துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

18.சப்பாணிப் பருவம்

சப்பாணிப் பருவம்

கன்னல் சுவைக்கனி கண்டு நிகர்த்துயர்
        கம்பன ருங்கவியில்
    காம மலிந்தது காட்டுவ தற்கொரு
       கம்பர சந்தந்தாய்
சொன்னல் வளத்தவன் நாவலன் சோம
       சுந்தர பாரதியை
    சொல்லின் செல்வன் ரா.பி.சேதுவை
       சொற்கள வெற்றிகண்டாய்
முன்னர்த் தமிழ்ப் புவி செய்த பெருந்தவம்
       முற்றிய தாமென்ன
    முக்தி தருமெனப் பக்தர் மொழிகிற
       கச்சிமு ளைத்தவனே
குன்றத் தமிழ்முனி யொத்த குணத்தவ
       கொட்டுக சப்பாணி
    கொண்ட லெனத்தமிழ் கொண்டு பொழிந்தவ
       கொட்டுக சப்பாணி
வாழை யடிவாழை யாகத் திராவிடர்
       வாழ்வுத ழைத்தோங்கி
    வான மளந்திடு மாண்பு சிறந்திட
       வைகுனர் தென்னாட்டில்
ஏழை யெனப்புகுந் திங்கித மாகவே
       ஆரிய ரிந்நாட்டில்
    ஏற்ற மடைந்தனர் ஈனர் திராவிடர்
       சாதியி லென்றோதி
ஊழைப் புகுத்தினர் ஊக்க மழித்தனர்
       ஓதியு யர்ந்தோங்கும்
    ஊறிய சூழ்ச்சியர் ஆரிய மாயையை
       ஓதிய நூல்செய்தே
கோழை துணிந்தெழ வீரங் கொடுத்தவ
       கொட்டுக சப்பாணி
    கொண்ட லெனத்தமிழ் கொண்டு பொழிந்தவ
        கொட்டுக சப்பாணி
 

பெற்ற மனத்தவர் பேசிக் கலங்கிடப்
        பிள்ளைக ளஞ்சாது
     பேணூ தமிழ்கெட இந்திபுகுந்தது
        பேரிட ரென்றார்த்துக்
குற்ற மிலாவறப் போரை நடத்தினர்
        மாணவர் கூட்டத்தில்
     குண்டு பொழிந்தனர் கொன்று குவித்தனர்
        கொஞ்சமு மஞ்சாமல்
அற்ற மலிந்திட வாட்சி புரிந்தவர்
        ஆணவங் கெட்டோட
     ஆளப் பிறந்தவர் நாமென எண்ணிய
        ஆசையை மண்மூடக்
கொற்ற மடைந்தவர் கொட்ட மடக்கினை
        கொட்டுக சப்பாணி
     கொண்ட லெனத்தமிழ் கொண்டு பொழிந்தவ
        கொட்டுக சப்பாணி.
அடிமை விலங்கறுத் தாட்சி புரிந்தவர்
        ஆணவம் மேலோங்கி
     ஆளத் தெரியுமோ அண்ணாத் துரைக்கென
        ஆகடி யஞ்செய்தார்
கடமை நிலத்தினிற் கட்சி விதைத்தவன்
        கண்ணிய நீர்பாய்ச்சிக்
     கட்டுப் பாடெனும் வேலி யமைத்தைக்
        காலமெ லாங்காத்துப்
படியும் படியறி வுரமிட் டதிலுறும்
        படிற்றுக் களைநீக்கிப்
     பாசப் பயிர்தரு மாட்சி யெனுங்கதிர்
        பல்கவ ளர்த்தேநீ
கொடிகட்டி யாண்டவர் கொட்ட மடக்கினை
        கொட்டுக சப்பாணி
     கொண்ட லெனத்தமிழ் கொண்டு பொழிந்தவ
        கொட்டுக சப்பாணி
மிடியை அழித்திட மேன்மை செழித்திட
        வேண்டிய செய்தாண்டாய்
     வென்றி விளைந்திடச் சீனர் வெருண்டிட
        வீர வுரைதந்தாய்
குடியை அழிக்கிற குடியை ஒழிக்கிற
        கொள்கை சிறந்தோங்கக்
     கொள்ளும் பொருட்கெனக் கள்ளை யளக்கிற
        கொள்கை யொழித்தாண்டாய்
படியொரு ரூபா அரிசி வழங்கினை
        பட்டினங் கொண்டாட
     பசுமைப் புரட்சியைப் பாருக் களித்தனை
        பண்பமை தென்னாட்டின்
குடிகள் செழித்திடக் கொள்கை வளர்த்தனை
        கொட்டுக சப்பாணி
     கொண்ட லெனத்தமிழ் கொண்டு பொழிந்தவ
        கொட்டுக சப்பாணி
பொறுமையி லொருமலை புலமையி
        லடைகடல் பொருவோய்நீ
     பொடிநுகர் பொறியுறப் புலவொளி
        பொங்கிட அருள்வோய்நீ
அறுபடு மடமையை இருளென
        ஆக்கிய செம்பாதி
     அதனடி குருதியின் நிறமென
        அங்கொடி யுடையோய்நீ
உறுமிருள் ஒளியுண உதித்தெழு
        சூரிய சின்னத்தோய்
     உறுமன இருளற ஒளிதர
        வந்தனை யண்ணாவே
குறுநகை பொலிவுறு திருமுக
        கொடுக சப்பாணி
     கொழிதமிழ் வழியிதழ் உடையவ
        கொட்டுக சப்பாணி

