துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

13.கலைஞர் ஆற்றுப்படை

            கலைஞர் ஆற்றுப்படை

 

திருவி ழைந்திரு கண்ணும் சிந்தையும்
விருவி ருப்புற ஆர்வம் விஞ்சியே
இருக ரத்திலும் நூலை யேந்திநீ
எந்த நாளிலும் பயில்வ தெங்ஙனம் ?
இந்த ஆர்வம்நீ எய்த யார்துணை ?        5

தந்தை தாயரோ தமைய னோஎன
என்னை நாடிவந் தினிது கேட்கிறாய்
அன்னை தந்தையர் அறிவு நல்கலென்
தன்னை யொத்துயர் தரம்பெ றத்தினம்
என்னை யூக்கிய முன்னை மானவென்       10

தன்னை யூக்கிய தமைய னும்முளார்
உன்னை யீன்றமண் உயர வாழ்வதே
கடனெ னத்தினம் கடமை யாற்றியும்
உடன்பி றப்பென உரிமை சாற்றியும்
மடங்கெ டத்தொடர் மடல்வி டுப்பவர்       15

அவரை நாடுநீ அதிகம் நல்குவார்
புவன முற்றுமே புகழ்ப ரப்பிய
தமிழனே ! உனது சரிதைகேள் வருக
தகவ றிந்து வழிதெளி துணிந்துசெல்
இமிழ்க டற்புவி முதல்மு ளைத்ததுன்        20

தமிழெ னப்புரி தலைநி மிர்ந்துநில்
அமிழ்தை யொத்தஅம் மொழியி ருக்கநீ
அயல்மொ ழிச்சுமை அதிக மேந்தினாய்
மயல்மி குந்ததில் வாழ்வு தேடினாய்
மதிம யங்கினாய் வளர்பு துக்கலை          25

அறிவு நல்குமென் றடிமை யாகினாய்
வந்த வர்க்கடி பணிய முந்தினாய்
செந்த மிழ்ப்பணி செய்த லஞ்சினாய்
ஆரி யர்க்கடி வருடி யாகினாய்
ஆங்கி லர்க்குநீ அடிமை யாகினாய்         30

ஆயி ரக்கணக் கான ஆண்டுகள்
அருந்த மிழ்ப்புவி யாண்ட மாட்சிபோய்
அன்னி யர்க்கடித் தொண்ட னாகினாய்
சங்கம் வைத்ததும் தமிழ்வ ளர்த்ததும்
கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும்     35

சிங்க ளத்திலே வளமி குத்ததும்
தீவு பற்பல வென்று கொண்டதும்
இமய வெற்பிலே கொடிபொ றித்ததும்
மலைகொ டுத்ததும் கடல்கொ டுத்ததும்
நிலம ளித்ததும் கலஞ்செ லுத்திமுன்         40

யவன வாணிகச் சீன வாணிகப்
புவன வாணிகப் பொருள்கு வித்ததும்
கனவு கற்பனை எனம றந்தனை
காவி யக்கலைக் கடல்ப டைத்தனை
ஓவி யக்கலைக் குயிர்பு குத்தினை           45

நாட்டி யக்கலை நாட்டி வைத்தனை
பாட்டி யற்கலைப் பண்வ குத்தனை
கூத்தி யற்கலை கூட்டி வைத்தனை
வேத்தி யற்கலை விளங்க வைத்தனை
வான நூற்கலை வழிப டைத்தனை           50

ஞான நூற்கலை நவின்று யர்த்தினை
கற்க டைந்துபொற் கோவில் கண்டனை
சிற்ப நுண்கலை தேர்ந்து விஞ்சினை
கட்ட டக்கலை காட்ட விண்ணினை
முட்டு கோபுரங் கட்டி வைத்தனை           55

தோலி னாயவை துளையி னாயவை
நூலின் மெல்லிய நரம்பி னாயவை
கோலி நல்லிசைக் கருவி செய்தனை
தாள மொத்திசை கஞ்ச மீந்தனை
இன்ன  ரும்பல நுண்க லைத்திறன்          60

உன்னை யொத்தினி வேறு யார்க்குள
என்ன வாழ்ந்தநீ இழிவ டைந்துபோய்
பின்னை யாரையோ பெரிய ராயெணி
நண்ணி மற்றவர் நடைப யின்றனை
துன்ன ருங்கலைச் செல்வம் யாவையும்        65

பின்ன ரேகிடப் பீடு கெட்டனை
வடபு லத்தவர் வந்து வாழ்ந்துனைத்
தொடத்த காதவன் என்று தூற்றினார்
ஒருத மிழ்க்குடி மக்க ளுக்குளே
உயர்வு தாழ்வுகள் ஓதி நாட்டினார்           70

பெருகு சாதிகள் நூறு பேணினாய்
பின்ன டைந்துநீ பெருமை குன்றினாய்
பாடு பட்டுநீ கோவில் கட்டினாய்
பக்தி யோடதில் தெய்வம் நாட்டினாய்
கட்டி வைத்தநீ எட்டி நின்றனை             75

கருவ றைக்குளே ஐய ரேகினார்
அந்த ணன்மொழி ஆண்ட வன்மொழி
செந்த மிழ்மொழி செவிபு காமொழி
என்ற வர்சொல ஏற்று வாழ்த்தினை
இன்ற மிழ்மொழிக் கிழிவு சேர்த்தனை        80

தெய்வ மாயிரந் தேடி நொந்தனை
தீம தப்பகைச் சேறு ழந்தனை
ஒன்று நம்மதம் ஒன்று நம்குலம்
ஒன்று நம்மிறை யென்ற தோர்கிலாய்
வாழு நன்னெறி நீவ குத்தது               85

மான மென்பதுன் மனைய றக்குணம்
வீர மென்பதுன் விளைநி லப்பொருள்
ஈர மென்பதுன் இதய மீன்றது
கற்பு மேலெனக் காப்ப துன்குடி
சொற்பு கழ்க்குயிர் விற்ற லுன்செயல்         90

கொடைகொ டுப்பதுன் குடிமு தற்குணம்
படைதொ டுக்கினும் பண்பு நீங்கிடாய்
இல்லை யென்றுநீ இரத்த லஞ்சுவாய்
மல்லல் சேர்க்கினும் பழிம லைந்திடாய்
மற்ற வர்க்கென வாழ்த லோம்புவாய்          95

யாதும் ஊரெனப் பொதுமை பேசுவாய்
யாவரும் உறவினர் என்று பேணுவாய்
இன்ன ருங்கலைப் பண்பி ருக்கவும்
அன்னி யக்கலைப் பண்பு நாடினாய்
சங்க நூல்பல கற்று நின்றநீ                100

சறுக்கி வீழ்ந்தனை சகதி நூலுளே
சிந்த னைத்திறம் தேய்த லுற்றனை
வந்த புன்குணம் மனம்பு காமுனம்
களவு கற்பெனும் அகத்தி ணைப்பொருள்
உளங்க வர்ந்ததால் ஒத்த ஐந்திணை         105

அன்பு வாழ்க்கையில் இன்ப முற்றனை
மன்ப தைக்குநீ வாழ்ந்து காட்டினை
முல்லை மண்ணிலே மொய்ம்பு காட்டிநீ
இல்ல றத்துணை எய்தி வாழ்ந்தனை
உப்பு வாணிகஞ் செய்ய வந்தவள்            110

ஒப்பு மன்பினால் குறிஞ்சி வீரனை
மெய்ப்பு கழ்பெற மேவி வாழ்ந்தனள்
கைப்பி லாதநற் காதல் வாழ்விலே
பொய்க்கு லக்குணம் புகுத லெங்கனம்
சங்க நூல்களுள் எங்கு சாதியால்            115

பங்க முற்றது பார்த்தி ருக்கிறோம்
எங்கி ருந்துதான் இங்கு வந்ததோ
நூறு சாதிகள் கூறு நூலது
கூறு போட்டதால் கூடி வாழ்வதில்
வேறு பட்டனை மேன்மை யற்றனை          120

வள்ளு வர்மறை மனையி ருக்கவும்
வஞ்ச கம்மிகு நூலை யோதிநீ
பட்ட துன்பமோ பகரொ ணாதது
விட்டு விட்டுவா மீண்டும் சிந்தனை
முட்டு றாவகை மூளை யாற்றலால்           125

