துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

24.சிறுதேர்ப் பருவம்

சிறுதேர்ப் பருவம்

விரும்பிய மனத்தார்க்கு விதவை மறுமண
     விதியை விளக்கியவர்
   விழைவுறு காதலர் கலப்புத் திருமண
     விருந்து புகுத்தியவர்
பொருந்திய சமுதாயக் கொள்கை புதுக்கிய
     புரட்சிப் பெருந்தலைவர்
   பொருட்செல வில்லாத போற்றத் தகுமணம்
     புரியப் பழக்கியவர்
பெருந்திணைக் குள்வீழ்ந்து பெருமை குலைத்திடப்
     பிரியா மனத்துடனே
   பேசிய கொள்கையைப் பேணி வளர்த்திடப்
     பிரிந்தாய் பெரியாரின்
திருமணச் செயலீன்ற கழகத் தலைமகன்
     சிறுதே ருருட்டுகவே
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே

அரியவுன் சொல்லாற்றல் அறியத் தொகுத்தெதிர்
      அறைத லிலாவகையில்
   ஆரிய திராவிட நாட்டுப் பிரிவினை
      அவசிய மெனச்சொல்லி
கரிபல பற்பல காட்டி விளக்கினை
      கருத்துச் செறிவுடனே
   காங்கிர சாட்சியுன் கட்சி யொழித்திடக்
      கருதி வகுத்திட்ட
பிரிவினைத் தடைச்சட்டப் பிடியை யறுத்தெதிர்
      பிழைத்துப் பணிபுரிய
   பிரிவினைக் கொள்கையைப் பிரியத் துணிந்தவுன்
      பிறங்கு புகழ்மதியைத்
தெரிந்தவர் பாராட்டக் கழகங் காத்தவன்
      சிறுதே ருருட்டுகவே
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே
உருவுகண் லெள்ளாமை வேண்டு மெனச்சொலும்
     உயர்நூற் கருத்தறியார்
   ஒளிர்மதி யெண்ணாதுன் உருவை யிகழ்ந்தனர்
     உலகுக் கொருமுதலாம்
அருமறை பொய்யாமல் அச்சாணி யெனவே
     அகில மளித்தவனே!
   ஆத்திர வேகத்துச் செயலை விடுத்தெதும்
     அயர முடிப்பவனே!
ஒருபடி ரூபாய்க்கு வழங்கத் தொடங்கினை
     உறுதி மொழிப்படியே
   ஒப்புயர் வில்லாத கல்வி பயின்றிட
     உருள்சக டூர்ந்தவனே!
திருவடி நோகாமல் அண்ணாத் துரைநீ
     சிறுதே ருருட்டுகவே
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே
மக்கெலாம் ஆராய மதியை யளித்தவன்
     மறவர்க் கொருமறவன்
   வந்தவர் ஏமாற்றி வாழ மயக்கிய
     மடமைக் கொருபகைவன்
முக்கெலாம் தமிழோசை மோத முழங்கிய
     மோனைத் தமிழுடையான்
   முத்துதிர்ந் தாலன்ன முறுகு சுவைக்கதை
     மொழியுந் திறமுடையான்
சிக்கெலாம் அவிழ்கின்ற தேர்ந்த அரசியல்
     ஞானத் தெளிவுடையான்
   திண்ணிய நெஞ்சத்துள் எண்ணித் துணிந்தவை
     செய்யும் செயல்வல்லான்
திக்கெலாம் புகழாட்சித் தேரூர்ந்து சென்றவன்
     சிறுதே ருருட்டுகவே
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே

