துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

12.முன்னுரை

முன்னுரை
    
                     அருட்கவிஞர் அரங்க சீனிவாசன்

     என்று பிறந்தது என்று அறியாத இயல்பினது தமிழ்மொழி. பருவந் தோறும் பலப்பல புத்தணிகளைப் பூண்டு,புதுமெருகுடன் திகழ்வது அது. சங்க காலம் தொடங்கி, படிப்படியாக உருவும் திருவும் பெற்று, இலக்கியச் செழுமை கொண்டது தமிழ்.

    வள்ளுவன், கம்பன் முதலிய தெய்வப்புலவர்கள், இத்தமிழுக்கு ஏற்றமும் தோற்றமும் அளித்து வளர்த்தனர்.  அற்புதக் கவிகள் பலர் தம் கற்பனை வளத்தால் புதுப்புதுப் “பாணி”களைக் கையாண்டு, மக்கள் மனம் கவரும் வண்ணம் இறவாத புகழுடைய பலநூல்களைத் தமிழன்னைக்குக் காணிக்கையாக்கியுள்ளனர்.

     நற் புலமையாளர்களின் இலக்கியங்களை வகைப்படுத்திப் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இலக்கண நூலார் பெயரிட்டனர்.  அவற்றுள் சிற்றிலக்கியங்கள் மட்டும் ஏறத்தாழ தொண்ணூற்றாறு வகை எனப் பாட்டியல் நூல்களிலே விளக்கப்பட்டுள்ளன.

      உலா, மடல், பரணி, கோவை, பிள்ளைத்தமிழ் கலம்பகம் முதலிய சிறு பிரபந்தங்கள் தமிழ் மொழியில் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இவற்றுள் பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றவற்றை விட மிகப் பல்கி வழங்கி வருகின்றன. இன்றும் பல புலவர்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடித் தமிழுக்கு அணி சேர்த்து வருகின்றனர்.

      வைணவ அடியார்கள் பன்னிருவரில் பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகக் கண்டு வழிபட்டார். அவர் வாயினின்றும் அமுத தாரையாகப் பெருக்கெடுத்து வந்த குழந்தைப் பாடல்களின் சொல்லழகில் கருத்தழகிலும் சொக்கிய பிறபுலவர்கள், அவர் வழியைப் பின்பற்றி, தம் கற்பனை வளத்தையும் கலந்து பன்னூறு பாடல்களை யாத்தனர். அவ்வாறு யாத்து வந்த மரபு, பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகையாக மலர்ந்தது.
 
      திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலியன தமிழ்க் கருவூலத்தின் முழுமணிகளாயின.
 
      இறைவனைப் பற்றி எழுந்த பிள்ளைத்தமிழ் நூல்கள், பின்னர் அரசர்களையும் புரவலரையும் அறிஞரையும் பற்றியும் எழலாயின. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழை ஒட்டக்கூத்தர் முதன் முதலிற்பாடினார்.

      சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் அம்பலவான தேசிகர் பிள்ளைத்தமிழ் முதலியன அறிஞரைப்பற்றிப் பாடப் பெற்றவை.

      இவ்வாறு பிள்ளைத்தமிழ் நூல்கள் பெருகிய காலத்தில், பாட்டியல் நூலார் பிள்ளைத்தமிழ் நூலுக்கு இலக்கணமும் வகுத்தனர்.

பிள்ளைத்தமிழ் நூல்களில் பத்துப் பருவங்கள் உண்டு

1. காப்புப் பருவம்:
      குழந்தையின் மூன்றாம் மாதம் வரையுள்ள பருவத்தில் “இக்குழவியைக் காப்பீராக” என்று, காப்புக்கடவுள் முதலாக பல தெய்வங்களையும் வேண்டிக் கொள்வது.

2. செங்கீரைப் பருவம்
        ஐந்தாம் மாதம் வரையுள்ள பருவத்தில் குழந்தை மழலை மொழிபேசத் தொடங்கும். மழலையமுதத்தை வழங்கும்படி குழந்தையை வேண்டும் பருவம் இது. கீரம் என்றால் பால். அதாவது பால் போன்ற மழலை. கீரம் என்பது கீரை என மருவியிருத்தல் வேண்டும். அது செம்மை என்ன்னும் பண்பை அடையாகப் பெற்றுச் செங்கீரை என ஆனது. செங்கீரையாடு என்பது செவ்விய மழலைச் சொற்களைப் பேசு எனப் பொருள்படும்.