கட்டு விட்டகல் கடற்ப ரப்பிலே
கன்மு ளைத்தடி மண்மு ளைத்திடா
முன்மு ளைத்தநீ பின்ன டைந்ததை
உன்னி யுன்னிலை உயர வெண்ணிநான்
சொன்ன வாறுநீ தொடர்ந்து போதியேல்     130

இன்ன ருங்கலைக் குரிசி லெய்தியே
முன்னை யுன்னலம் முழுது மெய்துவாய்
பின்னை யும்பல பெருமை கொள்ளுவாய்
மன்ன வர்நிகர் மாட்சி கொண்டுயர்
சென்னை மாநில முதல்வ ராயவர்           135

பன்ன ருஞ்செயல் பண்ணி நாட்டினை
முன்ன டத்துதல் மொழிய வல்லனோ
கன்ன லாந்தமிழ் காப்ப வர்திறம்
என்ன வாவினாற் சிலவி யம்புகேன்
முன்ன றிந்துநீ முனைந்து செல்லுதி          140

ஏட கம்பல தேக்கி வைத்தவர்
நாட கம்பல நாட்டி வைத்தவர்
திரைப்ப டக்கதை பலப டைத்தவர்
உரைவ குத்ததில் உள்ள மீர்த்தவர்
மட்டி லாதநா ளிதழ்ம லிந்திடக்             145

கட்டு ரைக்கடல் படைத்த ளித்தவர்
புவிபு கழ்ந்திடப் பொருள்பு நைந்துநற்
கவிப டைப்பதிற் புதுமை கண்டவர்
சிறுக தைத்தொகை  மிகவ ளித்தவர்
உறுநெ டுங்கதை யுறவ ளித்தவர்             150

இணையி லாதசொற் பொழிவு வல்லவர்
கணைதொ டுப்பெனக் கருத்து டன்படார்
கிடுகி டுக்கவி னாவி டுப்பினும்
சுடச்சு டப்பதில் சொல்ல வல்லவர்
உருகு சொற்கலை மெருக ளிப்பவர்           155

இருபொ ருட்சுவை மொழிமி குப்பவர்
பருகு வாரெனப் பெருகு காளையர்
குருதி சூடுறக் கொள்கை யூட்டுநர்
கிறுகி றுக்கவே மடிவி ரட்டிநற்
சுறுசு றுப்புடன் தொழில்மு டிப்பவர்            160

கற்ப னைக்குயர்  கம்ப னொத்தவர்
சொற்க ணைசுடத் தொடரு மர்ச்சுனர்
நடிப்பெ னுங்கலைத் திறம்ப டைத்தவர்
துடிப்பு டன்தொடர் படைந டத்துநர்
எதிர்ப்பெ னுங்கடல் குளித்துவெற்றியாம்        165

மதிப்பு மிக்குயர் முத்தெ டுப்பவர்
இழுக்கு மிக்கநாள் எதிர்ப்பி லாதநாள்
விழுப்புண் ணற்றநாள் விருப்ப மற்றநாள்
எனநி னைத்தெதிர் நீச்ச டிப்பவர்
பகைத்து நிற்பவர் பதறி நாடொறும்           170

திகைத்து நின்றிடச் சிரித்து வாழ்பவர்
செவிக சப்புறச் சொற்பொ றுப்பதால்
புவித மக்குறு புகழ்மி குப்பவர்
தாக்கு வார்களைத் தால சைப்பினால்
மூக்கு டைப்பதில் முதன்மை யானவர்          175

சொல்லி லேசுடும் பகைவர் சொற்களை
வெல்லுஞ் சொல்லிலே விஞ்சி நிற்பவர்
தேர்தல் வித்தையில் தேர்ந்த சூதரின்
மார்பு மண்ணுற வாகை பெற்றவர்
குழையெ றிந்துறும் கோழி யோப்பியும்        180

சோறு கொண்டுடை மடைய டைத்துமே
வீறு கொண்டநற் சோழ மண்டலத்
தவல ரும்புகழ் தங்குமா ரூர்திருக்
குவளை யின்புகழ் குவல யம்பெற
விஞ்சு மில்லறப் பயன்வி ளைந்ததால்          185

அஞ்சுக அன்னையின் அரும்பு தல்வராய்
முத்து வேலரின் மொய்ம்பு மைந்தராய்
இத்த மிழ்ப்புவி யெய்து காவலர்
படிக்கு மாசையிற் பன்ம டங்கெழும்
நடிக்கு மாசையால் நல்லி ளஞ்சிறார்          190

குழுவ மைத்தொரு கொட்டி லுக்குளே
நாட கம்பல நடத்தி யக்கலை
ஒத்தி கைத்திறன் மெத்த வுற்றவர்
அள்ளு கல்வி யாரூ ருயர்நிலைப்
பள்ளி யிற்பயில் கின்ற போதிலே              195

கற்ப னைக்கதை கவிதை கட்டுரை
பொற்பு றப்பல புனைந்து மாணவர்
நற்க லைத்திறன் நனிபு குத்தியொண்
கையெ ழுத்திதழ் முரசொ லிக்கவே
செய்து நாளுமெய்த் திறம்வ ளர்த்தவர்          200

செந்த மிழ்ப்பகை சீறி யந்தநாள்
இந்தி தாக்குமோர் எதிர்ப்ப றிக்கையை
அந்த வன்மொழி ஆசிரி யர்பெறத்
தந்து தண்டனை தான் டைந்தவர்
மாண வர்தமிழ் மன்றம் வைத்ததில்             205

வேண சொற்பொழி வாற்ற வல்லுநர்
தேனி சைக்கவி பாட வல்லுநர்
வானி லக்கிய மழைபொ ழிந்திடத்
தான ழைத்தருந் தமிழ்சு வைத்துநற்
போன கம்பொருள் போந்த வர்பெறத்          210

தம்பொ ருள்பல தத்தஞ் செய்துடற்
துன்ப மெண்ணிடா துழைத்து யர்ந்தவர்
கட்டு ரைத்திறன் காட்டிள மைப்பலி
மட்டி லாப்புகழ் வாய்க்க முதன்முதல்
அச்சி லேற்றிநம் அண்ணா வியப்பொடு         215

மெச்சு படிப்பிலே மேலும் உயரென
நச்சி நல்லுரை நனியு ரைத்திட
உச்ச முற்றுள மோங்க வளர்ந்தவர்
கொள்கை முழங்கும் குடியர சுத்தாள்
துள்ளு நடைத்தமிழ் வள்ள லிவர்கை           220

அள்ளி வழங்கும் அறிவுக் குவியல்
கொள்ள வதன்துணை யாசிரி யப்பணி
தந்தை பெரியார் தந்து புரக்கச்
சிந்தை மகிழ்ந்தவர் சீரிய பாசறை
முந்தி யிருந்தவர் மூதுரை கற்றவர்             225

தென்ன கந்திகழ் திராவிடர் கழகம்
மன்னு தன்கொடி வரைத லுன்னுநாள்
கருநி றத்திடைச் செந்நிறந்  தமது
குருதி யாலுறக் கொடிய மைத்ததன்
பொருளு ரைத்துளம் பொலிய நின்றவர்        230

சென்னை மாநக ராட்சித் தேர்தலில்
வெந்நி டப்பகை வெல்வ மென்னமுன்
சொன்ன சூளுரை பொய்த்தி டாமலே
கழக ஆட்சிக் கால்கோள் வகுத்துநம்
அண்ண னின்கணை யாழி பெற்றவர்           235

வாழை யோடடி வாழை யாய்ப்பணப்
பேழை மிக்கவர் கட்சி பின்னிட
ஏழை யர்க்குளே ஏழை யானவர்
கட்சி தேர்தலிற் கலந்து வென்றிட
நிதிதி ரட்டலில் நிகர்க டந்ததால்            240

அதிச யித்தநம் அண்ணன் வாக்கிலே
பதினொரு லட்சமாய்ப் பரிம ளித்தவர்
தடத டத்திடக் குரல்கொ டுத்திருட்
புகைமி குத்துறு ரயில்ம றித்திடைத்
தடம டுத்திடத் தலைப தித்தபோர்த்          245