ஆர்வமி கப்போய் பாடங் கேட்டனை
     அறிவுப் பசிதீர
   ஆசிரி யர்தரும் பாடக் குறிப்புடன்
     அதிகந் தினக்கற்றே
தேர்வுந டத்துநர் திகைத்து மதித்திடத்
     தேர்ந்த விடைதந்தாய்
   தெளிவொடு தன்னாற்றல் திகழுந் தனிநடை
     சிறுகா லைக்கொண்டாய்
சீர்தரு மிளங்கலைத் தேர்விற் கொருதாள்
     தேவை விடைமூன்றில்
   தீட்டிய தொன்றே முதன்மை சேர்த்திடத்
     தீட்டினை முதுகலைஞர்
தேர்வினி லிரண்டுயர் பட்ட மடைந்தனை
     சிறுதே ருருட்டுகவே
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே
ஊரினை நாட்டினை ஓம்பி வளர்த்திட
     ஒளிசேர் கலைபயில
   ஓங்கிய பள்ளிகள் கட்டி முடித்திட
     உள்ளவை செப்ப்பணிட
கோரிய சாலைகள் பால மமைத்திட
     கூவற் குளங்கடொட
   கொள்ளிகொ டும்புயல் வெள்ள முழந்தவர்
     குடிசை களைவேய
காரிணை யொத்தவர் கட்சிப் பொதுவினிற்
     கடமை புரிந்துவர
   கண்ணிய மோங்கிய அண்ணாத் துரைநீ
     கன்னித் தமிழ்நாட்டில்
சீரணி நற்படை சேர்த்து வளர்த்தாய்
     சிறுதே ருருட்டுகவே
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே
கல்வியி லோங்கிய காஞ்சித் தொகுதியுன்
    கருத்தை விளக்கிடநீ
  கடிநகர் தில்லிக்குச் செல்ல விடுத்தது
    காங்கிர சைத்தேர்ந்து
பல்வேறு நாடினப் பண்பு கலந்தது
    பாரத கண்டமெனப்
  பாராளு மன்றிற் பகர்ந்தாய் பிரிவினை
    பண்டித நேருமுதல்
வெல்லுறுஞ் சொல்லாற்றல்கண்டு வியந்தனர்
    வியந்த அவைத்தலைவர்
  விதிவிலக் கீந்துனைப் பேச விடுத்தனர்
    வெளிநா டுணர்ந்துனை
தில்லியின் பாராளு மன்ற உறுப்பின
    சிறுதே ருருட்டுகவே
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே
மறப்பொடு குற்றத்தை மன்னித் தருளும்
     மனப்பக் குவமுடையான்
   மறப்போம் மன்னிப்போம் என்ற முழக்கினை
     மந்திர மாக்கியவன்
அறப்போர் புரிவதில் அண்ணல் காந்தியின்
     அடியினை வழுவாதான்
   அரசிய லார்வத்தை மாணவர் மத்தியில்
     அதிக மெழுப்பியவன்
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
     பெருமை தருங்கல்வி
   பெருகி வளர்ந்திடப் பேணி வளர்த்தவன்
     பிழைக ளறுத்தவன்நீ
சிறப்பொடு செதவன் ஆசிரி யப்பணி
     சிறுதே ருருட்டுகவே
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே
ஒருநாட் பழகிய உலகத் தலைவரும்
     உன்னை மறப்பாரோ?
   உன்முகம் நோக்கிய பின்னர்ப் பகைவரும்
     உன்னை வெறுப்பாரோ?
ஒருமுறை உன்பேச்சைக் கேட்டாற் சொல்லாற்றல்
     ஊமை விரும்பானோ?
   உத்தமர் காந்தியும் உயிரோ டிருந்தால்
     உன்செயல் புகழாரோ?
அருமறை வல்லார்க்கும் உன்போ லறிவுற
     ஆசை பிறக்காதோ?
   அன்னை யருந்தமிழ் முன்னை வரத்தினில்
     உன்னை அடைந்தாளோ?
திருமதி பங்காரின் செல்வக் குமரா!
     சிறுதே ருருட்டுகவே
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே

நல்லவர் கொண்டாடும் அண்ணாத் துரையுன்
     நற்புக ழோங்குகவே!
   நற்றமிழ் மென்மேலும் ஞால மனைத்திலும்
     நன்கு துலங்குகவே!
இல்லவர் இல்லாமல் இன்பந் தமிழகம்
     இணையற் றோங்குகவே!
   என்னைவ ளர்த்தவோர் அண்ண னெனத்தமிழ்
     என்பா லீந்தவனே!
பல்வகை முன்னேற்றப் பணிகள் புரிந்திட
     பணமாய்ச் சொரிகின்ற
   பரிசுச் சீட்டெனும் பசுவை யளித்தே
செல்வம ளிக்கும் திட்ட மளித்தாய்
     சிறுதே ருருட்டுகவே!
   திராவிட முன்னேற்றக் கழகத் தளபதி
     சிறுதே ருருட்டுகவே!

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>