துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

அனுபவ அகராதி

அனுபவ அகராதி என்னும் இந்த வெளியீடு என் சொந்த அனுபவத்தை சிந்தனையை மையமாகக் கொண்டது. எல்லாரும் ஒத்துக் கொள்ளத் தக்க தென்றோ ஒத்துக்கொள்ள வேண்டுமென்றோ
எழுதப்பட்டதன்று. உங்கள் அனுபவத்தை சிந்தனையை ஒத்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தூக்கி எறிந்துவிடுங்கள்.
                                                                                                                                               –  புலவர்.துரை.பொன்னுசாமி

அன்பு   -  பின் விளைவுகளுக்கு மூலக் காரணம்

ஆசை   -  தவிர்க்க முடியாது மனத்தில் பிறந்து தவிக்கச் செய்வது.                          

இன்பம்  -  விருப்பத்தின் விளைவு. மனம் விரும்பினால் மரணத்திலும் பெறுவது.  

ஈகை    -  ஈ என இரக்கும் நிலை எந்தக் காலத்திலும் உண்டு என்பதை   நிலைநாட்டும் சான்று.

உண்மை  -  உலகில் இருக்க இடந்தேடியலைந்து எங்கோ சிலரின் உள்ளத்தில் ஒளிந்திருப்பது.

ஊதியம்   -  பற்றாக் குறை வாழ்க்கையிலேயே  பயணத்தை முடித்துக்  துணிந்தவர்க்குக்              கொடுக்கப்படும் ஒப்பந்தக் கூலி.

எண்ணம்  -  இதையும் அதையும் நினைக்கும் நினைப்பு; எதையும் செய்யாத  தவிப்பு.

ஏக்கம்    -  நனவாக்க முடியாத கனவின் குழந்தை.

ஐயம்     -  மன நிம்மதியை மாய்க்கும் மனித வரப்பிரசாதம்

ஒற்றுமை  -  வேற்றுமை இருப்பதை வெளிக்காட்டாமல் மறைக்க உதவும்  மூடு மந்திரம்.

ஓட்டை   -  ஆண்டவன் படைப்பிலேயே உள்ளது. அதனால் எங்கும் எதிலும் காணப் படுவது.

ஒள      -  உடல் வலிமை குறைந்த உயிர்; இருந்தும் பயன் குறைந்தவர்க்கு  எடுத்துக் காட்டு

கற்பு     -  (அன் + ஐ) புணர்ந்து கெட்டதை அறியாதவரை உள்ள நம்பிக்கை.

காதல்    -  சனியனுக்கு மாலைபோட்டு வரவேற்றுச் சஞ்சலந் தரச்செய்வது.

கிறுக்கன்  -  அலுவலகத்தில் நேர்மையைக் கடைப்பிடிக்கும் அதிகாரிக்குக்  கோணல்புத்திக்காரன் கொடுக்கும் பட்டம்

கீர்த்தி    -  பத்துப்பேர் ஒத்துப்போனதால் பதினோராவது ஆளுக்குக்   கிடைக்கும் பரிசு.

குடும்பம்   -  இன்பத்தைக் காட்டித் துன்பத்தில் துடிக்க வைக்கும் பாசவலை.

கூட்டாளி  – வணிகத் துறையில் வல்லவர்க்குப் பங்குதாரர்; அல்லவர்க்குப்   பங்குதரார்.

கெட்டிக்காரன் -  தப்பைத் தப்பென்று தெரியமுடியாமல் செய்து, தப்பித்துக் கொள்பவன்.

கேவலம்     -   மனம் செய்யும் தவறு மற்றவர்க்குத் தெரிவதால் வருவது 

கையூட்டு    -   சுயநலப் பேய்கள் கொடுக்க நாக்கிளைத்த நாய்கள் பெறுவது.  

கொள்கை   -   கட்சிகள் வாயளவில் பரப்பிவருவது; செயலளவில் பறக்க விடுவது

கோரிக்கை  -   வாழத் துடிப்பவர் நிறைவேறாத தேவைகளை நிறைவேற்றச்  சொல்வது; ஆளத்துடிப்பவர் வாக்குறுதிகளால் நிறைவேற்றுவது.

கெளரவம்   -  பிடிவாதம் பெற்ற பிள்ளை; சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் 
                             மனப்பான்மை ஆகியவற்றின் எதிரி; இந்தப் போலிப் பெருமையைப்
                            பெரிதாக எண்ணி வாழ்ந்துகொண்டிருப்பவர் சிலர். செத்துக்
                             கொண்டிருப்பவர் பலர்.

