12.வாழ்த்து
வாழ்த்து
ஊருணி அருகி ருக்கும்
உயர்மர நிழல மர்ந்தும்
சீருள பக்த கோடி
சிந்தையுள் நிறைந்தி ருந்தும்
கோருதல் வழங்கி மக்கள்
குறைகளைந் தருள்பா லிக்கும்
ஓருயர் தந்தி நந்தி
ஓம்கண நாதா போற்றி
காப்பு
நாத லானவனே நான்வணங்கும் நாயகனே
வேதமுத லானவனே வித்தகனே தத்துவனே
போதமுத லானவனே புண்ணியனே எவ்வெவைக்கும்
ஆதிமுத லானவனே ஆண்டவனே காத்தருள்வாய்
அவையடக்கம்
நானொரு கம்ப னில்லை
நற்றமிழ்க் கொம்ப நில்லை
தானொரு மேதை யென்ற
தருக்கினிற் பாட வில்லை
தேனொரு தமிழ்நான் சிந்தும்
சிறுதினை மாவைக் கூட
வானொரு முருக னுக்கும்
வைக்குமா றாக்கு மன்றோ
நூல் முகம்
வந்தவர் நாட்டை யாள
வறுமையுள் மக்கள் வீழ
சொந்தநா டடையுந் துன்பம்
சொல்லவும் அரிய தென்று
நொந்தவர் சுதந்தி ரத்தை
நோக்கமாய் கொண்டு பண்டு
வெந்துயர் கோடி பட்டு
வெற்றியைத் தேடித் தந்தார்
உள்ளிய செல்வ மெல்லாம்
ஒயாது கொண்டு சென்ற
வெள்ளையர் நாட்டை விட்டு
வெகுதொலை சென்றூ விட்டார்
கொள்ளையர் இன்று மிங்கே
குறைந்தபா டில்லை ஐயோ
அள்ளியே குவித்து நாட்டில்
அதர்மத்தை வளர்க்கின் றாரே
முன்னவர் தியாக மோரா
மூடராய் முரட ராகித்
தன்னலப் பேய்க ளாகிச்
சதிச்செயல் பலவுஞ் செய்து
துன்னருஞ் செல்வஞ் சேர்க்கும்
துரோகிகள் மிகுந்த தாலே
என்னதான் பாடு பட்டும்
ஏக்கமே பெருகக் கண்டு
இந்தநா டெவ்வா றுய்யும்
ஏழையர் என்ன செய்வார்
அந்தமும் வந்து றாதோ
அவலமும் போய றாதோ
சந்ததம் நொந்த வாழ்வோ
தன்னலம் மடிவு றாதோ
எந்தையர் பட்ட தெல்லாம்
விழலுக்கே இறைத்த் நீரோ
என்றெல்லாம் நல்லோ ருள்ளம்
இனைவது கண்டு கண்டு
தொன்றுநம் பார தத்தின்
சுதந்திர வேள்வித் தீயில்
நின்றுதம் தியாகத் தாலே
நிகரற்ற வெற்றி கண்ட
வன்றிறல் வீரர் வாழ்வு
மனமுறப் புலம்ப லுற்றேன்
பெற்றளித்த சுதந்திரத்தைப் பேணிக் காத்து
பெருவாழ்வு வாழ்வார்கள் மக்க ளென்று
மற்றந்த மேலோர்கள் வகுத்த நல்ல
வழிநடக்க விரும்பாத கயவ நாளும்
குற்றவழி குறுக்குவழி தேடிச் செல்வம்
குவிக்கின்ற கொடுமைக்கு மருந்தா யிங்கே
கற்றவரை மிகுவித்த காம ராஜர்
காத்தபொது நலஞ்சொல்லக் கருதினேனே
சிவகாமி ஒருமைந்தர் நாட்டுக் காகத்
திருமணமும் செய்யாத தியாக வீரர்
நவகாளிக் கொடுமையிலும் பொதுமை வேட்ட
நாடுபுகழ் காந்திவழி நடந்த தொண்டர்
தவறாது செயல்புரிந்த தன்மை யாலே
சான்றோர்கள் பாராட்டும் கர்ம வீரர்
இவரன்றோ பெருந்தலைவர் என்று மக்கள்
எந்நாளும் கொண்டாடும் காம ராஜர்
அவர்சரிதை நான்சொல்லும் ஆசை யாலே
அறிந்தவரை சொல்கின்றேன் ஆன்றோர் ஏதும்
தவறுண்டேல் மன்னித்துப் பொறுத்துக் கொள்வார்
சால்புக்குச் சால்பூட்டும் காம ராஜர்
சிவலோகம் சென்றாலும் மக்கள் தங்கள்
சிந்தையிலே வாழ்கின்றார் வாழு மந்த
நவயுகத்தை உருவாக்கப் பாடு பட்ட
நல்லவரைப் பாடுமொரு பேறு பெற்றேன்
பலகற்றும் பிரர்க்குதவம் பண்பு கல்லாப்
பயனற்றோர் இருந்தென்ன போனா லென்ன
உலகத்து நன்மைக்குப் பாடு பட்ட
உத்தமரை மட்டுந்தான் கணக்கில் வைப்போம்
அலகிட்டுச் சொலற்கரிய அவர்க ளுக்குள்
அருமைமிகு தாய்நாட்டிற் குழைத்த நல்லோர்
சிலர்செய்த தியாகத்தை யேனும் நாளும்
சிந்திப்போம் செயல்படுவோம் சிறந்து வாழ்வோம்