14.நகரப் படலம்
வாழ்த்து
கலைமகள் அடிகள் போற்றி
கல்விக்குத் தலைவி போற்றி
அலைமகள் அடிகள் போற்றி
அரும்பொருட் கிறைவி போற்றி
மலைமகள் அடிகள் போற்றி
வான்சிவ சக்தி போற்றி
தலையுங்கள் அடிகள் சூட
தஞ்சந்தந் தருள்வீர் போற்ரி
இரவும் பகலும் உழைக்கின்றார்
எனினும் கந்தல் உடுக்கின்றார்
வரவுஞ் செலவும் பகையாகி
வறுமைக் கோட்டில் தவிக்கின்றார்
கரவுஞ் சூதும் மிகவுள்ள
கயவர் மேலே பறக்கின்றார்
பரவும் நகரில் இருவேறு
பாதை மேலும் விரிகிறதே
மாதச் சம்பள வேலைக்கு
வாங்குங் கிம்பளம் பெரிதப்பா
ஓதத் தக்க துறைகளிலே
ஒருவர்க் கொருவர் விஞ்சுகிறார்
தீதற் றவராய்ப் பணியாற்றும்
சிலரைக் காண்டல் அரிதப்பா
ஏதப் பெருக்கம் நகரெல்லாம்
எங்கும் எதிலும் உளதப்பா
செய்யுந் தொழிலே தெய்வமென
தெளிவாய் எழுதித் தொங்கவிட்டுப்
பொய்யும் வழுவும் உடையதொழில்
புரிவார் நகரில் பலருண்டு
உய்யும் வழியில் பொருள்சேர்க்கும்
ஓட்டை வழியில் பொருள்சேர்க்கும்
கையுங் களவும் உடையபெருங்
கண்ணிய வான்கள் பலருண்டு
சொந்தமுள மனையாளை ஊரில் விட்டு
சொகுசாகவேறொருத்தி தோளை நாடும்
தொந்திசரி பணக்காரக் கூட்ட முண்டு
சூதாடி மதுவுண்டு சொர்க்க லோகம்
இத்தவுல கென்றெண்ணிக் கட்டு மாறா
இளமாதர் மீன்களென நீந்துங் காட்சி
விந்தையுள கண்ணாடி வீட்டில் கண்டு
மெய்மறந்து கிடக்கின்ற கூட்ட முண்டு
இருட்டறையில் நிற்கின்ற நிர்வா ணப்பெண்
எழில்பார்க்கத் தீக்குச்சி உரசிப் பார்க்கும்
பொருட்டெங்கு செல்வதெனக் குறிப்புக் காட்டப்
போட்டபடம் பார்த்தோடும் பொறுக்கி யுண்டு
திருத்தோப் படச்சுருளைப் பார்த்துக் காமத்
தீவாட்டக் கெட்டலையுங் கூட்ட முண்டு
மருட்டுமிள மாதாட மதுவுண் டாடி
வளங்கெடுத்து நலங்கெடுத்துத் திரிவா ருண்டு
பெட்டியிலே பணமடுக்கி எடுத்துச் சென்று
பெரியகடை வீதியிலே எண்ணித் தந்து
சட்டைப்பை உள்ளடங்கப் பொருளை வாங்கித்
தலைநிமிர்ந்து நடப்பாரும் நகரி லுண்டு
தொட்டியிலே போடுமிலைச் சோற்றுக் காகத்
தொண்ணாந்து நாயோடு போட்டி போடும்
ஓட்டியுலர் வயிற்றோடு கந்தல் சுற்றி
ஓடியலை கின்றவரும் அங்கே யுண்டு
அடுக்கழகு மாளிகையும் அதிக முண்டு
அழுகுபொருள் நாறுகிற கழிநீர்த் தேக்க
முடுக்குகளில் புறம்போக்குச் சாலை யோர
மூலைகளில் முச்சந்திச் சந்து பொந்தின்
இடுக்குகளில் இடுப்புவரை குனிந்து செல்லும்
ஏழைகளின் வாழிடமாய் வெய்யோன் புக்கும்
நடுக்குளமாய் நாடிவரும் மழைநீர் புக்கும்
நலிகின்ற குடிசைகளும் நிறைய உண்டு
நோயும் புரியா ததுதீர்க்கும்
நுட்பம் புரியா தென்றாலும்
பாயும் ஊசி மருத்துவரின்
பையும் நிறையும் நோயாளி
போயும் வந்தும் பொருள்தீர்ந்தும்
புலம்பச் செய்வார் இங்குண்டு
மாயும் உடலும் காப்பாற்றி
வாழ்விப் பாரும் இங்குண்டு
காக்கிச் சட்டைக் குள்ளேயும்
கருத்துச் சிறுத்த பலருண்டு
வாக்கின் வலியால் நீதிமுறை
மாற்றும் படித்த பலருண்டு
தூக்குப் பையில் மெய்ப்பையின்
சுருக்கப் பையில் திருடவழிப்
போக்குத் திருடர் பலருண்டு