சட்டம்     -  பணமிருப்பவர்க்குப் பாதுகாப்புத் தருவது; பதவியிருப்பவர்க்குத்
                       துணை நிற்பது; பயந்து நடப்பவர்க்குச் சிக்கலானது.

சாதி      -  உதட்டளவில் ஒழிந்து கொண்டிருப்பது; உள்ளத்தளவில்  
                   ஒளிந்து கொண்டிருப்பது.

சிலை     -  இருப்பவர்களை ஏமாற்ற இறந்தவர்களுக்கு எத்தர்களால்
                      வைக்கப் படுவது.

சீர்தனம்    -  பெண் பிறந்த வீட்டின் பெருமை தோன்றக் கொடுக்கப் பட்டது;
                         இருந்த வீட்டில் வறுமை தோன்ற வாங்கப் படுவது.

சுதந்திரம்   – பெரியோர்கள் அரும் பாடுபட்டுப் பெற்றுத் தந்தது; சிறியோர்கள்
                          சுயநலத்திற்கும் சுரண்டலுக்கும் அடிமையானது.

சூடு   -     நல்ல மாட்டிற்கு ஒன்றுபோதும் நாட்டை ஏய்ப்பவர்க்கு? எத்தனை
                   போட்டாலும் சொரணை ஏற்படாது.

செய்தித்தாள் -  பேனைப் பெருச்சாலியாக்கவும் பெருச்சாலியைப் பேனாக்கவும்
                                 வல்லது; அரிச்சந்திரன் பட்டபாட்டை அறிந்தவர்களால் நடத்தப்படுவது.

சேவை     -  தேவைகளை நிறைவேற்ற நினைப்பவர் செய்வது.

சைவம்     -  ஒரு நல்ல சமயம். இதைவிட இதன் எதிர்ப் பதம் ஏராளமான மக்களைக்      கவர்ந்திழுக்கிறது.

சொந்தம்   -  உதவி பெறும்வரை ஊரெல்லாம் சொல்வது; பயன் கிடைக்காவிட்டால்
                         பதுங்கி மறைவது.

சோகம்     -  போனதை நினைப்பதால் வருவது; இதைப் போக்காவிட்டால்
                       இருப்பதையும் போக்கி ஆளை ஏப்பம் போடவல்லது.

செளக்கியம் -  உழைக்கும் மக்களுக்கு உயரத்தில் இருப்பது; ஒட்டுண்ணிகளை
                              ஒட்டியிருப்பது.

தலைவன்   -  தூக்கி வைத்தாடும் கூட்டத்திற்குச் சொந்தக் காரன். தொண்டன்
                             வாழ்த்துகிறான். தலைவன் வாழ்கிறான். தொண்டன் ஆசையைத்
                              தலைவன் நிறைவேற்றுவது தவறா?

தாலி      -  ஆண் ஆதிக்கத்தின் அடையாளச் சின்னம்; கையில் போடுவதற்குப்
                    பதி கழுத்தில் போடும் பொன் விலங்கு.

திருட்டு    -  இது ஒரு தீய பழக்கம் . இதைத் திருடி மனக்குகையில் மறைத்து
                       வைத்திருப்பது அவரவர் மனத்திற்குத்தான் தெரியும்.

தீர்ப்பு      – நீதிதேவனை மயக்கும் பாவிகளுக்குச் சாதகமாகச் சொல்லப்படுவது.
                     அப்பாவிகளுக்கு அது மதில்மேல் பூனை.

துணை     – வயிற்றுக்கு வாய், வாய்க்குக் கை; எனக்கு நான், உனக்கு நீ.

தூக்கம்    – சோம்பேறிகளின் சொர்க்கம்; சுகத்தில் திளைக்க வைத்தே          
                      சோகத்தில் ஆழ்த்துவது.

தெய்வம்   -  நம்பிக்கையில் இருப்பது; நம்பிக்கை தருவது; தன்னைத் தானே
                          நம்பாதவர்க்குத் தட்டுப்படாதது.

தேர்தல்   -  ‘மக்கள்’ நலம் பேணுபவரைத் தேர்ந்தெடுக்க நடத்தப் படுவது. ‘அவர்’
                        தம் முன்னேற்றத்திற்காக எதையும் செய்ய வாய்ப்பளிப்பது.

