துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

அணிந்துரை

                                                அணிந்துரை
                        புலவர்.மு.சன்னாசி, எம்.ஏ.,எம்.•பில்,எம்.எட்,

       ‘கலைஞர் ஆற்றுப்படை’ என்னும் இந்நூலின் ஆசிரியர் என் தமிழாசிரியர். தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டுமே கருதிக் கற்பிக்கும் இன்றைய ஆசிரியரிடையே இவர் வேறுபட்டவர்.  இளம் உள்ளங்களில் தமிழைத் தேனாகப் பாலாகத் தீஞ்சுவைக் கனியாக உணர்வாக உயிராக வாழ்வாக நெறியாக உரைக்கும் வித்தகர்.

        1965 இல் தமிழகமெங்கும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் கனன்று கொண்டிருக்கும் போது,

     “இந்திக்கு இங்கென்ன வேலை – இதை
      எதிர்க்காத தமிழன்தான் இந்நாட்டின் கோழை
      நேற்றுப் பிறந்தது இந்தி – இன்று
      நிலைபெற்று ஆளத் துடிக்குது முந்தி”

       என்று சந்தக்கவி பாடி இளம் உள்ளங்களை சிந்திக்க வைத்தவர். திராவிட இயக்கக் கொள்கைகளையும் அறிஞர் அண்ணா, மாண்புமிகு கலைஞர் ஆகியோர் பற்றிய செய்திகளையும் வகுப்பில் பாடங்களைக் கற்பிக்கும்போதே இடைப்பிற வரலாக இனிதாகப் பொருந்திச் சொல்பவர்.
இவர்தம் உரையாடல் இவரிடம் பயின்ற நூற்றுக் கணக்கான மாணவர் தெள்ளு தமிழ் உணர்வும் திராவிட முன்னேற்றக் கழக ஈடுபாடும் கொண்டு திகழ்வர் என்பது உறுதி.

       சின்னஞ்சிறு வயது முதல் தம்மைக் கவர்ந்தவர் இருவர் என்பதாலேயேஇவர் பேரறிஞர் அண்ணா அவர்கட்குப் பிள்ளைத் தமிழையும் மாண்புமிகு கலைஞர் அவர்கட்கு ஆற்றுப்படையையும் படைத்தளித்துள்ளார். இவர் பணி ஓய்வு பெற்ற பின்னரும் அகவை அறுபதைக் கடந்து நோயால் உடல் மெலிந்த நிலையிலும் உள்ளத்து உறுதியால் – கொண்ட கொள்கைப் பற்றால் – கழகத் தலைவர் கலைஞர்பால் கொண்ட பேரன்பால் ‘கலைஞர் ஆற்றுப்படை’ – என்னும் இந்நூலைக் குறிப்புரையோடு இப்போது வெளியிடுகின்றார்.

       இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதற்குரிய என் தகுதியைக் கருதுங்காலை அவரிடம் பயின்ற மாணவன் என்பதும், அவர் ஊட்ட உண்டு வளர்ந்த தம்பி என்பதும், என் வாழ்வியல் நெறியின் வழிகாட்டி என்பதுமேயாம்.

       சங்க இலக்கியங்கள் என்பன பத்துப் பாட்டும் எட்டுத் தொகையுமேயாம் என்பது அறிஞர் துணிபு. அவற்றுள் பத்துப் பாட்டு என்பது பத்துநெடும் பாடல்களால் யாக்கப்பெற்ற பத்து நூல்களின் தொகுப்பு என்பதைஅனைவரும் அறிவர். அப்பத்துப் பாட்டினுள் திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை, சிறிபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்கள் ஆற்றுப்படைநூல்களாக அமைந்திருப்பதைக் காணின் அந்நாளில் ஆற்றுப்படை நூல்களின் செல்வாக்கு எவ்வாறு இருந்தன என்பது ஒருவாறு புலனாம்.

        இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. எனவே கவிஞர் வாழ்கின்ற காலத்தில் அவரால் உணரப்பெறும் – காணப்பெறும் – அறியப்பெறும் கருத்துக்கள் அவர் படைப்பில் மிளிரும். சங்கப் புலவர்கள் “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என்றும், “பழுமரம் தேடிய வாவல்” எனவும் வாழ்ந்துள்ளனர். எனவே உள்ளம் உணர்ந்ததை உண்மையை வெற்று ஆரவாரப் போலியின்றி இயல்பாக உரைக்கும் பாங்கு  சங்கப்புலவர்பால் காண இயலுகிறது.

