11.அணிந்துரை
அண்ணா பிள்ளைத் தமிழ்
தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்கள் அளித்த அணிந்துரை
தமிழ் இலக்கிய உலகில், இடைக்காலத்தே தலையெடுத்தவை பிரபந்தங்கள். அவைதொண்ணூற்றாறு வகைப்படும். அவற்றுள் ஒன்றே பிள்ளைத் தமிழ். இறைவனையே ‘குழந்தையாக’ கருதி, இறைவனின் ‘திருவிளையாடல்களையும்’ ‘அற்புதங்களையும்’ அடுக்கிப் பாடிப் ‘பிள்ளைத்தமிழ்’ தந்த கவிஞர்கள் பலர் வாழ்ந்த நாடு நமது தமிழ்நாடு. ஏன்? ‘பிள்ளைத் தமிழ்’ என்றொரு பிரபந்த வகையைக் கண்ட பெருமை நம் நாட்டிற்கே யுண்டு என்றால் மிகையாது.
அடுத்து, சில வள்ளல்களைப் பற்றியும், குறுநில மன்னர்களைப் பற்றியும், தலைவர்கள், கவிஞர்களைப் பற்றியும் சில ‘பிள்ளைத்தமிழ்’கள் வந்துள்ளன. இந்த வகையில் ‘காந்தி பிள்ளைத்தமிழ்’ , ‘பாவேந்தர் பிள்ளைத்தமிழ்’, ‘கம்பன் பிள்ளைத் தமிழ்’ முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.
அண்மையில் புலவர் பொன்மாரி அவர்கள் நமது வரலாற்று நாயகனாக-நாலரைக் கோடி தமிழ்மக்களின் இதயபீடத்திலே கொலுவிருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் குணவியல்புகளையும், அவராற்றிய செயற்கருஞ் செயல்களையும், அவர் தலைமையில் இந்த நாடு பெற்ற பெருநன்மைகளையும் நிரலே விளங்கும்வகையில் ‘அண்ணா பிள்ளைத்தமிழ்’ என்னும் இவ்வரிய நூலைப் பண்டைய இலக்கிய மரபு பிறழாமல் புதுமை மணம் கொழிக்க ஆக்கியளித்துள்ளனர்.
புலவர் பொன்மாரி அவர்கள் அந்நாளில், ‘ஆச்சாரியார்’ கொணர்ந்த குலக்கல்வித் திட்டத்தை
எதிர்த்துச் சிறை சென்ற செம்மல்களுள் ஒருவர். பழமை மரபு காத்துப் புதுமையைப் பாராட்டி அதற்கு நல்வரவு கூறும் அவர் தகைமை-தன்மை நூலெங்கும் விரவிக் காணப்படுகிறது.
காப்புப் பருவத்தில், இயேசு, நபிகள் நாயகம், அருகன், புத்தன், காந்தியடிகள், தமிழ்த்தாய், பெரியார்
ஆகியோரைப் பாடியிருப்பது பாராட்டத் தக்கது. கவிஞரின் தமிழ்மொழிப் பற்றும், நமது இயக்கப் பற்றும் நூல் முழுவதும் மேலோங்கி நிற்கின்றன. ஓசையின்பமும், உணர்ச்சியின்பமும், உவமையழகும், சொல்வளமும் நிறைந்து காணப்படுகின்றன. புலவர் பொன்மாரியின் இலக்கிய முயற்சி வெற்றிபெற–மனமார வாழ்த்துகின்றேன்.
சென்னை,
26–6–72