13.நாட்டுப் படலம்
காவல் தெய்வம்
எழுகின்ற கதிரே தெய்வம்
இருக்கின்ற நிலமே தெய்வம்
விழுகின்ற மழையே தெய்வம்
மேற்கொள்ளும் தொழிலே தெய்வம்
முழுமொய்ம்பு வலியே தெய்வம்
மொழியென்றும் மனித தெய்வம்
ஒழுகின்ற உழவன் தானே
உலகத்தின் காவல் தெய்வம்
திருநாட்டின் நிலையான எல்லை யாகத்
தென்குமரி இமயமலை திகழ மேல்கீழ்
இருகடல்கள் அரணாக இருக்க வைகும்
எழில்மிக்க வளநாடு இந்தி யாநம்
பெர்நாடு விடுதலையைப் பெற்ற பின்னர்ப்
பிழையகலக் குடியாட்சி பேணும் நாடு
ஒருநாடு வாக்காளர் உதவி யாலே
உயர்பதவி பெற்றவர்கள் ஆளும் நாடே
பாராளு மன்றத்துத் தேர்தல் மற்றும்
பல்வேறு மாநிலத்துச் சட்ட மன்ற
ஊராளு மன்றத்துத் தேர்தல் மேலும்
உயர்நகர மன்றத்துத் தேர்தல் வைத்தும்
ஓராளுங் காலத்தை உறுதி செய்தும்
ஒப்படைக்கும் வாக்களித்து மக்கள் கூட்டம்
யாராளும் வாய்ப்படைந்தும் நன்மை யாவும்
நாடடையும் நாளின்னும் வரவே யில்லை
ஐந்தாண்டு முடிந்தவுடன் மீண்டுந் தேர்தல்
அதற்கிடையே எத்தனையோகுட்டித் தேர்தல்
நைந்தாலும் நாடெல்லாம் தேர்தல் மட்டும்
நடந்துவிடும் போட்டியிலே வெற்றி பெற்றால்
பைந்தாரும் விருந்துமெனில் ஓடு வார்கள்
பதவியெனிற் சண்டைகளும் போடு வார்கள்
மைந்தாரும் வளஞ்சிறந்து நாடு வாழ
மக்களினஞ் செழிப்படையத் தொண்டுசெய்யார்
கூடாத கட்சியடுங் கூட்டுச் சேர்வார்
கூட்டுக்குக் காரணங்கள் கோடிசொல்வார்
ஆடாத நாடகங்கள் ஆடி வெல்வார்
அடுத்துவருந் தேர்தலிலே பகைத்துக் கொள்வார்
தேடாத காரணங்கள் தேடிச் சொல்லி
சேர்ந்திருந்த கட்சிக்கே குழிப றிப்பார்
பாடாத பாட்டுக்குந் தாளம் போட்டுப்
பங்குபெறுங் கட்சிகளும் இங்கேஉண்டு
சாதியிலே மதங்களிலே ஊறிப் போன
சமுதாயம் சமத்துவத்தின் காற்று பட்டே
ஆதியிலே இருந்தநிலை கொஞ்சம் மாறும்
அடுத்தடுத்து வருந்தேர்தல்போதை யூட்டும்
வீதியிலே பேசுவதோ வீட்டில் இல்லை
வேறினத்தில் மணம்புரியத் துணிவ தில்லை
ஓதிவரும் பள்ளிதரும் சான்றி லேறி
உச்சத்தில் இடம்பிடிக்கும் சாதிப் பேரே
சாதிமதம் எந்நாளும் பாரோ மென்பார்
சமத்துவமே எங்களது நோக்க மென்பார்
ஆதிமுதல் சாதியெலாம் சொல்லிச் சொல்லி
அவற்றாலெ வெற்றிபெற ஆசை கொள்வார்
நீதிமுறை எள்ளளவுங் கோடோ மென்பார்
நின்றவர்கள் வென்றுவர யாதுஞ் செய்வார்
காதினிக்க வாக்குறுதி கூறு வார்கள்
காற்றினிலே ஆளுகையில் போக்குவார்கள்
நடிபோருங் குடிப்போரும் நாட்டை யாள
நல்லோரும் வல்லோரும் எங்கோ போக
கொடி போரும் குலப்போரும் கூடக் கூட
