23.சிற்றில் பருவம்
சிற்றில் பருவம்
ஊரூர் தோறும் நாடோறும்
உண்மை ஓங்கத் தளராமல்
உயர்வைக் காணத் தளராமல்
ஓயா தலைந்தாய் மணற்கேணி
நீரூற் றறிவுப் பெருமானே
நீசக் கொடியோர் சென்னக்கண்
நெருப்பை மூட்டிப் பலவீட்டை
நீறாய்ப் போக்கிப் பழியுற்றார்காரூர் மாடத் திருந்தாலும்
கயவர்க் கறிவோ பாதாளக்
கழிவைப் போலக் கீழோடக்
கண்டே கல்நார் வீடீந்தாய்
தேரூர் கச்சிப் பதியண்ணா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
பேரா சைக்கோர் வடிவாகிப்
பெருகுங் கந்து வட்டியெனும்
பேயை நாட்டிற் புகுவித்தே
பெரிதுங் குடியைக் கெடுக்கின்றார்
தீரா ஆசைப் பித்தேறித்
திருட்டுப் பணத்தை வெளியிட்டுத்
திறமாய் அரசை ஏமாற்றித்
தீங்கே புரிவார் பலருள்ளார்
தேரார் கல்விப் பயனொன்றும்
சிறுமைக் குணத்தால் இலஞ்சத்தால்
செல்வஞ் சேர்ப்பார் இவையெல்லாம்
தீர்த்தே நாட்டைக் காப்பாய்நீ
சீரார் கச்சிப் பதியண்ணா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் ராத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
பொருவா அருமை வணிகத்தைப்
பொருளே குறியாக் கைக்கொண்டார்
போலிப் பொருளை மிகுவித்தே
பொல்லாக் கலப்புச் செய்கின்றார்
மருவாக் கள்ள வாணிகத்தால்
மக்கள் பொருளை வஞ்சிப்பார்
மறைவாய்ச் செல்வம் குவிக்கின்றார்
வரியை அதனால் குறைக்கின்றார்
வெருவத் தக்கார் செயலெல்லாம்
விளையும் பயிரின் களையன்றோ?
வெம்மைத் தொழில்கள் இவையெல்லாம்
விளையா வ்ண்ணஞ் சிதைப்பாய்நீ
திருவார் பெருமைச் சிற்றடியால்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தீப்பற் றாத் வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
அன்னைத் தமிழின் மனமார
அருமைக் கதைகள் அணிவித்தாய்
அழியாப் புதினம் பலதந்தாய்
அருமைக் கூந்தும் வளர்த்தாய்நீ
முன்னைத் தமிழர் வீரத்தை
மொழியும் புறநூல் என்வந்தே
முழங்குஞ் செய்தித் தாள்மூலம்
மூடப் பகையின் முடிசாய்த்தாய்
பின்னைத் தமிழர் உனதாற்றல்
பேசிப் பேசிக் களிப்பெய்திப்
பெரிதும் போற்றிப் புகழ்பாடப்
பெருகுங் குணத்துன் சீரட்யால்
சென்னைப் பதியின் முதல்வாநீ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
ஈர்க்கும் அருமைக் குணமுள்ளாய்
எளியர்க் கருளும் மனமுள்ளாய்
எதிரிக் குதவும் பரிவுள்ளாய்
இறுமாப் பறியாச் செயல்வல்லாய்
ஆர்க்கும் மனத்தாற் தீங்கெண்ணாய்
அவலக் கண்ணீர் தரியாதாய்
ஆக்கப் பணியே புரிந்துள்ளாய்
அழிவுச் செயலை நினையாதாய்
ஆர்க்குந் தூக்குத் தண்டனையை
அடைந்தான் ஒருவன் உனைவேண்ட
அருளிக் கெடுவைப் பெயர்வித்தே
ஆயுள் தண்டம் பெற்றுய்யத்
தீர்ப்பை மாற்றச் செய்வித்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
அறமே வடிவாய்க் கொண்டுள்ளாய்
அறிவுச் சுடராய் ஒளிர்கின்றாய்
அன்புத் தாயாய்க் காண்கின்றாய்
அன்னைத் த்மிழாய் இனிக்கின்றாய்
இறவாப் புகழாய் இருக்கின்றாய்
எழுத்திற் பேச்சில் நிறைந்துள்ளாய்
எளிமைக் குள்ளே சிரிக்கின்றாய்
என்றே என்றே நிற்போற்றும்
பிறவாத் தம்பி தங்கையர்கள்
பெற்றுக் கொள்ளா நன்மக்கள்
பேரன் பேத்திக் குளந்தந்தாய்
பேதைக் கருளக் கூடாதொ?