        திருமுருகாற்றுப்படை நீங்கலாக உள்ள ஏனைய நான்கு ஆற்றுப்படை நூல்களில் புலவர்கள் தம்மை ஆதரித்த புரவலரைப் பாராட்டு முகத்தான் அந்நாளைய நாட்டுப்புறக் கலைஞர்களாகிய கூத்தர் பாணர், பொருநர் ஆகியோரை முன்னிலைப் படுத்திப் பாடியுள்ளமையைக் காண்கிறோம்.
இடைக்காலத்தில் பக்தி இயக்கம் மேலோங்கிய காலத்தில் இறையருளை வனைந்து வனைந்து பாடியமையால் புரவலர்க்கென்று ஆற்றுப்படை நூல்கள் போன்றன தோன்றாதொழிந்தன. எனவே இடைக்காலத்தில் அரசோச்சிய புரவலரின் சிறப்புக்கள் செப்பேடுகளாகவும், கோயிற் சுவர்களில் எழுதப்பெறும் கல்வெட்டுக்களாகவும், மெய்க்கீர்த்திகளாகவும் மிளிர்ந்தன. சங்ககால
ஆற்றுப்படை நூல்களில் உரைக்கப் பெற்ற புரவலனின் புகழ்மொழி போன்றே இடைக்கால மெய்க்கீர்த்திகளும் அமைந்துள்ளமை இலக்கிய உலகம் ஒப்புநோக்கி மகிழத் தக்கது ஆகும்.
      ஆற்றுப்படை நூல்களில் காணப்பெறும் கலைஞர்கள் பற்றிய வருணனை மட்டுமே கற்பனையே யன்றிப் புரவலரைப் பற்றிய புகழ் மொழிகள் மெய்க் கீர்த்தியாகிய வரலாறே என்று அறிதல் தகும். இத்தகைய மெய்க்கீர்த்தியாகவே
“கலைஞர் ஆற்றுப்படை” என்னும் இந்நூல் திகழ்வதைக் கற்போர் யாவருங் காண இயலும்.

      ஆற்றுப்படையின் வரலாறும், இந்நூல் தோன்றற்கான ஏதுவும் இதன் அமைதியும் நூலாசிரியரால் குறிப்புரைப் பகுதியில் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன. தமிழனை நம் தமிழினத் தலைவர் அவர்களிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில்,

   “தமிழனே! உனது சரிதைகேள் வருக “
                        என அழைத்தல் தொடங்கி
   “கன்மு ளைத்தடி மண்மு ளைத்திடா
    முன்மு ளைத்தநீ பின்ன டைந்ததை”
      
         என்னும் அடிகள்வரை உள்ள தமிழின வரலாறு இயல்பு நவிற்சியாய் ஆசிரியர் இயம்பியுள்ளமை சிந்திக்கும் தமிழனின் சிந்தையில் தேங்கி வீறுணர்ச்சி பெறச் செய்யும் என்பது உறுதி.

   “அயல்மொ ழிச்சுமை அதிக மேந்தினாய்
    மயல்மி குந்ததில் வாழ்வு தேடினாய்
    மதிம யங்கினாய் வளர்பு துக்கலை
    அறிவு நல்குமென் றடிமை யாகினாய்
    வந்த வர்க்கடி பணிய முந்தினாய்
    செந்த மிழ்ப்பணி செய்த லஞ்சினாய்
    ஆரி யர்க்கடி வருடி யாகினாய்
    ஆங்கி லர்க்குநீ அடிமை யாகினாய்”

        என்னும் அடிகளில் முன்னிலை ஒருமை வினைமுற்றுச் சொற்களில் இயைபுத்தொடை அமைந்து இனிமை நல்குவதினும் தமிழனின் இழிநிலையை ஒலிக்குறிப்பானாம் வசையாகவும் ஆசிரியர் அமைத்துத் தன்மான உணர்வால் ஏற்படும் தம் வெகுளியை வெளிப்படுத்தியுள்ளார் என்றே கருதத் தோண்றுகிறது.

        மலையாயிருந்த தமிழன் மடுவாகிய நிலைகண்டு புண்பட்ட ஆசிரியர் அவன் நிலை மீண்டும் உயர எண்ணி அவர் சொன்னவாறு தொடர்ந்து சென்று இன்னருங் கலைக்குரிசிலை அடைந்து முன்னை நலம் முழுவதும் எய்திப்
பின்னையும் பல பெருமை கொள்ள வழி காட்டுகிறார்.

        தமிழன் எய்த வேண்டிய கலைக்குரிசிலாம் கலைஞர் அவர்களின் மாட்சியை,
  
    “ஏட கம்பல தேக்கி வைத்தவர்”
                             என்று தொடங்கி,
    “தடியர் சூழ்ச்சியிற் தப்பி வந்ததும்
     முடிய யானிவண் மொழிய வேண்டுமோ”
   
        என்பது வரை ஆசிரியர் மெய்க்கீர்த்தியாகவே வடித்துள்ளார்.

          படைப்புப் பலபடைத்துக் குஞ்சர மூர்ந்து ஒரு குடைக்கீழ் உலகாண்ட முடிமன்னரின் அரண்மனையும் செல்வங்களும் அழிந்துற்ற காலையும் புலவரானியற்றப் பெற்ற மெய்க்கீர்த்திகளே நின்று நிலைத்து வரலாற்றுச் சான்று
மூலங்களாகியுள்ளன என்று சிந்திப்பார்க்குக் கலைஞர் பற்றிய இப்புகழ் வரிகள் பன்னூறு ஆண்டுகள் கழிந்த பின்றையும் மெய்க்கீர்த்தியென விளங்கிக் கலைஞர் அவர்களின் வரலாற்றுக்குச் சான்று மூலமாகி நிற்கும் என்பது புலனாகும்.