3. தாலப் பருவம்:
       ஏழாம் மாதத்தில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாயர் தாலாட்டுவர். அப்போது அவர்கள்
பாடுகின்ற தாலாட்டுப் பாடல்களே இப்பருவமாகும்.

4. சப்பாணிப் பருவம்:
       ஒன்பது மாதக் குழந்தை இரு கைகளையும் சேர்த்துக் கொட்டி ஒலியெழுப்பும் பருவம். தாயர் கூடி நின்று கைகளைத் தட்டும்படி வேண்டுவது.
       பாணி=கை; சப்பாணி=இணைந்த கைகள்

5. முத்தப் பருவம்:
       பதினொரு மாதக் குழந்தையை முத்தம் தர அழைப்பது.

6. வருகைப் பருவம்:
       ஓராண்டில் குழந்தை தளர்நடையிடத் தொடங்கும். அப்போது தாயர் பலவகை இனிய சொற்களால் இங்கு வருக என அழைப்பது.

7. அம்புலிப் பருவம்:
       ஒன்றரையாண்டில் குழந்தைக்கு வான்மதியைக் கையால் சுட்டிக் காட்டி, அம்மதியை இக்குழந்தையுடன் விளையாட வருக என அழைப்பது. இப்பருவம் பாடுவது புலவர்க்கும் கடினம் என அவ்வையார் கூறியுள்ளனர். பிள்ளைக்(கவிக்)கம்புலி புலியாம் என்பது அவர் வாக்கு. இப்பருவத்தில் சாமம், பேதம், தானம், தண்டம் என்னும் நால்வகை உபாயங்களும் வரப் பாடுதல் வேண்டும்.

8. சிறுபறைப் பருவம்:
       இரண்டாம் வயதிலே குழந்தைக்கு விளையாட்டுச் சிறுபறையைத் தந்து, இதைக் கொட்டுக எனக் கூறுவது.

9. சிற்றில் பருவம்:
       மூன்றாம் ஆண்டில் குழந்தை, வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடத் தொடங்கும். தெருவிலே சிறுமியர், மணலால் வீடுகட்டி விளையாடுவர். தன் காலால் அந்த மணல் வீட்டை அக்குழந்தை சிதைத்து விடும். அப்போது அச்சிறுமியர், இனிய மொழிகளால் சிற்றிலை (மணல் வீட்டை)ச் சிதைக்க வேண்டா என்று இரந்து வேண்டுவதாக அமைவது.

10. சிறுதேர்ப் பருவம்:
        நான்காவது வயதில் குழந்தைக்குச் சிறுதேர் செய்து தந்து, அதை உருட்டி விளையாடுக என்று கூறுவது.இவை ஆண்பாற் பிள்ளைத் தமிழிலே பின் மூன்று பருவங்களும் மாறுபடும்.

        இந்தப் பருவங்களையும் பருவத்தின் செயலியல்புகளையும் தொகுத்துப் பிங்கல முனிவர் தம் நிகண்டு நூலிலே கூறியுள்ளனர்.

        பிள்ளைத்தமிழ் நூல்களின் அமைப்புமுறை ஒன்றேயாயினும், புலவர்கள் தம் கற்பனை வளங்களைப் பெய்து, ஒவ்வொன்றுக்கும் தனிச்சுவையும் தனித்தன்மையும் நிறுவி வைத்துள்ளனர்.

        அம்முறையில் புலவர் கவிஞர் பொன்மாரி அவர்கள் இந்நூலிலே மனங்கவர் சொல்லணிகளும் பொருளணிகளும் பல பெய்து, நம் மனம் கொள்ளை போகச் செய்துளார்.

       காப்புப் பருவத்தில், சிவபெருமானை முன் நிறுத்தியுள்ளார். சிவபெருமான் அழிக்கும் கடவுள். அழிக்கும் கடவுளைக் காப்பாகக் கூறுகையில் அக்கடவுளுடைய கொலையும் கொடுமையும் கூறலாகாது என்பது இலக்கண விதி. பெயரும் சின்னமும் ஆகிய மங்கலங்களையே கூறுதல் வேண்டும் என்பது மரபு.

       அம் மரபை ஒட்டியே அக்காப்பினை அமைத்துள்ளது, கவிஞருடைய மரபுவழி தவறாத மாண்பினை எடுத்த எடுப்பிலேயே நமக்குக் காட்டுகின்றது.