குணகுட கடலொடு குமரிநல்
        வேங்கட எல்லைக்குள்
     கொலுநிலை யிருந்தவள் குளிர்மொழி
        தமிழ்மகன் கொடையாளா
பணமுடி வழங்கினை கவிமனன்
        பாரதி தாசற்குப்
     படுகள நிதிமுதல் பலதொகுத்
        தீந்தனை பல்காலும்
மணமுறை மருவிய மடமதி
       மாற்றினை தென்னாட்டில்
    மதகுல மொருவிய வதுவையர்
       வாழ்விதி செய்தாய்நீ
குணமழை பொழிமுகி லொருதுரை
       கொட்டுக சப்பாணி
    கொழிதமிழ் வழியித ழுடையவ
       கொட்டுக சப்பாணி
நாட்டின் விடுதலை நாடிய வீரனின்
       நல்ல பகற்கனவு
    நாட்டிய மாடிய நங்கையை மீட்டிய
       நல்ல செயற்துணிவு
கூட்டுக் குருவிதன் குஞ்சை யழைத்ததும்
       கொஞ்சி யணைத்தாலும்
    குஞ்சு பறந்தெழ நெஞ்சு துடித்தது
       கூறிய முன்னினைவு
பாட்டுக் கொருவன் பாடிய வாறெழும்
       பட்டப் பகற்கனவு
    பகற்கன வெனினும் பலிக்கிற நாள்வரும்
       பண்பினர் கண்டக்கால்
கூட்டு முயற்சியில் விடுதலை கொள்வது
       கூடும் கூடுமெனக்
    கொள்கை வரைந்தகை குவியக் குவியக்
       கொட்டுக சப்பாணி
அத்தனை யொத்த பெரியாரை
       அருமொரு தலைவ ராயேற்றாய்
    அவர்வழி சமூக சீர்திருத்த
        ஆக்கப் பணிசெய் துயர்ந்தாய்நீ
சித்தி யிடத்தில் மணியம்மை
        திகழத் தரியாச் சம்பத்தும்
    சீரிய தன்றென நினைத்தோரும்
        சேர அமைத்தாய் ஒருகட்சி
எத்தனை கட்சிகள் இருந்தாலும்
        இளகிய பாசப் பரிவூட்டி
    இத்தரை மீதில் உனைப் போல
        எவருங் கட்சி வளர்த்திலரால்
தத்துங் கனிவொடு தம்பியெனச்
        சாற்றினை கொட்டுக சப்பாணி
     தம்பிய ரென்னும் படைவீரர்
        தலைவா கொட்டுக சப்பாணி
ஒருதாய் மக்கள் பலருள்ளும்
       ஓரிரு மக்கள் கெடக்கூடும்
    ஊரும் நாடும் குடும்பமென
       உடையாய் உன்றன் குடும்பத்துள்
வருவாய் கருதி வருவாரும்
       மாற்றார் பக்கஞ் செல்வாரும்
    வளருங் காலம் உண்டென்றே
       மனதில் உனக்குத் தோன்றியதோ
பெருகி வளருங் கழகத்தைப்
       பிறர்வென் றழிக்க முடியாது
    பேதம் பெருகித் தமக்குள்ளே
       பிளவைச் செய்தால் அழிவென்றாய்
கருதிப் பார்த்தால் இரண்டான
       கழகம் மீண்டும் இணையாதோ
    காதுக் கெட்டும் ஒலிகூட்டிக்
       கைகள் கொட்டுக சப்பாணி

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>