16.செங்கீரைப் பருவம்
செங்கீரைப் பருவம்
கையர் செயல்பல கண்டு வெறுத்தெதிர்
காணுந் துணிவோடு
கைகள் பதித்தொரு காலை மடக்கியொர்
காலை எடுத்தூன்றிப்
பைய எழுந்திடப் பார்க்கு மெனச்சொலிப்
பார்த்துப் பசியாறிப்
பக்கத் திருப்பவர் ஒக்க மகிழ்ந்திடப்
பையத் தலையாட்டி
ஐய மறப்புவி யாளப் பிறந்தவன்
ஆடுக செங்கீரை
அண்ணாத் துரையெனும் அன்பு நிறைந்தவன்
ஆடுக செங்கீரை
பட்டப் பகலினிற் கொள்ளை யடிப்பதைப்
பார்த்து நகைத்தனையோ
பஞ்சம் மிகுந்திடப் பாவம் மலிந்திடப்
பார்த்தே அழுதனையோ
வெட்ட வெளிச்சமாய் லஞ்சம் பெறுநரால்
வெட்கிக் குனிந்தனையோ
வெம்பிப் புழுங்குநர் துன்பந் துடைத்திட
வேண்டி நிமிர்ந்தனையோ
இட்ட பசுப்பாலும் தண்ணீர் கலந்ததென்
றெள்ளி யுமிழ்ந்தனையோ
இன்பந் தமிழ்ச்சுவை எண்ணிக் கசிந்திடும்
எச்சில் விழுங்கினையோ
அட்ட திசைகளும் எட்டும் புகழவன்
ஆடுக செங்கீரை
அண்ணாத் துரையெனும் அன்பு நிறைந்தவன்
ஆடுக செங்கீரை
சாதிப் பெயர்சொலிப் பேதம் வளர்ப்பதைச்
சாட எழுந்தனையோ
சாமி பெயர்சொலிச் சண்டை யிடுவதைச்
சாட எழுந்தனையோ
நீதி நிலைத்திடக் கட்சி வளர்த்திட
நெஞ்சில் நினைத்தனையோ
நேர்மை நிலைத்திட ஆட்சி புரிந்திட
நெஞ்சில் நினைத்தனையோ
ஓதி யுணர்ந்திட நூல்கள் படைத்திட
உள்ளம் விரும்பினையோ
ஓதற் கரியன ஓதி யுயர்ந்திட
உள்ளம் விரும்பினையோ
ஆதி முதற்றமிழ் ஆளப் பிறந்தவ!
ஆடுக செங்கீரை
அண்ணாத் துரையெனும் அன்பு நிறைந்தவ!
ஆடுக செங்கீரை
எத்தர் எளியரை எத்திப் பிழைப்பதை
எண்ணிச் சுளித்தனையோ
ஏழை இரந்திட வச்சர் கரந்திட
எண்ணங் கரைந்தனையோ
பித்தர் பிதற்றலும் பேதை உளறலும்
பேசத் துடித்தனையோ
பேடித் தனங்கெட வீரஞ் சிறந்திடப்
பேச முயன்றனையோ
கத்திக் கதறியே இந்தி புறமிடக்
காலை உதைத்தனையோ
கட்சிப் பெயர்சொலிக் காசு குவிப்பதைக்
கண்டு வெறுத்தனையோ
அத்தன் அனையெனத் தொத்தா வளர்த்தவ!
ஆடுக செங்கீரை
அண்ணாத் துரையெனும் அன்பு நிறைந்தவ!
