15.காப்புப் பருவம்
காப்புப் பருவம்
விநாயகர்
ஓங்கார வடிவாகி ஓதாமல் ஓதுமதன்
உட்பொருள் தானுமாகி
உருவாகி அருவாகி உனைநம்பித் தொழுவாரின்
உள்ளத்தின் உள்ளுமாகி
தீங்கான வினைதேயத் தினந்தோறும் அருள்கின்ற
தெய்வமே! யானைமுகனே!
சிவன்பெற்ற செல்வனே செவ்வேளின் அண்ணனே
தினமுன்னை வேண்டுகின்றோம்
பாங்காருந் தமிழ்வாழும் பாசமிகு திருநாடு
படரற்று வாழ்வதற்கே
பகலென்றும் இரவென்றும் பாராது பணிசெய்து
பரிவோடு காத்துவந்த
நீங்காத அன்பாலும் நிறைவான பண்பாலும்
நெஞ்சத்தில் என்றுமுள்ள
நிகரற்ற அறிவாற்றல் நிலைபெற்ற அண்ணாவை
நீகாக்க வேண்டுமென்றே
சிவன்
சீர்கொண்ட வளமேவு திருக்கச்சி யேகம்பன்
தில்லைப்பொன் னம்பலத்தான்
தென்மதுரைச் சங்கத்துப் புலவரொடு மாராய்ந்த
செந்தமிழ்த் தேர்ச்சியுள்ளான்
பார்கொண்ட பொருளெல்லாம் பலகோடி உயிர்வாழப்
பரிவினால் அருளுகின்றான்
படைப்புமுதல் ஐந்தொழிலும் செய்கின்றான் பரமனவன்
பாதமலர் வேண்டுகின்றோம்
ஏர்கொண்ட இந்நாடும் இணையற்ற தமிழ்த்தாயும்
என்னாளும் ஓங்கிவாழ
இரவோடு பகலெல்லாம் எழுத்தாலும் பேச்சாலும்
இணையற்ற தொண்டுசெய்தே
ஆர்கின்ற அறிவென்னும் ஒளிவீசிச் சமுதாய
அறியாமை நீக்கியெம்மை
அன்போடு பாசத்தால் ஆர்க்கின்ற கச்சிநகர்
அண்ணாவைக் காக்கவென்றே
முருகன்
முருகென்ன அழகென்ன முதலென்ன உலகத்து
முதன்மக்கள் தேவனென்ன
மொழிகின்ற தமிழ்த்தென்றல் மொழிதேறுந் தமிழர்க்கு
முதலாய மூலமென்ன
வருகென்ன வருகின்ற வரம்நல்கி யருள்கின்ற
வளர்தமிழ வேளுமென்ன
மலைமேவு மொருநாதன் மயிலேறு குருநாதன்
வடிவேல னைத்துதிப்போம்
மெருகென்ன கருத்தென்ன மிகவூறுஞ் சுவையென்ன
விஞ்சுங்கை வண்ணமென்ன
மிடுக்கென்ன அடுக்கென்ன விடுகின்ற நடையென்ன
வெல்செஞ்சொல் லாற்றலென்ன
அருகென்ன பகையேனும் அணுகாது பொழிகின்ற
அன்பென்ன என்னவென்றே
அனைவோறும் மீக்கூறும் அமுதூறும் மொழிகூறும்
அண்ணாவைக் காக்கவென்றே
கண்ணன்
அருவாகி உருவாகி அனைத்துக்கும் முதலாகி
அவதாரம் பலவுமாகி
அகிலத்துப் பலகோடிப் பொருளுக்கும் பொருளாகி
அணுவிலுந் தான்விளங்கும்
கருநீல மணிவண்ணன் கடல்வண்ணன் முகில்வண்ணன்
கற்பனைக டந்தமாயன்
கண்கண்ட துணையாகி உலகத்தைக் காக்கின்ற
கண்ணனை வேண்டுகின்றோம்
திருமாதும் கலைமாதும் ஜெயமாதும் ஒருசேரத்
திகழ்கின்ற திராவிடத்தில்
செங்கோல்செய் முதல்மாது தமிழ்மாது புவிமீது
செல்வமாய் ஈன்றசெம்மல்
அருளீந்தும் பொருளீந்தும் அடைவோர்க்கு வாழ்வீந்தும்
அறியாமை நீங்கிவாழ
அறிவாளர் களையீந்தும் அருள்காஞ்சி புரத்தோன்றல்
அண்ணாவைக் காக்கவென்றே
ஏசுநாதர்
மாசுடை மனத்தனாய மாணவ னொருவனாலே
வானுல கிரங்கியேங்க
மண்ணகங் கதறஅன்னை மறுகுறச் சிலுவையேறி
மாளுற நின்றபோதும்
ஏசுவே எந்தையேநீ இன்னருள் இறைஞ்சினாயே
ஈனராங் கொலைஞருக்கும்
ஈசனே எம்மனோரால் ஏத்தவும் எளியவாமோ
இணையடி வழுத்துகின்றோம்
காசுறு மதிப்புமாடைக் கவர்ச்சியும் தோல்விகாணக்
காதலித் தெளிமை பேணிக்
கண்ணியங் கடமையோடு கட்டுப்பா டுடைமையாக்கி
கறுத்தவ ராகிமுன்னே
ஆசுற ஏசினாரும் அண்டிவந் துதவிகேட்பின்