“சீர்கொண்ட வளமேவு திருக்கச்சி ஏகம்பன்
     தில்லைப்பொன் அம்பலத்தான்
தென்மதுரைச் சங்கத்துப் புலவரொடும் ஆராய்ந்த
     செந்தமிழ்த் தேர்ச்சியுள்ளான்
பார்கொண்ட பொருளோடு பலகோடி அண்டங்கள்
     பரிவோடு காத்து நிற்பான்
பண்பட்ட உளமேவு பரமந்தன் அடிபோற்றிப்
     பணிவோடு வேண்டுகின்றேன்”

       சிவபிரானுக்குப் பல பெருமைகள் உண்டு. முப்புரம் அழித்தது, தக்கன் வேள்வியின் பொக்க்ம் தீர்த்தது, இமயத்தை வணக்கியது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயினும், கவிஞர் இவற்றை யெல்லாம் அவனுடைய முழுப்பெருமை என்று ஒப்பவில்லை. தென்மதுரைச் சங்கத்திலே, புலவரோடு தானும் ஒரு புலவனாக அமர்ந்து தமிழ் ஆராய்ந்து தேர்ச்சி பெற்றானே அது தான் அவனுக்கு முழுப் பெருமை. தமிழறிவை விடச் சிறப்பு வேறு ஒன்றுமே இல்லை.

     “உம்பர் நாட்டில் கற்பகக்கா ஓங்கு நீழல் இருப்பதினும் தமிழ்க் கவியின்பம் துய்ப்பது மேல்” எனப் பண்டைய புலவர்கள் கூறியுள்ளன ரன்றோ? கவிஞருடைய தமிழ்ப் பற்றினையும், கற்பனை வளத்தையும் இத் தொடக்கத்திலே கண்டு விக்காமல் இருத்தல் இயலாது.

      பழைய மரபிலே புதுப்பாணியை அமைக்கின்ற கவிஞருடைய பேராற்றல், காப்புப் பருவம் முழுவதும் ஒளிவிடுகின்றது.

      “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்பது திருமூலர் வாக்கு. இதையே தம் கடவுட் கொள்கையாகக் கொண்டவர் அறிஞர் அண்ணா. கடவுள் ஒன்று; அக் கடவுளை வழிபடும் வழிகள் பல. கடல் ஒன்று; அக்கடலை யடையும் நதிகள் பல. அக்கடவுளையடையப் பல வழிகள் உண்டு. அருளாளர் பலர் அவ்வப்போது தோன்றித் தத்தமக்குப் புலப்பட்ட வண்ணம் பல வழிகளை வகுத்துள்ளனர். அனைத்து வழிகளும், ஆண்டவன் என்ற ஓர் இலக்கையே நோக்கிச் செல்வன. இந்த எளிய உண்மையை உணர்ந்து கொண்டால், பூசல் எது? ஏசல் ஏது?

      காப்புப் பருவத்தில் சிவன், முருகன், கண்ணன் முதலிய நம் நாட்டுக் கடவுளரோடு கடவுள் வழியுணர்த்திய ஏசு, முகம்மது, அருகன், புத்தன், காந்தி முதலிய அருளாளர்க்கும் வணக்கம் கூறியுள்ளமை கவிஞருடைய ஒருமைப்பாட்டுணர்ச்சிக்கு எடுத்துக் காட்டு.

      வள்ளுவர் காப்பும், தமிழன்னை காப்பும் கவிஞருடைய மொழிப்பற்றுக்குச் சான்று பகர்கின்றன.

      ஒரு செடியின் நுனியைக் கிள்ளி விடுகிறோம். உடனே அச்செடி கிள்ளிய இடத்தில் பல பிரிவுகளாக, முன்னிலும் வேகமாக வளரத் தொடங்குகிறது. தனக்கு ஏதோ எதிர்ப்பு அல்லது தடை உள்ளது என்பதை உணரும் போது, ஓரறிவுயிர் கூட விழித்தெழுகிறது; வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. அதைப்போல, மனிதனுடைய முயற்சிகளுக்கும் தடை ஒன்று இருப்பதாக உணரும் போதுதான் அவன், தன் முரற்சியில் உள்ள குறைகளை நீக்கி முன்னேறத் துடிக்கிறான்.