ஆடுக செங்கீரை
நாடக வல்லுந நற்கலை வாணா என்கோயான்
நாடுதி ருத்திய நல்லறி வாளா என்கோயான்
நாடகத் தெண்ணிய நற்குணக் குன்றே என்கோயான்
நானிலங் காவல நாவல பாவல என்கோயான்
ஏடகத் துள்ளன எண்ணகத் துள்ளவ என்கோயான்
என்னகத் துள்ளவ இன்னருள் நல்லவ என்கோயான்
ஆடகப் பொன்னுடல் ஆடிடஆடுக செங்கீரை
அண்ணனே முன்னவ ஆடுக செங்கோ செங்கீரை
தம்பியெ னச்சுவை சாரவ ழைத்தா யென்கோயான்
தன்னையி கழ்ந்தவர் தாங்கிம தித்தா யென்கோயான்
வெம்பிவெ தும்பிய பேரைய ளித்தா யென்கோயான்
வேறுக ருத்தவர் வீழவு ரைத்தா யென்கோயான்
தெம்புகொ டுத்தொளி செய்யுமு கத்தா யென்கோயான்
தெள்ளுத மிழ்ச்சுவைத் தேனைய ளித்தா யென்கோயான்
அம்புவி யாண்டவ ஆடுக செங்கோ செங்கீரை
அண்ணனே முன்னவ ஆடுக செங்கீரை
நன்னாடு வளமோடு நாணாளும் மேலோங்க
நம்நாடு தோற்றுவித்தாய்
நாளந்தா நிகரான பல்வேறு கலையாய்ந்த
பன்னாடு கனிவோடு பாராட்டி விருந்தோம்பிப்
பட்டங்கள் சூட்டவங்குன்
பண்பாலும் கருத்தாலும் பல்காலும் அவர்தம்மைப்
பாசத்தால் ஆர்த்துவந்தாய்
முன்னாடு செழித்தோங்க மூவேந்தர் முடியாட்சி
முறையோம்பிக் காத்தவாறு
முதல்வரா யிந்நாட்டில் முட்டின்றிக் குடியாட்சி
முறையோம்பிக் காத்துவந்தாய்
தென்னாடு தமிழோடு கண்ணாகக் கொண்டவா
செங்கீரை யாடியருளே
தேனைப் பழிக்கின்ற தித்திக்குந் தமிழண்ணா
செங்கீரை யாடியருளே
அன்னைத் தமிழ்நாட்டில் அரசாளு மிந்தியென
அஞ்சாது மாணவர்கள்
அரசோடு போராடி அடிபட்டும் சுடுபட்டும்
அனல்பாய்ந்துஞ் சாக வாண்ட
முன்னை அரசாளர் முடிசாயப் பள்ளிகளில்
முடிவாக இந்திபோக்கி
முன்னாளில் மதராசென் முரணான பேர்மாற்ற
மொய்ம்புண்ணா நோன்பு நோற்றுத்
தன்னைப் பலிதந்த சங்கர லிங்கத்தின்
தணியாத ஆசைதீரத்
தமிழ்நாடென் றரும்பேரைத் தந்திங்கு பேர்பெற்ற
தலைவனே தரணிபோற்றச்
சென்னைமா நிலம்போற்ரும் தி.மு.க தந்தவா
செங்கீரை யாடியருளே
தேனைப் பழிக்கின்ற தித்திக்குந் தமிழண்ணா
செங்கீரை யாடியருளே
புரைபட்ட சமுதாயப் பொல்லாங்கு போக்கற்குப்
புதிதாகக் கதையாத்தவா
புராணத்துப் புளுகிற்குப் புனுகிட்டு மூடாது
பொய்புட்டுப் புட்டுவைத்தே
உரையாடல் முறைமூலம் உலகோரின் அறியாமைக்
குலைவைத்துக் கொதிவைத்தவா!
உண்மைக்கும் நன்மைக்கும் உழைக்கின்ற தன்மைக்கும்
ஒருபோதும் முரணாதவா!
தரைமீது நிகரில்லாத் தமிழ்மூலம் மக்களினந்
தடுமாற்ற மின்றிவாழத்
தரமான வசனத்துத் தகைசான்ற கதையாக்கித்
தன்னாற்றல் தோற்றுவித்துத்
திரைக்காட்சிக் கலையோங்கத் திருப்பத்தைத் தந்தவா!
செங்கீரை யாடியருளே
தேனைப் பழிக்கின்ற தித்திக்குந் தமிழண்ணா
செங்கீரை யாடியருளே.
உய்விற்கு வழியாக ஒருகோடி தெய்வத்தை
உண்டாக்கி நிலைநாட்டினார்
ஒவ்வாத மதசாதி ஒழியாத தீண்டாமை
உலகத்திற் பலகூட்டினார்
மெய்காணும் அறிவிற்கு வினவாமை என்றின்ன
வெவ்வேலி போட்டுவைத்தார்
விடியாத இருளிற்கு விடிவெள்ளி போல்வந்து
விடைகாணும் ஆவலாலே
அய்யத்தைக் கேட்கின்ற அறிவிற்கு நாத்தீக
அடைதந்து பழிதூற்றினார்
அறிவிற்குப் பொருந்தாத ஆகாத கதைகட்டி
அறியாமை அரசோச்சிடத்
தெய்வத்தைத் துணைநாடும் தீயர்க்குப் பகையாளா
செங்கீரை யாடியருளே
தேனைப் பழிக்கின்ற தித்திக்குந் தமிழண்ணா
செங்கீரை யாடியருளே!