தலைமை யாற்கல் லக்கு டிப்பெயர்
நிலைநி றுத்திய நெஞ்சு ரத்தினர்
தமிழ்த ழைத்திடத் தமிழர் வாழ்ந்திடத்
தனிமை வெஞ்சிறை தனிலு ழன்றவர்
பெற்ற தந்தையின் பிரிவு நாளிலும்            250

பொற்றாலி முன்துணைப் புனிதை நோயினால்
இற்ற நாளிலும் இல்லி லாமலே
நாடு நாடென நாடி மேடையே
வீடு போலுளம் மேவி நின்றவர்
அரசி யல்வழி அரிது போததில்               255

வரன்மு றைசெலா மதிப டைத்தவர்
வழுக்கி வீழுவார் வசையில் மூழ்குவார்
இழுக்க மெய்துவார் இழிவு நீங்கிடார்
வன்மை யுள்ளவர் வளர்ந்து செல்வரேல்
அடக்கு வார்சிலர் அமுக்குவார் சிலர்          260

மடக்கு வார்சிலர் வஞ்ச கத்திலே
வாட்டு வார்சிலர் வலிய வெம்பகை
மூட்டு வார்சிலர் முட்டு வார்சிலர்
ஓட்டு வார்சிலர் உடனிருந் தேகுழி
வெட்டு வார்சிலர் வென்ற வீரரே             265

தட்டு வார்புகழ் தரணி யாளுவார்
முட்டு முட்டற முட்ட றுப்பவர்
மடுத்த வாயெலாம் பகடு போன்றவர்
அடுத்த இன்னலோ அளவி லாதன
தடியர் புதுவையிற் தாக்க வீழ்ந்ததும்         270

கொடியர் சூழ்ச்சியாற் குடிசை புக்கதும்
பொடியர் பாலமும் பொடிய வைத்தவெவ்
வெடிபி ழைத்ததும் வெய்ய கோடரித்
தடியர் சூழ்ச்சியிற் தப்பி வந்ததும்
முடிய யானிவண் மொழிய வேண்டுமோ       275

இத்தகு தம்பியோ டெண்ணறு தம்பியர்
சொத்தென மதித்துத் தோற்றி யிந்நாட்டில்
கண்ணியங் கடமை கட்டுப் பாடுற
அண்ணா வளர்த்த அருமைக் கழகம்
அரசு கட்டில் அமர்ந்தது முதலாத்

தமிழக அரசின் சாதனை கேண்மோ
ஒருமொழி பாரதத் துள்ளர சோச்ச
வருமொழி தேவ நாகரி வரிவடி
வொன்றே மொழிக்கெலாம் உரிய வடிவாய்
நின்றே நிலைக்க நினைத்ததை மறைத்துப்     285

பொதுமொழி யென்ற போர்வைக் குள்ளே
கதுமென மத்தியக் காங்கிர சரசால்
செந்தமிழ் நாட்டில் திணிக்கப் பட்ட
இந்தியை அகற்றி இருமொழித் திட்டம்
தந்து தமிழ்ப்பகை தடுத்து நிறுத்தி            290

மதராஸ் எனும்பெயர் மறையச் செய்து
தமிழ்நா டெனும்பெயர் தந்து புரந்து
சுயமரி யாதைத் திருமணஞ் செல்லப்
பயன்மிகு சட்டம் படைத்துப் போற்றிப்
புஞ்சை போற்பல புலங்கட் குரிய             295

அடிப்படை வரியை அகற்றிக் காத்து
நகர்ப்புற நிலவரிச் சலுகை செய்து
வாங்கிய கடன்மேல் வட்டி யிரட்டித்
தேங்கி யோர்கடன் இல்லா தாக்கித்
தகுதி யேக்கர் முப்ப· தென்பதைப்            300

பகுதி யாக்கிச் சட்டஞ் செய்தே
உச்ச வரம்பின் உச்சங் குறைத்து
விதிவிலக் குற்ற விளைநி லங்களின்
விதிவிலக் கொழித்து மிகைநில மாக்கி
ஏழையர்க் கருளி எதிரியும் போற்ற            305

அரசு புரிந்தார் அண்ணாத் துரைமுன்
பானாட் கங்குல் படரிருள் சீக்கும்
மேனாள் விளக்காம் விண்மீன் என்ன
மின்குமிழ் விளக்கின் துளக்கந் தந்த
முன்னை யாங்கில முடிபுனை யரசும்           310

பின்னை யாண்ட காங்கிர சாட்சியும்
சென்னை மாநிலக் கிராமத் தொகையில்
மூன்றிலொன் றுக்கே முப்ப· தாண்டின்
மேன்மூ வாண்டில் மின்விளக் களித்தன
உதய சூரியன் சின்ன முயர்த்தி               315

முதன்மை யுற்றவர் ஆட்சி முகிழ்த்த
இருமூ வாண்டில் எஞ்சிய பகுதி
இருளற மின்விளக் கெய்தி யொளிர்ந்தது
தாழ்த்தப் பட்டோர் குடியிருப் புகளில்
ஆறிலொன் றுக்கே அவையொளி யீந்தன       320

கூறி லெஞ்சிய குடியிருப் பெல்லாம்
உதய சூரியன் ஆட்சியில் உற்றன
இதய மிருப்போர் இதையார் மறுப்பார்
முன்னவ ரிதயம் தன்னகங் கொண்டு
தென்னகங் காக்குங் செந்தமிழ் வல்லார்        325  

தம்துணை யமைச்சர் தருந்துணை வலியும்
சட்ட மன்றந் தருந்துணை வலியும்
கொண்டுசெய் நன்மை கூறுவன் மேலும்
அழுகி நாறி அருவருப் பூட்டும்
தொழுநோ யாலே துன்ப மிக்குப்              330

பகலும் இரவும் பசியால் வாடி
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
பனியுங் குளிரும் படர்தர நொந்து
திக்கற் றேங்கித் தெருவின் ஓரந்
துக்கஞ் சாற்றித் தொழுதழு திரந்தோர்        335

நிச்ச நிரப்பு நீக்க நினைந்து
பிச்சைக் காரர் மறுவாழ் வில்லம்
பற்பல அமைத்துப் பசியும் பிணியும்
தொற்றிய துயரந் தூர விலக்கி
ஆயிர மாயிரம் பிச்சைக் காரர்              340

போயிருந் துய்யப் புக்கில் தந்தவர்
காலத் திரையாற் கண்ணொளி குறைந்தோர்
ஞாலத் துறுதுயர் நன்கக முணர்ந்து
தண்ணளி கொண்டுதம் பிறந்த நாளில்
கண்ணொளி வழங்கத் கணித்தவ் வாறு        345

வாடி வந்தவர் வாட்டந் தீர்த்துக்
கூடிய ஒளியைக் குளிர்கண் சேர்த்தும்
ஆடி யீந்தவர் அணியச் செய்தும்
பன்னூ றாயிரம் மக்கள் பார்வை
முன்போ லெய்தும் முறைமை செய்து          350

கையிழந் தவரின் கையறு நிலையும்
பொய்க்கால் கொண்டோர் போக்கறு நிலையும்
மெய்க்கூன் வீழ்ந்தவர் வெறுத்தயர் நிலையும்
பைப்பய மாறிப் பையுள் தீரத்
திடமுடை யுறுப்பாற் செய்தொழில் பயின்றே     355

உடற்கண் ஊன முற்றோ ரெல்லாம்
மறுவாழ் வெய்தத் திட்டம் வகுத்தவர்
உறுபசி களைய உற்றா ரைத்தொழும்
சிறுமை போக்கிச் சிறக்கச் செய்து
வண்டி நுகந்தன் மார்புறத் தழுவி              360

மனிதனை யமர்த்தி மனித னிழுப்பதைக்
கண்டு நைந்துளக் கருணை யால்மிதி
வண்டி வாகனம் வழங்கி மற்றவன்
மானமுந் தொழிலும் காத்து வளர்த்து
மக்கள் குறையை மனுவிற் கண்டு           365

தக்கோர் நீதி தாமுடன் வழங்க
மக்களைத் தேடி வரமனு நீதித்
திட்டந் தீட்டித் தீர்ப்புக் கலையும்
கட்டந் தீர்த்துக் கனவிலும் கொல்லும்
ஏழ்மை வெல்ல இல்லம் விற்றும்            370

