துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

17.தாலப் பருவம்

தாலப் பருவம்

நாடு செழிக்கும் மழையருளால்
        நண்பு செழிக்கும் உணர்வதனால்
    நாகு செழிக்கும் வளமையினால்
        நன்மை செழிக்கும் வாய்மையினால்
மாடு செழிக்கும் உழைப்பதனால்
        மாண்பு செழிக்கும் நன்மையினால்
    மாது செழிக்கும் பெண்மையினால்
        மகிழ்வு செழிக்கும் ஈவதனால்
வீடு செழிக்கும் மனைவியினால்
        மேன்மை செழிக்கும் தொண்டுகளால்
    வேந்து செழிக்கும் நீதியினால்
        வென்றி செழிக்கும் ஆள்வினையால்
ஏடு செழிக்கும் நீயெழுதின்
        எங்கள் தலைவா தாலேலோ
    எதையும் தாங்கும் இதயத்தோய்
        இனியாய் அண்ணா தாலேலோ
தெளிவு சிறக்கும் மொழிகளிலே
        திணிவு சிறக்கும் பொருள்களிலே
    திறமை சிறக்கும் செயல்களிலே
        தெரிவு சிறக்கும் வழிகளிலே
நெளிவு சிறக்குஞ் சுளிபட்டு
        நெகிழ்வு சிறக்கும் பேசுவதில்
    நேர்மை சிறக்கும் ஆளுவதில்
        நெறிகள் சிறக்கும் வாழுவதில்
களிப்புச் சிறக்கும் பழகுவதில்
        கருணை சிறக்கும் வழங்குதலில்
    கணிப்புச் சிறக்கும் முடிவுகளில்
        கனிவு சிறக்கும் ஏழையிடம்
எளிமை சிறக்கும் தோற்றத்தில்
        எங்கள் முதல்வா தாலேலோ
    எதையுந் தாங்கும் இதயத்தோய்
        இனியாய் அண்ணா தாலேலோ

கரவைத் தெரியா நெஞ்சத்தோய்
        கல்விக் கடலே கலைமன்னா
    கருத்திற் பெரியார் கான்முளையே
        கன்னித் தமிழா தென்னாட்டின்
மரபை யறிந்தே எல்லாரும்
        மகிமை சிறந்தே வாழ்வெய்த
    வழிகள் புரிந்தே வாழ்வாங்கு
        வாழ்த லறிந்தாய் கன்னிமராப்
பரவை கடந்த அறிவோய்நீ
        பண்பு கிடந்த வடிவோய்நீ
    பகைமை கடந்த செயலோய்நீ
        பணிவு கிடந்த சொல்லோய்நீ
இரவைப் பகலாய்க் கொண்டேநீ
        எழுதிக் குவித்தாய் தாலேலோ
    எதையுந் தாங்கும் இதயத்தோய்
        இனியாய் அண்ணா தாலேலோ
தூங்குக தூங்கிற் செயற்பால
        சொல்லிப் போனவன் நீதானோ
    தூயதி ருக்குறள் தெளியாது
        சோம்பிய பேரைத் தெளிவித்தாய்
ஓங்கிய குன்றப் பொதியத்தில்
        ஒண்டமி ழாய்ந்தவன் நீதானோ
    ஓதிய நன்மொழி மென்மேலும்
        ஓங்கிட நற்பணி செய்தாயே
ஆங்கில மோகம் பெரிதாகி
        அறிவு பெருக்கற் கதுவொன்றே
    ஆகுமெ னச்சொல் முதியோரின்
        அறிவு மயக்கந் தெளிவித்தே
ஈங்கியல் பாகத் தமிழ்மூலம்
        அதையுங் கற்கும் வழிசெய்தாய்
    எதையுந் தாங்கும் இதயத்தோய்
        இனியாய் அண்ணா தாலேலோ
வாங்கு வளைக்கர மாதர் முகத்தொளி
        வானின் மேலாட
    வான மளந்திடு மாட மிடைந்தது
        வற்றா வளக்காஞ்சி
தீங்கு தவிர்த்தொளி செய்யு மதங்களின்
        செம்மை விளங்குவது
    தெய்வம் பரவிடத் தேசம் பலவரும்
        சீரார் பல்கோவிற்
பாங்கு மிகுந்தது பட்டு மலிந்தது
       பைம்பொன் தேரோடும்
    பாவிப் பரவிய வீதித் திருநகர்
       பாவா ணர்போற்றும்
ஓங்கு பழம்பதி யோங்க வுதித்தவா
       தாலோ தாலேலோ
    உலகத் தமிழ்மா நாடு நடத்தினை
       தாலோ தாலேலோ

