குழந்தைப்பாடல்கள்
பிள்ளைக் கிளிகள்
வாழ்த்து
நம்மைக் காக்கும் நம்தெய்வம்
நம்பித் தொழுநீ மறவாதே
தும்பிக் கையைத் தொழுதாலும்
துர்க்கை பாதம் பணிந்தாலும்
எந்தப் பெயரிலும் தொழுதாலும்
இறைவன் வருவான் அருள்வானே
வணக்கம்
சோறும் நீரும் நிலம்போல
சொந்தத் தாயே தருகின்றார்
பேரும் புகழுந் தருங்கல்வி
பேணுந் தந்தை தருகின்றார்
எண்ணும் எழுத்தும் கண்ணாக
என்றுங் குருவே தருகின்றார்
மூவர் பாதம் பணிவோமே
முதல்வன் அருளைப் பெறுவோமே
அம்மா அப்பா நம்மிடம்
ஆசை பாசம் உள்ளவர்
இரவும் பகலும் இருவரும்
ஈடில் லாமல் காக்கிறார்
உண்மை பேசச் சொல்கிறார்
ஊக்கங் கொள்ளச் செய்கிறார்
என்றுந் தேவை அறிகிறார்
ஏக்கம் போக்கித் தருகிறார்
ஐயம் நீங்கப் பள்ளியில்
ஒன்றாய்ப் படிக்க வைக்கிறார்
ஓதும் பெருமை பெறுகிறோம்
ஒளவை வழியில் செல்கிறோம்
அ·தே மேன்மை சேர்க்குமே
குண்டு போட்டு மனிதனைக்
கொல்லும் எண்ணம் கொடியது
ஒன்று பட்டு வாழநாம்
உதவி செய்ய முந்துவோம்
மனித நேயம் போற்றுவோம்
வம்பர் நெஞ்சை மாற்றுவோம்
சொந்த நாடு யாதுமே
தூர தேசம் இல்லையே
அன்பு கொண்ட நெஞ்சிலே
அந்நி யங்கள் இல்லையே
ஆசை கொண்ட நெஞ்சினால்
ஆவ தெல்லாம் தொல்லையே
பட்டுப் பூச்சி வீட்டிலே
பறந்து பறந்து திரிந்தது
வெளிச்சந் தேடி வந்தது
வெள்ளைச் சுவரில் விழுந்தது
பல்லி ஒன்றின் வாயிலே
பாவம் சிக்கிச் செத்தது
தட்டான் பூச்சி வீட்டிலே
தாவித் தாவித் திரிந்தது
சிலந்திப் பூச்சி வலையிலே
சிக்கிக் கொண்டு செத்தது
விட்டில் பூச்சி வீட்டிலே
விளக்கைச் சுற்றித் திரிந்தது
சூடு பட்டு எண்ணெயில்
சுருண்டு விழுந்து செத்தது
தட்டான் பூச்சி வீட்டிலே
தாவித் தாவித் திரிந்தது
சிலந்திப் பூச்சி வலையிலே
சிக்கிக் கொண்டு செத்தது
விட்டில் பூச்சி வீட்டிலே
விளக்கைச் சுற்றித் திரிந்தது
சூடு பட்டு எண்ணெயில்
சுருண்டு விழுந்து செத்தது
மனிதன் கூடக் கவர்ச்சியில்
மதிம யங்கிச் சுற்றினால்
காலன் கவ்விக் கொல்லுவான்
காலம் தேசம் தேர்மினோ
சின்னச் சின்ன நாய்க்குட்டி
தெருவைக் காக்கும் நாய்க்குட்டி
என்னைக் கண்டால் வாலாட்டும்
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
பள்ளிக் கூடம் நான்சென்றால்
பாதித் தூரம் ஓடிவரும்
பாலும் சோறும் கிண்ணத்தில்
பார்த்தால் சும்மா பார்த்திருக்கும்