வாழ்தற் கேற்ற மனையில் லாதும்
அண்டும் ஊரின் அண்டைத் தாகப்
பண்டும் பண்டும் பாழ்நிலங் கண்டே
ஒண்டுங் குடிசை ஒண்டிக் கட்டிப்
புறம்போக் கிடமே புக்கி லாக்கி            375

அஞ்சிக் கிடக்கும் அவலம் நீங்கிக்
கட்டிய மனையும் கட்டட நிலமும்
பட்டா மூலம் பலலட் சம்பேர்
சொந்தங் கொள்ளத் தந்து புரந்து
கூட கோபுரங் கொண்ட கோநகர்         380

மாட மாளிகை மருங்கு சாலையின்
ஓர மெங்கணும் உரிமை யில்லாக்
கூனி நுழையும் குடிசையில் வாழும்
ஏழை மக்களின் இன்னல் போக்கக்
கடிமனை பற்பல் லாயிரங் கட்டிக்          385

குடியமர் வித்துக் குறைபா டகற்றி
எத்திசை சூரியன் ஏகினு முள்ளே
அத்திசைக் கெதிரே அரங்கிற் திரைப்பட
நிழற்கதிர் செல்லும் நீள்வழி போலப்
பழமை காட்டிப் பாழ்படு கூரையின்         390

துளைகட் கேற்பத் தொடர்கதிர் படியும்
ஏழ்மைக் குடிலில் ஏங்கித் தவித்த
தாழ்த்தப் பட்டோர் தம்நிலை பொறாது
வாழ்தற் கேற்ற வளமனை இலட்சம்
கட்டித் தந்தவர் கவலை போக்கத்          395

திட்டந் தீட்டித் தெருவும் ஊரும்
கட்டித் தந்தவர் கவலை நீக்கி
ஏரியுங் கிணறும் யாறுந் தேர்ந்து
நீரினைப் பெருக்கச் சீர்பெறத் திருத்தி
வடிநீ ராகிய கடிநீர் வழங்கும்             400

குடிநீர் வாரியம் கொள்கையின் நிறுவி
இன்னல் நீங்கி எங்கும் யாரும்
நன்னீர் பருக நாட்டில் நகரில்
மேனிலைத் தொட்டி மிகவுண் டாக்கித்
தானினி துழைக்கும் தண்ணளி யாளர்        405

மத்திய அரசும் மாநில அரசும்
சத்துண வளிக்குந் திட்டம் பேணித்
தாயும் சேயும் சத்துண வுண்டு
நோயும் நொடியும் சோர்வுங் கடிந்து
பொலிவும் வலிவும் பொங்கச் செய்துதம்      410

ஓய்வின் முன்னே அரசின் ஊழியர்
மாய்வ ராயின் மற்றவர் குடும்பப்
படர்கெட ரூபா பத்தா யிரந்தரும்
குடும்ப நலநிதித் திட்டங் கொணர்ந்தே
அருந்துய ரகற்ற அறுபதா யிரமாய்          415

படுந்துயர் களையப் பல்கி லட்சமாய்
வரவர உயர வழிவகை பண்ணி
இரவும் பகலும் இடைவிடா தேறிச்
செலவுப் புள்ளி செல்லற் கேற்பப்
பலமுறை உயர்த்திப் பஞ்சப் படியை         420

அடிப்படை ஊதிய மாக்கியும் அதன்மேல்
படிப்படி யாகப் பஞ்சப் படியைக்
கூட்டியும் விகித முறையிற் கூட்டியும்
மத்திய அரசு வழங்கு வதைப்போல்
ஒத்த ஊதியம் உயர்த்திக் கொடுத்தும்       425

வாட்டந் தீர்த்தர சூழியர் தரத்தைக்
கூட்டியும் பெருமை கூட்டியும் புரந்து
பரம்பரை யாகப் பயந்தரற் கிருந்த
அரசிதழ்ப் பதிவுறா ஊழியர் பற்றிய
மறைபொருட் குறிப்பு முறையை மாய்த்து     430

வேலை தேடித் தேடி வெறுத்துக்
கற்றோர் கற்ற கல்வியை நோகப்
பெற்றோர் கற்ற பிள்ளையை நோகப்
பட்டப் படிப்பும் பசிநோய் தீர்த்தற்
கொட்டா தாகி உழலக் கண்டு            435

வேலை வாய்ப்பை மிகவுண் டாக்கும்
வேலை வாய்ப்புத் திட்டத் தாலும்
உளைவைத் தீர்க்க ஓரள வுதவும்
இளைஞர் அணியின் ஏற்பாட் டாலும்
பல்வகைத் தொழிலும் பாங்குறப் பயின்ற      440

பல்லா யிரம்பேர் பணிபெற் றுய்ய
ஒல்லும் வகையில் எல்லாம் உதவி,
ஒலியும் பொருளும் உவமை தானற
மலியக் கண்டதன் வளர்ச்சி பொறாது
கடல்கொண் டொளித்த காவிரி பூம்புகார்    445

கடல்கொண் டொளிக்கும் கன்னித் தமிழ்நூல்
ஓவிய உலகின் உட்கிடந் தொளிரக்
கண்டதன் வடிவங் காட்டும் பூம்புகார்
மண்டபம் அமைத்து மாநகர்ப் பிறந்த
கண்ணகி கதையைக் கற்களிற் செதுக்கி     450

நற்கலைக் கூடம் நசையுடன் நாட்டி
அலைகடல் நடுவண் பலகலஞ் செலுத்தி
மலையெனப் பொருள்கள் வரவுஞ் செலவும்
தமிழக வாணிகந் தழைக்கச் செய்து
நிமிர்புகழ் நிறுவிய மன்னர் நிகரப்          455

பூம்புகார்த் துறைமுகம் பொலியச் செய்து
மேம்படு பெருமை அண்ணா பெயரும்
ஆரிய ரல்லார் ஆக்கம் எய்தப்
பேரியல் வகுத்த பெரியார் பெயரும்
தாங்கிய கப்பல் தமிழர் வாணிகம்         460

ஓங்கிட மீண்டும் ஓடச் செய்து
வணிகக் கும்பல் வரிபெற் றாளத்
துணியக் கண்டு தோள்கள் விம்மி
மீசை துடித்து வெள்ளைய ருள்ளத்
தாசை கெடுக்கத் தாக்கிய அரிமா       465

ஓட்டார் முன்முதல் உரிமை முழக்கிய
கட்டப் பொம்மன் கட்டிய கோட்டையைப்
போர்முனை யதிரப் பொல்லாப் பகைவர்
ஆர்த்தெழு யந்திரம் அழித்ததை நினைத்துப்
பாஞ்சைப் பதியிலப் பழைய இடத்தில்      470

வாஞ்சை மிக்கவ் வண்ணங் காட்டும்
கோட்டை கட்டிக் கொற்றவன் சிலையை
நாட்டிப் பெருமை நாட்டி யவர்பின்
வழிவந் தோர்க்கும் வாழ்வதற் குதவி,
என்னா டென்றும் என்மொழி என்றும்      475

தன்மத மென்றும் தன்னின மென்றும்
பற்றுவழிப் படரா நற்றமிழ்ப் புலவர்
உலக மறைநூல் ஓதிய சான்றோர்
வள்ளுவர் கோட்டம் சென்னையில் நிறுவி
உள்ளங் கவரும் ஒண்கலை நுணுக்கம்     480

பல்லவர் பயிலப் பாங்குற அமைத்து,
திருமுறைச் செல்வந் தேடித் தொகுத்து
வருமுறை வகுத்த இராஐ ராஐன்
அரிய கோபுரத் தடிநிழல் படராப்
பெரிய கோவில் – பிரக தீஸ்வரர்         485

ஆலயங் – கட்டிய அருமையை வியந்தவர்
கோலமார் சிலையை கோவில்முன் வைத்து,
கூலிக் குறைவால் குடரும் வற்றி
வேலை செய்வோர் வெம்பிச் சோர
ஆலைக் குரியோர் ஆக்கம் முற்றும்       490

மூடி மறைத்தே மூடிய ஆலை
நாடிப் பலவும் நடத்தத் துணிந்து
வாடிய வினைஞர் வாட்டம் போக்கி
அரசின் உடைமை ஆக்கி நடத்திப்
பேருந் தூருந் தடங்கொண் டோட்டி    495

