெள்ளி போல்விழும் அருவிகள்
சிலைக டந்துரு வாகு மாறுகள் சேர்ந்தொரு
அலைக டலென ஆர்ப்ப ரித்துறும் வைகையே
தோடெ நத்தொடர் தூக்கி சைத்தநா ளதுமுதல்
நாடெ லாஞ்சிவ பக்தி நன்னெறி நாட்டியோன்
பாடெ லாங்கெடப் பாண்டி யன்புகழ் வேதியன்
ஏடெ த்ர்த்திசை ஏக வேகிய வைகையே
பண்ணு தற்கரும் பரிகொ ணர்ந்துதென் பாண்டிநாட்
டெண்ணு தற்கரும் இன்ற மகிழ்க்கவி கொண்டநம்
கண்ணு தற்பெருங் கடவுள் வந்தியின் கூலியாய்
மண்சு மந்தடி வாங்க வைத்ததிவ் வைகையே
நானிலம்
கடல்நீ லத்திலே உப்பெ டுக்கலாம்
கணக்கி லாதமீன் பிடித்து விற்கலாம்
உடலு ழைப்பிலே நெல்வி ளைக்கலாம்
உயிரி நங்களை மகிழ வைக்கலாம்
படல்கி டந்துழல் ஆடு மேய்க்கலாம்
பாங்கு டன்மனை யிருந்து வாழலாம்
தொடல ரும்பலாச் சுளைசு வைக்கலாம்
துன்னு நானிலப் பாண்டி நாட்டிலே
மாநகர்
பாடு கின்றகவி நாய கன்பதி
பாண்டி நாட்டுள திங்குதான்
ஓடு கின்றநதி வைகை யோரமாய்
ஓங்கி நிற்கிற நகரமாய்
கூடு கின்றபுகழ் கொண்ட கூடலாய்
கோக்கள் வைகிய மதுரையாய்
நாடு கின்றதமிழ்ச் சங்கம் நாட்டிய
நல்ல மாநகர் உள்ளதே
மண்டலம்
ஆடு கின்றகால் மாறி யாடிய
அம்ப லத்தவர் அனுதினம்
சூடு கின்றதார் சூடு மன்னையின்
சொந்த மாநக ரிதுமுதல்
கூடு கின்ற மூன்று கொண்டுள
குமரி எல்லையாய் உள்ளது
நாடு கின்றதமிழ்வாழும் நாடிதில்
நல்ல தென்தமிழ் மண்டலம்
வங்கங்கடல் விடவாங்கிய வ.உ.சி.யின் செயலால்
பங்கம்வரும் என்றஞ்சிய பரங்கித்துரை அவர்பால்
தங்கங்குவி பொருள்நல்கியும் தஞ்சம்புக வில்லை
சிங்கம்நிகர் அவர்தந்தது தென்மண்டல மன்றோ
எட்டப்பனைப் பெற்றுப்பெரும் இழிவுற்றமை நாணி
ஒட்டப்பனை உயரத்தவர் உரமுற்றவர் ஓட
கட்டக்கவி ஒருபாரதி கருமாரியின் அருளால்
இட்டப்படி பெற்ற்ந்நிலம் இணையற்றது கண்டோம்
விரும்பு நாடக நடிகர்நம்
விஸ்வ நாத தாஸ்கூட
குறும்புப் பேச்சுங் குத்தலுமாய்
கொக்கை வைத்துக் கவிசெய்து
கரும்பாய் இனிக்கப் பாடிமகான்
காந்தி கொள்கை விதைத் துள்ளான்
துரும்பாய்ப் பகையை நினைத்த அவன்
தோன்றிய மண்ணும் இதுதானே
விருதுநகர்
எருதுணவு விரும்பிகளை இகலி யெதிரூன்ற
மருதுநிகர் பலர்பிறந்த வலிதிகழும் மண்ணில்
விருதுநகர் விளங்கவொரு பிறவிதர அன்னை
