14.குறிப்புரை
கலைஞர் ஆற்றுப்படை
குறிப்புரை
பரிசு பெற்றுவரும் கூத்தர் முதலியோர், பரிசுபெறச் செல்லும் கூத்தர் முதலியோரிடம்,
தம் பரிசிலைக் காட்டி, தமக்குப் பரிசிலீந்த வள்ளல் பற்றிக் கூறி, அவன்பால் வழிப் படுத்துவதே
ஆற்றுப்படை எனப்படும்.
“ஆற்றுப்படை என்பது கூத்தர் முதலியவர்களில் ஒருவர் ஒருகொடையாளியின்பால்
தாம்பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த இரவலர்களுக்கு அறிவுறுத்தி அவரும் அவன்பாற்
சென்று தாம் பெற்றவற்றையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்தல்”
ஆறு – வழி, படை – படுத்துதல்.
( பத்துப்பாட்டு மூன்றாம்பதிப்பின் முன்னுரை உ.வே.சா.)
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”
( தொல்காப்பியம் புறத்திணை நூற்பா 30)
முன்னோர் வகுத்த இந்த இலக்கண வழியில்தான் நான் கலைஞர் ஆற்றுப்படை
எழுதியுள்ளேன். கலைஞர் என்ற சொல்
“வழக்கினாகிய உயர் சொற்கிளவி “
“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கினாகிய உயர்சொற் கிளவி….”
( தொல்காப்பியம் – கிளவியாக்கம் நூற்பா 27 )
சங்க இலக்கியங்களுள் முதலிடம் பெறுவது பத்துப் பாட்டு பத்துப்பாட்டுள் முதலிடம்
பெறுவது திருமுகாற்றுப்படை. வள்ளுவர் குறள் அதன் பெருமை விளங்கத் திருக்குறள்
எனப்படுவது போல முருகாற்றுப்படை என்பது அதன் பெருமை விளங்கத் திருமுருகாற்றுப்படை
எனப்பட்டது.
“முருகாற்றுப்படை என்னுந் தொடர்மொழிக்கு” “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர்
இரவலனை வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப் படுத்துவது”
என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர் என பதிற்றுப் பத்து மூன்றாம் பதிப்பு
முன்னுரையில் உ.வே.சா. குறிப்பிடுகிறார்.
தமிழனாகப் பிறந்து, தமிழ்கற்றுப் புலவனாகி, தமிழ் கற்பித்தும், தமிழனாக வாழ்ந்தும்
பக்குவப் பட்ட நான், ‘தமிழனே! உனது சரிதைகேள் வருக’ என்று தமிழனை நோக்கிக்கூறி,
கலைஞரிடம் ஆற்றுப் படுத்துகிறேன்.
தமிழர் பற்பன்னூறாயிரவர். நீவிர் தமிழனே! என ஒருமையால் விளிக்கிறீர். எந்த ஒரு
தமிழனை ஆற்றுப் படுத்துகிறீர் என வினவலாம். இரண்டு மூன்று வெற்றிலைகளுக்குமேல்
வாயில் போடும் ஒருவன் வெற்றிலை போட்டேன் என்றே கூறக் கேட்கிறோம். சிறுதுளி
பெருவெள்ளம் என்னும் போது பற்பன்னூறாயிரம் துளிகள் வெள்ளமாகிப் பெருக்கெடுத்
தோடுவதை உணர்கிறோம். இவ்வாறே தமிழன் என்னும் சொல்லை ‘சாதி ஒருமை’ என்னும்
இலக்கண விதிப்படி ஒருமையாகக் கருதி தமிழர் அனைவரையும் விளித்து வழிப்படுத்துவதாகக்
கொள்க.
“பூவெனப் படுவது பொறிவாழ் பூவே” என்ற தொடர் கற்றவர் உலகங்களித்துக்
கூறுவது பூக்கள் எத்தனையோ இருந்தாலும் பூவென்றால் அது திருமகள் உறையும் தாமரைப்
பூவையே குறிக்கும் என்பது அதன் பொருள். சிற்பக்கலை, ஓவியக்கலை, நடனக்கலை,
இசைக்கலை, நடிப்புக் கலை, பேச்சுக் கலை, எழுத்துக் கலை என்று சொல்லப்படும்
எண்ணற்ற கலைகளில் வல்ல கலைஞர்கள் ஊரெங்கும், நாடெங்கும், உலகெங்கும் உள்ளனர்.
ஆனால் கலைஞர் என்றதும் நம் உள்ளத்தில் ஊடுருவிக் காணப்படுபவர் மு.கருணாநிதி
அவர்களே.