கொள்கைப்போர் எல்கைப்போர் குன்றக் குன்ற
கடிப்போரும் அடிப்போரும் மேலே போகக்
கண்ணியமும் நன்னலமும் கீழே போகத்
துடிப்போரும் வெறுப்போரும் எனென செய்வார்
தோள்தட்டும் மூர்க்கரைநீ வாழ்த்தும் போது
பூனைக்கு மணியாட்டிப் பூசை செய்வார்
போக்கிரியை எதிர்க்கின்ற தெந்தக் காலம்
யானைக்கும் அடிசறுக்கும் என்ப தென்ன
யானைக்கே அடிசறுக்கக் காணு கின்றோம்
மோனைக்கும் எதுகைக்கும் மூட்டிக் கொள்வார்
முதலான கருத்தறிய முனைய மாட்டார்
பானைக்குள் உலகத்தைத் தேடு கின்ற
பைத்தியர்க்கு வைத்தியரை என்ஹ்கே காண்போம்
காசுபணம் வைத்திருந்தால் கடவுள் பிரம்மா
கணந்தோறும் மதிப்பேறும் கசடர் கட்கும்
மாசுமறு வற்றவரும் ஏழை யென்றால்
மரியாதை ஓடிப்போய் மறைந்து கொள்ளும்
தேசுகெடத் தேவைக்குப் பிறரை நாடித்
திண்டாடிக் கொண்டாடித் திரிய நேரும்
கூசுவன கூசாதார் செல்வக் குப்பை
கோபுரமாய்க் காட்சிதரும் குணங்கெட் டார்க்கே
அடிமையெனும் இருளுக்குள் கிடந்த நாடு
ஆதவதனாய் விடுதலையைக் காணு தற்குத்
தடியடியும் சிறைவாழ்வும் தாங்கித் தாங்கிச்
சான்றோர்கள் அறப்போரில் வெற்றிகண்டார்
மிடிதீரும் பெண்ணடிமை விலகிப் போகும்
வெங்கொடுமைச் சாதிவெறி வீழ்ந்து சாகும்
விடிந்தாலும் அறியாமை என்றார் மேலோர்
விழிதிறக்க நாம்மறுத்தால் மேன்மை யாமோ
காமவெறி பிடித்தலையும் கயவர் கூட்டம்
காசாசை பிடித்தலையும் கசடர் கூட்டம்
சேமநிதி களவாடுந் திருடர் கூட்டம்
சீட்டாட்டக் களியாட்டத் தீயர் கூட்டம்
வாமமதி விஞ்சுகிற வஞ்சர் கூட்டம்
மங்கையரால் மயங்குவிக்கும் நஞ்சர் கூட்டம்
சாமளவுந் தமக்கெனவே வாழும் வீணர்
சதிகாரர் கூட்டங்கள் நிறைந்த தாலே
பட்டங்கள் பலபெற்றும் வேலை யில்லை
பாட்டாளி மனம்மகிழக் கூலி யில்லை
சட்டங்கள் பலவகுத்தும் வெற்றி யில்லை
சாதிமத எண்ணங்கள் தகர வில்லை
திட்டங்கள் பலசெய்தும் செழிக்க வில்லை
தேவைகளை நிறைவேற்ற முடுய வில்லை
மட்டங்கள் ஒருநிலைக்கே வரவே யில்லை
வாழ்வுக்குந் தாழ்வுக்கும் வரம்பே யில்லை
பழுதடைந்த சாலைகளைப் பழுது பார்க்கப்
பணமொதுக்கும் அரசாங்கம் பார தத்தீர்
எழுதுதற்குக் கூசுகிறேன் எனினும் உண்மை
எப்பழுதும் பார்க்காமல் ஏய்க்கும் மாக்கள்
முழுத்தொகையும் பங்கிட்டுக்கொண்ட துண்டு
முழுக்கயவர் அரசியலில் புகுந்த தாலும்
உழுத்தகுணக் கீழோர்கள் பதவி யேறி
உட்கார்ந்த நிலையாலும் இந்தக் கேடே
ஊராட்சி ஒன்றியத்தில் கிணறு வெட்ட
ஒதுக்கியதை ஒதுக்கிவிட்டார் ஆணை யாளர்
சீராக அப்பதவிக் கடுத்து வந்த