ஆவலோ டுதவுகின்ற
அரும்பெருங் குணத்தினாலே ஆட்கொளும் அன்புமிக்க
அண்ணாவைக் காக்கவென்றே
நபிநாயகம்
இகம்மிது தழைப்பதற்காய் எழுதரும் வடிவெடுத்தாய்
இழிமன அரக்கயூதன்
இற்றகை ஒட்டுவித்தே இன்னருள் செய்துகாத்தாய்
இருளறப் புவியிலெங்கும்
மகம்மது மதஞ்சிறக்க வணிகமுந் தலைசிறக்க
மக்கமா நகருதித்தாய்
வானகத் தந்தையல்லா வழிசொலும் தூதனேயுன்
மலரடி வழுத்துகின்றோம்
உகம்புகழ் சங்ககால உன்னத வாழ்வுகாட்டும்
உரைகளால் எழுச்சியூட்டி
ஒடுங்கிய நாட்டுமக்கள் ஒன்றுபட் டுரிமைகேட்கும்
உணர்ச்சியைத் தூண்டியெங்கள்
அகங்களில் நாடுவாழ அரும்பணி யாற்றுமாவல்
அதிகரித் தோங்கவைத்த
அரசியல் நெறியிலென்றும் அரும்பெருந் தூய்மைகாத்த
அண்ணாவைக் காக்கவென்றே
அருகன்
மூவருக் குரீயவான முத்தொழிற் கொருவனாகி
முழுமதி முக்குடைக்கீழ்
மூவுல கும்புரக்கும் முற்றொளி வட்டமேவும்
மூலமும் முடிவுமில்லான்
மேவருந் துறவுபூண்டு மேனியை வருத்திமாண்டு
மெல்லுட லாவிகொல்லா
விரதமும் பூண்டுகாக்கும் மேன்மதத் தருகதேவன்
மென்மல ரடிபணிந்தோம்
தேவருந் தொழுதுபோற்றும் சிவகாமி தவமிருந்த
திருநகர் சைவத்தோடு
திருமாலின் மதஞ்சிறந்து திகழ்நகர் பெளத்தரோடு
திகம்பரர் மதங்களெல்லாம்
ஆவலோ டாய்வுசெய்த அணிநகர் முக்திநல்கும்
அருநகர் காஞ்சியின்கண்
அகந்தொடு சாருவாக ஆய்வையுஞ் செய்யவந்த
அண்ணாவைக் காக்கவென்றே
புத்தன்
ஆதி முதற்பீணி யாவு மறத்தொடர்
ஆசை விடச்சொன்னாய்
அன்பு முதற்பொரு ளாய பரம்பொரு
ளாகு மெனச்சொன்னாய்
போதி மரத்தடி ஞான முறச்சுக
போக மறச்சென்றாய்
பொங்கு பெருஞ்சுடர் போத வருஞ்சுடர்
புத்தா! வணங்குகிறோம்
ஓதி வரப்பெறும் ஞான மனைத்தையும்
ஊட்டு மெனக்காணும்
ஓங்கு தமிழ்க்கட லூடு திளைத்தவ
ணுள்ள பெருஞ்செல்வம்
மீதி யறத்தர வேண்டி யுழைக்கிற
மேதை யெனக்காணும்
வெற்றி தருந்தமிழ் அண்ணா துரையினை
வேண்டிப் புரவென்றே
தமிழ்த் தாய்
பொங்கு கடற்புவி பூத்த முதன்மொழி
போற்றிப் புகழ்கின்ற
புலவர் புதுத்துறை யறிஞர் பலப்பல
பூண்கள் புனைந்தென்றும்
அங்கத் தணிகிற சங்கத் தவர்மணி
யார மணிந்துள்ள
ஆதி புலப்படா அந்த மிலாத்தமிழ்
அன்னையை வேண்டுகிறோம்
வங்கக் கடலடி வருடத் துயில்கிற
மாண்பு மிகுந்தவனை
மக்கள் மனங்களில் மன்னி யிருக்கிற
வாழ்வு சிறந்தவனை
கங்கைக் கரைநகர் காசிக் கொருநிகர்
கச்சிப் பதியின்கண்
காதல் கனிந்துள ராணி மணாளனைக்
காப்ப தவள்கடனே.
முப்பெருந் தேவியர்
இகலோகம் பரலோகம் என்றெல்லாம் எம்முன்னோர்
என்னென்ன சொல்லிவைத்தார்
எதிலெங்கே இருந்தாலும் இப்போது வரவேண்டும்
எமதுள்ளங் கோவிலாகப்
புகவேண்டும்நிலைவேண்டும் பொன்மேரு மலைமாது
பூமாதர் இருவரோடும்
பொருளாக உங்களருட் பொற்பாதம் எப்போதும்
போற்றியாம் வேண்டுகின்றோம்
அகநூல்கள் புறநூல்கள் அமுதூறுந் தொகைநூல்கள்
ஐம்பெருங் காப்பியங்கள்
அருளாளர் நூல்களால் அறிவூட்டுந் தமிழன்னை
ஆராய்ச்சி மனப்போக்கிலே
மகவெல்லாம் முன்னேற வழிகாட்டி இவனென்ன
மதிகூட்டிப் பெற்றெடுத்த
மாமேதை அண்ணாவை வளர்தொட்டில் மகவாக
மகிழ்வோடு காக்கவென்றே.