சிறந்தார் போற்றுஞ் சிற்றடியால்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
உய்யும் நெறியா லுயர்ந்தாரே
உலகின் தெய்வம் ஆனார்கள்
உண்மை ஓங்க அறம்வாழ
உயிர்கள் இன்பந் திளைத்தோங்க
வையம் வாழ வாழ்வீந்தார்
வானம் புகுந்தே வாழ்வுற்றார்
வையத் துள்ளே வாழ்வாங்கு
வாழ்வான் தெய்வம் எனப்போற்றும்
தெய்வப் புலவன் மறைதேர்ந்தோம்
செம்மைக் குணத்தோய் உன்வாழ்வைச்
செந்நாப் போதார் வழிநின்றே
சிந்தித் தக்கால் அண்ணாநீ
தெய்வம் என்றால் மிகையாமோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
மன்னா உலகில் நிலையாத
மற்றைப் பொருளை மதியாதே
மன்னும் புகழே செய்தாய்நீ
மதியாம் நுதிகூர் வாள்மூலம்
பொன்னா டுயரப் போர்செய்தாய்
புவியோர் புகழுந் தமிழ்காத்தாய்
பொய்யும் வழுவும் அறியாதாய்
பொறுமைக் கடலே அடலேறே!
இன்னா தனவே செய்தார்க்கும்
இனிதே செய்யுஞ் சால்புள்ளாய்
ஏழை அழுகத் தரியாதாய்
எளியர்க் கருளக் கூடாதோ
தென்னாடுடையாய் அண்ணாநீ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
ஏரா ளர்க்கும் நெய்வார்க்கும்
இணையீ டில்லை என்பார்கள்
ஏற்றம் பெறநற் றொழில்செய்தும்
ஏழ்மைக் குள்ளே தவிக்கின்றார்
ஆரா உணவால் வயிறொட்டி
அரையிற் கந்தற் துணிகட்டி
அல்லும் பகலும் உழைக்கின்றார்
அந்தோ வாழ்வில் வளமில்லை
நேரா வளம்போ யிந்நாட்டில்
நிலைகெட் டுணவுக் கயல்நாட்டை
நேடிச் செல்லும் நிலைமாற்றி
நிகழும் பசுமைப் புரட்சியினால்
தீராப் பஞ்சம் தீர்ப்பாய்நீ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
ஆர்வங் கொண்டே பலூன்வேண்டி
அழுதாய் என்றே அறைந்தோமா?
அதனாற் திருடன் கைப்பட்டே
அழுதாய் அதைத்தான் உரைத்தோமா?
தேர்விற் பொடிநீ உறிஞ்சியதைத்
தேர்வா ளர்க்குப் பகர்ந்தோமா?
சீட்டாட் டத்திற் சிறுபொழுதைச்
செலவிட் டாயென் றிகழ்ந்தோமா?
பேர்பெற் றுயர்ந்த நடிகையுடன்
பின்னிப் பிணைத்துப் பேசினமா?
பிள்ளைப் பருவப் பக்தியினைப்
பேசிப் பேசிச் சிரித்தோமா?
சீர்பெற் றுயரும் அண்ணாநீ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!