20.வருகைப் பருவம்
வருகைப் பருவம்
உருகா மனமும் உருகப் பயிலும்
உரைசால் உன்நாவில்
உமிழ்நீ ரெனவே உவமை சுரக்கும்
உவனகத் தேனாறு
பெருகிச் செவியிற் புகுதப் பொழியும்
பிழையா மதிமுகிலே
பெருகிக் கழகம் அறுபத் தேழில்
பெயர்பெற் றரசாள
இருபத் தைவர்க் கிருபத் தைவர்
இணையில் வாகையினால்
இந்திய மன்றி லிருக்க வளித்தாய்
எதிரி தலைசாய
வரலா றறியா வெற்றிக் குரியாய்
வருகை தருவாயே!
மருவார் புகழும் மதிசால் தலைவா!
வருகை புரிவாயே!
பரிவுற் றருமைக் கலைகற் றுயரப்
பணமற் றயர்வாரும்
பயிலக் கலைக்கல் லூரிப் படிப்பின்
படியாம் முதலாண்டின்
உரிமைத் தொகையை விடுவித் துயர்ந்தாய்
உழவர்க் குளமார
உரிமைத் திறையைக் குறைவித் தெளியர்க்
குதவிப் பெயர்பெற்றாய்
எரியுற் றழிந்த குடிசைக் குரியார்
இடும்பைக் களைகட்டாய்
எளிமைக் குடிகள் நலிவுற் றயரும்
இன்னற் குளம்நைந்து
வரியைப் புதிதாய் விதியா முதல்வா!
வருகை தருவாயே!
மருவார் புகழும் மதிசால் தலைவா!
வருகை புரிவாயே!
ஒதுக்கப் படுகீழ் குலமென் றெண்ணா
துறவாந் மணஞ்செய்தால்
ஒளிருந் தங்கப் பதக்க மளித்தே
ஊக்க மளித்தாண்டாய்
மதுகைத் தமிழர் மரபற் றழிய
வடவா ரியராலே
வழக்குற் றுயர்ந்த மணஞ்செய் சடங்கை
மறுத்துத் தமிழ்நாட்டில்
புதுமை மலர எளிமை பொலியப்
பொருந்து மனங்கொண்டே
புரட்சித் தலைவர் பெரியார் நெறியிற்
புரிசீர் திருத்தத்து
வதுவை நிலைக்கச் சட்டம் வகுத்தாய்
வருகை புரிவாயே!
மருவார் புகழும் மதிசால் தலைவா!
வரிகை புரிவாயே!
உளமார் உணர்வைக் கிளருந் தன்மை
உயர்வே லைக்காரி
ஒளிசேர் சுவர்க்க வாசல் படைத்தாய்
ஓரிர வோரிரவை
இளமார் வத்தோ டெழுதி யளித்தாய்
இரங்கூன் ராதாவை
இணையில் நல்ல தம்பியொ டீந்தாய்
இகலித் தேர்தலெனும்
களமார் பெருமை நல்லவன் வாழ்வான்
கதைபோற் பலசெய்தாய்
கருதார் குழுவும் கருதிப் புகழும்
கருத்துச் செறிவோடு
வளமார் வசனக் கலையை வளர்த்தாய்
வருகை புரிவாயே!
மருவார் புகழும் மதிசால் தலைவா!
வருகை புரிவாயே!
போற்றா மணத்தைப் பெரியாரும்
புரியக் கண்டே பிரிந்தேகிப்
புதிதாய்க் கழகப் பயிர்செய்தே
பொலிவாய் வளர்த்தாய் பொறுக்காது
தூற்றிக் கண்ணிர்த் துளியென்றே
தொடரம் பாலுன் நெஞ்சத்தைத்
துளைத்தார் பெரியார் வசைகேட்டும்
துயருற் றவரைத் தூற்றாதாய்
தோற்றா லுந்தன் முன்னிலையில்
துவளா துள்ளத் துயர்தாங்கிச்
சோம்பா தருமைத் தம்பியரைத்
தூண்டுந் திடநற் றுணிவுள்ளாய்
மாற்றார் மாட்டுங் குணங்கண்டால்
மதிப்பா யேற்றாய் வாராயோ!
