19.முத்தப் பருவம்
முத்தப் பருவம்
பற்றுக் கெடுக்கின்ற பாதம் நினைக்கின்ற
பக்தர் பிறப்பளிக்கும்
பாசங் கெடத்தினம் பாதம் பதிக்கின்ற
பாதைத் துகள்படிந்தும்
சுற்றம் வளர்க்கின்ற அன்பு சிறக்கின்ற
தூய மனங்கனிந்து
தொண்டு செயத்தினம் சுற்றி யலைந்தகால்
தூசு படமிதித்துக்
கற்றுச் சுவைக்கின்ற கடிதம் எழுதுங்கை
கட்டிப் பிடித்தபடி
கண்ணைக் கவர்கின்ற காந்தம் பிறக்கின்ற
கண்கள் சிமிட்டாமல்
முற்றும் இனிக்கின்ற மோனை அருக்கும்வாய்
முத்த மளித்தருளே
முத்துக் கருத்துக்கள் தத்திக் குதிக்கும்வாய்
முத்த மளித்தருளே
அத்திப் பழம்பிட்டால் அத்தனை யுஞ்சொத்தை
ஆளும் இனத்தவரை
அன்று நீகிண்டல் அடித்தத னாலதன்
ஆளம் புரிந்துகொண்டோம்
கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டென்று
காட்டும் விதத்திலடர்
காட்டுக் கொடிசிக்கிக் காளை திமிர்கின்ற
காட்சி வடித்ததனால்
சித்தம் விடுதலை தேவையென் றார்க்கின்ற
தீரன் நினைப்பூட்டும்
சிற்பி கதைசொல்லிச் சிந்தனை யாற்றலைத்
தீட்டி வளர்த்தவுன்றன்
முத்துக் கருத்துக்கள் தத்திக் குதிக்கும் வாய்
முத்த மளித்தருளே
முற்றும் இனிக்கின்ற மோனை யடுக்கும்வாய்
முத்த மளித்தருளே
பொன்மஞ்சட் பூசுணைப்பூ பெருமை கொண்டு
புவிமீது மகிழம்பூ கிடத்தல் கண்டு
பொடிப்பூவே நீயுமொரு பூவா போபோ
போட்டிக்கு வருவாயோ ஐயோ பாவம்
என்னழகு வடிவத்திற் கிணையா வாயோ
எனக்கேலி பேசியதாம் ஆணவத்தால்
எதிராளி உருவெள்ளி எடைபோட் டுப்பின்
இழிவடைய நேர்ந்தகதை இன்னுங்கேளிர்
மின்னலிடைப் பெண்ணொருத்தி அந்தப் பூவை
மிகவாட வைத்தாளாம் சாணி மீது
விரிகூந்தல் மணம்பரப்ப மகிழம் பூவை
மேலாக வைத்தாளாம் தலையின் மீது
பொன்முடிப்பைக் கேலிசெய்த பொரிமூட் டைபோல்
பூசுணைப்பூ பேசியதாய் உருவ கித்தே
பொருள்திரட்டும் தேர்தலணி இரண்டு பற்றிப்
புரிவித்தாய் அண்ணாநீ முத்தந் தாவே
தரைக்குள்ளே இருக்கிறது தங்கம் சின்னத்
தகரமிக ஒளிர்கிறது தரையின் மேலே
தம்பட்டம் அடிக்கின்றார் தாழ்ந்தோர் மேலோர்
தாமிருக்கும் இடந்தெரியா திருக்கின் றார்கள்
கரைக்கடங்கா ஆள்கடலுள் முத்துத் தூங்கும்
கழிமணலில் வெறுங்கிளிஞ்சல் பல்லைக் காட்டும்
கற்றறிந்த பெரியவரோ கதைக்க மாட்டார்
கவைக்குதவாச் சிறியவரோ அடங்க மாட்டார்
விரைக்கின்ற வெண்ணெயிலும் சுண்ணாம் பேதான்
வெளுத்திருக்கும் அதைத்தின்ன விரும்ப லாமோ
மேலோரின் அடக்கத்தைப் புரியா தேகி
வெறுங்கூச்சல் போடுநரை வியக்க லாமோ
கரைக்கின்ற காகங்கள் போல எந்தக்
கானத்துக் குயிலாலும் கரைத லாமோ
கருத்துள்ள இவைபோன்ற மொழிகள் பேசும்
கனிவாயால் எமதண்ணா முத்தந் தாவே
நாடுகிறார் கழகத்தை நசுக்கித் தள்ள
நாடாள்வோர் ஆராய்ச்சி நடத்து கின்றார்
நமக்குள்ளே சிறுபிணக்கு நேர்ந்தால் கூட
நாளெல்லாம் அதுபற்றிப் பேசு கின்றார்
ஓடுகிற மலையாறு விடருக் குள்ளே
ஓரிடத்தில் மறைந்தாலும் மீண்டுந் தோன்றும்
ஊற்றெடுத்த மலையாற்றை ஒழித்த லாமோ
உவமைசில சொல்லுகிறேன் தம்பி கேள்நீ
காடுகளில் ஓடும்மான் வேட்டை யாடிக்
கடித்துண்ணும் புலிபோன்ற மனித ருண்டு
கண்பார்த்த நாறுபிணங் கொத்தித் தின்னும்