கருதுமுளந் தெரியவொரு கடமையடு வந்தான்
ஓராயிரம் ஒருநாள்வரும் உடலாயிரம் மறையும்
ஈராயிரம் வருடங்களில் எவரோசிலர் பெயரே
பாராயண மனமேறிய படிவாழ்கிற தறிவோம்
பேராயிர வருடம்மனம் பெயராதவன் பிறந்தான்
எலிபோல வந்தும் இதமாக உண்டும் பெருத்தவொரு
புலிபோல நின்று நரிபோல வென்று புகலிடத்தைக்
கலிபோல வாட்டிக் கரிபோல நாட்டை யதம்பண்ணும்
வலியோரை வெல்லவளநாடு தந்த மகனம்மா
நாடுநகர் வீடுகளில் நல்லநிலை யோங்க
பாடுபடும் ஏழைகளின் பரிதாபம் நீங்க
கூடுகிற விலைவாசி கூடாமல் செய்ய
நாடுகிற ஒருதோன்றல் நாடாளப் பிறந்தான்
மன்னிய புகழ்திகழ் மண்டல
வளநகர் ஊர்களில் வாழ்கிற
தென்னவர் தேவைகள் யாவையும்
சிந்தையில் வைத்தவை தேடியே
பொன்னகர் பற்பல வற்றுளும்
பொதிந்துயர் வாணிகஞ் செய்கிற
நன்னிலை பெற்றவர் வாழ்கிற
நகர்களில் வான்புகழ் நகரிதே
உண்ணவும் உடுக்கவும் பற்பல
உயர்வகைப் பொருள்களை வாங்கலாம்
கண்ணெனுங் கல்வியுங் கற்கலாம்
கடுந்துயர் நோய்களும் நீக்கலாம்
வண்ணநன் மணிகளும் வாங்கலாம்
வாழ்மனை வளமுறப் பண்ணலாம்
எண்ணருந் தொழில்களும் செய்யலாம்
எங்களின் நாயகன் நகரிலே
பொன்னான விருதுநகர் மக்கள் நல்ல
பொறுமைக்குப் புகலிடமாய் இருப்ப தாலே
தென்னாடு திகழ்பெரிய நகர மெங்கும்
சிற்றூர்கள் பேரூர்கள் எங்குஞ் சென்றே
எந்நாளும் வணிகத்தால் ஏற்றம் பெற்றே
எல்லார்க்கும் பயன்பட்டு வாழ்கின் றார்கள்
முன்னேற முயல்வாரின் எடுத்துக் காட்டாய்
முழுநேர உழைப்பாலே உயர்கின் றார்கள்
மரபு கிளத்தல்
தென்மதுரை நகரத்தின் தென்மேற்குத் திசையிலுள
நன்மைமிகு அந்நகரின் நாட்டாண்மை குடிப்பிறந்த
சொன்னலத்துச் சுலோச்சனரின் தூயதங்கை யாய்வளர்ந்த
பன்னலத்துப் பார்வதியைப் பார்த்தறிந்து கைபற்றி
சின்னப்ப நாடார்செந் திருவிளங்க வாழ்ந்திருந்தார்
நன்மக்கட் பேறவர்க்கு நண்ணாத காரணத்தால்
தன்மரபு மேகவண்ண சான்றகுடி யீன்றெடுத்த
பொன்மகனைத் தத்தெடுத்துப் போற்றி வளர்த்தார்கள்
குடிவிளங்க வந்துயர்ந்த குமாரசாமி அத்தானைக்
கடிமணத்திற் சிவகாமி கைபிடித்துத் தமிழகத்தின்
விடிவெள்ளி பாரதத்தின் மேலாண்மைத் தேரோட்டி
நெடிதுரையாச் செயல்வீர நிர்மலனைப் பெற்றெடுத்தார்
பேரனுக்குப் பாட்டிவைத்த பெரும்பெயரோ காமாட்சி