ஆருஞ் செல்வம் அனைத்துந் தனியார்
வாரும் போக்கை மாற்றிச் செல்வம்
சேரும் வழி¢யை அரசுக் காக்கி
ஊருந் தடமும் ஊர்தியும் மென்மேல்
அரசின் உடைமை ஆக்கிப் பெருக்கி     500

நொந்தவன் குறையை ஆண்டவன் முன்னர்ச்
சொந்தநன் மொழியாற் சொல்ல விடாது
வந்தவர் தடுத்து மற்றவர் மொழிதான்
மந்திரஞ் சொல்லும் மாட்சிய தென்று
சொந்த மாக்கிய சூழ்ச்சி தொலைய      505

அந்த மற்றோன் ஆல யங்களில்
செந்தமி ழால்வழி பாடு செய்யவும்
தந்துநந் தமிழின் தாழ்வு களைந்து
பரம்பரைத் தொழிலாய்ப் பார்ப்பனர் கொண்ட
நிரந்தர உரிமை நீக்கி முன்னாளில்       510

கோவிலின் உட்புகக் குலத்தடை விதித்துப்
பாவிகள் தடுக்கப் பழிபட் டோர்முதல்
அரிய பூசனை யாற்று விப்பதற்
குரிய தேர்வில் வெற்றி யுற்றவர்
தெய்வத் திருமா மேனி தீண்டி           515

மெய்ம்மறை யோதி வேண்டிய பூசனை
செய்வதற் காணை செம்மையிற் செய்துநம்
அடிமை வாழ்வின் அவலம் போக்க
விடுதலை வேட்கை மீதூர்ந் தாளும்
வெள்ளையர் கலங்க வீறு கொண்டுயர்      520

அறப்போர் மேற்கொண் லஞ்சா தோச்சும்
மறப்படை முன்னர் மார்பு காட்டிக்
காவலர் உதையும் கைத்தடி யடியும்
குண்டடி யோடு குத்தும் பட்டு
மேவிய விழுப்புண் வீரர்க ளாகி           525

வெஞ்சிறைக் கிடந்து விடுதலை யடைந்த
செந்தமிழ் நாட்டுத் தியாகிகள் மகிழ
மானிய முயர்த்தி வாங்குநர் தொகையும்
மேனிலைக் குயர்த்தி மேன்மை பேணித்
தில்லை யாடியில் வள்ளியம் மைநகர்       530

தென்னாப் ரிக்கா தியாகிகள் நினைவு
மண்டப மெழுப்பி மாண்புற வைத்து
மண்டிருட் சிறையில் வாடிய நாட்டுத்
தொண்டர்தங் குடிக்கு மாதந் தோறும்
உதவித் தொகைதந் துயர்தமிழ் புரக்க      535

இந்தி யெதிர்ப்புப் போரி லிறந்தோர்
செந்தமிழ் மணக்கத் தீக்குளித் திறந்தோர்
தந்தையர் முதலாத் தவிப்போர் தமக்கும்
உதவித் தொகைதந் துதவி யுளத்தால்
இறைவழி பாட்டை ஏற்பத னாலும்         540

உறைவிடங் கலைக்கென் றோர்வத னாலும்
ஆலயத் திருப்பணி ஆயிரஞ் செய்தவ்
வாலயப் பணிசெயும் அறங்கா வலர்க்குள்
தாழ்த்தப் பட்ட குடிமகன் றானும்
அங்கம் வகிக்க அன்போ டமர்த்தி          545

எங்கும்  எதிலும் எளியோர் உயரப்
பற்பல நலத்துறை பான்மையி னமைத்துப்
பிற்பட் டோரின் பட்டியல் பெருக்கித்
தாழ்த்தப் பட்டோர் பிற்பட் டோர்கள்
வாழ்க்கை மேன்மேல் வளம்பெற் றோங்க     550

வேலை வாய்ப்பு மேனிலைக் கல்வி
விகிதச் சலுகை மேலுங் கூட்டி
அகிலம் போற்ற நிதிநிலை யறிக்கை
பகிருந் தொகையிற் பன்மடங் குயர்த்தி
இருபிரி வினரும் ஏற்றங் கொள்ள           555

பெருகும் ஏழ்மை பின்னிட் டோட
ஏழை எளிய நடுத்தரக் குடும்பப்
பீழை போக்கப் பெரிதும் உழைத்துப்
பள்ளியும் பள்ளியிற் தரமும் உயர
அள்ளி வழங்கும் நிதியள வுயர்த்தி            560

மேனிலைக் கல்வி விளங்குகல் லூரி
பானிலைக் கேற்பப் பன்மடங் குயர்த்தி
வேலையி லிருப்போர் மேலுங் கற்க
மாலை வகுப்பும் வயங்க வைத்துக்
கல்விச் சலுகை கனிவோ டுயர்திப்            565

பல்லாற் றானும் பயில்வோர்க் கருளி
பாரி முனையெனக் கிள்ளி யூரெனச்
சீரிய தமிழ்ப்பேர் திகழுற வைத்து,
நிலைபெறு புகழை நிறுவிய ஆன்றோர்
சிலைபல வைத்துத் தேசியத் தலைவர்        570

மூதறி வாளர் இராசா ஜிக்குக்
காத லால்நினை வாலயங் கட்டி,
ஏழ்மையிற் கல்வி இளமையிற் கல்லாப்
பாழ்நிலை போக்கப் பள்ளிக் கூடம்
தமிழக மெங்குங் கட்டித் தந்தும்           575

மதிய உணவு பள்ளியில் வழங்கும்
புதிய திட்டம் புகுத்திப் புரந்தும்
நலம்பல செய்தும் நல்லாட்சி புரிந்த
காம ராஜர்கண் கதவுகள் மூட
தாமம் வைத்துத் தகுமரி யாதை            580

பூமகள் வியக்கப் புரிந்து வான்புகழ்
அவர்நினை வாலயம் அழகுற எழுப்பி,
அடுக்கு மொழிக்கோர் அண்ணாத் துரையென
எடுக்கு மொழியால் இதயங் கவர்ந்தவர்
படுத்துத் துயிலப் பாங்குறு சதுக்கம்         585

வங்கக் கடலடி வருட நிறுவி,
கயிறுகை நழுவக் கள்மரந் தவறி
உயிரழந் தவரின் – ஊனமுற் – றவரின்
கதறுங் குடும்பக் கண்ணீர் துடைக்க
உதவித் தொகைதந் துதவி யளித்து,       590

நிலைதடு மாறி நெஞ்சம் வருந்தும்
கலைஞர் பற்பலர் வறுமை கண்டு
வேதனை நீங்கி மேலும் உயர
மாதந் தோறுமைந் நூறு வழங்கி,
ஈன்று புரக்கும் அன்னையை இழந்து       595

சான்றோ ராக்குந் தந்தையை இழந்து
பெற்றோர்க் குதவும் பேற்றை யிழந்து
பற்று வளர்க்கும் சுற்றம் பாரா
திங்குள மேங்கும் ஏழைச் சிறுவர்
தங்கிக் கற்றுத் தரம்பெற் றுயரக்          600

கருணை இல்லம் ஐம்பதிற் றிரண்டை
ஐம்பதிற் றிரண்டாம் அகவையி லமைத்துக்
கைம்பெண் டாகிக் காப்பவ ரில்லாப்
பெண்டிரை உதவித் தொகையாற் பேணி,
மண்டிய மடமை வாய்புதைத் தொடுங்க     605

விதவையை மணந்த வீரரைப் போற்றிப்
பத்தா யிரந்தரும் பத்திர மாக
ஐயா யிரத்தை அவர்கட் கீந்து,
தையற் பொறியுந் தக்கவர்க் கீந்து
கையா றகற்றிக் காத்துக் கடலிடக்        610

குப்பத் துள்ளே குடியிருந் தேங்கிய
மீனவர் மாடி வீடுக ளடையக்
கட்டித் தந்தவர் கவலை போக்கிப்
படுமீன் நாடிப் பாய்மரம் தப்பிக்
கடலுள் மாய்ந்தோர் கவலுங் குடிக்கோர்     615

ஆயிரம் ரூபா அருளிப் பின்னர்த்
தொகையை உயர்த்தித் துன்ப மகற்றி
அரசின் வருவாய் அதிகரிப் பெண்ணி
மதுக்கடை திறந்ததால் மனம்புண் பட்டு
மதுவிலக் காக்கி வருவாய் நல்கும்          620