அள்ளிப் போட்டால் தானுண்ணூம்
அன்புப் பெருக்கால் வாலாட்டும்
முதுகில் அடித்தால் கடிக்காது
முகத்தில் அடித்தால் கடிக்காது
வாலை நிமிர்த்த முயன்றால்தான்
வாயைத் திறந்து ளள்ளென்னும்
பிறவிக் குணத்தை மாற்றத்தான்
பெரிதும் முயலக் கூடாதே
நரியின் குட்டி காட்டிலே
நடந்து நடந்து களைத்தது
குரங்குக் குட்டி மரத்திலே
குந்திப் பேச அழைத்தது
இறங்கி வந்தால் பேசலாம்
என்று கீழே அழைத்தது
காக்கைக் குஞ்சு பார்த்தது
காதில் ஏதோ சொன்னது
குரங்குக் குட்டி உச்சிபோய்க்
குந்திச் சிரித்துப் பளித்தது
குட்டி நரியின் வஞ்சகம்
குஞ்சுக் காக்கை வென்றது
காய்ந்த பெரிய புதரிலே
கரடி தங்கி இருந்தது
வேட்டை யாடச் சென்றது
வேண்டு மட்டும் கொன்றது
மானை முயலைக் கொன்றது
மாட்டை ஆட்டைக் கொன்றது
மரத்தி லிருந்த குரங்கதை
மனம்வ ருந்திப் பார்த்தது
தூங்கும் போது கரடியைத்
தொலைத்துக் கட்ட நினைத்தது
சக்கி முக்கிக் கற்களைத்
தட்டி நெருப்பை வளர்த்தது
காடு பற்றி எரிந்தது
கரடி செத்துத் தொலைந்தது
தவளை ஒன்று மேட்டிலே
தாவித் தாவிச் சென்றது
வாத்து ஒன்று கண்டது
வாயைப் பிளந்து வந்தது
படுத்தி ருந்த ஒட்டகப்
பக்கம் வந்த தவளையோ
தாவி யேறி முதுகையே
தஞ்ச மாகக் கொண்டது
பெரிய இடத்தைச் சேர்ந்தவர்
பிழைப்ப தென்ன அதிசயம் ?
சிங்கம் காட்டில் திரிந்தது
சிறுத்தை ஒன்று வந்தது
பாய்ந்து சிங்கம் வந்தது
பள்ளம் ஒன்றில் விழுந்தது
சிறுத்தை தப்பிச் சென்றது
வாழ்வும் சாவும் விதியினால்
வருவ தென்று புரிந்தது
எலியி ருந்த பொந்திலே
பாம்பு சென்று படுத்தது
எலிக்குக் கோபம் வந்தது
எனக்குச் சொந்த வீட்டிலே
நீயி ருக்க எண்ணினால்
உனக்குச் சொந்த வீட்டிலே
நானி ருத்தல் தக்கதே
என்று எண்ணித் திமிரினால்
பாம்பி ருந்த பொந்திலே
படுத்துத் தூங்கி விட்டது
வந்த பாம்பு கண்டது
வாயில் போட்டுக் கொண்டது
ஆட்டுக் குட்டி வந்தது
ஆற்றில் தண்ணீர் குடித்தது
நரியும் அங்கு வந்தது
நாட கத்தைக் தொடர்ந்தது
அம்மா ஆடு மேலேபோய்
ஆற்றைக் கலக்க லாகுமோ
உன்னைக் கொன்று தீர்ப்புநான்
உணர்த்து கின்றேன் பாரென
சிங்க மொன்று அம்மாவைத்
தின்று சென்ற தையய்யோ
இப்போ திங்கே வருதுபார்
என்று நடுங்கிச் சொன்னது
சீறிப் பாயும் சிங்கத்தைச்
சிறுந ரியும் பார்த்தது
நாலு காலுப் பாய்ச்சலில்
