15.சொற்பொருள்
அடி - சொற்றொடர் - சொற்பொருள்
அடி. 1. திருவி ழைந்திரு – இத்தொடரின் முதற் சொல்லாகிய திரு என்பது மங்கல
மொழியாக எடுத்தாளப்பட்டது. மங்கல மொழியால் நூலைத் தொடங்குவது தமிழர்
மரபு.
உலகுமுவப்ப – திருமுருகாற்றுப்படை , உலகம் யாவையும் – கம்ப ராமாயணம்,
உலகெலாமுணர்ந்து – பெரியபுராணம் இவையெல்லாம் உலகம் என்னும் மொழியை
மங்கல மொழியாகக் கொண்டு தொடங்கப் பட்டவை.
2. இரு கண்ணும் – இரண்டு கண்களும்
கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறுங் கடப்பா டிலவே”
(தொல் கிளவியாக்கம் நூற்பா 62)
இரு பேருருவின் – திருமுருகாற்றுப்படை அடி 57
ஐவேறுருவின் – திருமுருகாற்றுப்படை அடி 83
மூவிரு கண்ணும் – திருமுருகாற்றுப்படை அடி 103
பன்னிரு கையும் – திருமுருகாற்றுப்படை அடி 118
அடி. 8. அன்னை தந்தையர் அறிவு நல்கலென் ?
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்” திருக்குறள் 67
“ஈன்ற புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
புறநானூறு 312
இவற்றால் அன்னை தந்தையர் அறிவுக்கு ஏதுவாகிய கல்வியளித்தல் அவர்தம்
கடமையாவதை அறியலாம். எனவே, அது என்ன வியப்புடையது ? எனப்பட்டது.
10. முன்னை – முன்பிறந்தவனை – அண்ணனை
மான – போல
11. தமையன் – அண்ணன்
தன்னை யூக்கிய தமையன் – ஈண்டு அன்விகுதி ஒருமையுணர்த்தி நின்றது. தமையர் -
எனில் பன்மையாகக் கருத இடந்தந்து மயங்கவைத்தல் என்னும் குற்றத்தின் பாற்படும்.
தமைய னும்முளார் எழுவாய் ஒருமை உளார் என பன்மையீறு கொண்டது
உயர்வு – நோக்கியபால் வழுவமைதி. தாய் வந்தார், தந்தை உள்ளார் என்பன போல
“எனத்துணையர்…..புகல்” திருக்குறள் 144 நன்னூல் 379 ஆம் நூற்பாநோக்குக.
தமைய னும்முளார் – ஈற்றுச்சீர் செய்யுள் விகாரங்களுள் ஒன்றாகிய விரித்தல்
விகாரத்தால் அமைந்தது.
“கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே”
இதன் ஈற்றுச் சீரில் செய்யுள் விகாரம் இசைநிறைத்தலை ஒப்பு நோக்குக.
உளார் – உள்ளார் (இடைக்குறை)
15 மடங்கெட – அறியாமை அகல
மடல் – இதழ்வாயிலாக எழுதுங் கடிதம்.
20 இமிழ்கடல் – ஒலியை உடைய கடல் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்
தொக்க தொகை. வினைத்தொகையாகவும் கொள்ளலாம்.
24 மயல் – மயக்கம் – பிழைபட உணர்தல்
33 அன்னியர் – அயல் நாட்டினர், அந்நியர் என தந் நகரம் பயன்படுத்துவாரும் உளர்.
அன்னியர் என றன்னகரம் பயன்படுத்துதல் மரபு. ந.சி.கந்தையா பிள்ளை செந்தமிழ்
அகராதி – சான்று.
58 கோலி – திரட்டி
59 கஞ்சம் – வெண்கலத்தால் செய்த தாளவாத்தியம்
63 எணி – எண்ணி – இடைக்குறை
82 தீமதப்பகை – தன்மதத்தை மதித்துப் பிறர் மதத்தை வெறுக்கும் தீய பகை
பகைச்சேறு – உருவகம்
98 இன்னரும் – இன்ன அரும் – தொகுத்தல் விகாரம்
தொட்டனைத்து – தொட்ட அனைத்து
கற்றனைத்து – கற்ற அனைத்து – திருக்குறள் 397
108 மொய்ம்பு காட்டி – வீரத்தை உணர்த்தி.