தையல்   -  வெட்டி வேறாக்கப் பட்ட துணிகளை ஒட்ட வைத்து                      
                        உருப்படியாக்குவது; ஒட்டி உறவாடி இருக்கும் குடும்பத்தில்
                      புகுந்து வெட்டி வேறாக்குவது.

தொண்டர் – ‘தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே’ இது முன்னாள்
                           தெய்வத் தொண்டரைக் குறிக்கிறது. இத்தொடரிலுள்ள பண்புப்
                           பகாநிலைப் பதத்திற்கு எதிர்ப்பதத்தை இணைத்தால், இந் நாளின்
                           எந்தத் தொண்டரைக் குறிக்கும் என நான் சொல்ல வேண்டுமா?

தோல்வி   -  ஊக்கமில்லாதவனை ஓய்த்துக் கட்டுவது; அஞ்சா நெஞ்சனை
                         அடலே றாக்குவது.

நன்றி     -  செய்கின்ற – வரை – மறவாமை

நாநயம்   -  நா எல்லாருக்கும் இருக்கின்றது. நயம் எங்கிருக்கின்றது?
                     தேடிப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

நிதி – செல்வாக்குள்ளவர்களால் திரட்டப் படுவது. பொது நலப் போர்வையில்
           சுயநலம் வளர வாய்ப்பளிப்பது.

நீதி     – சட்ட வல்லுநரின் சாதுரியத்தில் சிக்கித் திக்குமுக்காடிக்
              கொண்டிருப்பது.

நுகர்வோர் – வாயார – வயிறார உண்ணக் கிடைக்காவிட்டாலும், வடித்துக்
                          கொட்டிய ரேஷன் அரிசிச் சோற்றின் கெட்டவாடையை
                          மூக்கேற நுகர்வோர் ஆகையால் நுகர்வோர் எனப்பட்டனர்.

நூலோர்  – பின்வருஞ் சந்ததியினர் தாம் எழுதிவைத்தபடி நடப்பார்கள்
                      என்று நம்பி ஏமாந்த அப்பாவிகள்.

நெறி    -  நமக்காக நல்லவர் நடந்து காட்டிய பாதை. நாம்தான்
                  குறுக்குவழி கண்டுபிடித்துவிட்டோமே?

நேர்மை  -  ஒருசிலரால் விரும்பப்படுவது; பக்கத்திலிருக்கும் பரமயோக்கியர்கள்
                       வாழும் மனிதர்களிடம் வாழ விடுவார்களா?

நையாண்டி – அகம்பாவத்தின் அவதாரம் இளைத்தவனைப் பார்த்து
                           வலுத்தவன் செய்யும் ஏளனம்

நொதுமல் – ஆளுங் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இதன் அர்த்தம்
                          தெரியாதோ? சபாநாயகர் இந்தச் சங்கடத்தில்  பட்டுக்கொள்வதே இல்லை.

நோக்கம் -  குறிக்கோள் என்னும் சூழ்நிலைப் பொருள்தருவது. இருவழிகளில்
                       இதை அடையலாம். ஒன்று நேர்வழி நல்லவர் செல்வது. மற்றொன்று
                       குறுக்குவழி – பணத்திலும், பதவியிலும் சுகத்திலும் திளைப்பவர் செல்லும் சுருக்கவழி.

பணம்   -  மும்மலங்களுக்கும் மூலபலம்; இது இருந்தாலும் துன்பம்;  இல்லாவிட்டாலும் துன்பம்.    பக்குவமாகப் பயன்படுத்துவோர்க்குப் பாதுகாப்பு; மற்றவர்க்குப் பாசானம்.

பாசம்   – உறவுக்கு ஆணிவேர்; ஒருகாலத்தில் உதிரும் சருகு.

பிரிவு   – தவிர்க்க முடியாதது. உயிர்கூட உடலை விட்டுப் பிரிகிறதே.

பீத்துதல் – தன்னைத் தானே மதித்துத் துரும்பைத் தூணாக்கிப் பேசுதல்.
                       இதில் அதிசயம் என்னவென்றால் தூண்கூட அந்தத் துரும்பை
                       மெச்சுவதுதான்.

புகழ்   -  மூவாசை அற்றவர்க்கும் மூவா ஆசை தருவது. மது மயக்காத
                 வரையும் இது மயக்கும்.