பொல்லா நகரம் புதிரம்மா
பங்கித் தின்றால் பசியாறும்
படித்தால் கேட்டால் நாவூறும்
இங்கிப் போதும் கடையின்கண்
எவரும் பணத்தைக் கொடுத்தாலே
பங்கிட் டுண்ணக் காய்கறியும்
பணியாள் தருவான் உணவோடு
தங்கக் குணத்தைக் காப்பாற்றித்
தாங்கும் நகரம் பெரிதன்றோ
அண்ணல் காந்தி தம்கொள்கை
அடையும் வெற்றிக் கறவழியில்
உண்ணா விரதம் மேற்கொண்டார்
உலகம் மதிக்கும் நிலைதந்தார்
உண்ணா விரதம் இருப்பார்முன்
உண்ணும் விரதம் மேற்கொள்ளும்
கண்ணாற் காணச் சகியாத
கருமங் களங்கப் படுத்தியதே
ஆளுங் கட்சி எதிர்க்கட்சி
அனைத்துஞ் சாலை ஓரத்தில்
நாளும் மேடை போடுவதால்
நடக்கும் வசதி குறைகிறது
நீளும் சாலை இருமருங்கும்
நிறையும் நகரும் பலகடைகள்
தோளும் தோளும் மோதாமல்
சூதா நந்தான் நடைகாக்கும்
வருவார் போவார் கழிவுகளும்
வடிநீர்க் கால்வாய்க் கெடுநீரும்
தெருவார் குப்பை மேடுகளும்
தேங்கிக் கிடக்குங் குளநீரும்
செருவார் பகையும் செய்யாத
தீங்கைச் செய்யும் ஈகொசுவும்
கருவார் உயிரும் கதிகலங்கக்
கடமை செய்யத் தவறாவே
கெட்டும் பட்டணம் சேரென்பார்
கீழும் மேலும் புரியாமல்
தொட்டும் பிறரின் துணைபெற்றும்
தொடரும் நிலைமை அங்குண்டு
எட்டும் வரையும் பணமிருந்தால்
எதையுந் தொடலாம் சமமுறலாம்
கிட்டும் பெருமை கிளைஉயரும்
கேடில் கலையும் பெறலாமே
தந்தைமுன் தந்தையர் யாவரும்
தண்டமிழ் நாட்டவர் தாமவர்
முந்தைய நற்பெயர் யாவையும்
மூத்தத மிழ்ப்பெயர் தாமவை
சிந்தயில் இன்றிலை ஐயகோ
செந்தமிழ் நந்தமிழ் தேய்வுற
வந்தமொ ழிப்பெயர் வைக்கிறார்
மக்களைப் பெற்றுள மக்களே
தாயடு பிள்ளகள் பேசுதல்
தமிழ்மொழி தானது வீட்டிலே
வாய்மொழி யாவதும் தாய்மொழி
வாங்கவும் விற்கவும் கடைகளில்
ஆய்ந்தெவண் தேடினும் கடைகளின்
ஆங்கிலப் பெயர்களே காண்கிறோம்
தேய்ந்துநம் மொழியுணர் வேகுதல்
சிந்தனை யேனவர் செய்திலர்
இலவ சத்திலே கல்வியை
எங்குங் கற்கவே பள்ளியை
நலமி குத்தவர் நாட்டினார்
நன்மை சற்றுமே சிந்தியா
அலகில் மழலையர் பள்ளிகள்
ஆங்கி லம்வழி கற்கவே
நிலவ விட்டுயர் பொருள்பெறும்
நிலைவ ளர்த்தது நகரமே
உணவ கம்பல கண்கவர்
ஒளித ரும்நகை மாளிகை
பணமி குந்தவர் மெய்யெலாம்
பளப ளப்பளி துணியகம்
மணமி குந்தபூந் தாரகம்
வகைவ கைச்சுவை பொருளகம்
குணம ளந்துள செல்வமே
கொள்ள வைத்துள நகரமே
ஒருகொடிக் கொருகொடி உயரமாய்
உயர உயர்த்திய கொடிமரம்
தெருவொடு தெருவிடை திகழிடம்
திரும்பு மிடங்களில் நிறுவுவார்
அருவருப் பருவருப் படையவே
அரையில் அரைகுறை உடையடு
பருவமெய் தெரிகிற நடிகையர்
படங்கள் விளம்பரப் படுத்துவார்
சாதிச் சங்கம் ஊரெல்லாம்
தழைத்துச் செழித்து வளர்கிறது
ஆதிக் கத்தில் இருப்பதுவோ
அமைதிப் புரட்சி செய்கிறது
பாதித் திருந்த சாதிமிக
படிப்பில் பணியில் முன்னேற
சாதிப் பெயரைக் காக்கிறது
சருமாய் மதிக்க விழைகிறது
பத்து வட்டி எட்டு வட்டி
பாவ வட்டி பெறுகிறார்
புத்தி கெட்டு வாங்கி விட்டுப்
புலம்பி வட்டி தருகிறார்
நித்த நித்தம் எத்த நெத்தி
நிதிகு வித்து வாழ்கிறான்