வாழுங் கலைகளுள் ஒன்றில் வல்லமை இருந்தாலும், அதனை உடையவரைக் கலைஞர்
என்று கற்றவர் பாராட்டக் காண்கிறோம். நம் கலைஞரோ பேச்சுக் கலை, எழுத்துக்கலை,
நடிப்புக்கலை முதலிய எத்தனையோ கலைகளில் வல்லமை உடையவர். எனவே, இந்நூலில்
நான் காரண இடுகுறிப் பெயராக கருணாநிதி அவர்களை கலைஞர் என்று மட்டுமே சுட்டி
ஆற்றுப்படை நூலை ஆக்கியுள்ளேன். “பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇ”
என்று தொல்காப்பியர் கூறுகிறாரே, பரிசு பெற்று வரும் கூத்தர் முதலியோர் தம் பரிசிலைப்
பற்றி விளக்கமாகக் கூறியுள்ளனரே நீர் அவரிடம் என்ன பெற்றீர்? அது பற்றி அதிகம்
சுட்டவில்லையே, அது ஒரு குறையன்றோ? என்று வினவலாம். நான் என்னுடைய நூலில்
“தன்னை ஒத்துயர் தரம்பெ றத்தினம்
என்னை யூக்கிய முன்னை மானவென்
தன்னை யூக்கிய தமையன் “
என்று கலைஞரைச் சுட்டியுள்ளேன்.
நான் இளம் வயதில் தந்தையை இழந்த ஏழை. என்னுடன் பிறந்த அண்ணன்
புலவர்.துரை.தில்லான் அவர்களிடம் வணிகர்சிலர், தம் பலசரக்குக்கடைக்கு என்னை அனுப்புமாறு
கேட்டுக்கொண்டனர்; தங்கம் பொன் கடையில் பொறுப்பான வேலையில் வைத்துக்கொள்ளக்
கேட்டுக் கொண்டவருமுண்டு. ஆனால் அவர்களிடமெல்லாம், என் அண்ணன், அவன் என்னைப்
போல ஆசிரியராக எதிர்காலத்தில் இருக்குமாறு அனுப்புவேனேயன்றி, வேறு தொழில் செய்ய
அனுப்பமாட்டேன் என்று மறுத்துவிட்டார். அவர் என்னைத் தமிழ்க் கல்லூரியில் சேர்த்து, தம் குறைந்த வருவாயுள் பாதியை எனக்கனுப்பித் தமிழ் கற்கச் செய்தார். அங்ஙனம் எனக்குத் தமிழ்
தந்த என் அண்ணனைப்போல எனக்குத் தமிழ் தந்த அண்ணன் என கலைஞரை
பாடியிருக்கிறேன்.
பெற்ற பெருவளம் இது போதாதா? நான் மட்டுமா பெற்றேன்; இந்த நாடே பெற்றது. என்
இளமைக் காலத்தில் அவர் மேடைப் பேச்சைக் கேட்க, பல முறை, பலகல் தொலைவு நடந்து
சென்றிருக்கிறேன்; கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். முரசொலி முதலிய இதழ்களில், அவர்
சொல்லோவியங்களைக் கற்றுக் கற்றுக் களிப்படைந்திருக்கிறேன். அவரைப் போல, தமிழில்
வல்லமை பெறவேண்டும்; மேடையேறிப் பேச வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறேன்.
அவ்வகையில் ஓரளவு வல்லமையும் பெற்றிருக்கிறேன். நான் மட்டுமா அன்று இப்படி ஆசைப்
பட்டேன். இந்த நாடே ஆசை கொண்டது. கல்லூரி மாணவர் கனவு நனவெல்லாம் அதுவாக
இருந்த தென்றால் மிகையாகாது.
இந்த நாட்டின் பேச்சுக் கலை பெருமை அடைந்ததற்கு அண்ணாவின் வழிவந்த அவரும் ஒரு
காரணமல்லவா? பேசமட்டுமா ஆர்வம் பெற்றோம்? தம்மை உணர, தமிழர் பெருமை உணர,
வீரமுற்றெழ, வெற்றிபெற்று வாழ, மானங்காக்க, சுயமரியாதை காக்க, பகுத்தறிய,
பாடுபட்டுயர – அவரால் படித்துக் கொள்ள வில்லையா?
“தேருளைப்புரவியும், வாரணத் தொகுதியும்” சீர்தரும் செல்வமும் ஆகிய, பருப்பொருள்களைப்
பரிசிலாகப் பெற்றால் அவற்றையெல்லாம் அடையாளங் காட்டிப் பாடலாம். காலத்தால் கரைந்து
மறையும் அத்தகைய செல்வங்களைவிட அழியாத பெருமைதரும் அறிவுச் செல்வம், அருங்கலைச்
செல்வங்களையல்லவா நான் அவரிடம் பெற்றிருக்கிறேன்.