ஒருவற் குரிய தீண்டா நோய்பட
       உலகுக் கொளிதந்த
    உத்தமர் காந்தி சத்திய வழியில்
       உண்மைத் தொண்டாற்றி
வெருவற் குரிய வெள்ளைய ராட்சியை
       வீழ்த்தக் காங்கிரசை
    மேவிய வைக்கம் வீரர் பிரிந்தே
       வேறெவ் வினத்தாரும்
மருவற் கரிதாய்ப் பதவி வகித்துயர்
       பார்ப்பன ருக்கெதிராய்
    வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவம்
       வழங்கத் தென்னாட்டில்
உரிமை முழக்கிய பெரியார் கான்முளை
       தாலே தாலேலோ
    உலகத் திமிழ்மா நாடு நடத்தினை
       தாலோ தாலேலோ

புலவர் படைக்கும் புலவர் படைக்கும்
       பொருது களந்தந்தாய்
    பொருது மலைக்கடல் பொருது கடக்கும்
       புவனக் கடல்கண்டாய்
அலகில் சுவைத்தீங் கவிதை யரங்கும்
       அறிஞர் கருத்தாயும்
    அரங்கு மமைத்தங் கமுது படைத்தாய்
       அறிஞர்க் கறிஞாநீ
இலகு தமிழ்த்தொண் டினிது புரிந்தார்க்
       கேற்ற சிலை வைத்தாய்
    எழிலார் கடலின் அலைபாய் திடலின்
       ஏரார் சென்னைக்கண்
உலக மனைத்தும் ஒருங்கு திரட்டினை
       தாலே தாலேலோ
    உலகத் தமிழ்மா நாடு நடத்தினை
       தாலே தாலேலோ
அளிபெற் றுயரும் எளியர்க் கருளும்
       அறிவுக் கொடைவள்ளல்
    அமுதத் தமிழைக் குமுதச் செவ்வாய்
       அருளுங் கொடைவள்ளல்
விளிவுற் றாலும் வெள்ளைய ராட்சியை
       வீழ்த்திப் பாகிஸ்தான்
    விடுவிப் பேனென் றுறுதி முழங்கிய
       வீரர் சின்னாவே
தெளிவுற் ற்யரும் மொழிபேர்ப் பாளா
       தீரா வீராவுன்
    சீரிய கண்கள் ஆசிய நாட்டைத்
       திருப்பு மெனச்சொன்னார்
ஒளிபெற் றுயரும் விழிகட் குரியாய்
       தாலே தாலேலோ
    உலகத் தமிழ்மா நாடு நடத்தினை
       தாலே தாலேலோ

நீவேறு செந்தமிந் வேறில்லை
       நீவேறு தென்னகம் வேறில்லை
    நீவேறு நன்னெறி வேறில்லை
       நீவேறு கச்சியும் வேறில்லை
பாவேறுன் பண்புகள் வேறில்லை
       பாடாத பாவேறு பாவில்லை
    பாடாத நாவேறு நாவில்லை
       பாடாத நாளொரு நாளில்லை
பூவேறுன் பொன்னடி வேறில்லை
       பூணாத பூவேறு பூவில்லை
    புகழன்றோ நீவேறு வேறில்லை
       போற்றாத வாயொரு வாயில்லை
நாவேறு தாலேலோ தாலேலோ
       நல்லவ தாலேலோ தாலேலோ

தெனாட்டுப் பெர்னாட்சா தாலேலோ
       தேனூறுஞ் சொல்லாளா தாலேலோ
    தென்னாட்டுக் காந்தியே தாலேலோ
       சிந்தனைச் சாக்ரட்டீஸ் தாலேலோ
இந்நாட்டுக் கிங்கர்சால் தாலேலோ
       இதயத்தில் லிங்கனே தாலேலோ
    எல்லார்க்கும் அண்ணாவே தாலேலோ
       எழுத்தாளன் எமிலியே தாலேலோ
அன்புக்குத் தாயுள்ளந் தாலேலோ      
       அறிவுக்குப் பிளேட்டோவே தாலேலோ
   அருளுக்கு வள்ளலார் தாலேலோ
       அடலேறு செளமியா தாலேலோ
நன்னாட்டுத் தலைவாநீ தாலேலோ
       நடராசன் மைந்தனே தாலேலோ
    நாடாள வந்தவா தாலேலோ
       நல்லவா தாலேலோ தலேலோ

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>