14.முகவுரை
முகவுரை
அன்பு காட்டி ஆர்வமூட்டி, பண்புகூட்டிப் பகுத்தறிவை நாட்டிக் கோடிக்கணக்கான இதயங்களில் குடிகொண்ட அறிஞர் அண்ணா குழந்தையாக வரவேண்டும் கொள்ளை இன்பந் தரவேண்டும் என ஆசை கொண்டேன். அந்த ஆசையே அண்ணா பிள்ளைத் தமிழாக மலர்ந்தது.
அறிஞர் அண்ணா மறைந்த ஆறுமாதங்களுக்குள் இது என்னால் ஆக்கப்பட்டது. எனினும் பதிப்பாகி வெளியாகப் பல்லாண்டுகள் கடந்து விட்டன.
இதன் முதற்பதிப்பிற்கு முதல்வர், கலைஞர், டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கிய அணிந்துரையும், தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராகிய அரங்க சீனிவாசன் அவர்கள் வழங்கிய முன்னுரையும் அப்படியே மீண்டும் இணைக்கப் பட்டுள்ளன. அவற்றுடன் காஞ்சி ‘உரைகல்’ வழங்கிய மதிப்புரையும் இணைக்கப் பட்டுள்ளது.
பொன்மாரி என்ற புனைபெயரில் நான் வெளியிட்ட அந்நூல், காலப் போக்கில் என் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்களோடும் அறிஞர்தம் ஆய்வுக் கருத்துக்களை ஓட்டிச் செய்யப்பட்ட திருத்தங்களோடும் இப்போது மீண்டும் மலர்கிறது.
இந்த அண்ணா பிள்ளைத் தமிழும், என் இரண்டாவது நூலாக வெளிவந்துள்ள கலைஞர் ஆற்றுப்படையும் சிற்றிலக்கியச் சிறப்பெல்லாம் கொண்டவையாக ஏற்கப்படாவிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கால வரலாற்றுக் காப்பியங்களாக வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்.
தமிழ் ஆர்வலரும் கழகத் தோழரும் கற்றுப் போற்ற நேரின் அதுவே உண்டி கொடுத்த தமிழுக்கு நான் செய்த நன்றிக்கடனாகும்.
அன்பன்
துரை.பொன்னுசாமி