கழுகைப்போல் பசிதீர்க்கும் மனித ருண்டு
கூடுசளி கழகத்திற் குண்டென் றாலும்
கொடுநோயில் அதுபட்டுக் கொள்ள வில்லை
குறிப்பறிவாய் குறிக்கோளில் முன்னே றென்று
கூறியவா யிதழ்முத்தங் கொடுப்பா யண்ணா
இப்போது கவியெழுதும் எளுத்தாளர் கவிதையென
என்னென்ன வோசெய்கிறார்
எதுகையும் மோனையும் ஏன்வேண்டும் கவியெழுத
இலக்கணந் தேவைதானா
தப்பென்ன புதுக்கவிதை தமிழுக்குத் தருகின்றோம்
தளையென்னுந் தளையறுத்துச்
சாதிப்போம் என்கின்றார் தடம்மாறிச் செல்கின்றார்
சட்டைக்கும் அளவு வேண்டும்
ஒப்பேதும் இல்லாத கடவுளையும் வடிவாலே
உணர்கின்றோம் பொருள்களெல்லாம்
உருவத்தால் புரிகின்றோம் அச்சுமாறா உண்மையையும்
உணர்கின்றோம் இலக்கணத்தோ
டெப்போதும் கவிதைக்கண் எழில்சேர்க்க இருந்தாலும்
இயல்பான பேச்சிலேயும்
எதுகைக்கும் மோனைக்கும் இடந்தந்த அண்ணாநீ
எமக்கினிய முத்தமருளே
வித்தகர் இராசாஜி வித்தி முளைத்தவொர்
வெய்ய குலக்கல்வியால்
மீண்டும் குலப்பித்து வீறுறு மென்றதை
வெட்டித் தகர்த்தொருபோர்
சித்தூ ரிணைத்திட ம.பொ.சிவஞானம்
செய்த கிளர்ச்சியுடன்
சித்த மிணைந்திட நேரு சினந்திது
முட்டாள் தனமெனவே
குத்திய சொல்லம்பைக் கூடி யெதிர்த்திடும்
கோதறு மற்றொருபோர்
கூறத் தகும்பெயர் கல்லக் குடியெனக்
கூற வுரைத்தொருபோர்
முத்தமிழ்த் தன்மானம் மூளப் புரிந்தவ
முத்த மளித்தருளே
மும்முனைப் போருக்கு மொத்தத் தளபதி
முத்த மளித்தருளே
தூங்கிடும் மக்களின் தூக்கங் கலைத்துமெய்ச்
சோம்பல் முறித்தெழவே
தூண்டிய சொல்வன்மை தோற்றி வளர்த்துமெய்த்
தொண்டு புரிந்தவன்நீ
ஏங்கிடுஞ் சொல்லுன்றன் நாவி லுதித்திட
எண்ணி மயங்கிலைநீ
ஏவு கணைபோல ஏடு புறப்பட
எழுதி விடுத்தவன்நீ
ஓங்கிடும் நன்மேடைப் பேச்சுக் கலைவளர்த்
தோம்பி உயர்ந்தினைநீ
ஒன்னார் களுங்கூட ஒத்துக் கொளுமுரை
யாற்ற லுயர்ந்தவன்நீ
மூங்கைக்குஞ் சொல்லாடல் மோகங் கொடுத்த்நீ
முத்த மளித்தருளே
மும்முனைப் போருக்கு மொத்தத் தளபதி
முத்த மளித்தருளே
தம்மருந் தாயிங்குத் தாழ்வுற் றிழிந்திடத்
தஞ்ச மடைந்தவளைத்
தாங்கி மதித்தாளும் தான மவட்கெனத்
தந்தனர் வெட்கமிலார்
நம்மொழி யோடிந்த ஞால மிணைத்திடும்
நன்மொழி யாங்கிலமும்
நாடிப் பயில்கையில் நாட்டுப் பொதுமொழி
நாடியவ் விந்தியுடன்
மும்மொழி கற்றுக்கொள் என்று முடுக்கினர்
முன்னவ ராட்சியிலே
முன்னவ நீவந்து ஆளமுனைந்ததும்
முத்தமிழ் நன்னாட்டில்
மும்மொழித் திட்டத்தை மூடிப் புதைத்தனை
முத்த மளித்தருளே
மும்முனைப் போருக்கு மொத்தத் தளபதி
முத்த மளித்தருளே
காட்சிக் கரிதாய்ச் சேலத்தில்
கரும்பொன் னாலை அமைப்பித்தும்
கடல்சார் தூத்துக் குடியின்கண்
கப்பல் கட்டுந் துறைசெய்தும்
மாட்சிக் குரிய மனுநீதி
வழங்குந் திட்டம் நிலப்பட்டா
வளிக்குந் திட்டம் கூவநதி
மணக்கப் படகை விடுந்திட்டம்
நீட்சிக் காலக் கடன்திட்டம்
நிகழும் இவைபோல் பலசெய்தும்
நிலமும் தொழிலும் வளமாக்கி
நிரப்புக் கொடுமை தீர்த்தாளும்
ஆட்சித் திறமை மிக்கவரின்
அண்ணா முத்தம் அருள்வாயே
அறிவுச் சுடரே அன்புருவே
அண்ணா முத்தம் அருள்வாயே