துரோணரை – அவரது ஆற்றலை – நினைந்து நினைந்து, முயன்று முயன்று ஏகலைவன்
கற்றுக்கலை வல்லவன் ஆனான் என்பதை ஒத்துக்கொள்ளும் உலகம், இதை ஒத்துக்
கொள்ளத்தானே வேண்டும்.
“கேடில் விழுச் செல்வம் கல்வி ” என்ற வள்ளுவர் வாய்மொழியை, மனத்திலிருத்திப்
பார்ப்பவர்க்குக் கற்றுக் கொள்ளுங்கல்வி பெற்றுக்கொள்ளும் செல்வத்தினும் பெரிதென்று
சொல்லவும் வேண்டுமோ?
“யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்னும் ஒப்பற்ற தொடர் என் உள்ளத்தில்
ஒலித்துக் கொண்டிருப்பதால் இருபதாம் நூற்றாண்டு இறுதிக்காலத் தமிழனோடு எதிர்காலத்
தமிழனையும் சேர்த்து எதிர்வருந் தமிழனாக வைத்து இதனைப் பாடியுள்ளேன்.
கலைஞர் ஆற்றுப்படை பாடக் காரணம்
நாடு வாழ வாழ்ந்த நல்லவரும், நாமெல்லாம் போற்றும் தமிழ் வல்லவருமான
அண்ணா, நம்மை விட்டுப் பிரிந்தபோது, நினைந்து நினைந்து வருந்தினேன். மறுபடியும் பிறந்து
வரமாட்டாரா என மயங்கினேன்.” அண்ணாவைப் பிள்ளையாகப் பார்க்க எழுந்த ஆசைதான்
அண்ணா பிள்ளைத் தமிழாக மலர்ந்தது. அவரது அருமை பெருமைகளையும் ஆட்சியின்
மாட்சியையும் மனமாரப் பாடி மகிழ்ந்தேன். பாடிய நூறு பாடலும் அண்ணாவைப் பற்றியதாகவே
அமைந்துவிட்டதால் அவருக்குப்பின் கழகத்தைக் கட்டிக்காத்து, கழக ஆட்சி நிலைத்திருக்கக்
காரணமாயிருக்கும் கலைஞரைப் பற்றியும் பாட வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த
ஆசையின் வடிவந்தான் இந்த ஆற்றுப்படை.
கலைஞர் ஆற்றுப்படை, ஆசிரியப் பாவால் ஆக்கப் பட்டுள்ளது. ஆசிரியப்பா அகவல்
ஓசையுடையது. தூக்கும் வண்ணமும் தொல்காப்பியத்திற்கு முன்னும் துலங்கியவை என்றாலும்
சங்க காலக் கவிதைகள் பெரும்பாலும் சந்தத்திற்குப் பெருமதிப்புத் தந்ததாக எனக்குத்
தெரியவில்லை. எனினும் அவ்வப்பாவிற்குரிய ஓசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருப்பதை
மறுக்க முடியாது. சிலப்பதிகாரக் கானல்வரி முதலியவற்றில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
சந்தஞ்சிறந்து விளங்குவதையும் மறக்க முடியாது. ஆனால் இடைக்காலத்தில் எழுந்த
எண்ணற்ற கவிதை நூல்கள் சந்தத்திற்கு முதலிடந் தந்து பாடுநரையும், கேட்கு நரையும்,
படிப்பவரையும் கவர்ந்திழுப்பதை எண்ணிப் பார்ப்பதாலேயே நான் இவ்வாறு எழுதுகிறேன். அந்தச்
சந்தக் கவிகற்ற உள்ளங்கட்கு இந்தக் கவி இனிக்க வேண்டுமே எனக்கருதி, அகவலோசையாற்
பாடப்படும் ஆசிரியப் பாவாயினும் கற்பவர் களிக்கச் சந்தஞ் சிறக்கப் பாடியுள்ளேன்.
‘தான தத்தனன தான தத்தனன’ என்ற சந்தஞ் சிறந்த
“தேரு ளைப்புரவி வார ணத்தொகுதி
திறைகள் கொண்டுவரு மன்ன வாநினது
தேய மேதுனது நாம மேதுபுகல்
செங்கை யாழ்தடவு பாண கேள்வருக “
என்னும் அடி கம்பர் பாடிய ஆற்றுப்படைப் பாடல் அடிகளுள் ஒன்று. அது ஆசிரிய
விருத்தத்தாலானது. அந்தச் சந்தம் என்னைக் கவர்ந்தது. எனவே, அந்த விருத்தச் சந்தத்தை
இடையிடையே புகுத்தினேன்.
இந்தச் சந்த நயத்தைப் புகுத்தியிருந்தாலும் என் பா ஆசிரியப்பாவின் இலக்கணத்தி
லிருந்து வேறுபட்டுச் செல்லவில்லை என்பதையும் உணர்த்த விரும்புகிறேன்.