நரிப றந்து போனது
சித்தி ரத்தைக் காட்டிய
சின்ன ஆடு பிழத்தது
காட்டு யானை வந்தது
கரும்பு வயலில் புகுந்தது
உண்ட கரும்பு சிற்சில
ஒடிந்த கரும்பு பற்பல
அழிவு சக்தி கொடியது
அந்த மிருகம் அறியுமோ
அடங்கி யுள்ள நெருப்பிலும்
ஐயோ கோபங் கொடியது
தூங்கி எழுந்த நெருப்புதான்
சுட்ட தோடு தொலையுமோ
எழுந்த கோபம் எதிரியாய்
என்றும் நின்று கொல்லுமோ
நாயைப் போலக் காவலன்
நமக்கு வேறு இல்லையே
தூங்கும் போது காவலாய்ச்
சுற்றத் தாரைக் காப்பது
மோப்ப சக்தி மிக்கது
முனைப்பு விஞ்சிக் குரைப்பது
வளர்த்த பாசம் நன்றியாய்
மலரும் பெருமை மிக்கது
ஆனால் ஆனால் ஐயய்யோ
இனத்தைப் பகைக்கும் நாய்க்குணம்
ஏனோ மாற வில்லையே
குஞ்சு பத்து பின்வர
கோழி வெளியில் சென்றது
குப்பை மேட்டைச் சீய்த்தது
குஞ்சு கொத்தித் தின்றது
பருந்து விரைந்து வந்தது
பாய்ந்து கோழி எதிர்த்தது
தாய்மை வீரம் குஞ்சுகள்
தப்பி வாழ வைத்ததே
குட்டி போட்ட எலிபல
கூட்டம் போட்டுப் பேசின
பூனை வந்தால் அஞ்சிடோம்
புலிவந் தாலும் அஞ்சிடோம்
ஓட ஓட விரட்டுவோம்
ஒன்று பட்டு வெல்லுவோம்
என்று கூச்சல் போட்டன
எழுந்து பூனை வந்தது
அடுக்குப் பானை இடுக்கிலே
அங்கு மிங்கும் ஓடின
கோழை வீரம் பேசினால்
கொள்ளை வெற்றி காணுமோ
குருவி கூடு கட்டலாம்
குரங்கு கூடு கட்டுமோ
பிறவி ஒன்றின் வல்லமை
பிறிது கொள்ளல் ஒல்லுமோ
முட்டை போடும் ஒன்றினால்
குட்டி போட முடியுமோ
குட்டி போடும் ஒன்றினால்
முட்டை போட முடியுமோ
மரபு தந்த வல்லமை
மாற்ற வல்ல தல்லவே
குருவி வாயில் கொண்டுபோய்க்
குஞ்சின் வாயில் உட்டலும்
குட்டி போட்ட குரங்குதன்
குட்டி தூக்கிச் செல்வரும்
இட்ட முட்டை மேலடை
இருந்து கோழி காப்பதும்
என்று முள்ள பரம்பரை
இயற்கை தந்த குணங்களே
மனித மூளை மட்டுமே
வரம்பி லாத வளர்ச்சியால்
அரிய பெரிய சாதனை
ஆற்ற வல்ல துண்மையே
திருட்டுக் குள்ள நரியினால்
சேவற் கோழி செத்தது
நரியை விரட்டிச் சென்றொரு
நாய்க டித்துக் கொன்றது
பன்றி நாயைப் பார்த்தது
பகையின் வாழ்வை முடித்தது
கரடி ஒன்று பன்றியைக்
கடித்து ரத்தங் குடித்தது
சிறுத்தைப் புலியின் வாயிலே
சிக்கிக் கரடி செத்தது
வேட்டை யாடிச் சிறுத்தையை
வென்று சிங்கம் கொன்றது
வலிய மிருகம் மெலியதை
வதைப்ப தென்ன அதிசயம்
மனிதன் கூட இன்னமுகம்
மறக்க வில்லை கொடுமையே