மாற்றான் தோட்ட மல்லிகையும்
மணக்கும் என்றாய் வாராயோ!
பிற்பட் டோரின் சமுதாயம்
பெரிதும் உயர்தற் கொருதிட்டம்
பிச்சைக் காரர் மறுவாழ்வு
பெற்றே உயர்தற் கொருதிட்டம்
முற்பட் டெளியோர் குடிசைகளை
முறையே மாற்றற் கொருதிட்டம்
முற்போக் குடன்பே ருந்துவழி
முகிழ்க்கும் நாட்டுடை மைத்திட்டம்
கற்றோர்க் கெல்லாம் படிப்படியே
கனிவாய் வேலை தருந்திட்டம்
கன்னித் தமிழில் தமிழரினம்
கடவுள் பூசை செயுந்திட்டம்
மற்றும் பலசெய் தாள்வோரை
வளர்த்துத் தந்தாய் வாராயோ!
மாற்றான் தோட்ட மல்லிகையும்
மணக்கும் என்றாய் வாராயோ!
ஓய்வில் லாதே ஊரூராய்
உறங்கா தென்றும் இரவெல்லாம்
ஒண்செந் நாவின் மடையூறும்
ஓவா உவகைத் தேன்வெள்ளம்
பாய்கா தென்னும் வயல்புக்குப்
பாயப் பாயப் பேசிமனப்
பசியைப் போக்கும் உணவிட்டாய்
பழகுந் தமிழில் இந்நாளில்
வாய்வீண் பேசி வம்புக்கு
வலிய இழுப்பார் கூட்டத்தில்
வார்த்தை கத்தும் வம்பர்களின்
வழங்கற் கொவ்வாச் சொல்நாறும்
வாய்நாற் றத்தால் செவிநாலும்
மாற்று மருந்தே வாராயோ!
மாற்றான் தோட்ட மல்லிகையும்
மணக்கும் என்றாய் வாராயோ!
பாதம் படியா திருந்தக்கால்
பாவம் படியும் இந்நாட்டில்
பாசம் படியா திருந்தக்கால்
பாசான் படரும் நெஞ்சத்தில்
வேதப் பொருளே வள்ளுவரின்
வீரச் சுவையே புறப்பொருளின்
மேன்மைத் திருவே தமிழ்நாட்டின்
வெற்றிக் கொடியே வரலாற்றின்
கோதற் றுயர்ந்த மாமணியே
கோவில் கொண்ட பங்காரென்
குணமுள் தாயார் மணியுதரக்
கொயின் கொழுந்தே செழுந்தேனே
மாதர் திலகம் ராணியம்மை
மகிழ்நா அண்ணா வாராயோ!
மாற்றான் தோட்ட மல்லிகையும்
மணக்கும் என்றாய் வாராயோ!
மதியும் நிலமும் மலையுந் துலையும்
மழையும் மலரும் மருளவே
மணமு மருளும் நடுவும் நிலையும்
பொறையு மொளியும் மருவினாய்
முதிய தமிழர் மரபி நருமை
முழங்கு முரசு குரலினாய்
மொழியி லினிய தமிழு முயிரு
முரலு முனைவ வருகவே
பதியு முறையி லுவமை மொழிகள்
பகரு முதல்வ வருகவே!
பணிவு துணிவு பரிவு தெளிவு
பழகு குணமு மெளிமையும்
மதியு மனமும் மொழியும் வழியும்
மருவு நிலையி லுனைநிகர்
மனித வடிவி லினியு மொருவர்
வருத லருமை வருகவே!
அளவி லரிய இதய மலரி
லுறையு மனமச்ச வருகவே!
அறிவி லரிய தலைவர் புகழு
மறிஞர் தலைவ வருகவே!
தளரு மெளிய குடியு மினிய
தமிழு முயர வருகவே!
தடைக ளுடைய உரிமை முழங்கு
தலைவன் வருக வருகவே!
இளகி யுருக மிதய முடைய
எமது துரைநீ வருகவே!
இளைய வுதய பருதி யெனநீ
எழுக வருக வருகவே!
வளரு மரிய கழக முதல்வ
வருக வருக வுனைநிகர்
மனித வடிவி லினியு மொருவர்
வருத லருமை வருகவே!