பூண்   – பூணும் நகை – பெண்ணுக்கு அழகைத் தருவது; அதைவிட
              அதிகமான ஆபத்தையும் தருவது; பெண்ணை மதிக்கக்
               காரணமாயிருந்தது. இப்போது பெண்ணை மிதிக்கக்
               காரணமாயிருப்பது.

பேச்சாளன் -  கேட்பவர்களைக் கேனப் பயல்களாக நினைப்பவன்.

பையன்(பை+அன்) – வரதட்சணைப் பொருள்களை வாங்க வாங்க
                நிறையாத ‘அகப்’ பையன்

பொறுக்கி – போனபக்கம் பார்வையைப் போக விடுபவன்; அக்காள்
          தங்கை பாசத்தை அறியாத அற்பப் பயல்.

போக்கிரி  – ஊரை அடித்து உலையில் போடுபவன்; வலிய
           வம்புக்கிழுத்துத் துன்பப் படுத்துபவன்.

பெளராணிகள் – கற்பனைக் கதை கட்டிக் கடவுளின் மதிப்பைக்
             கெடுத்தவர்கள்; தெய்வத்தின் பெயரால் தின்று கொழுக்கத்
             திட்டமிட்டவர்கள்.

மணமகன் – (மகளுக்காக) மாமனாரால் வாங்கப்பட்ட விலைமகன்.

மாமியார் – பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதை உலகறியச் செய்யும்
          உத்தமி.

மிருகம்  – இருவகைப்படும். ஒன்று நான்கு கால்களால் நடப்பது. இது
         வெளிப்படையான விலங்கு.மற்றொன்று இரண்டு கால்களால் நடப்பது.
         இவற்றுள் நாய் எது? நரி எது? கரடி எது?
         புலி எது? எனக் கண்டு பிடிப்பது கடினம்.

மீசை   – ஆணுக்கு முகத்தழகு. ஆண்மைக்குப் புறத்தழகு. இயற்கைக்கு
         முரணாக எத்தனையோ உருவங்களும் உண்டு.

முகமன்   – பயன்கருதிப் பக்கத்திலிருப்பவர் பாராட்டுவது; கூட இருந்தே குழி
          பறிப்பதை அறியாது மயக்கும் அற்புதக் கள்.

மூங்கை  – கண்கள் கட்டப் பட்டு, வெறுந் தராசுடன் நிற்கும் நீதி தேவதை.

மெல்லியலார் – அடித்தாலும் வைதாலும் அழமட்டுமே தெரிந்த பெண்களைக்
             குறிப்பது; சொந்தக் கால்களில் நிற்கவிடாது பெண்களைச்
             சோம்பேறிகளாக்கிய மயக்கு மொழிகளுள் இதுவும் ஒன்று.

மேட்டுக்குடி – சுகபோகத்தில் சொக்கிக் கிடப்பது; ஏழை எளியவரை
            இம்மியும் மதியாதது.

மையல்   – அளவுமீறிய ஆசை. ‘ஈசனோடாயினும் ஆசையை அறுமின்’ என்ற
          மந்திர மொழியை அறியாதவரை ஆட்டிப்படைப்பது. மகரவொற்றை
          எடுத்துத் தகரவொற்றைச் சேர்த்துப் பார்க்கும் வாலிபனுக்கு வருவது;
          பால் மாறுபட்டும் பாதிப்பது.

மொழி   – மனிதனின் அரிய கண்டுபிடிப்பு; அன்று நினைத்ததை நினைத்தபடி
          சொல்லப் பயன்பட்டது. இன்று நினைத்ததை நினைத்தபடி
          மறைக்கப் பயன்படுவது.

மோதல்  – கருத்து வேறுபாட்டின் விளைவு. எத்தனை கருத்து வேறுபாடு!
          எத்தனை கட்சி வேறுபாடு. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும்
          வயிறும் வேறு. இதற்கு நாயும் பன்றியும் எவ்வளவோமேல்.

மெளனம் – சம்மதத்தின் அறிகுறியன்று; கோழைத் தனத்தின் குறிப்பு.

யந்திரம்  – மனிதன் படைப்பு. தன்னை மனம் படுத்தும் பாட்டை யறிந்து
          அவன் அதற்கு அதைப் படைக்கவில்லை.

யாக்கை – உயிரோட்டமுள்ள ஒப்பற்ற பொறிகளால் ஆக்கப்பட்டது.
         கண்ணுக்குப் புலனாகாத நுண்ணணுவில் தோன்றும் இது
         சிறிய விதையில் தோன்றும் பெரிய ஆலமரத்தினும் அற்புதம்                      
         வாய்ந்தது. உயிரோடு பிறந்து உயிருக்காக வாழ்ந்து அது
         போனதும் அற்பமாகி அழிந்தொழிவது.