  “அண்ணா வளர்த்த அருமைக் கழகம்
   அரசு கட்டில் அமர்ந்தது முதலாத்
   தமிழக அரசின் சாதனை கேண்மோ”

       எனத் தொடங்கி, “அரசு புரிந்தார் அண்ணாத்துரை” என்பது வரைஅறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிச் சாதனைகளை  ஆசிரியர் விளக்கி யுள்ளார். அதனைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சிச்
சாதனைகளை,

   “முதன்மை யுற்றவர் ஆட்சி முகிழ்த்த
    இருமு வாண்டில் “
                           என்பது தொடங்கி,
   “ஆகாறு அளவு குறைந்தவர்
    இறக்கும் நாளினும் எம்மை நம்பியோர்
    சிறக்க நல்கினார் “

         என்பது வரை பட்டியலிட்டிருப்பது வரலாறே செய்யுள் வடிவாய் மிளிர்கிறது என்பதைத் தமிழுலகம் அறியக் கடமைப்பட்டுள்ளது. தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறைக்கே இவ்வளவு விவரங்கள் தொகுத்து வைத்திருக்க
இயலுமோ என்பது ஐயமே. கலைஞரின் புகழை மகிழ்வுடன் விரித்துப் பாடியுள்ள ஆசிரியர்,

  “முன்னவர்நிறை மொழிந்து வாழ்ந்தவர்
   பின்ன வர்குறை பேசல் கேட்கிறேன்”

என்று கலைஞரைப் பிறர் குறைகூறுவது கேட்டு நோகிறார். பின்னர் அதற்கு
அவரே,
  “போற்றி னாலுமென் தூற்றி னாலுமென்
   பொதுப்ப ணிக்கெனப் புகுது வார்க்கிவை
   புதுமை யன்றென “
                        அமைதியும் கூறுகிறார்.
இறுதியில் தமிழனுக்குக் கூறும் அறிவுரையாக,

  “உதவி செய்யநீ உதவி யாயிரு
   ஒழுக்கம் உயிரினும் உயர்ந்த தென்றுணர் “
                        என்பது தொடங்கி,

  “உயிரி ருப்பதும் உதவி வாழவே”

           என்பது வரை கூறியுள்ளவை சிலப்பதிகாரத்தின் முடிப்பில் இளங்கோவடிகள் பாடியுள்ள வரிகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

    இந்நூலின் யாப்பமைதி பற்றி ஆசிரியர் குறிப்புரைக்கண் தெளிவுபடுத்தி யுள்ளார் . எனினும் சங்க காலத்தில் ஆற்றுப்படை நூல்களுள் அகவற்பாவைக் கருவியாகக் கொண்டதன் காரணம் அப் பாவின் கண் உள்ள வாய்மொழி
இலக்கியக் கூறின் தாக்கமே ஆகும். வீரயுகப் பாடல்களாக இருப்பினும் அவற்றின் கூறுகள் அமைந்துள்ள பாக்களாக இருப்பினும் அவற்றில் வாய்மொழி இலக்கியத் தன்மை பெற்றிருத்தல் இயல்பான ஒன்றே. இவ்வகையில்
கலைஞராற்றுப் படையும் இவ்வாய்மொழி இலக்கியக் கூறு மிளிர ஆசிரியரால்,

 ”தான தத்தனன தான தத்தனன “
       என்னும் சந்தஞ் சிறக்கப் பாடப்பெற்றுள்ளது.

      பாட்டுக்கு யாப்பு என்பது உடலுக்கு உடுக்கை போன்றது. நாகரிகத்தின் படிநிலை வளர்ச்சிக்கேற்ப உடுக்கையின் வடிவம், நிறம், அமைப்பு மாறலாமே
யன்றி உடுக்கையே யின்றித்திரிதல் நாகரிகமென அறிவுடையார் எவரும் ஒப்பார். எனவே யாப்பே இன்றிப் பாடல் புனைந்தேன் என்பது நான் மீண்டும் ஆதாம் ஏவாள் எனத்திரிவேன் என்பது ஒக்கும். யாப்புச் சிறந்து சந்தமும்
கருத்தும் சிந்தை கொள்ளும் சிறந்த இலக்கிய வடிவங்களே. என்றும் நின்று நிலைக்க வல்லன. இவ்வகையில் கலைஞராற்றுப் படை காலத்தை வென்று நின்று நிலைக்கும் என்பது உறுதி.

      மொத்தத்தில் இந்நூல் ஆற்றுப்படை நூல் வரலாற்றில் எதிர்காலத்தில் தனியிடம் பெற்றுத் திகழும். இந்நூலின் பாட்டுடைத் தலைவர் கலைஞர் புகழும் என்றும் நின்று நிலவி நிலைத்து நிற்கும்.

வாழிய கலைஞர் ! வாழியவென் ஆசிரியர் !
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !