22.சிறுபறைப் பருவம்
8.சிறுபறைப் பருவம்
திராவிட நாட்டின் நலவுரி மைக்குச்
செல்வச் சீமான்கள்
சேர்ந்து வளர்த்த நீதிக் கட்சியைச்
சேர்ந்தவ ரெல்லாரும்
விராவிய பெருமை விருதுக ளெல்லாம்
விட்டுவி டக்கோரி
விரும்பிய படியே திராவிடர் கழகம்
என்னும் பெயர்சூட்டிப்
பிராமண ரல்லார் நலனைப் பேணப்
பெரியார் தலைமையிலே
பெருகிய சுயமரி யாதைக் கட்சியைப்
பின்னி இணைத்தேநீ
திராவிடர் கழகப் பயிரை வளர்த்தாய்
சிறுபறை முழக்குகவே
திராவிட நாடு திராவிடர்க் கென்றாய்
சிறுபறை முழக்குகவே
கருப்பொடு சிவப்புக் கலந்துப றக்கும்
கட்சிக் கொடிநாட்டிக்
காங்கிர சென்னும் காளையின் முன்னே
கதிர வனைத்தோற்றித்
திருக்குடை யாரை ஒருப்படச் செய்தே
தேர்தற் படைகூட்டித்
தெம்முனை வென்றாய் தென்னவர் தலைவா
செந்தமிழ் நெறியோங்க
விருப்புடன் உலகத் தமிழ்மா நாட்டில்
விஞ்சு புகழ்கொண்டே
விளங்கிடு பல்கலைக் கழகம் மூன்றும்
மிகமிக உயர்வாகத்
திருக்குற ளாயச் செல்வ மளித்தாய்
சிறுபறை முழக்குகவே
திராவிட நாடு திராவிடர்க் கென்றாய்
சிறுபறை முழக்குகவே
பொன்னங் குடுமி இமயப் பொருப்பிற்
பொறுமை சிறந்தோங்க
பொதியத் தென்றல் பொருவத் தவழும்
புன்னகை இபூட்ட
அன்னம் பயிலும் பொய்கை யெனத்தன்
அறிவு சுரந்தூட்ட
அருமைக் காதற் தலைவி யணைக்கும்
ஆர்வ அணைப்பென்னச்
சின்னஞ் சிறிய இதய மணைக்கத்
தென்னவர் நலங்காணச்
சீரிய நாவிற் கூறிய சொல்லைச்
செம்மை யுடன்காக்கும்
தென்னந் தமிழின் செல்வக் குமரா!
சிறுபறை முழக்குகவே
திராவிட நாடு திராவிடர்க் கென்றாய்
சிறுபறை முழக்குகவே
பேழைக் குள்ளே பொருளை யிருத்திப்
பேணும் சுயநலத்தார்
பெரிதும் ஏழை உழைப்பை யுறிஞ்சிப்
பெருத்து விளங்குகிறார்
கோழைகள் வீரங் கொண்டவர் முன்னே
கூனிக் குறுகுதல்போல்
கும்பிட் டவரின் கூலிக ளாகிக்
கும்பிப் பசியாறக்
கூழை யருந்திக் கோவணங் கட்டிக்
குடிசை யிலேவைகிக்
கூடுங் கடனாற் குடும்பக் கவலை
இடும்பை யிலேமூழ்கும்
ஏழைகள் வாழ்வில் ஏற்ற மளிப்போம்
என்றறை சிறுபறையே!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
என்றறை சிறுபறையே!
திங்கள் மாலை வெண்குடை மன்னர்
செந்நாப் புலவர்களைச்
செல்வ மளித்துப் பேணி யிருத்தித்
திகழும் புகழுடனே
சங்கம் வைத்துத் தண்டமிழ் காத்துத்
தரணி மதித்தாண்டார்
தாஅய புகழாற் தாரணி போர்த்திய
தமிழைப் புரியாதார்
அங்கம் வகித்தே ஆட்சி புரிந்தனர்
ஆண்ட தமிழ்செல்வி
அன்னிய மொழியால் அயரும் நிலையை
அறிந்து புரந்தாய்நீ
எங்கள் தமிழ்மொழி காக்க எழுந்தனம்
என்றறை சிறுபறையே!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
என்றறை சிறுபறையே!
பழுதறு மேன்மைத் திராவிட நாட்டின்
பண்பு நலங்காத்தாய்
பழகு தமிழ்த்தாய் அழகு சிறக்கப்
பார்த்து மகிழ்ந்தாய்நீ
விழுதுக ளாகித் தலைமரங் காக்கும்
விழைவு சிறந்தோரை
வேண்டிய ஆற்றல் ஊட்டி வளர்த்தே
விளங்கும் படிசெய்தாய்
பொழுதொரு வண்ணம் வளருங் கழகப்
பொலிவு சிறந்தோங்கப்
போற்றிய அண்ணா துரையெனும் மன்னா
புரவலர் தலைவாநீ
எழுகதிர்ச் சின்னம் எங்கணும் ஓங்குக
என்றறை சிறுபறையே!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
என்றறை சிறுபறையே!
பேசிப் பேசிப் பெருமை யளிப்பாய்
பிறர்பால் நலங்கண்டால்
பேசா வாயினர் போல விருப்பாய்
பிறர்பாற் குறைகண்டால்
தூசிக ளேறிய தன்கட் பீளை
துடைத்துக் கொள்ளாதார்
தூற்றித் தூற்றிப் பிறரைத் தாக்கும்
தொழிலே பிழைப்பாகிப்
பேசிட வாயுங் கூசிடு சொற்கள்
பேசி யிகழ்ந்தார்கள்
பெரியார் பேச்சும் பேதைய ரேச்சும்
பெருமை யெனக்கொண்டாய்
ஏசிய ஏச்சைப் பொறுத்து மதிப்போம்
என்றறை சிறுபறையே!
எதையுந் தாங்கும் இதயம் வேண்டும்
என்றறை சிறுபறையே!
கழிபெ ருந்துயர் தரவு ரைக்கினும்
கடியம றுப்பவனே
கடமை கண்ணியங் கட்டுப் பாடிவை
கழறிவ ளர்த்தவனே
வழிப டத்தகும் மதிப்ப ளிக்கிற
மாட்சிமை யுள்ளவனே
வளரு மன்பினால் தம்பி யென்பதில்
மகிழ்வுமி குந்தவனே
விழியி ழப்பினும் வாழலாம் மற்றது
வெறும்பொறி எனவிடலாம்
மிகம திக்கிற உயிரை விஞ்சிநாம்
விழைகிற செந்தமிழாம்
மொழிய ழிந்ததேல் வாழ்விலை என்றனை
முழக்குக சிறுபறையே!
முதன்மொ ழிச்சுவை அமுதம ளித்தகை
முழக்குக சிறுபறையே!
பழிம லைந்துறு பொருள்கு விப்பவர்
பதவியி ழந்தோட
பணப லத்திமிர் பதவி சேர்திமிர்
பயந்துப றந்தோட
கழிச டைக்குண அரசி யற்கொடுங்
கயவரி ரிந்தோட
கட்சி விட்டொரு கட்சி தாவுநர்
கலங்கி யுளஞ்சோர
குழிப றிப்பதற் கருகி ருப்பவர்
குலைகு லைந்தோட
கொள்கை யற்றுள கும்பல் தாய்மொழி
குலையத் துணைபோகும்
மொழிம றந்தவர் சுயந லங்கெட
முழக்குக சிறுபறையே!
முதன்மொ ழிச்சுவை அமுத ளித்தகை
முழக்குக சிறுபறையே!
பொங்கிவ ருந்துயர் போக்கிந லந்தரும்
போற்றிப் படிதம்பீ
புலவர் தொடுத்தவை அறிஞர் கொடுத்தவை
புறநூல் அகநூல்கள்
சங்கம ளித்தவை சான்றோர் தந்தவை
சற்றும் மறவாதே
சந்ததி சந்ததி தந்தையு டன்தாய்
தந்தது செந்தமிழே
தங்கமெ னத்தமிழ் தாங்கிம திக்கிற
தன்மைவ ழித்தோன்றல்
தம்மையு றப்புரி என்றனை யண்ணா
தம்பியர் தொண்டாலே
எங்குந் தமிழுற எதிலுந் தமிழுற
இன்றறை சிறுபறையே!
எங்கள் வாழ்வும் வளமுந் தமிழுக்
கென்றறை சிறுபறையே!