பஞ்ச வர்ணப் பைங்கிளி
பச்சை வண்ணப் பைங்கிளி
பறக்கும் போதும் அழகுதான்
பார்க்கப் பார்க்க அழகுதான்
சொன்ன தெல்லாம் சொல்லுமே
சோறும் பழமும் தின்னுமே
எனக்குக் கூட கிளியைப்போல்
இருக்க ரொம்ப ஆசைதான்
மூக்கு மட்டும் வாய்க்கொரு
மூடி போல வேண்டாமே
அந்தி வான வெளியிலே
அருமை யான காட்சிபார்
பாதி வட்ட வடிவிலே
பறக்கும் கொக்கு வரிசைபார்
வீதி யோர வெளியிலே
வெண்பு றாவின் அழகுபார்
கூடி மேயும் அழகுபார்
குறுகு றுத்த நடைகள்பார்
பட்டு வெள்ளை வேட்டிபோல்
பறந்து செல்லும் அழகுபார்
ஆடும் மயிலின் அழகுபார்
ஆகா தோகை வண்ணம்பார்
மேனி யெங்கும் கண்களோ
மின்னுந் தங்க வைரமோ
வண்ண வண்ண மலர்களால்
வடிவ மைத்த மாலையோ
வான வில்லின் சாயலோ
மாய மோக வடிவமோ
மேக மோக நடனமோ
விந்தை விந்தை விந்தையே
பச்சை மரத்தின் உச்சியில்
பாடுங் குயிலே பறந்துவா
பாசங் காட்டும் பாடலோ
பார்க்க ஆசை பறந்துவா
இனிய கூவல் இசைமழை
இன்ப வெள்ள மல்லவா
கருப்பு நிறத்தில் இருப்பதால்
காட்டிக் கொள்ள வெட்கமோ
நிறத்தி லென்ன பேதமை
நெஞ்சும் நெஞ்சுங் கூடினால்
அடர்ந்த மலையில் உள்ளமான்
அழகு வெள்ளைப் புள்ளிமான்
புல்லை உண்ணும் நல்லமான்
புலவர் போற்றும் கவரிமான்
ஒடும் அழகுக் கலைமான்
உயர மான கொம்புமான்
பயந்து பயந்து பார்ப்பதேன் ?
பகையை எண்ணி மருள்வதேன் ?
அச்ச முள்ள கோழையின்
ஆயு தம்போல் கொம்புஏன்?
ஆழக் கடலின் நடுவிலே
அனற்பி ழம்பின் உதயமோ
சேவல் கூலி அழைத்ததோ
செவ்வா னத்தின் குழந்தையே
தாயின் மடியில் தவழும்நீ
தங்கும் வீடு எங்கேயோ
உலகம் சுற்ற வருகிறாய்
உயிர்கள் வாழ அருள்கிறாய்
அந்தி சாயும் வேளையில்
அன்னை நீலச் சேலையில்
முகத்தை மூடி மறைக்கிறாய்
முன்பு போல எழுந்துவா
கடல்க டைந்த தங்கமே
கரிய மேக வீதியில்
உன்னை மாற்றி¢க் கொண்டதேன் ?
உருகி வெள்ளி யானதேன் ?
பாட்டன் பாட்டி சித்தப்பா
பாசங் கொண்ட சொந்தங்கள்
இரவு நேரம் உன்னுடன்
இன்பப் பயணம் வருகிறார்
அப்பா தந்த சீதனம்
அள்ளிச் செல்லும் வெண்ணிலா
கண்ணுக் கினிய காட்சியாய்க்
கணவன் வீடு பயணமோ
கன்ன மச்சம் கண்டுனைக்
கட்டிக் கொண்ட கணவன்யார் ?
பச்சை பச்சை பச்சையாய்
பரந்து விரிந்த செல்வமே
தங்கம் வைரம் உன்னிடம்
தாவ ரங்கள் உன்னிடம்
மண்ணின் உயர்வு காட்டவே
வடிவு கொண்ட உயரமோ
காட்டு விலங்கு எத்தனை ?
