துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

முன்னுரை

கலைஞர் ஆற்றுப்படை என்னும் இந்நூலை நான் 1975இல் எழுதி முடித்தேன். பரிசு பெறும் நோக்கத்தோடு இதன் கைபிரதியுடன் சீட்டுக்கவி பாடி வைத்து கலைஞர் அவர்களுக்கு வீட்டு முகவரிக்கு அனுப்பினேன்.

          மாநில சுயாட்சியை மையக்கருத்தாகக் கொண்டு சுமார் 740 அடிகளில் உருவான அது பரிசு பெற வாய்க்காததால் பதிப்பிக்க இயலவில்லை

          கழக ஆட்சி – கலைஞர் ஆட்சி மீண்டும் மலர்ந்த போது மேலும் விரிவாக்கி 950 அடிகளை உடையதாக 1997 மார்ச்சில் நூலாக வெளியிட்டேன். நூலகங்களில் இடம்பெறச் செய்யும் ஆசையில் வெளியான அது போதுமான பக்கங்கள் இல்லை என்ற காரணத்தால் மாவட்ட நூலக ஆணைக் குழுவால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

          37 பக்கங்களில் வெளியான அது மேலும் விரிவாக்கப்பட்டு 997 அடிகளில் 75 பக்க அளவில் குறிப்புரை, அருஞ்சொற் பொருளுரைகளுடன் 2000 அக்டோபரில் வெளியிடப்பட்டது.

          கலைஞரின் அழகிய அட்டைப் படத்துடன் வெளியான அது ஆட்சி மாற்றத்தால் நூலகத்தில் நுழைய முடியாமல் போனது.

         அமெரிக்காவில் உள்ள என் முதல் மகள் முதல் மருமகன் முயற்சியால் இணைய தளத்தில் என் நூல்கள் பலவும் வெளியானதால் என் ஏக்கப் பெருமூச்சு நிம்மதிப் பெருமூச்சாக மாறி மகிழச் செய்கிறது.

         என்நூல்கள் அழியாமல் இருக்க, என் கருத்து, கவிதை வடிவில் உலவ உதவிய அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். படித்துப் பாருங்கள். என் நெடுங்கால நினைவுகள் உங்கள் நெஞ்சைத் தொடாவிட்டாலும் மரபுக் கவிதை கற்ற மனநிறைவாவது கிட்டும்.

                                                                                          துரை.பொன்னுச்சாமி
                                                                              28/10/2006