பரிசுச் சீட்டும் பணப்பே யாட்டப்
பரிமேற் கட்டும் பந்தயச் சூதும்
தழையா வண்ணந் தடுத்தத னாலே
பிழைபா டோம்பாப் பெருமை தாங்கி,
ஒருநூ றாண்டின் உட்பட இதுபோல்        625

பருவந் தப்பப் பார்த்தறி யோமென
மழைவளங் கரந்து வறன்மீக் கூர
வறட்சி வெல்லும் புரட்சிப் பணிகள்
சிறக்கச் செய்து தீப்பசி யகற்றி
மக்கள் வாழ மலிவு விலையில்            630

முக்கியப் பொருள்கள் முறையிற் தந்து
வறுமை போக்கி வாட்டம் நீக்கி
உண்டி கொடுக்கும் உழுவோர் துயரைக்
கண்டு துடைக்கக் கடன்தந் துதவி,
மையேர் தடங்கண் மாதருஞ் சிறாரும்     635

நெய்யா நின்றும் நிலையுய ராது
நையா நிற்கும் நெய்வோர் குடும்பப்
பையுள் தீரப் பலவா றுதவி,
நீரணை கட்டி நிலவளம் பெருக்கி,
ஊரகச் சாலை உண்மையில் அமைத்துப்   640

பாலம் பலவும் பாங்குற நிறுவிச்
சித்த மருத்துவஞ் சீர்பெற உதவிச்
சிறுதொழில் பெருக நிதிதந் துதவிக்
குடிசைத் தொழிற்கும் கொள்கையி னுதவி
உழவுந் தொழிலும் உயரும் வகையில்     645

அழகிய தமிழ்நா டாளும் முதல்வர்
வள்ளியை மானின் வயிற்றகப் படுத்திக்
கொள்ளினும் கொள்வர் குறக்குலத் துதித்த
செல்வியென் றுரையார் செவ்வேள் அவளைப்
புல்லியும் புல்லர் புல்லாக் கதைகள்         650

சொல்லும் நாட்டிற் துணிந்துதன் மகற்குக்
கலப்புத் திருமணம் கனிவுடன் முடித்துப்
பெரிய மனிதப் பிறப்பி லெய்தும்
அரிய வற்ருள் அரிய கல்வி
உரிய மகளும் ஓத விடாது               655

பெற்றவர் கூடப் பிற்ப டுத்திய
காலம் மாறக் கருத்தும் மாறப்
பெண்ணினம் கற்கப் பெரிதும் உழைத்த
கண்ணிய வான்கள் கருணை மழையால்
இன்றுநம் நாட்டில் எங்கும் பெண்கள்       660

வென்றுநற் கல்வியில் விஞ்சுதல் மகிழ்ந்து
பிறப்பா லிழிந்தவர் பிற்பட் டோரென
அறப்பா லிழிந்தவர் அவலப் படுத்தத்
தாழ்நிலை யுற்றுத் தவித்தோர் பெண்களும்
வாழ்நிலை மென்மேல் வளர்க்கும் வகையில்   665

பல்கலைக் கழகப் பட்டம் பெறும்வரை
கல்விக் கட்டணம் கட்டல் தவிர்த்து,
முட்டி மோதியும் முயன்றுங் கற்றதோ
எட்டே ஆண்டுகள் என்ற போதிலும்
கட்டி வாழ்வுறக் கன்னி யர்க்கெனத்         670

திரும ணக்கடன் திட்டங் கொணர்ந்து
பெருமண வாழ்வில் பிறங்கச் செய்து,
தந்தை தந்தையர் சார்ந்த சொத்தெலாம்
சொந்தம் ஆணுக் கென்ற சூட்சமம்
அந்த மாக்கி ஆணுக் கிணையாய்ப்         675

பெண்ணும் உரிமை பெறும்பே ரளிக்கும்
மண்ணகம் வியக்கும் சட்டம் வகுத்து,
வாழும் மன்னுயிர் வாழ வைக்கிற
மேழி யாளரின் கேணி மின்தொகை
வாரி யத்தினர் வாங்கா வகையில்          680

விதிவிலக் களித்து வேளாண் பொருள்கள்
அதிகரிப் பதற்கோர் ஆதர வளித்துச்
சென்னை நகரத் தெருக்க ளைத்தினம்
துப்புர வாக்கும் தொழிலா ளர்க்குத்
தொடுதோல் கூடத் துயரறத் தந்து        685

வடுவந் தடையா மாட்சி மிகுந்து
நெடுநாள் ஆளும் நிகரி லாதவர்
வன்மை காண்டொறும் வளருங் காழ்ப்பால்
தன்ன லம்மிகு வேட தாரிகள்
வாய்மை மாற்றியும் பொய்மை யேற்றியும்    690

வாய்கள் நாறவும் செவிகைப் பேறவும்
ஏசி மாசவர்க் கேற்றி வந்தனர்
தினையள வேனும் செய்த நன்மை
பனையள வாகும் பயன்தெரி வார்க்கெனச்
சொன்னது பொய்யா மொழியேல் தூயவர்   695

இன்னவை இமயம் எனக்கொள் ளாரோ
நற்கு ணத்தவர் நனிவ ருந்திட
மக்க ளாட்சியின் மாண்பு கேடுறப்
பக்கு வப்படா மனம்ப டைத்தவர்
புக்கி லாகவே புகுந்து விட்டதால்          700

அரசி யல்நெறி அழுக்க டைந்ததே
காலை போற்றுவார் கட்சி மாறியே
மாலை தூற்றுவார் மக்கள் கூட்டமோ
வாய்பி ளந்தவர் வார்த்தை கேட்குமே
தூய்மை யற்றவர் தொட்டு நோய்தரும்       705

வேசி போலவே பேசு வார்புகழ்
காசி னாசையாற் கட்சி யில்நுழைந்
தேசி டப்பழி இழிவு சேர்த்தனர்
ஆட்சி யாளரின் அரிய சாதனை
மாட்சி யொப்பிடா மனக்க சப்பினால்        710

செய்த நன்மையைத் தீமை யாகவே
பெய்து பேசுவார் பெருக நேர்ந்தது
நறும லர்செடி நனிகொ டுக்கவும்
குறுமுள் உண்டெனக் கூறு வார்நிகர்
திறுகு சிந்தையர் சேர்ந்தெ திர்த்தனர்        715

எள்ள ருஞ்சுவைத் தேனி ருக்கவும்
கள்ளுண் மாந்தரிற் கைப்ப தேடியே
சொல்லி நாடொறும் தூற்றி வந்தனர்
கொன்ற தன்னஇன் னாகொ டுப்பினும்
ஒன்று முன்னவர் செய்த நன்மையில்          720

உள்ள மாயுமென் றுரைத்த வாய்மையை
எள்ளி யெண்ணறு நன்மை செய்தவர்
ஒன்று தீயதென் றுணர்ந்தி டாமலே
செய்ய நேரினும் தீமை சாற்றுவார்
வைத லேதொழி லாக வாழ்ந்தனர்           725

கற்க கற்பவை கற்ற கல்வியில்
நிற்க என்றவர் நெறிம றந்ததால்
மிக்க கேடுகள் விளம்ப லாகுமோ
சேறு பூசினார் செய்ய மேனியில்
நீறு பூசினார் நேரி லுற்றதும்                730

கறைப டிந்தவர் என்று காட்டல்போல்
குறைகள் கூறுவோர் கூட்டங் கூடியே
வசையு ரைப்பதே வழக்க மாயினோர்
திசைதி ருப்பினார் சிறிதும் சிந்தியா
துரைகள் நம்பிடும் ஊரவர் நாட்டவர்         735

சுயந லத்தவர் சொந்த மக்களே
உயர வைப்பவர் உண்மை யானநேர்
கணக்கு ரைத்திலர் என்று காரணஞ்
சொல்ல வந்தவர் சொல்லை நம்பியே
திரைப்ப டத்திலே கண்ட வாறிவர்           740

உரைத்த ரம்மிகு உத்த மரென
நிறைத்த ஆசையால் வாக்க ளித்தனர்
கறைப்ப டாதவர் என்று போற்றினார்
ஆண்டு பற்பல அவரும் ஆண்டனர்
பூண்ட ஆணவம் பொங்கு பெண்தொடர்ந்      745

தாண்டு கொண்டதை அவனி கண்டது
மக்கள் செல்வமோ மந்திரி யர்க்கெனத்
தொக்கு வைத்தனர் சுயநல லத்தினர்
அடாவ டித்தனம் அதிக மானதால்           
படாத பட்டனர் மக்கள் நாடொறும்           750

கொக்கை யொத்தவர் குத்து தற்கொரு
தக்க நாள்வரத் தாக்கி வீழ்த்தினர்
மிக்க வல்லவர் மீண்டும் வென்றிடப்
பக்க நற்பலம் பாய்ந்து வந்தது
நன்னெ டும்புகழ் நாளு மோங்கவே           755

முன்னம் மும்முறை ஆண்ட முதிர்ச்சியால்
இன்னம் வல்லமை எதிலும் ஓங்கிட
நன்மை செய்துநம் நாட்டை யாள்கிறார்
தம்பின் பதவி தாங்கிய அன்பர்
அந்நாள் ஆந்திர முதல்வ ரோடு             760

செய்தஓப் பந்தஞ் சீரிய பயன்தர
இந்நாள் ஆந்திர முதல்வர் இசைவொடு
கிருஷ்ணா நதிநீர் கிளைவாய்க் கால்வழி
பூண்டி நீர்நிலை புகுத வைத்துக்
குடிநீர் வழங்கும் கொள்கை பேணித்         765

தலைநகர் மக்கள் தாகந் தணித்துத்
தாய்தன் பாலைத் தருதல் விட்டுச்
சேய்வாய்க் குள்ளே திணறத் திணறப்
புட்டிப் பாலைப் புகட்டல் போல
கட்டித் தமிழிற் கற்பிக் காமல்              770

ஆங்கில வழியில் அனைத்துங் கற்றால்
யாங்கும் வேலை யார்க்கும் வேலை
ஓங்கும் வாழ்வென் றூரூர் தோறும்
சொத்துச் சேர்க்கத் தொடங்கும் பள்ளி
மெத்தப் பெருகும் விளைவா ராய்ந்த         775

கல்விக் குழுவின் கருத்திற் கேற்பத்
தொடங்கக் கல்வி சொந்த மொழியில்
நடக்க ஆணை நாடி வகுத்துத்
துன்னும் முந்நீர் நடுவண் தோன்றும்
பொன்னங் கதிரோன் பொலிவைக் கண்டு     780

தென்னங் குமரித் தெய்வம் தொழுது
மண்நன் மக்கள் வந்து வணங்கும்
விண்ணும் போற்றும் விவேகா நந்தர்
தண்ணந் திரைசூழ் தனிக்குன் றருகே
நன்னூல் கற்று ஞாலம் உய்ய               785

முன்னோர் யாத்த முதனூல் எதுவும்
ஒப்பும் உயர்வும் செப்புதற் கரிதாய்
முப்பால் செந்தமிழ் மொழியில் யாத்த
வள்ளுவர் தமக்கு மற்றொரு குன்றில்
உள்ளதி கார எண்ணடி உயரக்              790

கண்கவர் வடிவக் கற்சிலை படைத்து
மண்ணகத் தெவரும் செய்யா மாட்சி
இருபது நூறாம் இறுதி யாண்டில்
நிறுவிய தாலே நிகரற் றுயர்ந்து,
சாதிநோ யகலச் சந்ததி மகிழச்             795

சரிசமந் தழைக்கத் தங்கி வாழப்
புரிசமத் துவபுரப் புகலிடம் வழங்கி,
உழவர் தாம்விளை உறுபொருள் விற்க
உழவர் சந்தை உயர்நகர் தொடங்கி,
மக்கள் நோய்கள் வருமுன் காக்கத்          800

தக்க திட்டந் தந்து புரந்து,
கால்நடை பேணும் காப்புத் திட்டம்
சால்புற நடக்கத் தகுவகை செய்து,
தேவை தேர்ந்து நமக்கு நாமே
சேவை செய்யும் திட்டம் நிறுவி,            805

அண்ணா பெயரில் அருமறு மலர்ச்சி
நண்ணுந் திட்டம் நாட்டிற் கீந்து,
சேறு படிந்த சிறுமை நீக்கித்
தூர்வா ரும்பணி தொடர்ந்து புரிந்து
நீர்நிறை குளங்கள் நீர்மை காத்துச்,         810

சென்னை மதுரை திண்டுக் கல்முதல்
பன்னகர் திகழ்மேம் பாலங் கட்டி
மேலும் கீழும் விபத்தைக் குறைத்துப்,
பள்ளி மாணவர் பன்னிரண் டாம்வகுப்
பெல்லை முடிய இலவச மாக              815

ஊர்தி ஏறி உரிய பள்ளி
செல்லச் சலுகை செய்து, பணியில்
ஓய்வு பெற்ற அரசின் ஊழியர்
மாய்ந்த பின்னும் வரவு குடியுறத்
திங்கள் தோறும் இருபது செலுத்தும்        820

அங்கத் தினரெனில் ஐந்து பின்தொடர்
இருப தாயிரம் அரசு நல்குமென்
றருளி யாகா றளவு குறைந்தவர்
இறக்கும் நாளினும் எம்மை நம்பியோர்
சிறக்க நல்கினார் சிறந்து வாழ்கென        825

வாழ்த்தி வாழ்த்தியே மகிழ என்றுமே
என்க டன்பணி செய்வ தென்றுமுன்
சொன்ன தூயவர் சொல்ம ணக்கநம்
பொன்னொ ளிர்தமிழ் நாடு புரப்பதால்
எண்ண றும்பலர் இதயம் மேவினார்         830

சின்ன வோரிளம் பருவ நாள்முதல்
என்ம னத்திலும் இருத்த லாலிதை
உன்ற னக்குயான் உவந்து ரைக்கிறேன்
இன்ன மாயிரஞ் சொல்ல வுள்ளன
என்ன சொல்லியென் எண்ணி நோகிறேன்    835

முன்ன வர்நிறை மொழிந்து வாழ்ந்தவர்
பின்ன வர்குறை பேசல் கேட்கிறேன்
நன்மை தீமையில் ஒன்று கொண்டவர்
இன்மை யானிவண் இயம்ப வேண்டுமோ
குணமும் குற்றமும் மிகையும் நாடிநன்       840
 
கணம றிந்துநீ கடுகி யேகுதி
போற்றி னாலுமென் தூற்றி னாலுமென்
பொதுப்ப ணிக்கெனப் புகுது வார்க்கிவை
புதுமை யன்றெனப் பொறுமை காப்பவர்
பேரூர் சிற்றூர் பெருநக ரெங்கும்         845

ஏரூர் மேடை யேறி முழங்கும்
சொற்றி றம்மிகச் சொக்க வைக்கவும்
சிறுபெ ருங்கதை தேர்ந்த கட்டுரை
நறுந்த மிழ்ப்புதுக் கவிதை நாடகம்
கற்ற போதெலாம் களிப்ப ளிக்கவும்       850

திரைப்ப டக்கதை சிந்தை யள்ளவும்
உரைத்தி ரம்மிக ஊக்கு விக்கவும்
கண்டுங் கேட்டுங் கற்றும் மகிழ்ந்து
கொண்ட ஆர்வங் குறையா தேகு
அருமை அருமை விடுதலை யடைந்தும்   855

ஒருமை ஒருமையென் றுரிமை பற்பல
பெருகி மத்தியிற் குவிய மாநிலம்
அரசு காவடி தூக்கி யாள்வதோ
வரவு மத்தியிற் குவிய மாநிலம்
இரந்து கொள்வதோ எனமு ழங்கிநம்    860

உரிமை கொள்ளவே குரல்கொ டுத்தவர்
இந்தி யாவிலே எதிரி மண்பெறச்
சிந்தி யாமலே வலிமை சேர்க்கவும்
ஒன்று பட்டுநா டுயர்வு கொள்ளவும்
உறவு மேம்படக் கைகொ டுத்தவர்      865

நலிவி லாதுநம் நாடு வாழவும்
விடுத லைநலம் மிகவும் மத்தியக்
கெடுபி டிக்குளே கிடந்து மாநிலம்
எடுபிடித் தொழில் செய்தல் நீங்கவும்
உரிமை வாழவும் உறவு நீளவும்        870

பிரிவி னைக்குணம் பெருகி டாவணம்
ஒருமை யோங்கவும் ஒன்று தான்வழி
மாநி லத்தன் னாட்சி மத்தியில்
வலிமை வாய்ந்தகூட் டாட்சி கொள்வதே
இந்த நன்னிலை எய்த வில்லையேல்     875

எந்த மாநிலம் ஏற்ற மெய்திடும்
மலடி கருத்தடை  செய்து கொண்டபின்
மக்க ளைப்பெற மனம்வி ரும்பல்போல்
அதிகார மின்றிவீ ழடிமை யானவோர்
அரசின் கொள்கைவீ ணாசை யாகுமே    880

கணவன் வேறொரு மனையில் வைகிடக்
கன்னி யேங்குதல் போல வாழ்வருள்
உரிமை மத்தியில் ஒடுங்க மாநிலம்
தயவு நாடியே தவங்கி டப்பதோ
வயப்பு லிக்கொடி வில்க யற்கொடி       885

உயர வைத்தநீ ஒன்று பட்டுவா
துணைக்க ரங்கொடு தொண்டு செய்யவா
என்ற ழைத்தவர் இன்றும் ஆள்கிறார்
இன்ப நாளில் இணைந்து மகிழ்ந்து
துன்ப நாளில் தூர விலகும்             890

கூடா நட்பால் உள்ளங் குலைந்து
வாடுங் காலை வாடி உதவி
தேடுங் காலை செய்து மகிழ்ந்து
கூடி விலகாக் கொள்கை யாளரை
நாடி மதித்து நன்மை செய்து           895

வாழுந் தலைவர் ஆளும் மாநிலம்       
பொங்கு மாக்கடல் சூழ்ந்த பூமியில்
பங்க மற்றதாய்ப் பார தத்திலோர்
அங்க மாகிய ஆரு யிர்த்தமிழ்
தங்கு நானிலம் தமிழ்நா டிதுதான்       900

நெடுந்த டங்கடல் வளம்நி றைந்தது
கொடிய பேரலைக் கொடுமை யற்றது
விரிம லைவளம் மிகவு முள்ளது
எரிம லைத்துயர் எங்கு மற்றது
அடுங்கொ டும்புயல் அவல மற்றது        905

படுந்து யர்ப்பனிப் பகையு மற்றது
நிலவ ளத்தது நீர்வ ளத்தது
பலவ ளத்துடன் பண்பு மேம்படும்
மனவ ளத்தவர் வாழும் நாடிதை
எனது நாடென எந்தை முந்தையர்        910

சொந்த நாடெனச் சோர்வி லாதவா
உந்தன் நாடென உந்தை முந்தையர்
சொந்த நாடெனச் சொல்ல வேண்டுமோ
பந்த முள்ளநம் சொந்த நாடிதை
ஆளும் நம்மவர் அழைக்கின் றார்துணை    915

நாளும் நின்றுநம் நாடு பேணுவோம்
சாதி பேதமும் சமய பேதமும்
பாதி யாமனப் பக்கு வத்துடன்
நீதி நேர்வழி செல்ல நீநினை
பஞ்சம் விஞ்சிவெம் பசிவ ருத்தினும்       920

கஞ்சி தானுயிர் காப்ப தென்றுபோய்க்
கெஞ்சி வாழ்கிற கேவ லத்தினும்
லஞ்சம் வாங்குதல் நனியி ழிந்தது
உதவி கேட்பவர் உளங்க லங்கவும்
பதவி யுற்றவர் பாவம் முற்றவும்           925

லஞ்சம் வாங்கினார் நாடு தூற்றவே
வெஞ்சி றைக்குளே வெம்பி நோகிறார்
குடைநி ழற்குளே குஞ்சர மூர்ந்தவர்
நடைமெ லிந்துபோம் நாளும் உண்டென
அஞ்ச லஞ்சிநல் லறத்தில் வாழ்பவர்       930

துஞ்ச நேரினும் தூய்மை தாமறார்
நம்மை விஞ்சயார் நாட்டி லேயுளார்
என்ற கந்தையால் ஏறி யாடினால்
அஞ்சி யஞ்சியே அடங்க நேருமால்
நல்ல செய்பவர் நன்மை யெய்தலும்       935

அல்ல செய்பவர் அவல மெய்தலும்
இன்று மட்டுமா என்றும் உண்மைகாண்
தொன்று தொட்டுள தூய்மை காப்பதற்
கொன்று பட்டெழு உறுதி கொண்டுசெல்
குன்று போல்மன வலிமை கொண்டவா     940

அன்று மத்தியில் ஆண்ட ஆட்சிபோய்
இன்று தோழமைக் கட்சி யாள்வதால்
ஒன்று பட்டுநல் லுடன்ப டிக்கையால்
நன்று நாம்பெற நல்ல காலமே
மாநி லங்களுக் குரிமை கூடவும்         945

மைய ஆட்சியின் துணைசி றக்கவும்
நதிய னைத்தையும் பொதுமை யாக்கவும்
புதிய பாரதப் புனித யாறுகள்
குதிகு தித்தெலாம் குலவ வைக்கவும்
கங்கை காவிரி இணைய வைக்கவும்      950

சங்க மத்தினால் வளஞ்செ ழிக்கவும்
காவிரி கடலெனப் பெருகி யோடவும்
கர்நா டகத்தவர் ஆந்தி ரத்தவர்
ஒன்று பட்டுயர் முடிவெ டுக்கவும்
பாடு பட்டுநம் பாடு தீர்க்கவும்            955

நாடு நன்னிலை நண்ண வைக்கவும்
கூடு மவர்செய் கூட்டு முயற்சியில்
உழைத்து ழைத்தவர் உடல்த ளர்ந்துமே
களைத்தி டாதவர் காளை போன்றுளத்
திடம்ப டைத்தவர் தீர மிக்கவர்          960

இலக்கி யத்துறை எழுத்து வன்மையால்
கலக்க மற்றவர் மேதை பட்டமும்
துலக்க மெய்திடச் சூட்ட வுற்றவர்
அண்ண னுக்குயிர் தம்பி யானவர்
தம்பி யர்க்குடல் தானு மானவர்         965

கலைஞ ரென்றுநாம் கனிவு டன்சொலும்
கருணா நிதியெனும் கடமை வீரரைக்
கண்டு பின்தொடர் கண்ணி யத்துடன்
கொண்டு செல்லுவார் கொள்கை வெல்லுவார்
உதய சூரியன் ஒளிகொ டுக்கிறான்        970

இதய மெண்ணிய எண்ணி யாங்குற
உதவி செய்யநீ உதவி யாயிரு
ஒழுக்கம் உயிரினும் உயர்ந்த தென்றுணர்
அழுக்கா றகற்றி ஆசையை அடக்கு
பொறுமை பேணிப் பொய்மை போக்கு     975

சிறுமை விலக்கு சினத்தை நீக்கு
தூக்கங் குறைத்துச் சோம்பலை ஓட்டிச்
சிறந்தநல் வழியில் செல்வந் தேடி
அறவழி யின்பம் அடைய விரும்பு
பிறந்ததன் பயனைப் பெறும்வழி நாடு      980

பொதுநலப் பணியில் புகழை நாட்டு
கல்வி கேள்வியில் கலையில் விஞ்சிநில்
சொல்லில் உண்மைசொல் தூய நெஞ்சுகொள்
நிலைக லங்கினும் நெறிகெ டாதிரு
கலையி ழந்தவர் கண்முன் தோன்றினும்     985

தலைப ணிந்துபோந் தகுதி பேணிவாழ்
அலைக டற்புவி அடைவ தாயினும்
தலைகு னிந்துபோந் தாழ்வு நாணிவாழ்
அன்பு தான்வெலும் அரிய நல்வழி
கண்ணி ருப்பது கருணை காட்டவே       990

உயிரி ருப்பதும் உதவி வாழவே
வாழ்க தாய்மொழி வாழ்க தாயகம்
வாழ்க தாய்மொழி வாழ்க தாயகம்
வாழ்க மாண்புயர் கலைஞர் ஆட்சியே
வெல்க தேர்தலில் உதய சூரியன்         995

என்று பாடுக எழுச்சி எய்துக
சென்று சேர்கவே செழித்து வாழ்கவே     997
 
 

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>