துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

21.அம்புலிப் பருவம்

அம்புலிப் பருவம்

எழுமுதய சூரியனை ஏந்தியுல கிருளோட்டி
        இன்னொளி செய்யுமாற்றால்
     எல்லார்க்கும் மகிழ்வூட்டும் இதமான குணமுள்ள
        இணையிலா மதியென்பதால்
மழகாளைப் பருவத்து வாலிபரை மோகமதி
        வலைவீழப் பண்ணுமாற்றால்
     மாலைவரக் கூட்டத்தில் வாயூற வூறுகிற
        மதுவுண்ணப் பண்ணுமாற்றால்
பழகுமுயர் குணமுடைய எமதருமை அண்ணனுனைப்
        பவகையி லொப்பதோராய்
     பழகுதமிழ் குடிகொண்ட நாவினொடு கையசைத்துப்
        பரிவுடன் அழைப்பதோராய்
அழகுமிகு காஞ்சிபுர முயரவரு மண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!
     அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை யண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!
மாதரை நிகரிலாது வான்மதி யடைந்தவற்றால்
        வையகத்தார்க் கருளுமாற்றால்
     மாதரை நிகரிலாது வான்மதி யடைந்தவாற்றால்
        வையகத்தார்க் கருளுமாற்றால்
வேதனை யடைந்துகலை வளரவழி நீர்மையொடு
        மேவுபணி பொருந்துமாற்றால்
     வேதனை யடைந்துகலை வளரவழி நீர்மையொடு
        மேவுபணி பொருந்துமாற்றால்
தீதற அரவுமிழுந் திங்களென வுலகுளார்
        செப்பிடச் சேணுளாய்நீ
     தீதறக் குணமருளுந் தென்னகத் தலைவனாஞ்
        செம்மலை ஒப்பதாலே
ஆதவ னடுத்தமுது தமிழ்பயிலு மண்ணனுடன்
        அம்புலீ யாடவாவே!
     அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை அண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!

எறிபட்ட துண்டமே ஈர்க்கின்ற பூவுலகை
        என்றுமே வட்டமிடுவாய்
     இரவியை வேண்டியவன் ஈந்தவொளி கொண்டவன்
        இல்லாத போதுமிளிர்வாய்
நெறிவிட்டு விலகாது நிலையாகத் தான்வகுத்த
        நேர்வழி செல்லவல்லான்
     நெருங்குபெருங் கூட்டமென் நாளுமே சுற்றிவர
        நிறையொளி யளிக்கவல்லான்
முறிபட்டுப் புவிவிட்டுப் போனவுனை மெம்முதல்வன்
        முற்றிலும் விஞ்சியுள்ளான்
     முரண்பட்டுப் பிரிந்தவரை முனியாது வாழ்த்துகிற
        முன்னவன் குணங்களோராய்
அறியாமை நோயொழியப் பாடுபடு மண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!
     அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை அண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!
வட்டமிடு முனக்கிரவி வழங்குமொளி தடுத்துலகு
        வழியிடைப் புகுவதாலே
     வரவரக் குறைகிறாய் மறைகிறாய் மீண்டும்நீ
        வளர்கிறாய் நிலையிலாது
மட்டிலா தொளிரிவன் மதியினைத் தடுக்கவொரு
        மாநிலம் மட்டுமன்றி
     மற்றுள்ள கோள்களும் மறைத்தாலும் மறையாது
        வயங்குமொளி ஞாயிறென்ன
கெட்டமதி மாசுடைய கீழ்மைக்யுடைய யாயுனக்குக்
        கிட்டுநிக ரற்றவன்காண்
     கெடுமதி படைத்திவனைக் கெடுக்கமுனை கின்றவரும்
        கெடுதியடை யாதுகாக்கும்
அட்டிளகு பாகுமொழி மாதர்குல முயவரும்
        அண்ணனோ டாடவாவே!
     அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை யண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!
கரவிலுறு மிந்திதருங் கட்டளை மொழியொழியக்
        கல்விபயில் கழகமெங்கும்
     கடிபடை கலைத்ததொடு கலப்புமொழிப் பலபெயர்கள்
        களைந்துதமிழ்ப் பெயர்வைத்தவன்
பரவுதமிழ் அரியபல துறைகளிலும் பயிலுமுறை
        பண்ணியர சாளவைத்தான்
     பரவரிய புவிமுதலெந் தமிழ்நாட்டின் பெயர்சூட்டிப்
        பழிதுடைத் தரசாண்டவன்
மரபெனவந் துறுதிமொழி யாங்கிலத்திற் பகருவதை
        மாற்றியே தமிழ்வழங்கியோன்
     மதியமே உனதுகுறை எதுவேனும் வந்துசொலின்
        மறுக்காமல் மாற்றவல்லான்
அரசுபுரி கழகமுதல் அவனிபுகழ் அண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!
     அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை யண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!
குடிவளர வளருகிற கொள்கையா லுயர்ந்தவன்
        கும்பிட்டு வாழகில்லான்
     குடைநிழலில் பலதுறையுந் தழையவரு மேலவன்
        குழவியென இளகுமுள்ளன்
கொடியவிட மெனவேறும் அகவிலையைக் குறைக்கவெனக்
        குமைந்தெழுந்து போர்புரிந்தவன்
     குறைகடியப் போர்புரிந்து கொடுஞ்சிறையு மேழுமுறை
        குறுகிவெளி வந்தவீரன்
மிடியொழியப் படியரிசி வழங்குண மேன்மையுடை
         வென்றிதரு சொல்வன்மையன்
     விரும்பியுனை அழைக்கின்றான் வந்துனது குறைகூறின்
         வீண்போவ தில்லைகாண்பாய்
அடிமைநிலை யழித்தபெரு மண்ணல்நிக ரண்ணனுடன்
         அம்புலீ ஆடவாவே!
     அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை யண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!