வீரனுக்குத் தாய்விரும்பி விளிக்கும்பேர் ராஜாராம்
சூரனுக்குந் தாதைவைத்த சுருக்கப்பேர் காமராஜன்
மாரனுக்குப் பணியாத மாமேதை பேர்வாழி
பொறுமைக்கும் அமைதிக்கும் புகலிடமாய் உருவெடுத்தான்
சிறுமைக்குச் சிறுமையிலும் சிறிதுமிடங் கொடுதறியான்
வெறுமைக்குக் காலத்தை வீணடிக்க விரும்பாதான்
சிறுகுறும்புப் பருவத்துச் சிறுவருடன் சேர்ந்திலனால்
பெருமைக்கு வாய்திறவான்
பிறர்மெச்ச நினைத்தலையான்
ஒருமைப்பா டுளநண்பர்
ஓரிருவர் இளமையிலும்
அருமைப்பா டறிந்திருந்தார்
அவர்களடும் நெடிதுரையான்
கருவுக்குள் திருவுடையான்
கல்மனமும் கொண்டிலனால்
சற்றுமெதிர் பாராத
தருணத்தும் மனந்துணிந்டு
மற்றவரின் துயர்கண்டு
மனமிரங்கிப் பணிசெய்யும்
பெற்றியினை இளம்வயதில்
பெற்றிருந்த பெருமைந்தன்
நற்றிரத்தை யறிதற்கு
நல்லவொரு சான்றுண்டு
களிரொன்று தெருவழியே பிளிறிவரக் கண்டுமக்கள்
ஒளிகின்ற இடந்தேடி ஓடுவதை பார்த்தவுடன்
குளித்துவரும் இளஞ்சிங்கம் குடுகுடுவென் றெதிரோடி
களித்துவரும் யானைகட்டும் கம்பியிணை எடுத்துவந்து
காலடியில் வீவது கட்டுண்ட தெனநிற்க
ஓலமிட்டுச் சென்றவர்கள் ஓகோவென் றதிசயித்தார்
சீலமிக்க அஞ்சாத சிவகாமி செல்வனெதிர்
காலத்தில் ஞாலத்தைக் காக்குநெறி காட்டிநின்றான்
நடிப்பாலே ஊரேய்த்து நல்லபெயர் தேடாத
படிக்காத மேதையெனப் பார்போற்றப் பிறந்தவரைப்
படிப்பாளி யாக்குதற்குப் பள்ளியிலே சேர்த்தார்கள்
துடிப்போடு படித்தாலும் சூழ்வினையை யார்தடுப்பார்
பற்றுமிகப் பற்றுவைக்கும் பாட்டன்முன் போமறைந்தார்
கற்றுமகன் கரைசேரக் காரணமாய் வாழாமல்
சற்றுமெதிர் பாராமல் தந்தையவர் பிந்தொடர்ந்தார்
மற்றவரை விட்டகலா வருவாயும் போனதம்மா
வரவு போனது வறுமை வந்தது
இரவு சூழ்ந்தது இள்மை வழ்விலே
பரவு மன்னையின் பசிநி னைந்தது
கரவி லாமனம் – கடமை தேர்ந்தது
சொந்த மென்செயும் சுற்ற மென்செயும்
வந்த வெம்பசி வாட்ட வாடிய
எந்த வோரிளம் வயதி லாயிஉம்
தந்தங் கைகளே தாங்க வில்லையேல்
ஓராறு வயதுக்குள் ஊழ்வினைவந் தூட்டியதால்
ஈராறு வயதுக்குள் எண்ணெழுத்துப் பள்ளிவிட்டுச்
சேராறு வயதுவரை சிலர்கடையில் வேலைசெய்தார்
வாராத வந்துவிட்டால் வயிறுபசி கொள்ளாதோ