“……விளங்கனி வந்
தாஞ்சீ ரடையா அகவ லகத்துமல் லாதவெல்லாம்
தாஞ்சீர் மயங்கும் தளையு ம·தே”
(யாப்பருங்கலக் காரிகை ஒழிபியல் 40 )
ஆசிரியப்பாவில் விளங்கனிச்சீர் மட்டும் வரக் கூடாது. மற்றசீர்களும் தளைகளும்
மயங்கி வரலாம் என்பது இதன் பொருள். மேலும்,
“இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான்
மயக்கப்படா வல்ல…..”
( காரிகை – ஒழிபியல் 41 )
என்றும், காரிகை கழறுகின்றது. இதனால் ஆசிரியப் பாவுள் இயற்சீர் வெண்டளைகளால் ஆகிய
அடிகள் வரலாம் என்பது உணர்த்தப்படுகிறது. இந்நூலின் உரையாசிரியர் குணசாகரர்
‘மயக்கப்படாவல்ல’ என்ற தொடர்விளக்கத்தில் வெண்சீர் விரவிய இயற்றளை வெள்ளடியும்
கலியடியும் ஆசிரியத்துள் அருகி வரப்பெறும் என்று உரை வகுத்துள்ளார்.
“இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்
நிலைக்குரி மரபின் நிற்பவும் உளவே”
( தொல்காப்பியம் – செய்யுளியல் நூற்பா 59 )
என்று தொல்காப்பியரும் விளம்பியுள்ளார். இந்த இலக்கண விதிகளிலிருந்து சிறிதும் பிறழாது
என் கவிதை அமைந்திருப்பதை இலக்கணவல்லார் எளிதில் அறிவர்.
விழுமிய பொருளை ஒழுகிய ஓசையில் தர வேண்டும். அதுவே கவிதை. அந்த வகையில்
அமைந்த இந்தக் கவியில் வகையுளி முக்கிய இடம் பெற்றுள்ளது. வகையுளி பற்றிய முன்னோர்
மொழி எண்ணி இன்புறத்தக்கது. ‘முன்னும் பின்னும் அசை முதலாகிய உறுப்புக்கள்
நிற்புழியறிந்து குறைபடாமல் வண்ணம் அறுத்தல்” வகையுளி எனப்படும்.
“அருணோக்கு நீரா ரசைசீ ரடிக்கண்
பொருள்நோக்கா தோசையே நோக்கி – மருள் நீக்கிக்
கூம்பவுங் கூம்பா தலரவுங் கொண்டியற்றல்
வாய்ந்த வகையுளியின் மாண்பு “
(யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் குணசாகரர் விளக்கவுரை காரிகை 45 )
“மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
திருக்குறள் 3.
இதன் ஈற்றடி ஈற்றுச்சீர் வகையுளியாக நின்று சீரும் தளையும் சிதையாமற்
காப்பதையறியலாம்.
தேரு ளைப்புரவி வார ணத்தொகுதி என்னும் முதலடியின் தொடக்க முதல்
‘விருத்தமென்னும் ஒண்பாவில் உயர்கம்பன்’
பொருள் நோக்கா தோசையே நோக்கி அசையுஞ்சீரும் அமையப் பாடியிருப்பதைக்
காணலாம். இவற்றையெல்லாம் அறிந்தவர்கள் உரைநடையில்
சுக்குமி ளகுதி ப்பிலி என்று இடர்ப்பட எழுதிக் குழப்புவது போல எழுதப் பட்டதாக எண்ண
மாட்டார்கள். ( பீமன் ) மரத்தேப்பி டிங்கினானே டிங்கினானே என்று பாடிப் பாடலைக்
கொச்சைப் படுத்துவதைப் போல கொச்சைப்படுத்தவும் மாட்டார்கள் என்றும் நம்புகிறேன்.
இந்நூல் 997 அடிகளையுடையது; ஒரே ஆசிரியப்பாவாலானது.
“…….உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை
( யாப்பருங் கலக்காரிகை 14)
மூன்றடிச் சிறுமையுடைய ஆசிரியப்பா உரைப்போர் கருத்தின் அளவு நீளும் என
அமிதசாகரர் அறிவித்திருந்தாலும் அவர்க்கும் முந்திய தொல்காப்பியர்
“ஆசிரியப் பாட்டின் அளவிற் கெல்லை
ஆயிர மாகும்”
( தொல் – செய்யுளியல் 150 )
என்று வரையறுத்துள்ளதால் அந்த அளவிற்குட்பட்டு என் கவிதையை முடித்துள்ளேன்.
கலைஞரைப் பற்றிக் கம்பரைப் போன்ற கவிவல்லவர் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடக்
கூடும். அப்படியும் வரவேண்டும் அகம் மகிழவேண்டும்.