முல்லை நிலத்தில் கொல்லேறு தழுவி அதை அடக்கிவென்று காளைக்குரியவளை
மணத்தல்.
125 முட்டுறாவகை – குறைபடாதபடி.
145 மட்டிலாத – அளவில்லாத
168 விழுப்புண் – போரில் முகத்திலும் மார்பிலும் பட்ட புண்மாற்றார் தாக்குதலைக் கண்டு
மருளாது அறப்போரிலீடுபட்டு அடையும் தண்டனை.
169 எதிர்நீச்சடிப்பவர் – எதிர்த்து நீஞ்சுபவர். பகை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாது
எதிர் நீச்சலால் வெல்பவர்.
174 தால் – நா
தாலசைப்பினால் – நாவையசைத்துப் பேசுதலால் – விரைந்த சொல்லாற்றலால்.
183 தவல் அரும் – குறைவில்லாத
197 பொற்புற – அழகுற
206 வேண – வேண்டிய
208 வானிலக்கியம் – பெருமையுடைய இலக்கியம்.
210 போனகம் – உணவு
போந்தவர் – சென்றவர்
217 நச்சி – விரும்பி
223 புரக்க – காக்க
227 உன்னுநாள் – நினைத்த – நினைக்கின்ற நாள்
232 வெந்நிட – புறங்காட்டியோட
237 பேழை – பெட்டி
245 மடுத்திட – இடையூறை எதிர்காண
251 முன்துணைப் புனிதை – புனிதமான முதல்மனைவி
252 இற்ற நாள் – மரணமுற்ற நாள்
267 முட்டு முட்டற முட்டறுப்பவர் – தடை தடையற்றுப் போகுமாறு தடைகளை அறுத்தெறிபவர்.
268 மடுத்தவாயெல்லாம் பகடு போன்றவர் – இடர்ப்பாடுடைய இடங்களிலெல்லாம் அஞ்சாத
காளையைப் போல எதிரூன்றிச் செல்பவர்.
270 தடியர் – தடியை உடையவர்
(வேலை உடையவன் வேலன். தடியை உடையவன் தடியன்)
272 பொடியர் – அற்பர்
பொடிய – பொடிப் பொடியாகச் சிதற
274 தடியர் – முரடர்
282 ஒருமொழி பாரதத்துள்ளரசோச்ச – இந்தி மட்டும் ஆட்சி மொழியாக இருக்க.
287 கதுமென – விரைவாக ( ஒலிக்குறிப்புச் சொல் )
295 புஞ்சை – புன்செய் – காடு
புலம் – இடம் ( விளைநிலம் )
307 பானாட் கங்குல் படரிருள் சீக்கும் – நள்ளிரவில் மிகுந்திருக்கும் இருளையோட்டும்.
( பால் + நாள் + கங்குல் )
316 முகிழ்த்த – தோன்றிய
333 படர்தர – வருத்தமுண்டாக்க
336 நிச்ச நிரப்பு – எப்போதுமிருக்கும் வறுமை
351 கையறு நிலை – செயலற்ற நிலை
352 போக்கறு நிலை – நடக்கமுடியாத நிலை
354 பையுள் – துன்பம்
362 நைந்து – வருந்தி
369 கட்டம் தீர்த்து – இன்னல் ( கஷ்டம் ) தீர்த்து
385 கடிமனை – புதுவீடு
400 கடிநீர் – மிகுந்த நீர்
409 நோயும் நொடியும் – மரபுத் தொடர் – ஒரு பொருட் பன்மொழி நொடி – நிலைதளர்தல்
435 ஒட்டாதாகி – பொருந்தாததாகி
438 உழலக் கண்டு – நிலைகெட்டிருப்பதைக் கண்டு உளைவு – மனவருத்தம்
442 ஒல்லும் வகையில் – இயலும் வழியில்
451 நசையுடன் – ஆசையுடன்
459 பேரியல் வகுத்த – பெரிய வழி உண்டாக்கிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
முதலியவற்றால் ஆரியரல்லாதவர் கல்வி, பதவிகளில் தக்க இடம் பெற்று முன்னேறச்
செய்தமை.
