13.மதிப்புரை
காஞ்சி இதழ் (22-4-73)
அண்ணா பிள்ளைத் தமிழ்
விலை ரூ. 2–00
ஆசிரியர்: கவிஞர் பொன்மாரி
வெளியீடு: புலவர் பண்ணை, பாரதிநகர்,
சின்னாளப்பட்டி, மதுரை மாவட்டம்.
கவிஞர் புலவர் பொன்மாரி, அவர்கள் பழமை மரபு வழி நின்று புதுமையாக ஐந்து கோடித் தமிழ்
நெஞ்சங்களில் வீற்றிருக்கும் தமிழகத் தானைத் தலைவர், மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு “அண்ணா பிள்ளைத் தமிழ்” என்னும் நூலைப் படைத்துப் பெருமை பெற்றுள்ளார்கள்.
தமிழர்களை வழிநடாத்தி வந்த தமிழ்த் தாயின் தலைமகன் அறிஞர் அண்ணாவைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கவிஞர் அவர்கள் பாடியது மிகப் பொருத்தமான பணியேயாகும். நூலைப் படித்து வருகையில் ஒவ்வொரு சொல்லிலும் அண்ணா அவர்களின் திருவுருவத்தைக் காண முடிகிற தென்றால் — அது ஆசிரியரின் கைவண்ணத்தால் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“மாற்றார் மாட்டுங் குணங் கண்டால்
மதிப்பா யேற்றாய் வாராயோ
மாற்றான் தோட்ட மல்லிகையும்
மணக்கும் என்றாய் வாராயோ.”
“அம்புலீ ஆடவாவே
அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை அண்ணனுடன்
அம்புலீ ஆடவாவே”
இவை நம் நெஞ்சை ஈர்க்கும் சில வரிகள்!
முத்தான முகப்போடு சத்தான தமிழில், எத்திக்கும் புகழ் மணக்க, முதல்வர் கலைஞர் அவர்கள் தமது அணிந்துரையை நல்கியுள்ளார்கள். கவிஞரின் பொன்னூஞ்சலுக்குச் சாற்றிய வண்ணப் பட்டாடைதான் முதல்வர் கலைஞரின் அணிந்துரை என்பது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.
இந்நூலை தமிழரும், தமிழ்ச் சமுதாயமும் ஏற்றுப் பயன்கொள்ளுமாறு விழைகின்றோம்.
–எம்.எம்