பித்த னென்ற பெரிய பட்டம்
உத்த மற்குக் கட்டியே
உள்ள சொத்தை இழந்து விட்ட
ஒருவ நேங்கி அழுகிறான்
கள்ள நோட்டை அச்ச டித்துக்
கயவ னொருவன் குவிக்கிறான்
பள்ள வயிறு காய ஒருவன்
பரிசு நாடி இழக்கிறான்
பள்ளம் மேடு வளரு கின்ற
பாவ மேடு நகரமே
ஓட்டை வீட்டை இடிய விட்ட
ஒருவ னேங்கி அழுகிறான்
கோட்டை கட்டி ஒருவ னெட்டிக்
கோபுரத்தைத் தொடுகிறான்
மூட்டை தோக்கி ஒருவ னிங்கு
முதுகு தேய நோகிறான்
பேட்டை கட்டி ஒருவ னிங்கு
பெரிய வாழ்வு வாழ்கிறான்
கட்டியவள் வேறெங்கோ குடியி ருப்பாள்
கணவனொரு நகரத்தில் வணிகஞ் செய்வான்
எட்டாத தொலைதூரம் இரவுநேரம்
எப்படித்தான் போய்வருதற் கியலும் சும்மா
கட்டான இளம்பருவங் கழிய லாமோ
கடைச்சரக்கு வந்ததென எவனோ சொல்வான்
தொட்டவளை ருசிபார்க்கத் தொகைகொ டுப்பான்
தொற்றிவரும் நோய்பெருகத் துணைசெய் வானே
உற்பத்தி செய்வயிரம் பட்டை தீட்ட
ஓராறு மாதங்கள் பயிற்சி யென்பார்
கற்பிக்கா ததற்குரிய காசைத் தின்பார்
கற்காத மாணவரோ கற்ற தாக
அற்பர்க்குக் கையப்பம் போட்டுக் கொஞ்சம்
அதற்காகத் தொகைபெற்றுச் செல்வார் பாவம்
விற்பதொடு வாங்குவதும் வைர மன்று
மேல்மட்டம் எழுதிவைக்கும் வெறுங்க ணக்கே
பொருளுந்தும் பேருந்தும் வாரி வீசும்
புழுதிகளும் தொழிற்சாலைப் புகையுஞ் சூழ்ந்து
மருள்விக்கும் கண்திறக்க மற்று மங்கே
மடமடெனப் படபடென மனித ரேறி
உருள்விக்கும் வாகனங்கள் நூறு நூறு
ஒதுங்குமிடம் புரியாது திணர வைக்கும்
பொருள்மாறும் சந்தையென மனிதர் கூட்டம்
போகவர நிறைந்டிருக்கும் சாலை தோறும்
பகல்நேரத் திரைக்காட்சி பார்க்குங் கூட்டம்
பந்தாட்டம் பார்க்கின்ற மற்றோர் கூட்டம்
அகந்தோறும் தொலைக்காட்சி பார்க்குங் கூட்டம்
அதிகரிக்கக் காண்கின்றோம் அவைக ளெல்லாம்
நிகரில்லாக் கல்விபயில் நேரஞ் செல்வ
நிலையுயரத் தொழில்செய்யும் நேர மெல்லாம்
மிகவெறிதே போக்குவதை விட்டு விட்டு
வீடுயரப் பாடுபடும் நாள்வ ராதோ
அன்புவழி அகிம்சைவழி அமைத்த சான்றோர்
அவ்வழியில் வந்தவரை அழைத்துச் சென்றார்
பின்புவந்த பெரியோரும் அவற்றைக் காத்துப்
பெருமதங்கள் எனவாக்கிப் பெருமை சேத்தார்
இன்றந்த மதங்களினால் என்றுஞ் சண்டை
இடிபாடும் படுகேடும் எங்கும் விஞ்சத்
துன்பங்கள் செய்கின்ற சூழ்ச்சி யாளர்
தூண்டுகிற மதவெறிதான் தொலைவ தெந்நாள்?
நாடுநகர் வருணித்துக் கவிதை செய்து
நம்முன்னோர் இலக்கியத்தில் படலம் வைத்தார்
ஈடுசொல முடியாது போற்று கின்றேன்
என்றாலும் இன்றுள்ள நகரில் நாட்டில்
கேடுபல மிகுந்திருக்கும் கீழ்மை எண்ணிக்
கிளந்துள்ள இருபடலம் கிழித்துப் போட
நாடுமொரு நாள்வரவை நாடு கின்றேன்
நல்லனவே உள்ளனவாம் நாள்வ ராதோ?
முட்காட்டில் வாழ்ந்திடவா முன்னோர் சொன்னார்
முன்னேறத் தெரியாத மூட ராநாம்
வெட்கத்தால் தலைகுனியும் நிலையை மாற்றி
மேலோர்கள் கண்டகன வுண்மை யாக்கி
பெட்புள்ள நாடுநகர் என்று ஞாலம்
பேசுகிற படிசெய்து பிழைகள் நீக்கி
எட்டுணையும் இகழ்ச்சியிலா ஏற்றங் காண
எண்ணுவிக்க எண்ணியதை எழுதி னேனே