466 ஒட்டார் – பகைவர் ( வெள்ளையர் )
471 வாஞ்சை – விருப்பம்
வண்ணங்காட்டும் – வடிவச் சிறப்பை உணர்த்தும்
472 கொற்றவன் – மன்னர் ( கட்ட பொம்மன் )
477 பற்றுவழிப்படரா – பற்றுக் கொண்டு விரும்பிப் போற்றும் இயல்பு வழியில் செல்லாத
478 உலக மறைநூல் – தமிழ்மறை, பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள். தனி
இனத்திற்கோ, மதத்திற்கோ தனி நாட்டிற்கோ உரியதாகக் கூறப்படாது. உலக
மக்களுக்குக் கூறப்பட்ட கருத்துக்களை உடையதால் உலக மறைநூல் எனப்பட்டது.
479 கோட்டம் – கோயில்
484 கோபுரத்தடி நிழற்படரா – கோபுர நிழல் அடி படரா – எனக் கொண்டு கூட்டுக.
தஞ்சைப் பெரியகோவில், கோபுர நிழல் கட்டடப் பரப்பளவுக் கப்பால் விழாதபடி
பெரும் பரப்பகலத்துடன் கட்டப் பட்டுள்ளது.
487 கோலமார் சிலை – அழகு மிக்க இராஜராஜன் சிலை
493 வினைஞர் – தொழிலாளர்
496 ஆரும் செல்வம் – மிருந்துவரும் வருமானம்
506 அந்தமற்றோன் – முடிவில்லாதவன்
( ஆதியந்தமிலான் )
518 அவலம் – துன்பம்
519 மீதூர்ந்து – மிகுந்து
520 வீறு – பெருமிதம்
521 ஓச்சும் – அளவு கடந்து தாக்கத் தொடங்கும்
533 மண்டிருட் சிறை – இருள்நிறைந்த சிறை
558 பீழை – துன்பம்
564 வயங்க – ஒளியூட்ட
579 கண்கதவுகள்மூட – கண்ணிமைகள் மூட ( இயற்கை எய்த )
580 தாமம் – மாலை – மலர்மாலை
586 சதுக்கம் வங்கக் கடலடி வருட நிறுவி – வங்கக் கடல், அடிவருடச் சதுக்கம் நிறுவி.
சதுக்கம் – சமாதி. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவகம்
598 பற்று வளர்க்கும் சுற்றம் பாராது, தாய் தந்தை, அண்ணன் தம்பி, அக்காள் தங்கை என்று
பற்றினை வளர்க்கும் சுற்றத்தார் யாரையும் பார்த்தறியாது.
599 ஏழைச் சிறுவர் – அநாதைச் சிறுவர்
603 கைம்பெண் – விதவை ( கணவனை இழந்தவர் )
610 கையாறு – துன்பம்
614 படுமீன் – வலையிற்படும் மீன்
615 கவலும் – மனம் வருந்தும்
மாய்ந்தோர் கவலுங்குடி – இறந்தவரது வருந்துங் குடும்பம்
619 மதுக்கடை திறந்ததால் மனம் புண்பட்டு தாம் முதல்வராயிருந்த காலத்தில் ஒருமுறை
கள்ளுக் கடை திறந்ததை எண்ணி எண்ணி மனம் வருந்தி.
624 பிழைபா டோம்பாப் பெருமை – செய்த தவற்றைத் தொடர்ந்து செய்யாது விட்டுவிலகிப்
பெற்ற பெருமை.
ஓம்பா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
“எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.”
என்ற வள்ளுவத்தின் வழி நிற்றலால் வந்த பெருமை.