யுத்தம்  – யான் எனது என்னும் செருக்கின் விளைவு; வீரர்கள் வெல்லச்
        செய்வது; வீரர்களைக் கொல்லச் செய்வது.

யூகம்   – கால இருளைக் கடந்து செல்லும் நினைவுப் பாதையில்
         அறிவொளி உணர்த்தும் அந்தரங்கம்.

யோகம் – சும்மாவரும் சுகம்; எதிர் பாராத இன்பம்; குருடன் கை
         விலங்கு.

யெளவனம் – கொண்டவர்க்கும், கண்டவர்க்கும் மயக்கம் தருவது;
           சுகத்தைக் காட்டிச் சோகத்தை ஊட்டுவது.
ரம்பம்  -  மரத்தை அறுப்பது; ஆகுபெயராகி மனிதருள் பதரைக்
         குறிப்பது.

ராவணன் – சீதையின் கணவன். ராமன் ராவ(ண்)ணன் தானே!

லஞ்சம்  – நாட்டில் எதற்குப் பஞ்சமோ இல்லையோ, இதற்குப்
         பஞ்சமே இல்லை.

லாபம்  – வாங்கிய விலையைவிட, கூடுதலாக விற்றுப் பெறுவது;
        வாங்கிய விலையைவிட விற்றுக் கூடுதலாகப் பெறுவது.

லீலை  – ஆண்டவன் அற்புத விளையாட்டு; பக்தர்களுக்குப் பயன்தருவது.
        காம, வெகுளி, மயக்க,  வெறியாட்டம் நாமம் கெடுக்கும்;
        நாசும் கொடுக்கும்.

வறுமை  – என்றுந் தொலையாதது; இல்லாதவர்க்கு நிரந்தர எதிரி;
         இருப்பவர்க்கும் போதுமென்ற மனத்தைத் தராத புதிர்.

வாழ்க்கை – பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஓட்டை வீட்டைக்
          கொண்ட உயிர் நடத்தும் நாடகம்.

வித்தை  – கல்வி; அரிய மூளை சேர்த்து  வைக்கும் பெரிய செல்வம்.
         அது பெரியதுள் பெரியது; மூளை சேமிப்பதோ சிறியதுள்
         சிறியது.

வீரம்   – ஒறுத்தலுக்கும் பொறுத்தலுக்கும் வேண்டுவது. ஒறுத்தல்
        வீரம். வல்லாரிடம் பரிணமிப்பது. பொறுத்தல் வீரம்
        நல்லாரிடம் பரிணமிப்பது. முன்னது மறவீரம். பின்னது
        அறவீரம்.

வெட்கம் – பழிச் செயலுக்கு நாணுதல். பழிக்கு நாணாதவர்
         பல்கி விட்டதால் வெட்கம் வெட்கப்பட்டு வெளியேறி
         விட்டது.

வேட்டை – அந்தக் கால அரசர்களை விட, இந்தக் கால அரசியல்
          வாதிகள் வேட்டையாடுவதில் இளைத்தவர்களா?

வைவேல் – போர்க் களத்தில் வீரர்கள் பயன்படுத்திய கூரிய ஆயுதம்;
                          மேடையில் பேச்சாளன் பயன்படுத்தும் ஆபாசச்
                        சொல்லீட்டி.

வெளவால் – வயிற்றுப் பிழைப்பிற்காக மரம்விட்டு மரந்தாவும் பறவை.
                           சுகபோக வாழ்விற்காகச் சொந்தக் கொள்கையைவிட்டு,
                          கட்சி விட்டுக் கட்சிதாவும் கயவன்.
  

இந்நூலில் இடம்பெற்றுள்ள அனுபவம் முதலிய வடசொற்கள்
தமிழிலும், தமிழ் மக்கள் நாவிலும் இடம் பெற்றுப் பன்னெடுங்
காலமாகக் குடியிருப்பவை. இவற்றை நான் பயன்படுத்தியிருப்பதற்
காகத் தனித்தமிழ் ஆர்வலர் வருந்தினால் என்னை மன்னிக்க
வேண்டுகிறேன்.

                                                                                               புலவர்.துரை.பொன்னுசாமி

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>