காணும் அருவி எத்தனை ?
உயர மான செம்மரம்
உணவு நல்கும் பலமரம்
எண்ணி எண்ணி வியக்கிறேன்
எழுந்து நிற்கும் பெருமலை
வாழ வைக்க இறைவனே
வடிவெ டுத்த காட்சியோ
அடியும் முடியும் வணங்கவே
ஆசை கோடி கோடிநான்
எந்த மலையும் வணங்குவேன்
எரிம லைதான் தடுக்குமே
வினா விடை
உண்ணும் போது கைப்பிடி
உணவை ஒதுக்கி வைப்பதேன் ?
எறும்பு காக்கை எத்தனை
இரைகள் தேடி அலைவன
உயிரி னங்கள் வாழநாம்
உதவ வேண்டு மல்லவா
அம்மா தந்த ரொட்டியை
ஆளுக் கொன்று தருவதேன் ?
பங்கித் தின்று பள்ளியில்
பழக வேண்டு மல்லவா ?
எறும்பு சாரி சாரியாய்
என்ன கொண்டு செல்லுது ?
ஜீனி திருடிச் செல்லுது
தின்னச் சேர்த்து வைக்குது
எறும்பு பாவம் போகட்டும்
என்ன செய்யும் வயிற்றுக்கு
சேர்த்து வைக்க வேண்டும்நாம்
திருட்டுப் புத்தி கூடாது
விடுகதை
ஒன்றின் துணையால் ஒன்றேகும்
நின்றால் நடந்தால் நிகராகும்
அவையென்ன ?
கால்கள்
கூடி இருந்தால் கோடியில் ஒன்று
பிரிந்து போனால் பெறும்பே ரென்ன ?
சுற்றி இருக்கும் தொண்டர்களால்
சுகத்தைத் தேடும் தலைவன்யார் ?
நாக்கு
இரண்டின் வேலை ஒன்றேதான்
எனினும் சேர்ந்தே இருக்காது
அவையென்ன ?
இருகாது
ஓடி யாடி மகிழ்ந்திரு
உடலுக் கேற்ற பயிற்சிசெய்
கல்வி கற்க மகிழ்ந்துசெல்
கால மெல்லாங் கற்றறி
கோளும் பொய்யுங் கூறாதே
குறைகள் தேடிச் சொல்லாதே
உண்மை பேசு நன்மைசெய்
ஊரே உன்னைப் போற்றுமே
படிக்கும் நேரம் குறைப்பதும்
பந்தாட் டத்தை ரசிப்பதும்
தொலைக்காட் சிக்கே நேரத்தைத்
தொலைத்துத் தொழிலை மறப்பதும்
தூக்க நேரங் கெடுப்பதும்
சோம்பித் தூங்கிக் கிடப்பதும்
வாழுங் காலந் துயரையே
வரவ ழைக்கும் விடுங்களே
அம்மா அப்பா சொல்வதை
அன்பாய்க் கேட்டு நடக்கிறோம்
பள்ளிக் கூடம் செல்கிறோம்
பாடம் கேட்டுக் கொள்கிறோம்
கற்ற நல்ல பெரியவர்
கருத்தை மதித்து நடக்கிறோம்
காந்தி போன்ற நல்லவர்
காட்டும் வழியில் செல்கிறோம்
நம்மைப் பார்த்து நாளைநம்
நாடு நடக்க வேண்டுமே
மழலை பேசுங் குழந்தைகள்
மனம்ம கிழ்ந்து பாடியே
சேவல் போல வீரமும்
சிங்கம் போல வலிமையும்
காளை போல ஊக்கமும்
களிறு போல பெருமையும்
அன்னம் போல சேர்க்கையும்
அன்றில் போல வாழ்க்கையும்
கொண்டு வாழ் ஆண்டவன்
கொடுத்து வைக்கத் தொழுகிறேன்