கமழ்கின்ற விஞானக் கலையறிஞர் கணக்குக்குட்
        கட்டுண்ட அடிமையானாய்
     கடும்வேக அமெரிக்கர் கால்பட்டுத் தூள்பட்டுக்
        கரித்துகள் போலவுள்ளாய்
எமதரிய வீடாக இருக்கவும் தகவிலாய்
        என்றாலும் விட்டிலோங்காண்
     என்றேனும் ஒருநாளில் வுலகத்தோ டிணைத்துன்னை
        இருப்பிட மாக்கவல்லோம்
கமலமுக மாதரை யொத்தனை என்பதாற்
        கர்வமாய் இருந்திடாதே
     கைகாட்டி எமதண்ணன் அழைக்கின்றான் கணப்பொழுதில்
        கடிகியே ஓடிவருவாய்
அமெரிக்க ஏல்கழகப் பட்டமுடை யண்ணனுடன்
        அம்புலீ ஆடவாவே!
     அமுதமொழி தமிழிலுயிர் அறிவுநிறை யண்ணனுடன்
        அம்புலீ யாடவாவே
விண்ணோடும் உறவாடி விளையாடும் அமெரிக்க
        வோரருட் புகுந்துவிட்டார்
     வெளிநாட்டுப் பயணத்தில் எமதண்ணன் அமெரிக்க
        வீரருட் புகுந்துவிட்டார்
மண்ணோடு பகையாகிப் பிரிந்தேகி வானத்து
        மண்டலம் ஆகிவிட்டால்
     மனிதர்க்கு நீயொன்றும் அதிசயப் பொருளில்லை
         வாவென்று கெஞ்சுகின்றான்
கண்ணாக உயிராகக் கழகத்துக் காளையரின்
         கண்கண்ட தெய்வமாகக்
     காண்கின்ற எமதண்ணன் பொறுத்தாலும் காளையரின்
         கடுங்கோபத் தெரிந்துபோவாய்
அண்ணா மலைக்கழகப் பேரறிஞர் பட்டமுடை
         அண்ணணோ டாடவாவே!
     அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை யண்ணனுடன்
         அம்புலீ ஆடவாவே!
எழில்கண்டும் ஒளிகண்டும் ஏற்றமுள நிலைகண்டும்
         இயல்பான தன்மைகண்டும்
     எமதண்ணன் அழைக்கிறானென்றுநீ எண்ணிடேல்
         இருள்கண்டு பொன்மேனியில்
பொழிகின்ற மேகத்தில் ஒளிகின்ற புன்மையால்
         புவனத்து நிலைமைகண்டு
     பொறுக்காமல் அழைக்கிறான் பொலிவின்னுங் கூட்டியே
         பொல்லாங்கு போக்குவான்வா
வழிகின்ற கண்ணீரை மதியாது வாராது
         வானத்தில் நீயிருந்தால்
     வள்ளுவர் சொன்னபடி வளமான கலைச்செல்வம்
         வளராது  தேய்க்குமென்பேன்
அழியாத முதுகலைஞர் பட்டமுடை யண்ணனுடன்
         அம்புலீ ஆடவாவே!
     அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை யண்ணனுடன்
         அம்புலீ ஆடவாவே!

துன்பபுறு செயல்செய்யும் பகைவர்க்கும் நன்மைசெயுந்
         தூயநல் லிதயமுள்ளான்
     தொண்டுசெயுந் தொண்டர்க்குந் தொண்டுசெய முந்துகிற
         தொண்டுள்ளங் கொண்டுள்ளவன்
நன்றிகொன் றிழிந்த்ர்க்கும் நலிவிக்கப் பிரிந்தேகி
         நாநாறத் தூற்ற்வார்க்கும்
     நன்மையே செய்யநினை தன்மையே கொண்டவன்
         நண்பையே நாடுநெஞ்சன்
இன்பமுற எதிராளர் நன்மைசெயின் மனமார
         இறும்பூது கொண்டுவாழ்த்தும்
     இன்னல்செய அறியாத அண்ணனுனை யழைக்கிறான்
         இன்னமுந் தாமதம் ஏன்
அன்புநெறி மென்மேலும் தழையவரு மண்ணனுடன்
         அம்புலீ ஆடவாவே!
     அமுதமொழி தமிழிலுயர் அறிவுநிறை யண்ணனுடன்
         அம்புலீ ஆடவாவே!

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>