திருவாளர்க் கதையோதிச் சென்றார் முன்னோர்
தாராள சிந்தையினர் கிணற்றை மூடத்
தக்கபடி விளக்கங்கள் தந்தார் மேலே
போராடி வெட்டாத கிணற்றை மூடப்
பொருள்பெற்றார் தன்பங்கை வெட்டிக்கொண்டார்
நான்குலட்சஞ் செலவிலொரு பாலங் கட்ட
நன்றாகத் திட்டத்தை வகுத்துக் கொள்வர்
நான்கிலொரு பாகத்தில் பாலங் கட்டி
லாபத்தைத் தக்கபடி பிரித்துக் கொள்வார்
மீன்குஞ்சு வரத்தண்ணீர் வருமே யானால்
வெகுவிரைவில் குளத்திற்குப் பாலம் போகும்
ஏன்செய்தார் இவ்வாறென் றெவர்கேட் கின்றார்
இதுதானே மறுபடியும் வரவு சேர்க்கும்
பள்ளிக்குக் கட்டடங்கள் வேண்டும் வேண்டும்
பலமுறையும் கூரைதான் வேய்கின் றார்கள்
கொள்ளிக்கும் இரையாகும் கறையான் தின்னும்
குறைதீர்க்க லாகடங்கள் போடு வாரோ
முள்ளிக்கு நீரூற்றி வளர்க்கின் றார்கள்
முதலைக்குச் சோறூட்ட நினைக்கின் றார்கள்
கள்ளிக்கு வேலியிட்டுக் காக்கின் றார்கள்
கயவர்க்குப் பொதுச்சொத்தப் படைக்கின் றார்கள்
வள்ளிக்கும் முருகனுக்கும் சொந்தம் பேசி
வாழ்க்கைக்குப் பொருள்தேடிப் பிழைக்கின் றார்கள்
வெளிக்குத் தங்கமுலாம் பூசிப் பூசி
விலையாக்கிக் கலையாக்கி வாழ்கின் றார்கள்
பள்ளிக்குப் போகாமல் நாட்டை யாளும்
பதவிக்கு வருவோர்கள் நிறைகின் றார்கள்
கொள்கைக்குக் கொல்லைவரும் கால என்றோ
கூப்பாடு ஏழைவிடுங் காலம் என்றோ
உடலளவில் பெண்சற்றுச் சிறிய வள்Tஹான்
உருவத்தில் அவளுக்கு நிகரொன் றுண்டோ
கடலளவில் சிறிதாகப் போகும் ஆண்கள்
கட்டழகி மேற்கொள்ளும் காதல் முன்னே
தொடலளவில் சுகஞ்சேர்க்கும் அவளைக் கட்டித்
தொடக்கூலி கேட்கின்ற மடமை நாணி
விடலளவில் சமுதாயம் மேன்மே லோங்கும்
விட்டிலதேல் கொடும்பாவம் விலா தையோ
தானடைந்த இன்பத்தை உலகந் துய்க்கத்
தான்வேண்டும் திருமூலர் சால்பை விஞ்சி
நானடைந்த நோயெல்லாம் என்னை விட்டு
நடைபாதை வருவோரைச் சார்க வென்று
கானடையில் வருவோர்கள் காணா நேரம்
கழிக்கின்ற பெருமகனே கருணை யாளா
ஊனடைந்த உயிகாக்கப் பிறர்க்குத் தீமை
உள்ளத்தால் நினைத்தாலும் பாவ மன்றோ
ஆதிசிவ நெறிசொல்லும் அன்பை விட்டு
அரிவணங்கும் பெரியோரின் சமத்து வத்தைப்
பாதியிலே குழிதோண்டிப் புதைத்து விட்டுப்
படுகொலையில் புகுந்ததொரு பக்திக் கூட்டம்
ஜோதிவழி பாட்டுநெறி இராம லிங்க
சுவாமிநெறி சுத்தநெறி பிறந்த நாட்டில்
காதியுடைப் பெருமகனார் அறப்போர் கண்ட
கறைபடியா அகிம்சைநெறிக் காந்தி நாட்டில்
பேன்வளர்ந்து சாதற்குப் பிறவா வண்ணம்
பெருகிவளர் முடிகளையும் பேரி ரக்க