627 வறன் மீக்கூர – வறட்சி அதிகரிக்க
633 உண்டி – உணவு
637 நையா நிற்கும் – வருந்திக் கொண்டிருக்கும்
640 பையுள் – துன்பம்
642 உண்மையில் அமைத்து – ( சாலை அமைத்ததாக வெறுங்கணக்குக் காட்டாது )
உண்மையாகவே ( சாலை ) அமைத்தல்
649 செவ்வேள் அவளைப் புல்லியும் – முருகன் குறக்குலப் பெண்ணாகிய வள்ளியைத்
தழுவியதறிந்தும்
650 புல்லர் – அற்பர்
பொருந்தாத கதை மான் வயிற்றில் வள்ளிபிறந்ததாக அறிவியலுக்குப் பொருந்தாது
சொல்லும் கதை
659 கருணைமழை – கருணையாகிய மழை – உருவகம்
663 அறப்பாலிழிந்தவர் – அற இயல்பிலிருந்து தாழ்ந்தவர்
668 முட்டிமோதியும் முயன்றும் – அலைந்து திரிந்தும் விடாமுயற்சி செய்தும்
விடாமுயற்சி செய்தும்
முட்டிமோதி – மரபுத் தொடர்
672 பிறங்கச் செய்து – பெருமையடையச் செய்து
674 சூட்சமம் – நுட்பம், நுணுக்கம் ( ஆணினம் தனக்காக ஆக்கிக் கொண்ட தன்னல
நுணுக்கம் )
686 வடு – குற்றம் – பழி
689 தன்ன லம்மிகு – விரித்தல் விகாரம்
692 மாசு – குற்றம்
697 நனி வருந்திட – மிகவருத்தமுற
700 புக்கில் – புகலிடம்
712 பெய்துபேசுவார் – இடைச்செருகலுடன் பேசுகிறவர்
715 திறுகு சிந்தையர் – மாறுபட்ட சிந்தனையுடையவர்
716 எள்ளருஞ்சுவை – இகழ்ச்சியற்ற சுவை
721 உள்ள மாயும் – நினைக்க மறையும்
724 சாற்றுவோர் – சொல்லுகின்றவர்
728 விளம்பல் ஆகுமோ – சொல்லமுடியாது
733 வசையுரைப்பதே – குற்றங்கூறுவதே
743 கறைப் படாதவர் – குற்றப்படாதவர்
( குற்றத்திற்குள்ளாகாதவர் )
748 தொக்கு வைத்தனர் – மறைத்து வைத்தனர்
749 அடாவடித்தனம் – கொடுமைத்தன்மை
( அட்டூழியம், அட்டகாசம் )
750 படாத – படத் தகாத இன்னல்கள்
759 அன்பர் – அன்புக்குரியவர் ( மாண்புமிகு. எம்.ஜி.இராமச்சந்திரன் )
760 அந்நாள் ஆந்திர முதல்வர்
மாண்புமிகு.என்,டி.இராமாராவ்
762 இந்நாள் ஆந்திர முதல்வர் – மாண்புமிகு.சந்திரபாபு
770 கட்டித் தமிழ் – கற்கண்டு போன்ற தமிழ்
( கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்திற்றிய
வாறுபோல – நக்கீரர் – இறையனார் களவியலுரை )
779 துன்னும் – நெருங்கும்
முந்நீர் – ( ஆற்றுநீர், ஊற்றுநீர் மழைநீர் உடைய )
கடல்
784 தண்ணந்திரை – குளிர்ந்த அழகிய அலை
790 உள்ளதிகாரஎண் – முப்பாலிலுள்ள அதிகாரஎண்.133
793 இருபது நூறாம் இறுதி ஆண்டு – இரண்டாயிரம் ஆண்டின் கடைசி ஆண்டு
( 20 * 100 = 2000 )
807 நண்ணும் – கிட்டும் ( அடையும் )
823 ஆகாறு – பொருள் வரும் வழி
841 கடுகி – விரைந்து
ஏகுதி – செல்க
858 காவடி தூக்கி – ( மத்திய அரசின் ஒப்புதல் பெற அலைதல் ) மரபுத் தொடர்.
901 தடங்கடல் – பெரிய கடல்
910 எந்தை – என்தந்தை – மரூஉமொழி
முந்தையர் – முன்னோர்
912 உந்தை – உன்தந்தை – மரூமொழி
928 குஞ்சரம் – யானை
955 பாடுபட்டு – மிக உழைத்து
பாடு – வருத்தம்
956 நண்ண – அடைய
974 அழுக்காறு – பொறாமை
988 நாணி – வெட்கமுற்று