      ஆத்திகத் துறையிலே முயல்பவனுக்கு ஒரு தடை ஏற்படும் போதுதான் அவன், தன் பாலுள்ள — தன் வழியிலுள்ள — மூட நம்பிக்கை முதலிய குறைகளை நீக்கி, பகுத்தறிவை வளர்திது, தன் கடவுட் கொள்கையைத் தூய்மையாக்கி முன்னேற முடியும். ஆதலால் நாத்திக வாதம் ஆத்திகத்துக்குப் பகையன்று; அதைத் தூண்டிவிடும் தூண்டுகோல். காப்புப் பருவத்தின் இறுதியில்  வெண்தாடி வேந்தர் ( ஈ. வே. ரா. ) வணக்கத்தை, இக் கருத்தை வலியுறுத்தவே கவிஞர் அமைத்துள்ளார் போலும்!

      “அம்புலி புலி” என்று அவ்வை பயங்காட்டிய பருவத்திலே, கவிஞர் மிக எளிதாக வெற்றி நடை
போட்டுள்ளார்.

       முன்னரே கூறியபடி இப்பருவத்தில் சாம பேத தான தண்டம் என்னும் நால்வகை உபாயங்களைக் கையாளல் வேண்டும். சாமம் என்றால் ஒப்புமை. அம்புலிக்கும் அண்ணாவுக்கும் ஒப்புமையாகக் கவிஞர் காட்டும் ஓவியம் வியத்தற்குரியது.

       அம்புலி வானில் எழுந்து இருளோட்டுகிறது. அண்ணாவோ உதய சூரியன் சின்னத்தினால் உலகின்  (மடமை) இருளை ஓட்டுகிறார்.

       அனைவர்க்கும் மகிழ்வூட்டும் மதி அம்புலி. அண்ணாவின் மதியும் (அறிவும்) எல்லோர்க்கும் மகிழ்வூட்டுவது.

       இளம் பரிவத்தினரை மோகவலைப்படுத்துவது அம்புலி. அண்ணாவும் இளங்காளையரை வசியப்படுத்தித் தம்பியராகச் செய்கிறார். அம்புலி மாலையிலே (இரவிலே) வருகிறது. உலகம் அம்புலியின் நிலவமுதம் துய்த்து மகிழ்கின்றது. அண்ணவும் மாலையிலே (மேடைக்கு) வருகிறார். தம் வாயூறு சொல் லமுதினை மக்கள் வாயூறத் தருகின்றார்.

        இவ்வாறே ஒவ்வொரு பாடலையும் எடுத்து ந்யத்தை விளக்கப் புகுந்தால், அதுவே தனி நூலாகி விடும். பதச் சோறாகத் தந்த ஒன்றிரண்டு கொண்டு, கவிதையின் பக்குவத்தைக் கற்றவர்களே உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

        நவில் தொறும் இந்நூலின் ந்யம், தொட்டனைத் தூறும் மணற் கேணியாக உள்ளது என்றால், அது உபசார வழக்கன்று என்பதை இந்நூலைக் கற்பார் மறுத்தற் கியலாது.

        தமிழ் மரபு அறிந்து, ஆழ்ந்து கற்ற பெரும்புலவர்களே, இத்தகைய செவ்விய சிறு காப்பியங்களைச் செய்ய முடியும். கவிஞர் பொன்மாரி அவர்கள் இந்நூலை வழங்கியதன் மூலம் தமிழ்க்கவியுலகிலே தமக்கெனத் தனியிடம் அமைத்துக் கொண்டார் என்பது உறுதி.

        கவிஞர்கள் பெருகிவிட்ட இந்நாளிலே (நல்ல) கவிதைகள் மிக மிக அருகி விட்டன. கவியுலகம்
பாலைவனமாகி விட்டது.
 
        அப்பாலை நடுவிலே, இத்தகைய பாலைவனச் சோலை ஒன்றைக் காணும் போது என் போன்றோர் எய்தும் இன்பம் சொல்லில் அடங்குவதன்று.
 
 சொன்மாரி பெய்திதயம் தொட்டுச் சுவையேற்றும்
பொன்மாரி என்னும் புலவர்பிரான் — என்னனையார்
கண்ணாம் எனப்போற்றிக் காதலிக்கக் கட்டுரைத்தான்
அண்ணாபிள் ளைத்தமிழ் ஆய்ந்து
.

கோவிலூர்,
                                                                                                                                                அரங்க. சீனிவாசன்.
12–6–72    

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>