வான்சிறந்த சமணமதம் வளர்ந்த நாட்டில்
மனிதகுலம் காணாத கொடுமை செய்தும்
ஏன்செய்தோம் இக்கொடுமை என்று கூட
இவர்களுக்குத் தெரியாதே இறைவா என்று
தந்துயரில் தவிக்கையிலும் வேண்டிக் கொண்ட
தன்னிகரில் ஏசுமதம் தளிர்க்கும் நாட்டில்
போதிமரத் தடியமர்ந்த புத்தன் தந்த
போதனைகள் செழித்திருந்த இந்த நாட்டில்
சாதிவெறி மதவெறியில் சிக்கிக் கொண்டு
தடம்புரண்ட வண்டிக்குள் தவிப்ப தைப்போல்
மோதிவெறித் தாக்குதலில் மூர்க்கர் கூட்டம்
முன்னேறிப் படுகொலைகள் செய்வ தாலே
வீதியிலே நடக்கிறவர் வீரு சேர
விதியின்றிச் சாகின்றார் ஐயோ ஐயோ
முன்பதவி வகித்தவர்கள் செய்த குற்றம்
முறைகேடு களைத்தொகுத்து வழக்குப் போடல்
பின்பதவி வகிப்பவர்கள் பெரிய வேலை
பிறநல்ல பணிசெய்ய நேர மில்லை
தன்பதவி காப்பாற்ற ஆளுங் கட்சி
தத்தளித்துத் தடுமாறித் தவிப்ப தாலே
பொன்பதவி கிடைத்திருந்தும் நன்மை செய்து
பொதுமக்கள் துயர்போக்க முடிவ தில்லை
நாட்டுக்கு நலந்தேடிப் பாடு பட்டு
நல்லௌடல் பொருளாவி யிழந்தார் முன்னோர்
வீட்டுக்கு நலந்தேடி மனைவி மக்கள்
வேண்டியவர் முன்னேறப் பாடு பட்டும்
ஓட்டுக்கு விலைதந்து லாப மீட்டும்
ஒருதொழிலாய் அரசியலில் ஒட்டிக் கொண்டும்
கேட்டுக்கு வழிகாட்டும் பலரா லின்று
கெட்டதடா அரசியலின் கீர்த்தி யிங்கே
அங்கொருவர் இங்கொருவர் நேர்மை யாக
அரசியலில் இருந்தாலும் அவரைக் கூட
இங்கிருக்கும் பொதுநிலையால் இழிவா யென்னும்
எண்ணந்தான் எழுகிறது ஐயோ இங்கு
மங்கிவரும் அரசியலார் மடிவு றாதோ
வளராதோ பெருந்தலைவர் தம்மைப் போன்றோர்
தரணியிலே பிறவோரோ மீண்டும் மீண்டும்
கடல் வருணனை
நீல நிறக்கடல் ஆழ நெடுங்கடல் நிலமெல்லாம்
கோல நடுக்கடல் கூடி யிருக்கிற நெடுநாவாய்
ஓல மிடுங்கடல் ஊரின் விளக்குகள் விண்மீன்கள்
மேல ததற்கிலை வேலை மிதக்கிற தடடாவோ
மலை வருணனை
மழைத ரும்மர வளந்த ரும்பல
வனவி லங்குகள் வதிய ரண்தரும்
தழைத ருஞ்செடி தளிர்மி கும்பொருள்
தரவ ளந்தரும் தருந்தொ ழில்பல
விழைந்து றுங்குடி மிகம கிழ்வுற
மிடிக ளைந்தரும் பொருள்த ரும்மலை
முழைத ருங்கொடு முடித ரும்புனல்
முழுவ ளந்தரும் முருக் நாடிதே
கங்கைநதி காவிரியில் கலக்க வேண்டும்
காலமெலாம் ஒருநாடாய்த் திளைக்க வேண்டும்
பொங்கிவளம் பெருகிவரும் நாட்டைக் காக்கும்
பொறுப்புணர்ச்சி எல்லார்க்கும் வளர வேண்டும்
இங்கிருக்கும் இந்தியரை வெல்ல யாரும்
இல்லையென முழுவலிமை எய்த வேண்டும்
தங்களது பாரதத்தில் உரிமை காத்துச்
சரிசமமாய் எல்லாரும் வாழ வேண்டும்